எதிர்காலத்தில், பருகுவதற்கு ஏற்ற தண்ணீர்ப் பற்றாக்குறைதான் உலகம் சந்திக்கும் பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது பூமியில் உள்ள நீரில் குடிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு வெறும் 3 சதவீதம் தான். இதனால், மற்ற நீர் வகைகளை சுத்தம் செய்து குடிநீராகப் பயன்படுத்தும் அவசியம் எதிர்காலத்தில் உண்டாகும்.
அதைக் கருத்தில்கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆராய்ச்சிகளின் பயனாக தற்போது ஓர் அதிநவீன சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனம், வெறும் 20 நிமிடங்களில் பாக்டீரியாக்கள் உட்பட அனைத்து மாசுகளையும் நீக்கி 99.99 சதவீதம் சுத்தமான குடிநீரை தரக்கூடியது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இச்சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
கறுப்பு நிறத்தில் சிறிய செவ்வக வடிவில் உள்ள இந்த நானோ சாதனம், சூரியனில் இருந்து கிடைக்கும் கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளிக் கதிர்களின் சக்தியைப் பயன்படுத்தி நீரை சுத்தம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.