விடுதலைப்புலிகள் மத்தியில் பாரிய பிளவினை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடமாகாண சபையிலும் பாரிய பிளவுகளை ஏற்படுத்தத் தயாராகிவிட்டார்.

448

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் ஒரு பகுதியாக வடகிழக்கு இணைந்தது தான் தமிழர் தாயகம் எனக்கொள்ளப்படுகின்றது. இந்நிலையைவைத்துப்பார்க்கின்றபோது வடகிழக்கினைப் பிரித்துக் கையாண்டவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி வடகிழக்கு பிரிக்கப்பட்டு மாகாணசபைகளுக்கானத் தேர்தல்களும் நடந்துமுடிந்து அங்கு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் இந் நிலையில் திடீரென ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இரகசிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார். வடகிழக்கு இணைப்பின் ஊடாக தமிழ்-சிங்கள உறவுகளை பாதுகாத்துக்கொள்ளமுடியும். சுமுகமான தீர்வொன்றினைப்பெற்றுக்கொள்ள அது வாய்ப்பாக அமையும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாழவே ஆசைப்படுகின்றோம் .அவ்வாறானதொரு நிலைப்பாட்டினை ஏற்படுத்துவோம். நாம் போரிட்டது பயங்கரவாதிகளுடன் தான் என்பதை வெளியுலகுக்குக்காட்டுவதன் ஊடாகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் உயர்ந்த நிலையில் காணப்படும். சர்வதேச சமூகத்திடமிருந்தும் நாம் உதவிகளைப்பெற்று இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.

அத்தகையதொரு நிலைப்பாட்டை உள்ளடக்கியும் விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தம் இனப்படுகொலை இல்லை என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டி அதன் ஊடாக தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் உள்ளூரிலேயே தீர்க்கப்படும். அதனையே சர்வதேசமும் விரும்புகின்றது என்றெல்லாம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூறி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும், தமிழ் மக்களையும் ஏமாற்றும் திட்டத்தையே செயற்படுத்திவருகின்றார். அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளார். இதற்கு முன்னர் எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான முடிவு பேச்சுவார்த்தை மூலம் இருக்கலாம். அல்லது அரசு தற்போது கூறிவருவது போல் நாடாளுமன்ற குழு மூலம் அந்த முடிவு வரலாம். அல்லது, தமிழ்க் கூட்டணி கோடிட்டுக் காட்டுவது போல் பேச்சுவார்த்தையோடு ஒட்டிய நாடாளுமன்ற குழு மூலமும் அமையலாம். அமைதி தீர்வு எவ்வாறு அமைந்தாலும் பொலிஸ், நிலம் (காணி), மற்றும் வடக்கு – கிழக்கு ஆகிய பிரதேசங்களை மீண்டும் இணைத்து ஒரே மாகாண சபையாக மாற்றுதல் ஆகிய விடயங்களே முக்கியமாக விவாதிக்கப்படும்.

இதில் பொலிஸ் மற்றும் காணி ஆகிய பிரச்சினைகள் தொடர்பாக, பிரிந்து கிடக்கும் தமிழ் அரசியல் தலைமைக்கு, சிங்கள அரசியல்வாதிகளின் மௌன ஆதரவு இப்போது உண்டு. அதிலும் குறிப்பாக, தென் சிங்கள மாநிலங்களில் உள்ள பிராந்திய சபை உறுப்பினர்களே தங்களுக்கும் அத்தகைய உரிமையும் அதி காரமும் வேண்டும் என்பதில் கருத்தாக உள்ளனர். அதேசமயம், தங்களது அரசி யல் தலைமைகளை எதிர்த்துப்போராடும் எண்ணமோ, வல்லமையோ, அல்லது மனப்பான்மையோ அவர்களுக்கு இல்லை. எங்கே, தங்களது முக்கியத்துவமும் அதி கார பலமும் இல்லாமல் போய்விடுமோ என்பதும், சிங்கள அரசியல் கட்சிகளின் தேசிய கட்சிகளின் தலைமைத்துவம், பல்வேறு அடுக்குகளில் எதிர்கொள்ளும் சந்தேகம் என்ற இந்த இரு பிரச்சினைகளிலும் தமிழ் பேசும் மக்களிடையே கிட்டத்தட்ட ஒருமித்த கருத்தே நிலவுகிறது. ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவையும் பேசி தீர்த்துக்கொள்ளக்கூடிய விடயமே. ஆனால் தமிழ்பேசும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினை உண்டு. அதுதான் வடக்கு மற்றும் கிழக்கு மீளிணைப்பு குறித்த விடயம். இதில் தான் குறிப்பாக, இனப்பிரச்சினை துண்டாடப்பட்டு மதவாரியாக முஸ்லிம் சமூகத்தினரும் பிராந்திய ரீதியாக கிழக்கில் உள்ள பிற தமிழ் பேசும் மக்களும் வடக்கு பிராந்திய தமிழ் மக்களிடையே இருந்து தனித்துவம் கோரி வருகிறார்கள். வட-கிழக்கு இணைப்பு சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபிறகு, அதனை மீண்டும் உடனடி பிரச்சினைப் பொருள் ஆக்குவது தற்போது நிலவும் சூழ்நிலையில் சிறந்த அரசியல் உத்தி அல்ல.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை அட்டவணை இட்டுப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். கடந்த 1951ஆம் ஆண்டு ‘தந்தை’ செல்வா, வடக்கு நோக்கி மட்டுமே பயணித்து வந்த தமிழ் மக்களின் அரசியலை கிழக்கு முகமாக வும் திருப்பிப் பாய்ச்சினார். என்றாலும், அவரால் இயற்றப்பட்ட ‘வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு’ப் பிறகும் அவரது கட்சி அல்லது கூட்டணியின் கீழ் கூட, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தமிழ் வாக்காளர்கள், ‘வெளி ஆட்களுக்கு’ வாக்களித்து வெற்றிபெற வைக்கவில்லை என்பதே உண்மை. பிற்காலத்தில் கருணா மற்றும் பிள்ளையான் தலை மையில், விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவடைந்ததை தனிமனிதர் பிரச்சினையாக மட்டுமே ஒதுக்கிவிட முடியாது. வடக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமை தொடர்ந்து இந்த அடிப்படை உண்மையை புறக்கணித்து வருவது வருத்தத்திற்குரிய விடயம்.

கடந்த 1990ஆம் வருடம் விடுதலைப்புலிகள் இயக்கம் வடக்கில் குடியிருந்த முஸ்லிம் சகோதரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இனத்தவர்கள் ஒரு சேர குடியிருந்த கிழக்கு பிராந்தியத்தில் அது சாத்தியமில்லாத நிலையில் முஸ்லிம் மக்களை தாக்கியதன் மூலமும் அவர்களின் வெறுப்பையும், எதிர்ப்பையும் அந்த இயக்கம் சந்தித்துக்கொண்டது. இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லாத சூழ்நிலையில் கூட அன்று நடந்த சம்பவங்களுக்குத் தமிழ் அரசியல் தலைமை வருத்தம் தெரிவிக்கவில்லை. இது, அவர்களும் விடுதலைப்புலிகளின் ‘இனப்புனித’ கொள்கையை கொடர்ந்து ஆதரிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை முஸ்லிம் இனத்தவரிடையே தோற்றுவித்து இருக்கிறது.

அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், தமிழ்த்தேசிய கூட்டணி தலைமை, பிற தமிழ் தலைவர்களை மட்டுமல்ல, முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் தலைமைகளையும் கலந்து பேசவில்லை. இரண்டு அல்லது மூன்று முறைகள் முஸ்லிம் காங்கிரஸ் தலை மையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தாலும் அந்த கட்சியை அரசுடனான பேச்சுவார்த்தைகளில் கூட்டணி பிரதிநிதித்துவப்படுத்தும் என்பது போன்ற எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. மாறாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மற்றும் வடக்கு மாகாணத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றோர் தங்களது மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் தனித்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்கள். அவர்கள் எப்போதாவது வடக்கு, கிழக்கு மீளிணைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. அதேசமயம், அந்த சமுதாய இளைஞர்களிடையே தோன்றியுள்ளதாகக் கருதப்படும் உலகு சார்ந்த தனித்துவ எதிர்பார்ப்புகளை புறக்கணித்துவிட்டு அந்த சமூகத்தின் அரசியல் தலைமைகள் செயற்பட்டு வெற்றி பெற்றுவிட முடியாது.

வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற பேச்சு எழுந்தாலே அரசு மட்டுமல்ல, அங்குவாழும் முஸ்லிம் இன மக்களும் தமிழ் அரசியல் தலைமையை மீண்டும் சந்தேகக் கண்ணுடன் நோக்கத் தொடங்கிவிடுவார்கள். இதுவே அந்த இரு இன மக்களிடையே தற்போது மீண்டும் துளிர்விடும் நல்லுணர்விற்கு ஊறுவிளைவித்துவிடும். அத்தகைய சமூகங்கள் சார்ந்த நல்லுணர்வு நிலவி னால் மட்டுமே வடக்கு, கிழக்கு மீளிணைப்பு அர்த்தமுள்ளதாக அமையும். அதனை மட்டுமே அரசியலுக்கு அப்பாற்பட்டு இலங்கை அரசும் ஏற்றுக்கொள்வது குறித்து தீவிரமாக சிந்திக்க முயலும்.

மாறாக, முழுமையான மீளிணைப்பு என்றல்லாமல், ‘ஜனாதிபதி சந்திரிகா திட்டத்தின்’ அடிப்படையில் தமிழ்பேசும் மக்கள் வசிக்கும் கிழக்கு பிராந்திய பகுதிகளை மட்டும் வடக்குடன் இணைப்பது குறித்து பேச்சு எழுந்தால், முஸ்லிம் தலைமைகளும் தங்களுக்கும் இந்தியாவில் உள்ள புதுச்சேரி போன்ற அரசு அமைப்பை செய்து தரவேண்டும் என்ற பழைய கோரிக்கையை மீண்டும் முன்வைக்கலாம். அவ்வாறு செய்யப்பட்டால், வடக்கில் முன்பு முஸ்லிம் மக்கள் குடியிருந்த பகுதிகள் மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் காலத்தில் அவர்கள் அநாதரவாக இடம்பெயர்ந்த புத்தளம் போன்ற பகுதிகளும் துண்டாடப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இந்த அதிக பிரச்சினைகளை எதிர்நோக்கி, அரசும் மீளிணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கே தயக்கம் காட்டலாம்.

தமிழ்க்கூட்டணி தலைமையின் முன்பு உள்ள கேள்வி இது தான்: வடக்கு, கிழக்கு மீளிணைப்பு பிரச்சினையை தற்போது கையில் எடுத்து, அரசுடனான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அதிகப்படியான ஓர் ஆயுதத்தை தனது எதிர்ப்பணியினருக்கு அளிப்பதா? அல்லது, காலம் கனியட்டும் என்று காத்திருந்து, மீளிணைப்பு பிரச்சினையை எதிர்கால சந்ததியினரின் முடிவிற்கு விட்டுவிடுவதா? வடக்கு, கிழக்கு மக்கள் தொகையில் முஸ்லிம் இனத்தவரின் எண்ணிக்கை கூடிவருகிறது என்றும், இலங்கை தமிழ் இனத்தவரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் கருத இடமுள்ள இந்த சமயத்தில், களநிலவரத்திற்கு எதிரான அவர்களது எத்தகைய முயற்சிக்கும் அரசு மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் உடன்படாது என்பதே உண்மை.

இவ்வாறிருக்க ரணில் விக்கிரமசிங்க வினது இராஜதந்திர அணுகுமுறை கள் அமெரிக்காவின் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டுவருகின்றது. வட கிழக்கு இணைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் மத்தியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை ரணிலிடம் இருக்கிறது. இதற்கிடையில் தமிழினப் படுகொலை என்பது பாரிய முட்டுக்கட்டையாக இருந்து வருகின்ற பொழுதிலும் அவற்றை சீர் செய்வதற்காகவே இவ்வாறு செயற்படுத்தவேண்டும் என்ற அமெரிக்காவின் ஆலோசனைப்படி பணியவும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சம்பந்தன் அவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார். வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், ரணிலுக்கும் எட்டாப்பொருத்தமாக இருந்துவரும் நிலை யிலும் விக்னேஸ்வரன் அவர்களை பதவியில் இருந்து ஓரங்கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதற் காகவே திட்டமிட்டு இம்முறைப் பொதுத்தேர்தலில் சுமந்திரன் அவர்கள் வெற்றிபெறச் செய்யப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக் கைகளினால் இலங்கையின் இராணுவக்கட்டமைப்பிற்கு பாரிய நெருக்கடி நிலைமைகள் தோன்றியது. அந்த அடிப்படையிலும் அவரின் குடும்ப ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்பதிலும் குறிப்பாக மஹிந்தவினுடைய சீன உறவினைத் துண்டிக்கவேண்டும் என்கின்ற அடிப்படையிலும் திட்டமிட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு அதில் வெற்றியும் கண்டார். ஆனால் அந்த இரு நாடுகளும் தமது தேசியப்பிரச்சினையில் ஆர்வம் காட்டியதன் ஊடாக உள்நாட்டில் அழித்தொழிக்கப்பட்ட தமிழினம் பற்றி அவர்களுக்கு அக்கறை எழவில்லை. தமி ழினம் அழித்தொழிக்கப்படும் பொழுது கண்மூடி மௌனித்த சர்வதேசம் இன்று சர்வதேச விசாரணை மற்றும் உள்ளக விசாரணை எனக்கூறிக்கொண்டிருப்பது பயனற்றதாகவே கருதப்படுகின்றது.
கடந்த காலங்களிலும் தமிழ் மக்கள், சிங்கள இனத்தவர்களுடன் ஆயுத மற்றும் அஹிம்சை ரீதியாகப்போராடி தோல்விகண்டனர். காரணம் சிங்கள தேசத்தின் நயவஞ்சகமே எனலாம். அவ்வாறே இம்முறையும் செயற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க அவர்கள் திட்டமிட்டு தமிழ் அரசியல்வாதி களை தன்வசப்படுத்தியுள்ளார். தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என தேர்தல் காலங்களில் தமிழ் மக்களிடம் வாக்குக்கேட்ட தமிழினம் இன்று பதவிகளைப்பெற்றுள்ள போதிலும் வாய்மூடி நிற்கிறது.

விடுதலைப்புலிகள் மத்தியில் பாரிய பிளவினை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடமாகாண சபையிலும் பாரிய பிளவுகளை ஏற்படுத்தத் தயாராகிவிட்டார். அதன் முதற்கட்ட வேலை யாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இன்று தமிழி னம் தொடர்ந்தும் துன்பத்தையே சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
பகடைக்காய்களாகப் பயன் படுத்துவதற்கு தமிழினம் தான் உங்களின் விளையாட்டுப் பொருளாகக் கிடைத்ததா? இதுவரை காலமும் போரா டிய போராட்டத்தின் பிரதிபலிப்புக்கள் என்ன? ரணிலின் திட்டப்படி அடுத்த 05 வருட தேர்தலுக்கு முன்பாக அனைத்து மட்டங்களிலும் தனது கட்சியைப்பலப்படுத்த முனைகின்றார். இதற்கிடையில் ரணில்-சம்பந்தன் இருவருக்குமிடையே இரகசியமான பேச்சுக்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயங்களை காண்பித்து சம்பந்தனின் அரசியல் போக்கை திசைதிருப்பும் ரணிலின் முயற்சி எந்தளவிற்குக் கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

சுழியோடி

SHARE