சிங்கள மக்களின் மனமாற்றம் இந்த அரசுக்கு எதிராக இப்போது ஊவாவில் நிகழ்ந்து விட்டது. இங்கு வாழும் முஸ்லிம் சகோதரர்களும் எம்மோடு கரங்கோர்த்து கொண்டுள்ளார்கள். பதுளை மாவட்ட மலைநாட்டு தமிழ் மக்கள் மத்தியிலும் இப்போது இந்த அரசுக்கு எதிரான அலை அடிக்க தொடங்கிவிட்டது
இங்கே நகரங்களில் வாழும் மலையக தமிழர்கள் இந்த கொடுங்கோல் அரசை எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்து விட்டார்கள். சிங்கள, முஸ்லிம் மற்றும் நகர வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அரசுக்கான ஆதரவில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியை பதுளை மாவட்ட தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளை கொண்டு நிரப்புவதற்கு இந்த அரசு பெரும் சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. அரசுக்கு முட்டுக்கொடுக்கும் மலைநாட்டு பிற்போக்கு அரசியல் வியாபாரிகள் தமது எஜமானர்களை திருப்திப்படுத்த தோட்டங்களில் சாராய காட்டாற்றை ஓடவிட முயற்சிக்கின்றார்கள். இதுதான் இவர்களால் முடிந்த இவர்களது இறுதி முயற்சி.
இந்த அயோக்கிய முயற்சிகளை இப்போது நாம் எம் கடும் உழைப்பால் முறியடித்துள்ளோம். தோட்ட தொழிலாளர்களை சாராயம் கொடுத்து விலைக்கு வாங்கும் காலமெல்லாம் மலையேறி போச்சு. என்பதை இந்த அரசின் காலடியில் விழுந்து கிடக்கும் நபர்களுக்கு எங்கள் தோட்டப்புற இளைய உடன்பிறப்புகள் 20ஆம் திகதி நிரூபித்து காட்டுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன். பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டங்களில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:- இந்த தேர்தல் பதுளை மாவட்டத்துக்கும் ஊவா மாகாணத்துக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் அல்ல. முழுநாடும் இன்று ஊவாவை திரும்பி பார்த்துகொண்டுள்ளது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆட்சிமாற்றத்துக்கு அடிகோலும் தேர்தல் இதுவாகும். இதைவிட இனி ஒரு மாகாணசபை தேர்தல் இப்போது இடையில் இல்லை. இதுதான் கடைசி தேர்தல். இதில் நாம் விடுக்கும் செய்திஇ கொடுக்கும் அடி இந்த கொடுங்கோல் அரசுக்கு மரண அடியாக இருக்க வேண்டும். அரிசி, சீனி, மா, பால்மா ஆகிய அத்தியாவசிய பொருள்களின் விலைகளை உயர்த்தி, தோட்ட தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் அரசுக்கு நாம் அடி கொடுக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் வணக்க ஸ்தலங்களை இடிக்கும் அரசை நாம் இடித்து எறியும் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த அரசில் அடைக்கலம் புகுந்துள்ள மலைநாட்டு அரசியல் வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள்? இந்த நாட்டில் நாம் ஜனாதிபதியாக முடியாதாம். ஆட்சி அமைக்க முடியாதாம். ஆகவே ஆளும் அரசில் இணைந்து பலமாக இருப்பதுதான் நமக்கு நல்லதாம்.
நேற்று பண்டாரவளை பகுதி தோட்டம் ஒன்றை கடந்து செல்லும்போது ஒரு மலையக கட்சி தலைவர் இப்படி பேசிக்கொண்டிருப்பதை நான் கேட்டேன். இதை கேட்கும் போதும் சிரிப்புதான் வருகிறது. இவர் ஒரு நகைச்சுவை நடிகரை போல் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நாட்டில் சிறுபான்மையினராகிய நாம் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பது எனக்கு தெரியும். ஜனாதிபதியாக முடியாது என்பதும் எனக்கு தெரியும்.
முடியுமானால் நான்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி. அந்த தன்னம்பிக்கையும்இ கடும் உழைப்பும் என்னிடம் இருக்கிறது. ஆனால், நான் ஒரு தமிழன். இது இன்றைய காலகட்டத்தில் முடியாது. ஆனால் அதற்காக நம்மையே அழிக்கும் ஆட்சியில் நாம் அங்கம் வகிக்க முடியுமா? நாம் நம்மை மதிக்கும் ஒரு நல்லாட்சியை அமைக்க உதவலாம். அதில் பங்காளியாக இருக்கலாம். சிங்கள, முஸ்லிம் மக்களுடன் கரங்கோர்த்து இந்த கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பலாம். இந்த கொடுங்கோல் ஆட்சியில் பலமாக இருப்பதை பற்றி பேசுகிறீர்கள்.
நுவரெலியாவில் நமது மக்களின் வாக்குகளை வாங்கி கொண்டு போய் இந்த அரசாங்கத்தில் நீங்கள் பலமாக இருந்து கண்ட பயன்தான் என்ன? வாக்குறுதியளித்தைபோல் நமது மக்களுக்கு வீடு கிடைத்ததா? காணி கிடைத்ததா? சகாய விலைகளில் தொழிலாளருக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைத்ததா? பெரும்பான்மை இளைஞர்களுக்கு கிடைப்பதை போல் நமது இளைஞர்களுக்கு கொரியாவில், ஜப்பானில் தொழில் வாய்ப்பு கிடைத்ததா? அல்லது முன்னர் மத்திய மாகாணசபையிலே இருந்த தமிழ் கல்வி அமைச்சையாவது தக்க வைத்துகொள்ள உங்களால் முடிந்ததா? இவை எதுவும் நம் மக்களுக்கு கிடைக்கவில்லை.
ஆனால், உங்களுக்கு பதவிகள் கிடைத்துள்ளன. வாகனங்கள் கிடைத்துள்ளன. அவற்றுக்கு பெற்றோல் வசதிகள் கிடைத்துள்ளன. பங்களாக்கள் கிடைத்துள்ளன. லட்சக்கணக்கில் சம்பளங்கள் கிடைத்துள்ளன. வசதிகள், வரப்பிரசாதங்கள், வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதற்குதான் நீங்கள் அப்பாவி தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கி இந்த அரசுக்கு காணிக்கை செலுத்துகிறீர்கள்.
தேங்காய் உடைத்தது கற்பூரம் கொளுத்துகிறீர்கள். இப்போது மலையக மக்கள் விழித்து எழுந்துவிட்டார்கள். அந்த எழுச்சி இப்போது ஊவா மாகாண தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்பித்து விட்டது. இனி இது சூறாவளி போல் அடித்து முழு மலையகத்தையும் கலக்க போகிறது. இதை சகித்துக்கொள்ள முடியாமல் நீங்கள் தோட்டப் புறங்களில் சாராய ஆற்றை ஓட விட முயல்கிறீர்கள். அதற்கு உங்கள் எஜமான்கள் கொட்டிக் கொடுக்கின்றார்கள். மக்கள் எழுச்சியின் முன் இந்த சாராய சாம்ராஜ்யம் உடைந்து நொருங்க போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.
TPN NEWS