35 வருடங்களின் பின் ஈரானுக்கு விமான உதிரி பாகங்களை விற்க அமெரிக்கா அனுமதி

817
ஈரானுக்கு விமான உதிரி பாகங்களை விற்பனை செய்ய போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஈரானிடம் அமெரிக்கா மீண்டும் வர்த்தக உறவை புதுப்பித்துள்ளது.இதுகுறித்து போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

“விமான உதிரி பாகங்களை மட்டும் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய விமானங்களை விற்பனை செய்ய அனுமதியில்லை. இந்த அனுமதியும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

அமெரிக்காவில் உள்ள மற்றொரு விமானத் தயாரிப்பு நிறுவனம், ஈரானுக்கு விமான உதிரி பாகங்களை விற்பனை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசிடம் அனுமதி கோரியபோது, அரசிடம் இருந்து அப்போது பதில் வரவில்லை என்று கூறியுள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.

இதையடுத்து அணுச் செறிவூட்டல் பணியை நிறுத்திக்கொள்வதாக ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை 6 மாதங்களுக்குத் தளர்த்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், விமான நிறுவனங்களுக்கு தற்போது அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

ஈரானில் 1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, மீண்டும் அந்நாட்டுடன் அமெரிக்கா தற்போது வர்த்தக உறவை ஏற்படுத்தி உள்ளது.

SHARE