. சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பாதுகாவலான காட்டிக்கொள்வதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினை ஆளுனர் பகடைக்காயாக பயன்படுத்துகின்றார்.
இந்த நிலைமையினை மாற்ற கிழக்கு மாகாண அமைச்சரவை முன்வரவேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை பட்டிப்பளை பிரதேசசபையின் புதிய கட்டிடத்தினை திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள் அடுத்தமுறை வட்டார முறை தேர்தலாக அமையும் என நம்புகின்றேன். அந்தவேளையில் பேசிவிட்டு செல்லுவோரை விடுத்து பேசாமல் பணிகளை செய்வோரை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கு நூறு வீதம் மாகாணசபை பொறுப்பாகவுள்ளது.இதற்கு அனைத்து அதிகாரங்களும் முதலமைச்சருக்கு உள்ளது.அது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் நாங்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து எமது தனித்துவத்தினையும் பேணி செல்லுபோதே மக்களுக்கும் மக்கள் எண்ணுகின்ற விடயங்களையும் செய்வதற்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.
இல்லாதுபோனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றினால் அவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பல தடவைகள்,பல விடயங்களில் தமிழ் மக்களை முட்டாலாக்கியுள்ளனர். முட்டாலாகியுள்ளோம்.நானும் கூட.இதனை யாரும் மறுக்கமுடியாது.இது பலருக்கு கசப்பாக இருக்கும் இதுதான் உண்மை.
ஜி.ஜி.பொன்னம்பலம் காங்கிரசில் இருந்தபோது அவர் மலையக மக்களுக்கு எதிராக அமைச்சுக்காக வாக்களித்தார் என்பதற்காக தந்தை செல்வா வந்தார்.தந்தை செல்வா சமஸ்டி அடிப்படையில் தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து முதலாவது தேர்தலில் தோல்வி கண்டு அடுத்த தேர்தலில் 1968ஆம் ஆண்டு வெற்றி பெற்று நீலன் திருச்செல்வம் அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக ஆதரவினை தெரிவித்துவிட்டு 1970ஆம் ஆண்டுவரை எதுவித சத்தமும் இன்றி இருந்து வந்தனர். இதனை யாரும் மறுக்கமுடியாது.
1970ஆம் ஆண்டு இவர்களின்; பெரும் சிங்கம் எல்லாம் தோல்வி கண்டவுடன் 1971,72ஆம் ஆண்டிலேதான் சிங்கக்கொடியை எரிக்கவேண்டும் என்று இளைஞர்களை தட்டிவிட்டு சிங்க கொடியை எரிக்க வைத்தவர்கள்.1965தொடக்கம் 1970ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் அவர்களும் கலந்துகொண்டார்கள்.எங்கும் சிங்கக்கொடி இறக்கப்படவும் இல்லை.எரிக்கப்படவும் இல்லை.
இவ்வாறு இருக்க சமஸ்டியும் இல்லை,தனிநாட்டு பிரகடனம் வட்டுக்கோடை தீர்மானமும் இல்லை.இளைஞர்கள் சென்றார்கள் யுத்தம் நடந்தது.1988ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தல் வந்தது அதனை பொறுப்பேற்கவில்லை. அல்லது அதனை பொறுப்பேற்றவர்களை விடவில்லை.
பின்னர் 2007ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணசபை தேர்தல் வந்தபோது அதிகாரங்கள் இல்லை நாங்கள் வரமாட்டோம் என்று கூறினார்கள்.அதனை நாங்கள் பொறுப்பெடுத்து எங்களால் முடிந்தவற்றைசெய்துகொண்டிருந்தோம்.
2012ஆம் ஆண்டு வந்து அதனை குழப்பிவிட்டு இன்று சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்த ஒட்டுமொத்த கிழக்கு மாகாணசபை அமைச்சரவையினை உருவாக்கிக்கொடுத்த பெருமை கிழக்கு மாகாண தமிழ் மக்களைiயே சாரும்.
அமெரிக்காவின் தீர்மானத்தில் 13வது தீர்வுத்திட்டத்தினை அழியுங்கள் என கூறப்பட்டுள்ளது. இதனை இந்தியா 1987ஆம் ஆண்டே பொலிஸ் தருகின்றோம், நிதி தருகின்றோம், ஹெலியும் தருகின்றோம் என்று கூறியபோது அதனை யாரும் பொறுப்பேற்கவில்லை. இன்று மிக்பெரும் முட்டாள்தனமான, சிரிக்க வைக்கும் நடவடிக்கையெல்லாம் வடபகுதியில் நடந்துவருகின்றன.
மூன்றில் இரண்டு தாருங்கள் சாதித்துக் காட்டுவோம் என வடபகுதி மக்களிடம்கேட்டார்கள்.ஆனால் அவர்கள் மூன்றில் இரண்டைவிட அதிகமாக வாக்களித்தனர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு. வயதில் முதிர்ந்தவர். வயதில் அவரைப் பார்த்தால் எனக்கு அண்ணன், முதலமைச்சராக பார்த்தால் அவர் எனக்கு தம்பி. இதனை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை.
விக்னேஸ்வரன் ஒரு சட்ட மேதை. சட்டமா அதிபர் என்று சொன்னார்கள். வடமாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் அது கிழக்கு மாகாணசபைக்கு உதவிசெய்யும் நிலை உருவாகும் என நான் கடந்த காலத்தில் கூறியிருந்தேன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு எதிராகவே நடைபெறுகின்றது.
வடமாகாண செயலாளராக இருக்கும் விஜயலட்சுமி அம்மா முதலமைச்சருக்கு ஒரு சுற்று நிருபம் அனுப்ப முடியாதவாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்துள்ளது. நீதியரசரான விக்னேஸ்வரனுக்கு அவரின் கத்தியால் அவருக்கு குத்தப்பட்டுள்ளது. பிரதம செயலாளரின் கடமை தொடர்பில் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. பிரதம செயலாளரை ஜனாதிபதியுடன் பேசி ஒத்திசைவாக நியமிக்க முடியும். இது அரச விதியாகும். அதற்கு எதிராக அவர் செல்லவில்லை. நான் என்றால் வி;ஜயலெட்சுமி அம்மாவை அழைத்து பிரச்சினை தொடர்பாக அரை மணி நேரம் கதைத்திருப்பேன். அப்போது மாகாணம் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று இருப்பார்.
ஒன்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். சட்ட மேதை என்றால் அதனை அமுலாக்க வேண்டும. இல்லை ஜனாதிபதியிடம் சத்தியப்பிரமாணம் எடுக்கின்றோம். இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுகினறது. முட்டாள் ஆக்குகின்றது.
இந்த நாட்டிலே மனசாட்சியுள்ளவர்கள் இந்த நாட்டிலே சமூக ரீதியாக வந்த இன முரண்பாடு ஏற்பட காரணமாக இருந்தவர்கள் பெரும் தேசியவாதிகள் எனும் ஒரு சாரார் குறும் தேசியவாதிகள் எனும் ஒரு சாரார்.
இந்த நாட்டிலே ஏற்படும் பிரச்சினைகளை தேச நலனோடும், பிராந்திய நலனோடும் தீர்த்து வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட முறைமை மாகாணசபை முறைமை. இந்த மாகாணசபையை ஏற்காத ஒரு கூட்டத்தினர், எங்களுக்கு ஆதரவு வழங்காத ஒரு கூட்டத்தினர் இன்று எல்லாவற்றையும் குழப்பியுள்ளனர்.
இதேபோன்று தென்பகுதியில் உள்ள சிங்கள மக்கள் மனசாட்சி உள்ளவர்களாக இருந்தால் தனிநாடு கேட்டவர்களுக்கு குறைந்த பட்சம் 13வது சரத்தையேனும் கொடுத்திருக்கின்றோமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக நூறு வீதம் அதிகாரம் கேட்டவர்கள், இரத்தம் சிந்தியவர்கள், சொத்தை இழந்தவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள், அழிந்தவர்கள் தமிழர்கள். இதனை யாரும் மறுக்க முடியாது.
இன்று கிழக்கு மாகாணத்தின் நிலைமையினை பார்த்தால் தமிழர்களை முட்டாளிக்கிவிட்டு, வாக்குகளை கொள்ளையிட்டுச் சென்ற கூட்டம் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளது. நாங்கள் ஆளவேண்டிய, எங்களுக்கு உரித்தான, நாங்கள் கேட்டு நின்ற சபை இன்று நாம் இழந்து விட்டோம். இது தொடர்பில் யாருக்கும் கவலை கிடையாது.
நாங்கள் பலமான மக்கள் ஆதரவுடன் ஆட்சியை பிடிக்க முடியும் என நம்பினோம். அதுவும் மகிந்த சிந்தனையுடன் சேர்ந்து நின்றால் அழிந்து போன, காய்ந்து போன, குடிநீருக்கு ஏங்கி நிற்கின்ற, கல்விக்கு ஏங்கி நிற்கின்ற மக்களை அபிவிருத்தி செய்ய முடியும். அதுதான் சாலப் பொருத்தமான விடயம். இங்கிருக்கும் சிங்கள, முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைத்து ஆட்சியை நடத்தினால் கிழக்கு மாகாணத்தினை ஒரு பிரகாசமான மாகாணமாக உருவாக்க முடியும் என நம்பினேன். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. இது எனது பிழையல்ல மக்களின் பிழை.
இன்று பார்த்தால் இலங்கையில் இருக்கும் பேரினவாதிகளின் பட்டியலை பார்த்தால் அதில் எங்களது ஆளுனரும் இருப்பார் என்பதை நம்புகிறேன். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு நூறு வீதம் அநீதி இழைக்கப்படுகின்றது. இது திட்டமிடப்பட்டு இழைக்கப்படுகின்றது. இது மிகவும் வேதனையான விடயமாகும். இது கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் தெரியும் அமைச்சரவைக்கும் தெரியும்.
நாங்கள் வேதனைப்படும் விடயம் என்னவென்றால் ஆளுனர் எடுத்துள்ள தீர்மானம் மனசாட்சிப்படி பிழையானது. மரபு படி பிழையானது, மாகாணத்தில் உள்ள மக்களின் மனங்களை குழப்பும் பொழுதும், தமிழர்கள் தாங்கள் தோல்வி நிலைக்கு செல்லும்போது மாகாணம் குழப்ப நிலையை எதிர்நோக்குகின்ற நிலைமை அதிலே எங்களைப்போன்ற நடுநிலையானவர்கள், அரசாங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி இயங்க முடியாத சங்கடமான நிலைமைகளின் மத்தியிலே ஆளுனர் எடுத்த முடிவு அமுலாக்கப்பட வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை அதனை அங்கீகரித்துள்ளது என்பதை அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். வருத்தமடைந்தேன்.
ஆளுனரால் இந்த மாகாணத்தின் மக்களின் நலன்களை இந்த மாகாணத்தின் எதிர்காலம் தொடர்பில் ஆழ்ந்து சிந்திக்க முடியாது. அவர் இங்கு பிறக்கவில்லை. இங்கு பிறந்து வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்கே அதன் நன்மை தீமைகள் தெரியும்.
இனவிகிதாசாரப்படி நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறுகின்றார். இது பரவாயில்லை. ஆனால் ஆளுனர் இன்று கூறுகின்றார் மாகாணசபை ஆரம்பத்த காலத்தில் இருந்த எல்லாம் அநீதியான நியமனம் அதனை நான் சமப்படுத்த வேண்டும் என்று கூறி ஆயிரம் நியமனங்கள் வழங்கும் போது தமிழர்களை ஒரேயடியாக புறக்கணிக்கின்றார். அவருக்கு நிச்சயமாக முஸ்லிம்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கோடு செய்யவில்லை. கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவையினை அவர் பகடைக்காயாக பயன்படுத்துகின்றார். அவ்வாறு பயன்படுத்தி சிங்கள மக்களை பாதுகாக்கும் ஒரு அரசனாக தன்னைக் காட்டிக்கொள்ள நினைக்கிறார்.
இதே நிலைமை தொடர்பில் முதலமைச்சர் உட்பட அனைவரும் ஜனாதிபதியுடன் பேசி ஒரு முடிவினை எடுக்காது விட்டால் அடுத்துவரும் கிழக்கு மாகாண அரசாங்கம் இலங்கை அரசுக்கு எதிரான ஒரு அரசாக அமையும். நாங்கள் சென்று எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு இருப்போம். தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐ.தே.கட்சியும் வந்து கதைத்துக் கொண்டு செல்வர். ஆளுனர் வடகிழக்கு இணைந்த போது இருந்தார், இப்போது இருக்கின்றார். நான்தான் சிங்கள மக்களின் பாதுகாவலன் எனக்கூறி மீண்டும் ஆளுனராக இருப்பார்.
வெல்லப்போவது ஆளுனரின் சிந்தனையும் அவரது ஆட்சியும். பாதிக்கப்படப் போவது நீதியான நேர்மையான அரசியல் சிந்தனை படைத்த தலைவர்களும் அப்பாவி பொதுமக்களும். அதனைப் போன்று சமத்துவமும் குலையப் போகின்றது. இது நடக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு கிழக்கு மாகாண அமைச்சரவையின் கைகளில் தான் இன்று உள்ளது.
இதனை நாங்கள் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று எங்களுக்கு என்ன செய்கின்றது.அரசாங்கத்தில் உள்ள இடை நிலை அதிகாரிகள் இதனை எப்படியெல்லாம் கையாள்கின்றார்கள். இதிலே தமிழ் மக்கள் எவ்வாறு தீர்மானம் எடுப்பது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்.
வெறுமனே உணர்ச்சி வசப்படும் நிலைமட்டுமல்ல இந்த போட்டிக்குள் அறிவு பூர்வமாக நாங்கள் எப்படி வெற்றியடைவது. இதனுள் எங்களது கரங்களை எவ்வாறு பலப்படுத்திக் கொள்வது. இதற்குள் எவ்வாறு எமது அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வது, இதற்குள் எங்களது அதிகாரப்பகிர்வை எவ்வாறு பலப்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் நாங்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.
நாங்கள் எங்கள் அரசியலை தொடர்ந்து முன்கொண்டு செல்வோம். எங்களது சமூகத்தின் அதிகார பரவலாக்கலுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். இது தனிப்பட்ட சமூக நலனுக்கு மாத்திரம் இல்லாமல் தேசிய நலன்,மாகாண நலனுடன் ஒத்திசைவான ஆட்சியை செய்யவேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் நாங்கள்.
பொறுப்பு வாய்ந்த நிலையில் உள்ளவர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். இல்லையென்றால் அனைத்து வளங்களையும் பசுமையினையும் கொண்ட கிழக்கு மாகாணம் அழிந்து விடும். எமது மக்களை இன்னும் கையேந்து சமூகமாக மாற்றுவதற்கு ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கின்றது. அதனை அனுமதிக்கக்கூடாது.