2020 தேர்தல் களமும், தமிழ்க் கட்சிகளின் குளறுபடிகளும் தமிழ்த் தேசியத்தை சிதைவடையச் செய்யும் – எச்சரிக்கை

707

 

2020 தேர்தல் களமும், தமிழ்க் கட்சிகளின் குளறுபடிகளும் தமிழ்த் தேசியத்தை சிதைவடையச் செய்யும் – எச்சரிக்கை

நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் களைகட்ட ஆரம்பித்திருக்கும் இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அன்றிலிருந்து இன்றுவரை எடுத்துக்கொண்டேயிருக்கின்றது. ஏற்கனவே தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகளை உடைத்தெடுத்த இலங்கை அரசு, தமிழரசுக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குகின்ற ரெலோ, புளொட் ஆகிய இரு கட்சிகளையும் உடைத்தெடுப்பதற்கான அனைத்து வகையிலான தமது செயற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் புளொட் இயக்கத்தால் கடந்த வருடம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த வியாழேந்திரன் அவ் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதுடன், அதுபோல கடந்த காலங்களில் ஈபிஆர்எல்எப் கட்சியில் இருந்து வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் மற்றும் சிறிதரன், முன்னாள் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் ரவிகரன், நடராசா ஆகியோர் பிரிந்து சென்றதன் விளைவு இந்தக் கட்சியும் பின்னடைவைச் சந்தித்துள்ளது எனலாம்.


அதேபோன்று தற்போது ரெலோ கட்சியும் பாராளுமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ரெலோ கட்சியில் பிரபலமாகப் பேசப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோர் இவர்கள் தங்கள் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளனர். தற்போது அக்கட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் களமிறங்கப்போகிறார்கள். ஏற்கனவே சிறிரெலோ கட்சியாக ரெலோவில் இருந்து பிரிந்து சென்ற உதயராசா அவர்கள் வன்னியில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். முஸ்லீம் பிரதிநிதியொருவர் வன்னியில் வரமுடியாத அளவுக்கு இவரது செயற்பாடுகள் அமையக்கூடும். தற்போது யாழ் மாவட்டத்தில் வேட்பாளராக ரெலோ சார்பாக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் என்பவர் சிறிரெலோ கட்சியில் இருந்து ரெலோவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. 

இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் கென்றி மகேந்திரன் அவர்களுக்கும் யாழில் விந்தன் கனகரத்தினமும் மத்திய குழு பொதுக்குழு தலமைக்குழு அரசியல்குழுவிலகிய நிலையில்  வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை. இவர்கள் இருவரும் கட்சியில் 35 வருடங்களுக்கு மேலான உறுப்பினர்கள். தற்போது இவர்களிடையே மனக்கசப்பு நிலையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கென்றி மகேந்திரன், விந்தன் கனகரத்தினம், சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோர் எதிர்வரும் காலங்களில் மற்றொரு அணியை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. ஈபிஆர்எல்எப் 03 பிரிவுகளாக பிரிந்துள்ளதைப்போல, ரெலோவும் பிரிவதற்கான வாய்ப்புக்கள் இருககிறது. இதனைத் தடுத்து நிறுத்தும் செயற்பாட்டில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தவறிழைத்துவிட்டார் என அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ரெலோவில் இருந்து பிற கட்சிகளுக்குத் தாவிய மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களைப் பார்க்கின்றபோது கோணேஸ்வரன், ரதன் – நகரசபை வவுனியா, குணசீலன், டெனீஸ்வரன், அம்பாறை திவ்யநாதன், திருகோணமலை நகரசபையின் தலைவர் சூரியமூர்த்தி , மட்டக்களப்பு செழியன் பேரின்பநாயகம், ஆரயம்பதியில் தங்கவடிவேல், அபுயூசுப், திருகோணமலை யதீந்திரா, யாழில் ரெமிடியயயயாஸ் தற்போது சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் இவ்வாறு எல்லோரும் கட்சி விட்டு பிற கட்சிகளுக்குத் தாவி ஓடியவர்கள். நிலைமைகள் இவ்வாறிருக்கின்றபோது கட்சி விசுவாசமாக இருக்கக்கூடியவர்களை நியமிக்காதிருப்பது என்பது மென்மேலும் கட்சியைப் பாதிக்கின்ற ஒரு செயற்பாடாகவே இருக்கும்.
குறிப்பாக ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஒருவேளை தனது நிலைப்பாட்டை இவ்வாறு எடுத்திருக்;கக்கூடும். தற்போது நடைபெறுகிற அரசியல் கால நீரோட்டத்திற்கு ஏற்ப பந்தயத்தில் வெல்லக்கூடிய குதிரைகளுக்கு பந்தயம் கட்டவேண்டும் என்றும் கூட அவர் எண்ணி இருக்கலாம். தற்போது வடகிழக்கில் நியமிக்கப்பட்டிருக்கின்ற ரெலோவின் வேட்பாளர்களைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத ஒருவராக கிழக்கில் ரொபின் அவர்களும், யாழில் சுரேன் அவர்களும்  மக்கள்  செல்வாக்கு இல்லை பண பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். ஏற்கனவே ரெலோ கட்சியில் இருந்து கட்சி தாவியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். நடைமுறை இவ்வாறிருக்கின்றபோது பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் பாரிய வெற்றிகளை பெறமுடியாது போனால் ரெலோ இயக்கமும் தமிழரசுக் கட்சியின் கணக்கில் இருந்து விலக்கப்படும். அதுபோன்று வடக்கின் முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன், அருந்தவபாலன் போன்றவர்கள் ஒருமித்து கேட்பார்களாகவிருந்தால் ஒரு ஆசனத்தை வெல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒரு ஆசனத்தை வெல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. டக்ளஸ் அவர்களின ஆசனம் உறுதிப்படுத்தப்பட்டது. விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அ;ங்கஜன் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவலாம். யாழில் இத்தனையையும் தாண்டி மக்கள் பிரபல்யம், பண பலம் பெற்றவருமாகிய ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்களை ரெலோ நியமிப்பதன் ஊடாக அதன் வெற்றி உறுதிப்படுத்தப்படும். ஆனால் இவரும் கடந்த காலங்களில் ரெலோவில் இருந்து கட்சி தாவியவர்களைப் போல ஓடிவிடுவாரா? என்கிற சந்தேகத்தை செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கொண்டிருந்த காரணத்தினாலேயே ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் பாராளுமன்றில் போட்டியிட திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் யதீந்திராவினுடைய செயற்பாடுகள் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கலாம்.
எது எவ்வாறாகவிருப்பினும் வடக்கிலும், கிழக்கிலும், வன்னியிலும் குறைந்தது ரெலோ இரு ஆசனங்களை மட்டுமே வெல்லக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவர் செல்வம் அடைக்கலநாதன், மற்றையவர் ரொபின். இதில் விநோதராதலிங்கம் புதிதாக நியமிக்கப்படுபவர்கள் கென்றி மகேந்திரன் போன்றோர் போட்டியிட்டாலும் வாய்ப்புக்கள குறைவே. காரணம் வன்னியில் தற்போது சிறிரெலோவின் உதயராசா அவர்கள் ஒரு பலம் பொருந்தியவராக இருப்பதனால் தான். யாழைப் பொறுத்தவரை சுரேன் அவர்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் ஒருவேளை உதயராசா ரெலோவில் கேட்டால் அதனது வெற்றியும் உறுதிப்படுத்தப்படும். வன்னியில் சிவமோகன், செல்வம், சார்ள்ஸ், சத்தியலிங்கம், சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, புளொட் சார்பாக கந்தையா சிவலிங்கம் (முன்னாள் வடமாகாண அமைச்சர் சிவநேசனின் சகோதரர்) லிங்கநாதன் போன்றோர் வெல்வதற்கான வாய்ப்புகள்; இருக்கிறது. ஆனாலும் செத்த வீட்டு அரசியல்வாதி என பலராலும் அழைக்கப்படும் ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேரந்;த சிவசக்தி ஆனந்தன் இவர்களுக்கு சவாலாக போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது.
வன்னியைப் பொறுத்தவரை சார்ள்ஸ், செல்வம் அடைக்கலநாதன், சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், போன்றவர்களின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதென்று. தமிழரசுக் கட்சியின் ஒட்டுமொத்த வாக்கின் அடிப்படையில் முன்னாள் வடக்கு அமைச்சர் சத்தியலிங்கம் வெற்றிபெற வாய்ப்புகள் இருக்கிறது. மக்கள் பலம் இருப்பதோடு கோடிக்கணக்கில் யார் பணம் செலவழிக்கிறார்களோ அவர்களின் வெற்றியும் உறுதிப்படுத்தப்படும் என்பதும் தேர்தலில் ஒரு வகை. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் ரெலோவும், புளொட்டும் தங்கள் கட்சிகளுக்கிடையே முறுகல் நிலையைத் தோற்றுவிக்காது சென்றால் மட்டுமே அதிகமான ஆசனங்களை வெல்லக்கூடியதாகவிருக்கும். ஆகவே கட்சிகள் தமக்கிடையே பிரிவினைவாதங்களை தோற்றுவிக்கக்கூடாது. தமிழ்த் தேசியம் வெல்லவேண்டும் என்பதில் குறியாக இருக்கவேண்டும். எமக்கான ஒரு விடுதலை அரசியலை பெற்றுவிட்டு கட்சிகளுக்கிடையே தமது அதிகாரப் பகிர்வினை பிரித்துக்கொள்ள முடியும்.
முடிந்தளவில் ஈபிஆர்எல்எப் கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைத்துக்கொண்டால் பலமாக அமையும். விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் உள்வாங்கப்பட்டால் சிறந்ததாக அமையும். இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டால் வடகிழக்கில் 22 ஆசனங்களைப் பெற முடியும். ஆனால் தற்போது ரெலோவின் நிலைப்பாடு இவர்களின் பிளவு என்பதும், ஈபிஆர்எல்எப் கட்சியின் விலகல் என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும். தற்போதைய நிலைப்பாடுகளை பொறுத்தவரை இருக்கின்ற ஆசனங்களை தக்கவைத்துக்கொள்ள தமிழரசுக்கட்சி தன்னால் முடிந்தளவு தமது செயற்பாடுகளை முடுக்கிவிடும். தற்போது பாராளுமன்ற தேர்தலானது மாகாண சபை தேர்தலை தீர்மானிக்கின்ற ஒன்றாகவே அமையப்போகின்றது. மாகாண சபைத் தேர்தலில் அங்கத்தவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை கட்சிகள் மேற்கொள்ளும். ரெலோ இயக்கத்தை பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் ஒரு தர்மசங்கடமான நிலைக்குள் தள்ளப்பட்டிருகிறது. ஆனாலும் ஆயுதப்போராட்டத்தில் மிக அனுபவம் வாய்ந்த, பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதி தலைவருமாக இருந்த செல்வம் அடைக்கலநாதனின் அரசியல் இராஜதந்திர நகர்வுகள் என்பது விடுதலை அரசியலை வென்றெடுப்பதாக அல்ல, மாறாக அபிவிருத்தி அரசியலை நோக்கியதாக, பாராளுமன்ற உறுப்பினர்களை தமது கட்சி கைப்பற்றவேண்டும் என்கிற நோக்கிலேயே அவருடைய சிந்தனைகள் உள்ளது என்றும் கூறலாம்.
சார்ள்ஸ், செல்வம் அடைக்கலநான் இருவருக்குமிடையில் பாரிய போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த காலங்களில் இருவருக்கும் ஆதரவாகச் செயற்பட்ட ரதன் அவர்கள் பாலியல் குற்றச்சாட்டில் கட்சியில் இருந்த இடைநிறுத்தப்பட்டிருக்கின்றார். சமீப காலத்தில் அவர் தமிழரசுக் கட்சியுடன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் ரதன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்று தற்போது கூறப்படுகின்றபோதிலும் இதனை கட்சி அரசியலை செய்பவர்கள் வலுவாக பயன்படுத்திவிட்டார்கள் என்றே கூறவேண்டும். இந்தக் கறையைப் போக்கவே அவர் நேரங்களை செலவழிக்கவேண்டிய தேவை இருக்கிறது. வவுனியாவில் பிரபல்ய ஆசிரியரான ரதன் அவர்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தான் ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். அவர் மனோரீதியாக இந்த குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்டிருக்கின்றார். மேற்குறிப்பிடப்பட்ட மூன்று நபருக்கும் ரதன் அவர்கள் கடந்த காலங்களில் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களினால் இக்கட்சியினருக்கும் சேறு பூசப்பட்டிருக்கிறது என்றே கூறவேண்டும். உண்மை எதுவென சட்டம் பதில் சொல்லும் வரையிலும் குறித்த கறையைப் போக்குவது கடினமானது. உண்மை ஒரு நாள் வெல்லும். தேர்தல் காலங்களில் இவ்வாறான சேறு பூசுவது வழமை. இதனையும் தாண்டி வெற்றி பெறுவார்கள் என்பது முக்கியமான விடயம். ஆகவே இம்முறை ரெலோ கட்சியானது பாரிய ஒரு சவாலை முகங்கொடுத்துப் போட்டியிடவிருக்கிறது. ரெலோவில் சாதுவாக இருந்து செயற்படும் விநோதராதலிங்கம் அவர்கள் தனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு கடினமான உழைப்பை பயன்படுத்தவேண்டும். ஆகவே ரெலோ கட்சிக்குள் இவ்வாறான குழப்பங்களை ஏவிவிட்டால் ரெலோ கட்சி சுக்குநூறாக உடைய வாய்ப்புக்கள் இருக்கிறது. அதற்கு ரெலோவின் ஏனையவர்களும் தற்போது சாதகமாக அமைந்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் வேறு வழயின்றி ஆயுதக்கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் நின்று தேர்தலை சந்திக்கின்ற நிலைமை உருவாகும். இதன் ஊடாக அரசாங்கம் இந்த நாட்டின் தமிழ் மக்களின் போராட்டம் ஒரு இனவிடுதலைக்கான போராட்டம் இல்லை என நிரூபிக்கும் நிலை ஏற்படும். தமது வெற்றியை நிலைநாட்ட வேறு வழியின்றி ஆயுதக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் நிலை உருவாகும்.
புளொட்டைப் பொறுத்தவரை யாழில் ஒரு ஆசனத்தையும், கிழக்கில் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தில் 03 ஆசனங்களையும், வன்னியில் 03 ஆசனங்களையும், யாழில் 05, ஆசனங்களையும் வெல்லக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
ரெலோவைப் பொறுத்தவரை யாழில் இல்லை, வன்னியில் 01, கிழக்கில் 01.
ஈபிஆர்எல்எப் யாழில் 01, வன்னியில் 01, கிழக்கில் இல்லை.
இவ்வாறான வாய்ப்புக்களே இருக்கின்றன. இதிலும் கடும் போட்டியாக தற்போதைய நிலையில் 03 ஆசனங்கள் இழக்கப்படலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையின் பலமே சிங்கள பேரினவாதிகளுக்கு ஒரு பாடத்தை சொல்லப்போகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இந்த முறை ஒரேயொரு துரும்பு மாத்திரமே அவர்களிடம் உள்ளது. அதாவது சிங்கள பேரினவாதத்தினால் மஹிந்த குடும்பம் முடிசூடா மன்னராக ஆட்சிசெய்யும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறான நிலைமை உருவாக்கப்பட்டால் மீண்டும் இந்நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. இது ஒரு வகையில் உண்மையும் கூட.
தற்போது தமிழ் மக்களுக்கான தேசியம், சுயநிர்ணய உரிமை இ;ல்லை, வடகிழக்கு இணைப்பு இல்லை, பௌத்த சாசனத்திற்கு முதலிடம், இனப்படுகொலை நடக்கடவில்லை போன்ற விடயங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசு முன்வைத்துள்ளது. இதனையே கடந்த கால அரசின் தலைமைகளும் முன்வைத்தார்கள்.
ஆகவே தமிழ்த் தலைமைகள் ஒவ்வொன்றும் இவ்விடயம் தொடர்பாக சிந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்தி அரசியலை தமிழ் மக்களுக்கான விடுதலை அரசியலை வென்றபின் முன்னெடுக்கலாம். இலட்சக்கணக்கான பொதுமக்களையும் போராளிகளையும் தமிழினம் இழந்திருக்கிறது. பதவிகளுக்காக ஆசைப்பட்டு வீரர்கள் போராட முன்வரவில்லை. தற்போது போராட்டத்தில் எஞ்சி நிற்கின்ற போராட்ட வீரர்களும் இதனை நெஞ்சில் நிறுத்திப் பார்க்கவேண்டும். கடந்த கால போராட்ட வரலாறுகளை சற்று நாம் சிந்திக்கவேண்டும்.
சிங்களப் பேரினவாத சக்திகள் ஒருபோதும் தமிழினத்துடன் போராடி வென்ற வரலாறு இல்லை. பன்னாட்டு உதவியுடன் தான் இந்தப் போராட்டம் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. அஹிம்சை போராட்டத்தினால் சாதிக்க முடியும் என்று எமக்குப் பல நாடுகளினுடைய விடுதலை அரசியல் பாடங்களாகத் தந்திருக்கின்றன. ஆகவே ரெலோ இயக்கத்தின் பிளவுகளோ, ஏனைய இயக்கங்களின் பிளவுகளோ தமிழினத்தின் விடுதலை அரசியலை மழுங்கடிக்கக்கூடாது என்பதனையே நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆகவே ஆயுதக்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் அணி திரள்வதற்கான கால சூழ்நிலைகள் தற்போது கைகூடியுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்தால் கொலை, கொள்ளை, கப்பம் போன்ற குற்றச்சாட்டுக்களை ஒருவர் மீது ஒருவர்; சுமத்த வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக்கட்சி தனக்கான ஒரு தனியிடத்தை தக்கவைத்துக்கொள்ளும். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆகவே தமிழினத்தை பிரதிபலிக்கும டக்ளஸ், கருணா, பிள்ளையான் இன்னும் பல பிற தமிழ்க் கட்சிகள் அனைவரும் தமிழினத்திற்கான ஒரு விடுதலை அரசியலை வென்றெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். இல்லையென்றால் 1983 போராட்;டக் களத்தில் நின்றவர்களுடைய போராட்ட அரசியல் வரலாறுகள் என்பது அஸ்தமித்து விடும். எதிர்காலத்தில் ஆண்டாண்டு காலங்களாக தமிழினம் இந்த நாட்டை ஆண்டு வந்த வரலாறுகள் எழுதப்படவேண்டும். சரி – பிழைக்கு அப்பால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் 03 தசாப்தங்களாக வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார் என்பது வரலாறுகளில் எழுதப்படவேண்டியதொன்று. போராட்டம் எவ்வாறு மழுங்கடிக்கப்பட்டது என்கிற வரலாறுகள் எம் அனைவருக்கும் தெரியும். சுகபோக வாழ்க்கைக்காக அரசுடன் இணைந்து செயற்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையேல் தமிழினம் வாழ்ந்த வரலாறுகள் அத்திபட்டி கிராமம் அழிந்துபோனதைப் போன்று எம்மின வரலாறும் எழுதப்படும்.

இரணியன்

SHARE