7 நாடுகளின் போர் வியூகம்! முறியடித்த புலிகள்!

521

 

 

20_12_08_7countries.jpg

அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறார் அதிபர் ராஜபக்சே. ஏழுநாடுகளின் வியூகங்களை முறி யடித்திருப்பதுடன் 170-க்கும் மேற் பட்ட ராணுவத்தினரை படுகொலை செய்திருக்கிறார்களே புலிகள் என்கிற அதிர்ச்சிதான். இதனால் அடுத்தகட்ட ஆலோசனை, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் கோபாவேசத் துடன் உறுமிக்கொண்டிருக்கிறாராம்.

கிளிநொச்சியைப் பிடிப்பதற் காக மலையாளபுரம், குஞ்சுப்பரந்தன், புளிக்குளம், முறிகண்டி ஆகிய நான்கு பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் கடந்த 17-ந் தேதி அதி விரைவாக முன்னேறி ராணுவத்தினர் உக்கிரமான தாக்குதலை நடத்தினர்.

அதேவேளையில் புலிகளின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில், கிளாலி பகுதியிலிருந்தும் கிளிநொச்சியை நோக்கி படைகள் விரைந்தன. ஆக, 5 இடங்களிலிருந்து ஒரேசமயத்தில் தாக்குதல் நடத்தினார்கள் இலங்கை ராணுவத்தினர். ராணு வத்தின் 53, 55, 57 மற்றும் 58 ஆகிய படைப்பிரிவுகளை இந்த தாக்குதலில் களமிறக்கினார் ராஜபக்சே. இலங்கை ராணுவத்தில் இந்த படைப்பிரிவுகள் மிக முக்கிய மானவைகள்.

கிளாலி பகுதியில் 53, 55 படைப்பிரிவினைச் சேர்ந்த ராணு வத்தினரும் பூநகரி-பரந்தன் வழி யாக மலையாளபுரம், குஞ்சுப் பரந்தன், புளிக்குளம், முறிகண்டி பகுதிகளுக்கு 57 மற்றும் 58 படைப் பிரிவு ராணுவத்தினரும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த 5 முன்நகர்வு தாக்குதல் களும் ஒரேசமயத்தில் புலிகள் மீது நடத்தப்படவேண்டுமென்பதுதான் ராணுவத்தினருக்கு கொடுக்கப் பட்டிருந்த உத்தரவு.

அதன்படி, கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் இடைவிடாமல் பலமணி நேரம் நடந்தது உக்கிரமான இந்த தாக்குதல்.

தாக்குதலை முறி யடித்த புலிகள், 170 ராணுவத்தினரை இந்தத் தாக்குதலில் படுகொலை செய்துள்ளனர். 300-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயங் களுடன் தப்பி ஓடினர்.

ஒரேசமயத்தில் 5 இடங்களி லும் பதில்தாக்குதல் நடத்தி, ராணுவத்தினருக்கு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி யிருப்பதுடன், ஆர்பி.ஜி எறிகணைகள் 49, புறப்னர்கள் என்கிற அதிநவீன லாஞ்சர்கள் 37, ஆர்பிஜி எல்.எம்.ஜி.2, ஆர்பிகே எல்.எம்.ஜி. 2, ஆர்பிஜி ரக துப்பாக்கி கள் 7, ஏ.கே.ரவைகள் 37,000, ஏ.கே. ரக ரவை இணைப்புகள் 1230, பி.கே. ரக ரவை கள் 12000 என ஏராளமான ஆயுதங்களை யும் கைப்பற்றியுள்ளனர்.

சண்டை நடந்த சூனியப்பிரதேசங் களில் சிதறிக்கிடக்கும் ராணுவத்தினரின் உடல்களை சேகரித்து செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்து வருகின்றனர் புலிகள். இப்படி ஒப்படைக்கப்பட்ட உடல்களில் சிலர் சிறுவர்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளது செஞ்சிலுவை சங்கம்.

“”கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக நடத்தப்பட்ட இந்த 6 மாத கால யுத்தத்தில் ராணுவத்தினர் பெரிய அளவில் உயிர் இழப்புகளை சந்தித்துள்ளனர். ஆனால், இதனை ஈடுகட்டுகிற அளவுக்குப் புதிதாக ராணுவத்தில் ஆள் சேர்ப்பு என்பது பெரிய அளவில் நடக்கவில்லை. காரணம், ராணுவத்தில் சேர சிங்களர்கள் முன்வராதது தான். இதனால், சிறுவர், சிறுமிகளை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் அதிபர். சர்வதேச மனித உரிமையாளர்கள் இது பற்றி ஐ.நா.வில் குரல் எழுப்பினால் குற்றவாளிக் கூண்டில் ஏறி ராஜபக்சே விளக்கம் தரவேண்டியதிருக்கும்” என்கின்றனர் இலங்கை ராணுவத்தினரே.

ஒரேசமயத்தில் 5 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களையும் முறியடித்து ராணுவத்தினருக்கு பெரிய சேதங்களையும் புலிகள் ஏற்படுத்தியிருப்பதுதான் ராஜபக்சேவை தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது.

புலிகளுக்கு இது எப்படி சாத்தியமானது? ஒரே சமயத்தில் அட்டாக் என்கிற ஐடியாலஜியை இலங்கை ராணுவத்துக்கு தந்தது யார்? என்கிற கேள்வி, அதிபர் அலுவலக வட்டாரங்களில் சுழன்றடித்துக்கொண்டி ருக்கிறது.

இலங்கை ராணுவ வட்டாரங்களில் விசாரித்த போது… “”தாக்குதலுக்கு முன், திங்களன்று அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் இலங்கைக்கு வந்தனர். அங்கு, வன்னி பகுதியின் இலங்கை ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா 7 நாடுகளின் உயரதிகாரிகளையும் வரவேற்றார்.

பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் இவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் இந்தியாவின் கேப்டன் பிரதீப்சிங், அமெரிக்காவின் லெட்டினண்ட் கேனல் லாரன்ஸ் ஸ்மித், பிரிட்டனின் கேனல் ஆண்டன் கோஸ், பாகிஸ்தானின் கேனல் சையத் ஹுரம் ஹஸ்னைன் ஆலம், பங்களாதேஷின் கமாண்டர் இமாம்ஹோசைன், ஜப்பானின் கேப்டன் மசகருமுரை, மாலத்தீவின் கேனல் அக்மட் ஷநீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களிடம் கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக எங்கெல்லாம் இலங்கை ராணுவம் நிற்கிறது, எந்த இடங்களில் சண்டை நடக்கிறது என்பதை “மேப்’ வைத்து விவரித்தார் வன்னி கமாண்டர் ஜெயசூரியா.

அப்போது நடத்தப்பட்ட ஆலோசனை யில் “புலிகள் இயக்கத்தில் வெறும் 2000 பேர் இருப்பதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் நிற்கும் நிலைகளிலிருந்து 5 இடங்களில் ஒரே சமயத்தில் அட்டாக்கை நடத்தவேண்டும். அப்போது அந்த 2000 பேரும் வெளியே வந்துதான் ஆகவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் 500 புலிகள் வெளிப்பட்டாலும் அவர்களை நீங்கள் எதிர்கொண்டு அழிப்பது சுலபம்தானே. ஒரேசமயத்தில் பல இடங்களில் இதுவரை அட்டாக் முயற்சியை ராணுவம் நடத்தவில்லை. இப்போது நடத்துங்கள். வெற்றி கிடைக்கும்” என்று வியூகங்களை அமைத்துத் தந்துள்ளனர் 7 நாடுகளின் ராணுவ அதிகாரிகளும். இந்த வியூகம் அப்படியே ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சொல்லப்பட்டது. அதிபர் ராஜபக்சேவுடன் அவசரமாக இந்த வியூகத்தை பொன்சேகா விவாதித்துவிட்டு 16-ந் தேதி அதிகாலையிலேயே அந்த வியூகத்தை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதன்படிதான் ஒரே நேரத்தில் பல இடங்களில் அட்டாக் என்கிற யுக்தியை கையிலெடுத்தது இலங்கை ராணுவம்” என்கின்றனர்.

இந்த அட்டாகை புலிகள் எப்படி முறியடித்தனர்? “”ஏழு நாட்டு ராணுவ அதிகாரிகள் கொழும்புக்கு வந்து இறங்கியதுமே இதனை அறிந்துகொண்டது புலிகளின் உளவுப்பிரிவு. அதிகாரிகளின் ஒவ்வொரு மூவ்வையும் அறிந்து வந்துள்ளனர். வன்னி களமுனையில் ராணுவத்தின் பாதுகாப்பு தலைமையகத்தில் 7 அதிகாரிகளும் ஆலோ சனையில் ஈடுபட்டதையும் அறிந்துகொண்டனர். நிச்சயம் மறுநாள் நள்ளிரவில் இருந்தேகூட அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதையும் புலிகளின் உளவுப்பிரிவு பிரபாகரனுக்கு சொல்லியிருக்கிறது.

இதனையடுத்து நடந்த உடனடி ஆலோசனையில், கிளிநொச்சியை பிடிக்க எந்தெந்த வழிகளில் அவர்கள் முன்னேறிவர முடியும் என ஆராய்ந்தபோது, தற்போது ராணுவம் நிற்கும் 5 பகுதிகளுமே சாத்தியம்தான் என்று நினைத்தனர். அதனால் எந்த பகுதியில் தாக்குதல் நடத்துவார்கள் என்று யோசிப்பதைவிட, அவர்களால் முன்னேற வாய்ப்புள்ள 5 இடங்களிலும் பதில் தாக்குதல் நடத்த நாம் வலிமையாக தயார் நிலையில் நிற்கவேண்டுமென முடிவு செய்து அந்தந்த பகுதிகளின் தளபதிகளுக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் புதியதொரு யுத்தியையும் இதில் கையாண்டுள்ள னர். அதாவது, கிளிநொச்சியை சுற்றி மிகப்பெரிய மண் அரண் உண்டு. அந்த மண் அரணுக்கு முன்பாக மிகப்பெரிய நீள, அகல ஆழத்துடன் கூடிய அகழிகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர் புலிகள். இந்த அகழியைத் தாண்டித்தான் நீண்ட தொலைவில் மண் அரண்கள். அகழிகளில் பதுங்கியிருக்கும் புலிப்போராளிகள் அங்கிருந்து விலகி, மண் அரண்களுக்குப் பின்னால் இருக்க உத்தரவிட்டது. அதன்படி புலிப்போராளிகள் மண் அரண்களுக் குப் பின்னால் பதுங்கிக்கொண்டனர். இதனை அறியாமல் 5 இடங்களிலிருந்தும் முன்னேறிய ராணுவத்தினர் அகழிகள் மீது ஏகத்துக்கும் தாக்குதல் நடத்த… பதில் தாக்குதல் ஏதும் நிகழாததால்… தைரியம் பெற்ற ராணுவத்தினர் மேலும் மேலும் முன்னேறினர். அகழிகளுக்குள் இறங்கி ஏறியபோதும், புலிகள் யாரும் தென்படாததால் “வெற்றி நமக்குத்தான், அதோ தூரத்தில் தெரியும் மண் அரண்களையும் தாண்டிவிட்டால்… கிளிநொச்சிக்குள் நுழைந்துவிடலாம்’ என்கிற சந்தோஷத்தில் அதிவிரைவாக முன்னேறினர். மண் அரண்களை ராணுவத்தினர் நெருங்கிவிட்டதை அறிந்த புலிப்போராளிகள், மண் அரண்களுக்குப் பின்னால் இருந்து குபீர் என அலை அலையாக எழுந்தனர். அந்த கணத்தில் கொஞ்சம்கூட ராணுவத்தினர் சுதாரிக்க இடம் கொடுக்காமல் சரமாரியாக எதிர்தாக்குதல் நடத்த… “தொப், தொப்’பென சாய்ந்தனர் சிங்கள ராணுவத்தினர்.

புலிகளின் எதிர்பாராத இந்த தாக்குதலில் முன்வரிசை ராணுவத்தினர் செத்துக்கொண்டிருப்பதை தூரத்தில் வந்துகொண்டிருந்த ராணுவத்தினர் பார்த்து மிரண்டுபோய்… ஆயுதங்களை தூக்கிக்கொண்டு ஓடமுடியாமல் கீழே போட்டுவிட்டு உயிர் தப்பித்தனர். 5 பகுதிகளிலும் இரண்டு நாட்களில் மொத்தம் 18 மணிநேரம் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் நவீனரக பல்குழல் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியுள்ள புலிகள், 28 உயிர்களை மட்டும் இழந்து ஏழு நாடுகளின் வியூகத்தினை முறியடித்துள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும்” என்கிற தகவல்கள் ஈழத்திலிருந்து கிடைக்கின்றன.

தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியாத ராஜபக்சே, உடனடியாக அப்பாவி தமிழர்கள் மீது வான்படைத் தாக்குதலை நடத்த உத்தரவிட… வான் படையினர் கண்மூடித்தனமாக வீசிய குண்டுவீச்சில் குழந்தைகள், பெண்கள் , முதியவர்கள் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். விமான குண்டுவீச்சிலிருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற தமிழச்சிகள் பலரும் குழந்தைகளை அணைத்தவாறு தரையோடு தரையாக பதுங்கிக்கொள்கிற கொடுமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட “கிளஸ்டர் பாம்’ (கொத்தணி குண்டுகள்) களை அப்பாவி தமிழர்கள் மீது வீசி கொன்றுகுவித்து வருகிறது, புலிகளை வெல்ல முடியாத சிங்கள ராணுவம்.

SHARE