பொதுபலசேனா இனவாத அமைப்பு அல்லசிறுபான்மை மக்களை அடக்கவோ, முஸ்லிம்களை அழிக்கவோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை-கலகொட அத்தே ஞானசார தேரர்

473

பொதுபலசேனா இனவாத அமைப்பு அல்ல. முஸ்லிம்களை ஒருபோதும் எதிரிகளாக நாம் நினைக்கவில்லை எம்மை அரசாங்கத்தின் அடியாட்களெனவும், புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் செயற்படுகின்றார்கள் எனவும் கூறும் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் பொதுபல சேனா பௌத்த அமைப்பு செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாம் இனவாத அமைப்பென்று பலர் சுட்டிக்காட்டுகின்றனர். சிறுபான்மை மக்களை அடக்கவோ,
முஸ்லிம்களை அழிக்கவோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. எமது நோக்கம் பௌத்த மதத்தை காப்பாற்ற வேண்டும் என்பதேயாகும். அதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம். அதேபோல் எம்மை அரசாங்கத்தின் பங்காளிகள் எனவும் அரசாங்கத்தின் அடியாட்களெனவும் தற்போது நாம் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் செயற்படுவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
யாருடைய தயவுடனும் செயற்பட வேண்டுமென்ற தேவை எமக்கு இல்லை. தவறான கருத்துகளைப் பரப்பி எமது கொள்கையினையும் பொதுபல சேனா பௌத்த அமைப்பினையும் கொச்சைப்படுத்த வேண்டாம். ஒருபோதும் நாம் முஸ்லிம் இனத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியதில்லை. முஸ்லிம்கள் செய்யும் மிகப் பெரிய தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளோம். நாட்டிற்கு எதிராக அவர்கள் செயற்படும்போது எதிர்த்துள்ளோம். இவை அனைத்தும் குறித்த ஒரு சில முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிரானதே தவிர அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிரானதல்ல.
அளுத்கம சம்பவத்தில் நாம் அமைதியாக செயற்பட்டும் முஸ்லிம்களே வன்முறையினை கையாண்டனர். இதற்கு சிங்கள மக்கள் விரும்பாத நிலையில் அப்பகுதி கலவர பூமியாக மாறியது. இதில் எம்மீது குற்றம் சுமத்தி முழுக் குற்றத்திற்கும் எம்மை பொறுப்பாக்கி விடக்கூடாது. நாம் முஸ்லிம் சமூகத்தை வெறுக்கவில்லை. அவர்களும் இந்நாட்டின் மக்களே. அவர்களை தண்டிக்க ஒரு போதும் நாம் விரும்பவில்லை.
எனினும், மத்திய கிழக்கின் முஸ்லிம் மதவாத தீவிரவாதிகளின் ஊடுருவல் தற்போது இலங்கைக்குள் பரவிவிட்டது. அதன் விளைவாகவே இவ்வாறான இன முரண்பாடுகள் ஏற்படுகின்றது. முஸ்லிம்கள் தமது உரிமைகளை அனுபவித்து வாழ்வதை நாம் தடுக்கவில்லை.
எனினும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை எப்போதுமே நாம் அனுமதிக்கப் போவதில்லை. ஊடகங்கள் எம்மீதான தவறான பார்வையில் செயற்படுமாயின் அது மக்கள் மத்தியில் எம்மை தவறானதொரு அமைப்பாக மாற்றிவிடும்.
குறிப்பாக முஸ்லிம் ஊடகங்கள் எமது செயற்பாடுகளை தவறாகவே சித்தரிக்கின்றது. இது இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மனதிலும் எம்மை மோசமானவர்களாக கொண்டு சென்றுவிட்டது. எனவே, அதையும் ஊடகங்களே சரி செய்ய வேண்டும். இல்லையேல் நாம் நல்லதைச் செய்தால் அதை மக்கள் தவறாகவே எடுத்துக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

 

SHARE