4–வது டெஸ்ட் போட்டி: கோலி–ராகுல் சதம்

366
இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடை பெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் சுமித் (117 ரன்), வார்னர் (101 ரன்) சதம் அடித்தனர். முகமது ஷமி 5 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது. புதுமுக வீரர் ராகுல் 31 ரன்னும், ரோகித்சர்மா 40 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (வியாழக்கிழமை) 3–வது நாள் ஆட்டம் நடந்தது.

பொறுப்புடன் விளையாடிய ரோகித்சர்மா 132 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 10–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 2–வது அரை சதம் ஆகும்.

அதற்கு அடுத்த சில நிமிடங்களில் ரோகித்சர்மா ஆட்டம் இழந்தார். அவர் 53 ரன்கள் எடுத்தார். அவரது விக்கெட்டை சுழற்பந்து வீரர் லயன் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 97 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் வீராட் கோலி களம் வந்தார்.

மறுமுனையில் இருந்த புதுமுக வீரர் லோகேஷ் ராகுல் 161 பந்துகளில் 50 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடங்கும். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து இருந்தது.

மதிய உணவு இடை வேளைக்கு பிறகு ராகுலும், வீராட் கோலியும் மிகவும் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை திணறடித்தனர். இதனால் 78.2–வது ஓவரில் இந்தியா 200 ரன்னை தொட்டது. கோலி 108 பந்துகளில் (9 பவுண்டரி) 50 ரன்னை தொட்டார்.

மறுமுனையில் இருந்த ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 253 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்னை எடுத்தார். கர்நாடகாவை சேர்ந்த 22 வயதான ராகுல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதில் அவரால் திறமையை வெளிப்படுத்த இயலவில்லை. தனது 2–வது டெஸ்டில் அவர் முதல் சதத்தை அடித்து முத்திரை பதித்தார்.

தேனீர் இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்து இருந்தது. ராகுல் 106 ரன்னும், வீராட் கோலி 67 ரன்னிலும் இருந்தனர்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு ராகுல் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றினார். ராகுல் 262 பந்துகளில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 110 ரன் எடுத்தார். அப்போது ஸ்கோர் 238 ஆக இருந்தது. 3–வது விக்கெட் ஜோடி 141 ரன் எடுத்தது.அடுத்து ரகானே களம் வந்தார்.

மறுமுனையில் இருந்த கேப்டன் வீராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 162 பந்துகளில் 17 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். இந்த டெஸ்ட் தொடரில் கோலி அடித்த 4–வது சதமாகும்.

வாட்சனின் சிறப்பான பந்து வீச்சில் ரசானே (13 ரன்), ரெய்னா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 292 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது. 7வது வீரராக விர்த்திமான் சகா களம் வந்தார்.

மறு முனையில் இருந்த கேப்டன் கோலி பொறுப்பை உணர்ந்து தொடர்ந்து அபாரமாக விளையாடினார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 342 ரன் எடுத்து இருந்தது. கோலி 214 பந்துகளில் 20 பவுண்டரியுடன் 140 ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். விர்த்திமான் சகா 12 ரன்னில் களத்தில் உள்ளார்.

பாலோஆனை தவிர்க்க இந்திய அணிக்கு மேலும் 30 ரன் தேவை. கைவசம் 5 விக்கெட் உள்ளது. ஆஸ்திரேலியாவை விட இந்தியா 230 ரன் பின்தங்கி இருக்கிறது

SHARE