28 முன்னணி வீரர்கள் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பு

379

சென்னை,நவ.28 (டி.என்.எஸ்) 20-வது ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 28 முன்னணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனுமான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), 14-ம் நிலை வீரர் பெலிசியானோ லோப்ஸ் (ஸ்பெயின்), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), டேவிட் காப்பின் (பெல்ஜியம்), குல்லெர்மோ (ஸ்பெயின்), யென் சுன் லூ (சீன தைபே) ஆகியோர் முக்கியமானவர்கள்.

இந்திய முன்னணி வீரர்களான சோம்தேவ் தேவ்வர்மன், ராம்குமார் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் நேரடியாக பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

www.bookmyshow.com என்ற இணைய தளம் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். இந்த தகவலை ஐ.எம்.ஜி.தலைமை ஆப்ரேட்டிங் அதிகாரி ஆசுவ் சிந்தால் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் எம்.ஏ.அழகப்பன், செயலாளர் ரெட்டி, ஏர்செல் அதிகாரி ரேணுகா ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்.

SHARE