ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்புகளை பேணி வருவதன் அவசியம் பற்றியும் கருத்துப் பரிமாற்றம்

413

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13ஆவது சட்டத் திருத்தம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதிலும், அதன் அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பீ.முரளீதர் ராவ். நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் உயர்மட்ட குழுவினருடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிகொண்டு, அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் எனச் சொல்லிக்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் 13ஆவது சட்டத் திருத்தத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறுமானால் நாட்டில் நிரந்தரமான சமாதானத்தையும், இனங்களுக்கிடையிலான சக வாழ்வையும் ஒரு போதும் ஏற்படுத்த முடியாது போய்விடும் என்றும் அவர் மேலும் கூறினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இச்சந்திப்பில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் பீ. முரளீதர் ராவ், அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான விஜய் ஜொலி, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ஹக்கீம், செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி, கிழக்கு மாகாண அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமத், முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோர் பங்கேற்றனர். கலந்துரையாடலின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம், கிழக்கு மாகாண ஆட்சியில் அதிகார சமன்பாட்டை பேணுவதிலும், அங்கு மாகாண ஆட்சியைத் தக்க வைப்பதிலும் கட்சியின் பங்களிப்பு என்பன பற்றி அமைச்சர் ஹக்கீம் விளக்கம் அளித்தார். மூன்று தசாப்த காலத்தின் பின்னர் இந்தியாவில் நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் வழிகாட்டலுடனான அரசாங்கம் காட்டிவரும் அதீத ஈடுபாடு பற்றி அக்கட்சியின் செயலாளர் முரளீதர் ராவ் விளக்கினார். இன, மத, மொழி, சாதி ரீதியான வேறுபாடுகள் களையப்பட்டு ஒற்றுமையாக வாழக் கூடிய சூழ்நிலை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நிலவ வேண்டுமென அவர் வலியுறுத்தினார். பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், அவ்வாறான அதிகாரப் பகிர்வு வெறும் பெயரளவில் அல்லாமல் அர்த்தபுஷ்டியுடனானதாகவும் இருக்க வேண்டும் – என்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மலையகத் தமிழ் அரசியல் கட்சிகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. சனிக்கிழமை நடந்த ஊவா மாகாண சபை தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களை பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்திராது விட்டிருந்தால் அரசாங்க கட்சி பாரிய பின்னடைவைக் கண்டிருக்கும் என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்துடன் இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்புகளை பேணி வருவதன் அவசியம் பற்றியும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

SHARE