யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர் யுவதிகளைக் கொண்ட படையணி ஒன்று காங்கேசன்துறையில் அமைந்துள்ள படைத்தளத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையுடன் பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது.
சுமார் 500 வீர வீராங்கனைகளைக் கொண்ட இந்த படையணியில் நூறு பெண்கள் அடங்குகின்றனர்.
இவர்கள் முறையே பெண்கள் படையணி, பொறியியல் படையணி, பொதுப் படையணி என்பவற்றில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தமிழ் இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை கொழும்பு படைத்தலைமையகத்தின் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அமங்கபொல மற்றும் யாழ் மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதய பெரொ ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இராணுவப் படையணியின் நாய்களின் சாகச நிகழ்ச்சி, இராணுவ பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி, பொறியில் பிரிவினரின் செயல்திறன் செயல்பாடுகள், பெண்கள் படையணியினரின் கராத்தே கண்காட்சி மற்றும் இராணுவ பாண்ட் அணியினரின் பாண்ட் இசை அணிவகுப்பு நிகழ்ச்சி என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மத குருமார்கள், யாழ். மாவட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், கிராம அலுவலர்கள், பல ஆயிரக்கணகான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.