தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவமதிக்கும் விதத்தில், எமது புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலரினால் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவமானது இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியான விடயம் மட்டுமல்ல, இலங்கை அரசை காப்பாற்றும் விடயமாகவும் அமைந்துவிடும். என பா. அரியநேத்திரன் பா.உ. தெரிவித்துள்ளார்.
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனிவா ஐ.நா முன்றலில் பல்லாயிரக்கணக்கான எமது புலம்பெயர் மக்களால் மேற்கொள்ளப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் காலத்தின் தேவையான விடயம்.
ஆனால் அங்குள்ள ஒருசிலரினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த கவலையையும் வேதனையையும் அளிக்கிறது.
தமிழின அழிப்புக்கான நீதி கேட்டுத்தான் ஈழத்தில் இன்று வடகிழக்கு தமிழர்களுக்கான அரசியல் பலமாய் ஐனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்படுகிறது.
அதன் தலைவராகவுள்ள சம்பந்தன் ஐயாவை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி வடகிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுள்ளனர். இதைவிடவும் புலம்பெயர் மக்களும் ஏற்றுள்ளனர்.
இந்நிலையில் அவரை அவமதிக்கும் விதத்தில் எமது புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலரினால் கொடும்பாவி எரிக்கப்பட்டதானது, இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியான விடயம் மட்டுமல்ல, இலங்கை அரசை காப்பாற்றும் விடயமாகவும் அமைந்துவிடும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை அவமானப்படுத்துவது, அதில் அங்கம் வகிக்கும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் சகல வடமாகாண சபை உறுப்பினர்களையும், கிழக்கு மாகாண த.தே.கூ. உறுப்பினர்களையும், பிரதேசசபை மக்கள் பிரதிநிதிகளையும் த.தேகூ, அங்கத்துவ கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகவே அமைந்துவிடும்.
இதைவிடவும் கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாதம் பேசி அரசியல் செய்யும் எட்டப்பர்களுக்கு வாய்ப்பாகவும் அமையும்.
சம்பந்தரை விடவும் மிகமோசமான துரோகத்தனத்தை செய்யும் ஆனந்தசங்கரி போன்றவர்களும் தமிழ் தேசிய முத்திரையுடன்தான் ஈழமண்ணில் இருந்து அரசியல் செய்கிறார்கள். அவ்வாறானவர்களை விட சம்பந்தர் எவ்வளவோ மேலானவர்.
இன்று சரியோ பிழையோ சர்வதேசம் மதிக்கும் ஒரு தலைவராக கருதப்படும் அவரை தமிழ் மக்களாகிய நாம் அவமதிப்போமானால் அது எதிரிக்கு வாய்பாக அமைந்துவிடும்.
முள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்து இலட்சக்கணக்கான தமிழ்மக்களை இழந்து தவிக்கும் நாம் அந்த இனப்படுகொலைக்கான நீதியும் அரசியல் தீர்வும் வேண்டி சர்வதேசத்திடம் கோரும் நாம் இந்த நேரத்தில் எமக்கிடையே கசப்புணர்வுகளை களைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த அனைவரும் பாடுபடுவோம்.
எமது கையால் எமது கண்ணை குத்தும் செயல்களை தவிர்த்து எமது இறுதி இலக்கை அடையும் வரை ஒற்றுமையாக பயணிப்போம். இந்தக் கருத்தை கூறுவதால் சில சமயம் எனக்கும் கொடும்பாவி யாரும் எரிக்கலாம், அல்லது எனக்கும் துரோகப்பட்டம் சுமத்தலாம், அதற்காக கருத்தைக் கூறாமல் இருக்கமுடியாது.
இதில் என்னால் கூறப்பட்ட கருத்தானது யாரையும் குற்றம் சாட்டவோ அல்லது குறை கூறுவதாகவோ இல்லை, நாம் முன்னெடுக்கும் போராட்டங்கள் எதிரிக்கு சாதகமாக அமையக் கூடாது என்பதற்காகவே இதனை தெரிவித்துள்ளேன்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பல்லாயிரம் தமிழர்கள் ஐ.நா முன்றலில் உரிமை முழக்கம்
தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்து கலந்து கொண்டு உரிமை முழக்கமிட்டனர்.
ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இன்று திங்கட்கிழமை 2.30 மணியளவில் இவ்வுரிமை முழக்கம் எழுச்சியுடன் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளின் 27வது கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் இப் புரட்சிகர நிகழ்வு முக்கியம் பெறுகின்றது.
இதில் பல மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல தமிழ் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், தியாக தீபம் திலீபன் மற்றும் போராளிகள், பொது மக்கள், ஈகைப் பேரொளிகளுக்கு சுடரேற்றலும், அகவணக்கமும் இடம்பெற்றது.
இப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வண்ணம் துவிச்சக்கர வண்டிப் பயணம் மேற்கொண்ட மூன்று தமிழ் இன உணர்வாளர்களும் முருகதாசன் திடலை அடைந்துள்ளனர்.
அத்துடன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் சுப்பிரமணிய சுவாமியின் கொடும்பாவிகளும் ஊர்வலத்தில் இழுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போராட்ட நிகழ்வில் பொலிசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
TPN NEWS