39வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறும்
ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர்!
சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.
லிங்கேஸ்வரி ரவிராஜன்
(BA, M.Ed, Dip. In Edu, Dip inSch.mgn)
39 வருடகால கல்விச் சேவையில் இருந்து 25.12.2024. அன்று ஓய்வு பெறுகின்றார்.
26.12.2024 இன்று அவரது பிறந்த தினம்…!
திருகோணமலை கந்தளாயை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் 1985 ஆம் ஆண்டு உதவி ஆசிரியையாக நாவலப்பிட்டி கதிரேசன் வித்தியாலயத்தில் தனது ஆசிரியைப் பணியை ஆரம்பித்தார். 1990ம் ஆண்டு கந்தளாய் பரமேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்று உதவி ஆசிரியையாக, பகுதித் தலைவராக, பிரதி அதிபராக கடமை புரிந்து 1997ம் ஆண்டு அதிபராக நியமனம் பெற்றார். தனது அயராத உழைப்பினால் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.சா.த, க.பொ.த.உ.த பரீட்சைகளில் மாணவர்கள் பெருமளவில் சித்தியடைந்து கந்தளாயில் தமிழ் மக்களிடையே ஒரு கல்விப் புரட்சியையே ஏற்படுத்தினார். ஆத்துடன் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக பேன்ட் வாத்தியக் கருவிகளையும் அறிமுகம் செய்த பெருமையும் அவரையே சாரும்.
இவ்வாறு பாடசாலை விளையாட்டு மைதானத்தை விஸ்தரிப்பதற்காக சுமார் 1 ஏக்கர் காணியை விலையாக வேண்டிய அதிபர் இதற்கான நிதியினை திருமலை நகரம் சென்று வீடு வீடாக டிக்கெற் விற்று சேகரித்தார். இரண்டு மாடிகளில் குளக்கோட்டன் எனும் பெயரில் விளையாட்டு அரங்கம் ஒன்றை அமைத்தது இப்பகுதி மாணாக்கருக்கு அவர் வழங்கிய பெரும் வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். பாலர் கல்வியில் அதிக கவனம் செலுத்திய அவர் பரமேஸ்வரா எனும் நாமத்துடன் ஒரு பாலர் பாடசாலையை ஆரம்பித்தார்.
2008 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவையின் 1 ஆம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றார். பின்னர் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் பாடசாலை நிருவாகத்தினர் அப்பாடசாலையின் பழைய மாணவி என்ற வகையில் அக்கல்லூரியின் அதிபர் பதவியைப் பொறுப்பேற்குமாறு கூறியதற்கிணங்க 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அப்பாடசாலை முதல்வராக கடமை புரிந்து வருகிறார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.சா.த, க.பொ.த.உ.த பரீட்சைகளில் மாவட்டத்திலேயே அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்ததுடன் ஐம்பது வகையான இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை பங்கு பற்றச் செய்து அவர்கள் தேசிய மட்டத்தில் முதன்மை இடங்களைப் பெற்றுக் கொள்வதில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வந்துள்ளார்.
மேலும் சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் இடநெருக்கடிக்கான தீர்வாக ஆரம்ப பிரிவினை மின்சார நிலைய வீதிக்கு இடமாற்றம் செய்வதற்காக திருகோணமலை நகரசபையிடமிருந்து 1 ஏக்கர் காணியைப் பெற்று வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் அவரால் செய்யப்பட்டுள்ளது.
கல்விக்காக தனது வாழ்நாளினை அர்ப்பணித்து 39 வருட கல்விப் பணியிலிருந்து 26.12.2024 அன்று ஓய்வு பெறவுள்ளதை கல்விச் சமூகம் பாராட்டி வாழ்த்துவதில் பெருமையடைகின்றது.
சஞ்ஜீவன் துரைநாயகம்