மூன்று தசாப்த காலமாக நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டம் ஆகஸ்ட்2012இல் அகற்றப்பட்டது. ஆனால் அசாதாரணமான 1979 பயங்கரவாத தடைச் சட்டமூலம் இன்னும் அமுலில் இருக்கின்றது-சரவணபவன் எம்.பியின் நாடாளுமன்ற உரை

366

 

தமிழரின் காணிகளை ஆக்கிரமித்துக் கொண்டு அவர்களை எங்ஙனம் திருப்திப்படுத்துவீர்?

இராணுவம் வசமுள்ள காணிகளை காணிச் சொந்தக்காரர்களிடம் மீள ஒப்படையுங்கள். முதலில் இந்தக் காணிகளை மக்களிடம் ஒப்படை யாமல் எப்படி அவர்களை உங்களால் திருப்திப்படுத்த முடியும்? இதை நீங்கள் செய்தாலொழிய தமிழ் மக்களை என்றுமே உங்களால் திருப்தி ப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ சரவணபவன் தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்

கௌரவ சபாநாயகர் அவர்களே,

தீவிர சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சில விடயங்களை நான் சொல்லப்போகிறேன். ஆனால் அதைச் செவிமடுக்க இங்கே பல பாராளு மன்ற உறுப்பினர்கள் இல்லை.

நான் நேர்மறையானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் விடயங்கள் இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் பேசுவது எதுவாயினும், விளைவுகள் ஒன்றாக இருப்பதையும்  விரும்புகிறேன்.  ஏன் நமது  செய்கைகள் சிறப்பாக அமையவில்லை என்பது பற்றி முயற்சிகள் பல இடம்பெறலாம் ஆனால் நமக்குத் தேவையானது மேலும் மேலும் பொறுமைதான்.

சர்வதேச சமூகம் மனித உரிமைகள், சமூக  பொருளாதார நீதி பற்றிப் பேசுகையில் இறையாண்மை கொண்ட விரிவுரைகளைக் கேட்கும் தயார்நிலையில் இல்லெயென்று கூறி அவர்கள் வாயை மூட முயற்சித்து  அரசுதான் ஒளிந்து கொள்கின்றது.

துரதிஸ்டவசமாக மனித உரிமைகளை சிறீலங்காவில் அமுல்படுத்துவது என்பது ஊழல் மலிந்த நீதித்துறை,  அதிகாரத்துவம் ஆகியவற்றினதும்,  பாதுகாப்புப் படையினர்,  அரசியல்வாதிகள் ஆகியோரினதும் கருணையிலேயே தங்கியிருப்பதோடு அரசியல் தண்டனைகள் வழங்கப்படாத ஒரு பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தும் வருகின்றது. மனித உரிமைக்காக போராடும் முதன்மையானவர்கள்,  இந்த நல்லாட்சியிலும் மிரட்ட ப்பட்ட வண்ணமாகவே இருக்கின்றார்கள். சிறுபான்மையினர் கவனிக்கப்படும் முறை நாட்டின் பிரஜைகளாக நாம் எப்படி வாழ்ந்து வருகி றோம் என்பதை நன்கு வெளிப்படுத்தும். அசைக்க முடியாத பெரும்பான்மையை வைத்துக்கொண்டு,  அரசியல் கோலத்தை மாற்றும் திறனோடு ஊழல் மிக்க ஓர் அரசாட்சியை வைத்திருப்பவருக்கு, மனித உரிமைகளை காலில் மிதித்து விட்டு அதை ஒரு ஜனாநாயகச் செயற்பாடு என்று உரு மாற்றும் பெருவசதி நிறையவே இருக்கின்றது.

தேசிய சமரசம்  என்பது கொழும்பு நெடுநேரம் சிந்தனைவயப்பட்டு, மந்திரம்போல ஒரு வெற்றிப்பாதையை அடைய விட்டுவிட்டுச்  செல்வ தல்ல என்ற என் கருத்தை நான் இங்கே தெளிவாகப் பதிய விரும்புகிறேன்.

யுத்தத்தில் பாதிப்பபுற்றவர்கள்தான் இங்கே சிறுபான்மையினர். எனது கூற்றை நிரூபிக்க புள்ளி விபரங்கள் தேவையில்லையென்று நம்புகி ன்றேன். வாழ்வின் எந்தக் கோணத்திலும் நாம் நிறையவே

அழிவுகளைச் சந்தித்தவர்கள்.

சில பெரும்பான்மை தீவிரவாத  இனத்தவரிடையே அங்கலாய்ப்பு இன்னமும் நிலவி வருவதை நாம் உணர்கிறோம். இலங்கையில் தமிழ் பேசும் சமுதாயத்தையே முற்றாக அழித்து விடும் கைங்கரியத்தை நாம் முழுதாக முடிக்கவில்லையே என்ற அங்கலாய்ப்புதான் அது.

ONUR இணையப் பக்கத்தில் சமரசத்திற்கான தேசிய நிகழ்வினை தொடக்கி வைத்ததை அரசுக்கு எதிரான தீயசக்திகள் கூட்டாட்சி சமரசம் என்று முத்திரை குத்தியிருப்பதைக் கண்டதாக  மேன்மை தங்கிய ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார். இப்படியான அவதூறுகளை வீசுவோர் என்றோ ஒரு நாள் அழவேண்டி வருமென ஜனாதிபதி ஆருடம் கூறுகிறார்.

சமரச ஆணைக்குழு தங்கள் அறிக்கையின் 387வது பக்கத்தில் தந்த குறிப்பை இங்கே ஒருமுறை குறிப்பிட விரும்புகிறேன்.

“சமரசத்திற்கான வழிமுறைக்கு  இதுவரையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கும்,  மன உளைச்சல்களுக்கும் சிங்கள தமிழ் சமுதாயத்தின் அரசியல் தலைவர்களும்,  சிவில் சமூகத்தினரதும் முழுமையான அங்கீகரிப்பு தேவைப்படுகின்றது. தெற்கின் இரு அரசியல் கட்சிகள் தேசியத்தின் மீதான பற்றின் அடிப்படையில் இயங்கி தமிழ் மக்கள் ஏற்கும் வகையில் தங்களுக்குள் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தால் இந்த மோதல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்”

பாதுகாப்பற்ற சிறுபான்மையினர்

பாதிக்கப்பட்டவர்களாக சிறுபான்மையினர் இருக்க,  நாம் முன்பிருந்த நிலையிலிருந்து முன்னேறுபவர்களாகத் தெரியவில்லை. இலங்கையில் அரசியல் சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் குறிப்பிடக்கூடிய  நிகழ்வுகளைக் கூறவிரும்பும்  அதே சமயம்,  நேரக் குறைவு காரணமாக சிலவ ற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

1956இல் சிங்களம் மாத்திரம் என்ற சட்டமூலம் கொணரப்பட்டது. .காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கா 1957இல் ஒரு தீர்வைக்காண முயற்சித்தார். ஆனால் பண்டாரநாயக்கா-செல்வா ஒப்பந்தம் என்றுமே இடம்பெற்றதில்லை. 1961இல் காலஞ்சென்ற மதிப்பிற்கு ரிய டட்லி செனநாயக்கா இதற்கான தீர்வைத் தேடினார். ஆனால் மீண்டும் எதுவும் நடக்கவில்லை. இதன் பிறகு 1972இல் காலஞ்சென்ற மதிப்பிற்குரிய சிறீமாவோ பண்டாரநாயக்காவின் அரசு ஒரு புதிய அரசியலமைப்பை யாத்தது. இதில் சிறுபான்மை இனத்தவருக்கு பாதுகாப்பு அளித்த சோல்பெரி சட்டவிதிக்கூறு 29 அகற்றப்பட்டது. பல்கலைக்கழக நுழைவுக்கு-குறிப்பாக வடக்கு கிழக்கிலிருந்து நுழையும் மாணவர்களுக்கு மட்டுப்படுத்தல் முறையையும் அரசு அறிமுகப்படுத்தியது.

இதன் எதிரொலியாக யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் விஞ்ஞான பீடத்தில் 65 வீதமான மாணவர்கள் வட பிராந்தியத்திலிருந்து வந்த ர்கள அல்ல.

எதிர்ப்லைகளும் தீவிரவாதமும்;

தமிழ் மக்கள் எப்பொழுதாவது எதிர்ப்பலைகளைக் கிளப்பியபோது(1958 1961, 1971, 1977,  1981., 1983 தீவிரவாதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டா ர்கள். 97000 நூல்களும்,  அரிதான பல கைப்பிரதிகளும் யாழ் நூலகத்தில் வைத்து எரித்ததை நாம் நினைவுக்கு கொண்டுவர வேண்டும்.  இவற்றையெல்லாம் ஞாபகப்படுத்துவன் காரணம்,  மிகக் கவனமாகத் திட்டமிட்டு மீள் அரங்கேற்றும் முனைப்புகளுக்கான முயற்சி கள் இடம்பெறுவதுதான். நம்மிடம் ஒரு அரசியல் தீர்மானம் இப்பொழுது இருக்கின்றது. இது வீணடிக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை நாம் பிரச்சி னைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம்.

அர்த்தம் பொதிந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கும்,  நிலையான சமரசத்திற்கும் எமக்கு  உண்மையான இராஜதந்திரம் ,  அரசியல் விருப்பு போன்றன தேவைப்படுகின்றன.

இன்றும் அகலமறுக்கும் பெண்கள் மீதான தாக்கங்கள்.

சமரசத்திற்கான முதற்படி என்னவென்றால் மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது  போர் ஏற்படுத்திய தாக்கத்தின் வகைகளைப் பிரித்தெடு த்தலாகும். இப்படியானவர்கள் இன்னமும் மௌனமாக வதைபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பெரிய மண்டபங்களில் இடம்பெறும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு கைகுலுக்கி,  நடனமாடிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த மக்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாது திணறுகிறார்கள். தமது எதிர்காலத்தை நினைத்து இவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. தேசிய ஒருமைப்பாட்டையும், சமரசத்தையும்  பெறுமுன்பு இவர்கள் நிலைத்து நிற்கும் வாழ்வாதாரம் பெற்று இவர்களது மனஉறுதி உயர்த்தப்பட வேண்டும். அதுவரையில் இந்தக் கைகுலுக்கல்களும்,  நடனங்களும் தாம் ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்ட பிரம்மையை தீவிர வாதிகளுக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

எங்கள் பார்வையில் வாழ்வில் பல சிரமங்களை எதிர்நோக்கும் இந்த மக்கள் வாழ்வு சமாதானம் அடையுமாயின்,  இயல்பாகவே சமாதானத்தை நாம் கண்டு விடுவோம். .இது இலங்கையின்  வறுமைக்கோட்டிலுள்ள ஒவ்வொரு சிங்கள தமிழ் மக்களுக்கும் பொருந்தும். இல்லாது போனால் இவர்கள் அரசியல்வாதிகளின் உருட்டலுக்கான பகடைக்காய்களாகவே இருப்பார்கள்.

மாண்புமிகு ஜனாதிபதி சமீபத்தில் ஒரு விழாவின்போது “தேசிய ஒருமைப்பாடு, சமரசம் ஆகியவற்றின் செயற்பாட்டின் அவசியத்தை குறைத்து மதிப்பிடுவது பரிதாபத்திற்குரியது. இன்று நாட்டுக்கு அவசியம் தேவைப்படுவது ஒரு பொது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி ஒவ்வவொருவரினதும் ஆதரவுடன் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதேயாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எதிர்காலம் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களால் மேம்பட்டுத் திகழவேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்தப் பணியைக் குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு அறைகூவல் விடுத்த ஜனாதிபதி,  குற்றம் ஏதுமறியாத நாட்டுப்பிரஜைகளின் வாழ்வில் விளையாட வேண்டாமென எச்சரித்துள்ளார்.

முழுமை காணாத இணையப் பக்கம்

ONUR என்பது  இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுடனும் சமரசத்தினுடனும் சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்து வழிநடத்த ஒதுக்கப்பட்டதாகும்.  இந்த இணையப்பக்கம் இதுவரையில் செய்யப்பட்டவற்றை பட்டியல் இடவில்லை-அதாவது எத்தனை பேர் உதவி பெற்றுள்ளார்கள், என்ன திட்டம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது,  எத்தனை பாதிப்படைந்த பெண்கள் உதவி பெற்றுள்ளார்கள் போன்ற விபரங்கள் இங்கில்லை.

ONUR வாழ்வாதார அபிவிருத்தியில் பட்டியலிடப்பட்டுள்ள இறுதி எட்டு நிகழ்ச்சி நிரல்களின் கீழே “ நாட்டில் ஏற்பட்ட மோதல்களின் நேரடித் தாக்கம் காரணமாக பல சந்தர்ப்பங்களை இழந்த பெண்களைத் தலைமைத்துவப் பொறுப்பில் கொண்ட பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உந்துசக்தி அளிக்க பல அமைப்புகளை இயங்குசக்தி கொண்ட வேர்களாகக் கொண்டு ONUR இயங்கி வருகின்றது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை விபரம்,  என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, வெற்றியளிக்கும் விகிதாசாரம் என்ன  போன்ற விபரங்கள் தரப்பட்டால் அது தன்னம்பிக்கையையும் சமரசத்தையும் உயர்த்தும்.

 

தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் இணையப் பக்கத்தைப் பார்த்தால் அவசர உணர்வை வெளிப்படுத்தும் எந்தவொரு விடயமும் இல்லையென்பது தெரியும்.நம்பிக்கை இழந்து துன்பத்தில் உழல்பவர்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்வது பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் தன்னம்பிக்கையை உயர்த்தி ஒரு மேம்பட்ட எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அவர்களுள் நாம் விதைத்தாக வேண்டும். அவர்களுக்கு எதுவுமே தெரியாததால் சமரசத்தை பற்றி அவர்கள் எண்ணங்களைக் கேட்பதால் எந்தப் பயனுமில்லை. பல நல்ல விடயங்களை ஒரேடியாகச் செய்துவிடுவதாக அறிவித்து விடாதீர்கள். சிலவற்றைச் சொல்லுங்கள். சொல்லியதை முழுமையாகச் செய்யுங்கள். செயற்பாடுகள் அதிருப்தியானதாக இருக்கும்போது அரசின் வார்த்தைகளில் எவருமே மதிமயங்கிவிடப் போவதில்லை.

கிராமத்தவர்களை முறையாக வழிநடத்துங்கள்

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு பொருளாதாரரீதியாக ஓரங்கட்டப்பட்ட எண்ணுக்கணக்கற்ற பாடசாலைச் சிறுவர்கள், ஆசிரியர்கள்,விதவை கள்,அனாதைகள் என்று பலர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கி மனோரீதியானதும், வாழ்வாதாரம் கொண்டதுமான ஒரு நிலையை அளித்து,  இவர்கள் மேலும் ஓரங்கட்டப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

கிராமத்தவர்கள் சுயநிலையை மாற்றிக் கொள்ளவும், அபிவிருத்தித் திறனை மேம்படுத்தவும்,  தன்னம்பிக்கையை கட்டியெழுப்பவும்,வசதிகள் தேவைப்படுகின்றன. இவர்கள் சமுதாயக் குழுக்களாக இணைந்து வந்து  கூட்டாக ஒரு முடிவெடுத்து  ஒருவரையொருவர் பாதுகாத்து செய லில் இறங்க இது உதவுகின்றது. வறுமையிலிருந்து இவர்கள் வழிநடத்தப்பட்டு சுதந்திரத்திலும் தன்னிறைவிலும் தங்கு திறன் கொண்டவர்க ளாக மாறும்போது அது சமாதானத்திற்கும் சமரசத்திற்கும் இட்டுச் செல்லும்.

சமரசம் என்பது மூத்த அரசியல்வாதிகள் இந் நாட்டில்  மிகவும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து உடனடியான ஆறுதலாக எதையாவது வழங்கி,  அல்லது ஒரு குறிப்பிட்ட அநியாயத்திற்காக தீர்வு வழங்குவதல்ல! இதைவிட ஆழமான ஈடுபாடும்,  உண்மையான நோக்கமும் அங்கே இருக்க வேண்டும். தவறினால் புரையோடிப்போன காயமே நாட்டின் உடம்பில் தெரியும்.

தொடரும் அதே உணர்வுகள்..

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டபோது நாட்டின் மதுரத்தன்மையை உணரும்படி நாங்கள் கேட்கப்பட்டோம். வெள்ளை வாகனங்கள் வருவது நிறுத்தப்பட்டபோது நல்லதொரு உணர்வுடன் இருக்கும்படி கேட்கப்பட்டோம். இதே போல சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட போது நல்லுணர்வுடன் இருக்கும்படி கேட்கப்பட்டோம்.  இப்பொழுது சில அரசியல்வாதிகள் சமரசத்திற்கான உரைகளை ஆற்றும்போது அதே உணர்வுடன் இருக்கும்படி கோரப்பட்டு வருகின்றோம்.

மிகவும் சிக்கலான சமயங்களில்  நாடகங்கள் அரங்கேறுகின்றன. கடந்த காலங்களில்  நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை இங்கே ஞாபக ப்படுத்த விரும்புகிறோம். அந்தப் பிரபல்யமான நாடகம் இப்பொழுதும் திரைக்கு வரப்போகின்றது. இந்த நிலையிலும் இரு பிரதான கட்சிகளின் சில அரசியல்வாதிகள் தங்கள் நாடக வசனங்களில் அதிருப்தி, பிரிவினை போன்வற்றை விதைப்பதில் ஈடுபட்டுள்ளார்கள்.

யுத்தமில்லாமல் யாழ்மண்ணில் படையெதற்கு?

பல வருடங்களுக்கு முன்பு முன்னைய அரசு உண்மையாகவே யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறியது. இராணுவப் படையினரது கணி சமான பிரசன்னம் வடகிழக்கில் பரவியிருப்பது தேசிய பாதுகாப்பு என்று நியாயப்படுத்தி விட முடியாது. தமிழர்களிடமிருந்து எப்படியான யுத்த த்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? தேசிய பாதுகாப்பிற்கு இத்தனை பெரிய படை தேவையென்று விவாதிப்பது வெறும் கபடமான செயலேயன்றி வேறொன்றுமில்லை.

மூன்று தசாப்த காலமாக நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டம் ஆகஸ்ட்2012இல் அகற்றப்பட்டது. ஆனால் அசாதாரணமான 1979 பயங்கரவாத தடைச் சட்டமூலம் இன்னும் அமுலில் இருக்கின்றது. ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் ஜோண் பிஷர் இது பற்றி செப்டெம்பர் 15 அன்று குறிப்பிடுகையில் “ பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் அகற்றப்படுவதல்ல முக்கியம் . அதினிடத்தில் இன்னொரு பெயரில் அதே சட்டத்தை அமுல்படுத்தாது இருக்கும்போதே அரசின் விசுவாசம் புலப்படும்” என்று வெளிப்படையாகச் சொல்லியுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்லி பல வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் அரசு இன்னமும் இந்த விடயத்தில் தீவிர செயற்பாட்டை வெளிப்படுத்தக் காணோம்.

வாக்குறுதிகள் தகர்க்கப்படுவதேன்?

யுத்தத்திற்கு பின்னரான சமரசத்திற்கு போரால் பாதிக்கப்பட்ட வடகிழக்கின் சமூக,  பொருளாதார தேவைகளை முன்கூட்டியே அறிந்து கொள்வது முக்கியமானதாகும். தரையின்  நிஜங்களும் தேவைகளும் மாறிவிட்டதை நாம் இனம்காண்கிறோம். நிரந்தர சமாதானத்திற்கு இது சரியான நேரம் என்பதை நாம் இனங்கண்டுள்ளோம். எமது முழுசக்தியையும் திரட்டி இதற்காகவே எமது ஜனாதிபதி தெரிவுக்கு உதவி செய்தோம். இதனால்  எங்கள் மக்களுக்கும் முழு இலங்கையர்களுக்கும் நாம் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம்.

போரினால் நலிந்த வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் முகமாக வாக்களிக்கப்பட்ட டோக்கியோ நன்கொடை மாநாடு இடம்பெறவில்லை. இது ஏன் இடம்பெறவில்லை என்ற காரணமும் தரப்படவில்லை. இதற்குப் பதிலான மாற்று ஒழுங்கு பற்றிய விளக்கமும் இல்லை. வாக்குறுதிகள் மிக இலகுவாக தவிர்க்கப்படுகின்றன. அதே சமயம் பெரிய பெரிய வார்த்தைகள் அடிக்கடி அள்ளி வீசப்படுகின்றன. ஆனால் செயற்பாட்டில் ஒருசிலதான் இருக்கின்றன.

யுத்தம் இல்லைத்தான். சமாதானமும் இல்லையே

யுத்தம் இல்லை என்பதால் நாட்டில் சமாதானம் வந்துவிடவில்லை. இந்தக் கலகத்தைத் தோற்றுவித்த அரச நிறுவனங்கள் எல்லாமே அதே மனோபாவத்துடன் இயங்கியவண்ணமாகவே இருக்கின்றன. .இந்த உண்மை நமக்கு அடிக்கடி நினைவூட்டப்பட்டு வருகின்றது.

பின்வரும் விடயங்கள் வடகிழக்கின் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களின் பிராந்திய புனர்வாழ்விற்காகவும், அபிவிருத்திக்காகவும் முழு மையான தேவைகளுக்காகவும் கணிப்பீடு செய்யப்பட வேண்டியுள்ளது.

போதுமான அளவு அறியப்பட்டதும் மிகச் சரியான முறையில் கணிக்கப்பட்டதுமான மனிதபிமான அடிப்படையிலான தேவைகள். இந்தத் தேவைக் கணிப்பீடுகள் விருப்புகளை அறிந்து பட்டியல் இடுவதோடு நின்றுவிடாமல் போர்ப்பாதிப்பிற்கு உள்ளான சமூகத்தை மேலுமுயர்த்தும் நோக்கோடு எடுக்கப்பட்ட முழுமையான கணிப்பீடாக இருக்க வேண்டும்.

சமூகத்திறனும் சமரசமும்

சகல மட்டங்களிலும், எமது சமூகத்தின் திறனைக் கட்டியெழுப்புவது சமரசத்திற்கான முக்கிய திறவுகோலாகும். பிராந்திய அபிவி ருத்திக ளுக்காக தனிப்பட்ட கிராமங்களுக்கென பிரத்தியேகமான திட்டங்களில் இவர்களைப் பங்குபற்ற வைப்பதோடு,  இவற்றை நடைமுறைப்படுத்த சமூகத்தோடு கலந்தாலோசனை செய்து,  அதை நடைமுறைப்படுத்தும்போதே நிலையான தன்மை என்பது வெளிப்படுத்தப்படுகின்றது.

பாரிய அளவிலான கட்டங்களுக்கான திட்டங்கள்,  பெரிய அளவிலான வர்த்தக முதலீடுகளில் இருந்து  நேரடியான நன்மைபெற  போரால் பாதிப்படைந்த பிராந்திய மக்களுக்கு அதிக காலம் தேவைப்படுகின்றது.  பிராந்தியங்களைக் மீள் கட்டியெழுப்பும் இத் திட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களும் அங்கவீனர்களும் பங்குபற்ற மட்டுப்படுத்தப்பட்ட திறமைகளையே இங்கு காணமுடியும். இவர்கள் தேவைகளை நேரில் கேட்டறிவது கிராம மட்டத்திலான  சமூக புனரமைப்பை நிச்சயம் கொண்டுவரும்.

எங்கள் பிராந்தியங்களில் நிலையான அபிவிருத்திக்கு சுயஅளவில்,  கிராமத்து அளவில், தொழிற்சாலை அளவில் அபிவிருத்தி செய்யப்பட்ட மனிதவளம்  மிக முக்கியம்.  வீடுகளில் இருக்கும் வியாபாரப் பிரிவில் ஈடுபட்டிருப்போருக்கும்,  நிர்மாணப்பணியில் இறங்கியுள்ள இளைஞரு க்கும் தொழிற்கல்வியும்,  தொழிற்திறன் அபிவிருத்திப் பயிற்சியும் தேவைப்படுகின்றது. இதன் மூலம் அவர்களுக்கான வாழ்வாதார வாய்ப்பு கள் அதிகரிக்கப்படுகின்றன

அவசியப்படும் கிராம அபிவிருத்தி

உள்நாட்டு அரச பொறிமுறையைக் கவனிப்போம். உள்நாட்டு அரச அமைப்புகளைச் சீரமைத்து மேலான பொறுப்புகளை ஏற்கும் வகையில் அவர்களைத் தயார்செய்யும் வகையில் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒரு தேசிய கொள்கையை அபிவிருத்தி செய்தது. ஆனால் இன்றுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. கிராம அபிவிருத்தியை குறியாகக் கொண்டும் இயங்கும் இந்த அரசு அந்தக் கொள்கைகள் அடங்கிய கோப்புகளை வெளிக்கொணர வேண்டும்.

ONUR ஐக்கியப்பட்ட இலங்கையில் தமிழ் சமுதாயத்திற்கு மேம்பட்ட பிரகாசமான எதிர்காலத்தை அடைவதற்கு உதவும் கடப்பாட்டில் உள்ளது. இன்றுவரையில்  அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் ஊடாக ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக முயற்சித்து வருகிறோம்..

அரசினுடைய சமரசம் ,நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் நாம் ஆக்கபூர்வமாக இணைந்துள்ளோம். எனவே அரசு இந்த விடயத்தில் அவதானமாக இருக்கும்படி கேட்பதோடு,  நம்பகத்தன்மையை சேதமாக்கும் விதத்தில் மாறுபட்ட சமிக்ஞைகளை வழங்கி நிரந்தர சமாதான சமரசத்தை பெறும் வாய்ப்பை இல்லாதொழித்து விடவேண்டாம்.

வெளியாரின் தொழில்சார்ந்த நிபுணத்துவங்கள்

ஒரு அர்த்தமுள்ள விதத்தில் இந்தப் பாரிய  புனரமைப்பு அபிவிருத்தி பணியில் ஈடுபடுத்திக் கொள்ள இந்த 30 வருட யுத்தம் மனித சக்தியை  அழித்துள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் புனரமைப்பிற்கான  வழிமுறைகளுக்காக நாம் எல்லோரும் முயல்வதோடு, அதைக்  கண்டறிய வேண்டும். எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் மீட்பு பெற எமக்கு வெளியாரின் குறிப்பிடத்தக்க தொழில்சார்ந்த நிபுணத்துவங்கள் திட்டமிடலுக்காக அவசியப்படுகின்றன.

மீளக் கட்டியமைத்தலிலும், சமரசப் பணிகளிலும் பல்வேறு அதிகாரிகளிடமிருந்து உயர்ந்த நோக்குடனான பல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டோம். எங்கள் சமரசத்தின் சரிதத்தைப் பார்த்தால்  பெரிய பட்டியலிடப்பட்ட பல தீர்மானங்கள், சிபார்சுகள்,  செயற்பாட்டுத் திட்டங்கள், கிடைத்திருந்தாலும்,  இவை மக்களுக்கு நன்மை பயப்பனவாக இருந்தும்,  எதுவுமே  நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே யதார்த்தம். இதில் பெரிய விடயம் என்னவென்றால்  உடனடியான அரசியல் ஆதாயத்தை மீறி இவற்றைப் பார்வையிட கடந்த காலங்களில் அரசியல் நாட்டம் இல்லாமைதான். இந்த விடயத்தில் நாட்டின் நீண்டகால அபிவிருத்தியின் மீதான நாட்டமும் பரந்த பார்வை கொண்ட மனநிலையும்தான் இங்கே தேவைப்படுகின்றது. இன்றைய அரசுக்கு இதைச் செய்யும் மூர்கத்தனமான வேகம் இருக்கின்றது என்பதை நாம் நம்புகின்றோம்.

இனவாதம் கக்கலாமா?

மட்டக்களப்பு பிராந்தியத்திலுள்ள ஒரு பௌத்த பிக்கு சமூக நட்புறவையும்  ஐக்கியத்தையும் குழப்பி சமூகத் தீநாக்குகளை தனது  அநாகரி கமான செய்கைகள் மூலம் பரப்பி வருகின்றார். இப்படியான குரூரமான செய்கைகளில் இருந்து  தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடின் இவர் செய்வது நாம் இவ்வளவு காலமாக தீவிரமாக முயற்சிக்கும் தேசிய சமரசத்தை குலைத்து விடும்.

தேசிய சமரச நடவடிக்கைகளில் நீங்கள் தீவிரமாக புலன் செலுத்தினால் முதல் வேலையாகONUR  இணையப் பக்கத்தை நவீனப்படுத்துங்கள். நீங்கள் உண்மையாகவே ஈடுபட்டுள்ள பணிகளின் விபரங்களை தருவதை விடுத்து  அங்கொன்று இங்கொன்றாக விபரங்களைத் தராதீர்கள். இது எங்களைத் திருப்திப்படுத்தப் போவதில்லை.

இரண்டாவதாக மட்டக்களப்பில் பெளத்த பிக்குவின் பிரச்சினையை எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப் போகிறீர்கள்? ஏன் நீங்கள் அதுபற்றி கவனம் எடுக்காதிருக்கின்றீர்கள்?மட்டக்களப்பும் கிழக்குப் பிராந்தியம் முழுவதும் பயப்பிராந்தியிலான ஒரு நிலையில் இருக்கின்றன. வகுப்புவாதக் கலகங்கள் எந்த நேரமும் வெடிக்கலாம்.

இன்னும் பல கடமைகள் உங்களால் பூரணமாக்கப்படாத நிலையில் உள்ளன. அபிவிருத்தியில் கவனம் செலுத்தாமல் நீங்கள் என்ன செய்து ள்ளீர்கள்?பிராந்திய மட்டத்தில் சராசரி அபிவிருத்தி பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யாமல் இது ஒருபோதுமே சாத்தியப்படாது.

பல அடிப்படைத் தேவைகள் பற்றி நீங்கள் பரிசீலனை செய்துபார்க்க வேண்டும். இவை இல்லாமல் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைச்சு எதற்காக? எனவே நீங்கள் தீவிரமாக இருந்தால் அடியில் இருந்து அனைத்தையும் ஆரம்பியுங்கள். இராணுவம் வசமுள்ள காணிகளை காணிச் சொந்தக்காரர்களிடம் மீள ஒப்படையுங்கள். முதலில் இந்தக் காணிகளை மக்களிடம் ஒப்படையாமல் எப்படி அவர்களை உங்களால் திருப்தி ப்படுத்த முடியும்? இதை நீங்கள் செய்தாலொழிய மக்களை என்றுமே உங்களால் திருப்திப்படுத்த முடியாது.

– சரவணபவன் எம்.பியின் நாடாளுமன்ற உரை ,2017

SHARE