இலங்கையின் உள்ளுராட்சி சபைத் தேர்தலை சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வந்திருந்த சூழ்நிலையில், இம்முறை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் என நான்கு விதமான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு நடத்தப்படும் நான்கு விதமான தேர்தல்களில் மிகவும் சிக்கலான தேர்தல் முறையாக இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முறைமை காணப்படுகின்றது.
28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் உள்ளிட்ட 336 சபைகளுக்காக சுமார் 8000திற்கும் அதிகமான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படுகின்றது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலானது, கலப்பு விகிதாச்சார முறையின் பிரகாரம் நடத்தப்படுகின்றது.
உள்ளுராட்சி பிரதேசங்களில் பிரதேச மட்டத்திலும், பொதுப் பட்டியலின் அடிப்படையிலும் மக்கள் பிரதிநிதிகள் கலப்பு விகிதாரச்சார முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சனத் தொகை, நிலப்பரப்பு, இன அடிப்படை ஆகியன எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் ஆராயப்பட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் உரிய பிரிவுகள் தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, உள்ளாட்சி சபைகள் ஒற்றைப் பிரிவு மற்றும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
4750 ஒற்றை உறுப்பினர் பிரிவுகளும், 165 இரண்டு உறுப்பினர் பிரிவுகளும், 04 மூன்று உறுப்பினர் பிரிவுகளும் உள்ளன.