மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு படுகொலை இடம்பெற்று இன்றுடன் 24 வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களின் நினைவாக நிறுவப்பட்ட தூபியில் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பிரதேச மக்களும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
எனினும், அஞ்சலி செலுத்துவதற்கு பொலிஸார் தடை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“இந்த இடத்தில் எவருக்கும் அஞ்சலி செலுத்த முடியாது, இதற்கான உத்தரவினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. எனவே அவ்விடத்தினை விட்டு உடனடியாக அப்புறப்படுமாறு பொலிசார் கூறியுள்ளனர்.
இதன்போது, அங்கு நின்ற த.தே.கூட்டமைப்பின் உறுப்பனர்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் சிறு குழப்பநிலை ஏற்பட்டது.
பின்னர் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர். இதன்போது அதிகளவு பொலிசார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு தொடர்பாக கருத்துக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்,
1990ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பில் உள்ள அப்பாவி தமிழ் மக்களை வாள் கொண்டும் கூரிய ஆயுதங்கள் கொண்டும் வெட்டியும் அடித்தும் படுகொலை செய்தார்கள்.
இவர்கள் இறந்த ஆண்டு நிகழ்வினை கூட செய்யவிடாமல் பொலிசார் தடுப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
குறித்த சம்பவத்தல் 17பேர் இறந்தும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த விடாமல் பொலிசார் தடுத்த நிறுத்த எடுத்த முயற்சியானது, ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் மனவேதனை தரும் விடயம் இன்று நடந்தேறி இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே பல படுகொலைகள் நடந்தேறி இருக்கின்றது. இந்தப்படுகொலைகளில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களின் நினைவாகக்கூட ஒரு சுடரினை ஏற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முடியாத நிலையிலே தமிழ் இனம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதனை அனைவரும் அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
கடந்த போராட்ட வரலாற்றில் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய மக்களும், ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட சிங்கள மக்களும் சுதந்திரமாக இறந்தவர்களை நினைவு கூற முடிகின்றது.
அவர்களுக்கு எந்தத்தடையும் இல்லை. ஆனால் இலட்சக்கணக்கான உறவுகளை இழந்த தமிழ் மக்களுக்கு நினைவு கூற முடியாத அளவிற்கு இன்று இந்தத்தமிழ் இனம் இலங்கையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்வினை அரசாங்கத்திற்கு எதிராகவே, பொலிசாருக்கு எதிராகவே செய்யவில்லை. மாறாக, முஸ்லிங்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட படுகொலையில் மாண்டுபோன எமது தமிழ் உறவுகளுக்காகவே செய்கின்றோம் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேணடும்.
இந்நிகழ்விற்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), கருணாகரம் (ஜனா), நடராசா, மு.இராஜேஸ்வரன், இளைஞர் அணித்தலைவர். கி.சேயோன், உயிர் நீத்தவர்களின் உறவுகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.