பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள் குவித்தது.
தரங்க அதிகபட்சமாக 92 ஓட்டங்கள் குவித்தார். நட்சத்திர ஆட்டக்காரர் ஜெயவர்த்தனவிற்கு இந்த போட்டி கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் 4 ஓட்டங்களில் வெளியேறி அவர் ஏமாற்றத்தை அளித்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஜீனைட் கான் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை பாகிஸ்தான் தனது 2வது நாளில் தொடங்கி விளையாடியது.
இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்கள் குவித்திருந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது.
இலங்கை வீரர் ரங்கன ஹேரத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தவித்த பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் 332 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 12 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணியில் சப்ராஷ் அகமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 103 ஓட்டங்களை குவித்தார்.
இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரங்கனா ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். வரலாற்றில் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ஒருவர் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற சிறந்த பந்துவீச்சு பெறுபேறு இதுவாகும்.
தொடர்ந்து இரண்டாம் இன்னின்சில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 153 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடிவருகின்றது.