விஞ்ஞான வளர்ச்சி, மனிதனின் வாழ்க்கை முறை

2231

 1
விஞ்ஞான வளர்ச்சி, மனிதனின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதுடன், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிந்தித்துக்கூடப் பார்த்திராத சாதனைகளைப் படைத்திருக்கிறது. வளர்ச்சி என்கிற பெயரிலும், நாகரிகம் என்கிற போர்வையிலும், 21-ம் நூற்றாண்டு மனிதன் படைத்திருக்கும் சாதனைகள் அளப்பரியது, சந்தேகம் இல்லை.

ஆனால், விஞ்ஞான வளர்ச்சியும், நவநாகரிக உலகின் மாற்றமும், சமீபகாலமாக இயற்கையைச் சீண்டி விளையாட முற்படுகின்றனவோ என்று தோன்றுகிறது. இயற்கையின் சீற்றங்கள் தன்னை வென்றுவிட நினைக்கும் மனிதகுலத்தின்மீது மட்டும் தாக்குதல் நடத்தினால் பரவாயில்லை. இந்த உலகில் வாழும் இதர அப்பாவி உயிரினங்களையும் அல்லவா பழிவாங்கி விடுகிறது. அதுதான் வேதனையளிக்கிறது.

வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்களது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பல கண்டுபிடிப்புகளை விஞ்ஞானத்தின் உதவியுடன் மேற்கொண்டு அதன் பயனையும் அனுபவிப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களது முயற்சிகளுக்குச் சம்பந்தா சம்பந்தம் இல்லாத பின்தங்கிய நாடுகள் பலியாவது என்பது என்ன நியாயம்? ஆப்பிரிக்கக் கடற்கரைகள் இதுபோல அடிக்கடி எண்ணெய்க் கசிவுகளால் அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளில் நைஜீரிய நாட்டுக் கடற்கரைகள் 9,000 தடவைகள் இந்தப் பேராபத்தை எதிர்கொண்டிருக்கின்றன. வெள்ளைக்கார நாடுகளில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய கறுப்பர் இனமக்களின் வாழ்வாதாரங்கள் பரிசோதனைக் களனாகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி மெக்சிகோ வளைகுடாவில் பிபி (ஆட) எரிசக்தி நிறுவனத்தின் ஆழ்கடல் துளை இயந்திரம், எண்ணெய்க் கிணறு ஏதாவது கிடைக்கிறதா என்பதற்காகத் துளையிடும்போது, கடலுக்கு அடியில் இருந்த எண்ணெய்க் கிணறு ஒன்று வெடித்துச் சிதறியது. உள்ளே இருந்து கச்சா எண்ணெய் பீச்சி அடிக்கத் தொடங்கிவிட்டது. ஆழ்கடலில் நடந்த இந்த விபரீதத்தால் கடலெல்லாம் பிசுபிசுவென்று கச்சா எண்ணெய்.

ஏறத்தாழ 60 நாள்களாகியும் இன்னும் அந்த வெடித்துச் சிதறிய எண்ணெய்க் கிணற்றை முழுமையாக மூடி, கச்சா எண்ணெய்க் கசிவைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிய கதையாகி விட்டிருக்கிறது பிபி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணற்றுப் பேராசை!

நாளொன்றுக்கு பத்து லட்சம் கேலன்கள் கச்சா எண்ணெய் அந்தக் கிணற்றிலிருந்து கடலில் கலந்து கொண்டிருக்கிறது. கடந்த முறை 1979-ல் இதே மெக்சிகோ வளைகுடாவில், எண்ணெய்க் கிணற்றைக் கண்டுபிடிக்க நடந்த ஆழ்கடல் துளையிடும் முயற்சியால் ஒரு கிணறு வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 140 மில்லியன் கேலன்கள் எண்ணெய் கடலில் கலந்ததாகத் தெரிகிறது. எண்ணெய் வெளியேறுவதைத் தடுக்கப் பத்து மாதங்கள் பிடித்தன என்று கூறுகிறார்கள்.

இதனால் அந்த நிறுவனத்துக்கு ஏற்படும் நஷ்டம், மக்களுக்கு ஏற்படும் அவதி போன்றவை எல்லாம்கூட இரண்டாம்பட்சம். கடல்வாழ் உயிரினங்களும், கடல்சார்ந்த பறவை இனங்களும் படும் அவதி இதயத்தைப் பிழிகிறது. கடல் மட்டத்துக்கு 1,500 மீட்டர் கீழே வெடித்துச் சிதறியிருக்கும் அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் கடல்மீது படர்ந்து, கரைநோக்கி நகர்ந்து, ஒரு கச்சா எண்ணெய்க் கம்பளமே விரிந்துவிட்டிருக்கிறது.

கடலில் வாழும் டால்பின் மீன்களின் கண்களில் எண்ணெய் படர்ந்து முதலில் அவற்றைக் குருடாக்குகிறது. மீன்களும் ஏனைய கடல்வாழ் பிராணிகளும் கண்களை மூடித்திறக்க முடியாமல் போவதுடன், இந்த எண்ணெயிலிருந்து வெளிப்படும் நெடியால் அந்த நுண்ணிய பிராணிகளின் நுரையீரல்களும் தாக்கப்பட்டு மடிகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மடிந்துபோன டால்பின்களின் எண்ணிக்கையே கணக்கிலடங்காது என்றால், இதர மீன்கள், நண்டுகள் போன்ற கடல்வாழ் பிராணிகள் எந்த அளவுக்குப் பலியாகி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

பெலிகன் என்கிற பறவை, அமெரிக்கக் கடற்கரை ஓரங்களில் மிகவும் அதிகமாகக் காணப்படுபவை. இவை கடலில் வாழும் மீன்களை உண்டு உயிர் வாழ்பவை. எண்ணெய்ப் படலம் இந்தப் பறவைகளைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது. கடற்கரை ஓரமாக இருக்கும் சதுப்பு நிலங்களில் உள்ள புல்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை இந்தப் பெலிகன் பறவைகள். அங்கே எல்லாம் கச்சா எண்ணெய் படர்ந்திருப்பது தெரியாமல் வந்து அமர்ந்துவிடும் பெலிகன் பறவைகளின் இறகுகளில் எண்ணெய் அப்பிக்கொண்டு விடுகின்றன. பிறகு பறக்கவும் முடியாமல், நகரவும் தெரியாமல் பரிதவித்து உயிரை விட்டிருக்கும் பெலிகன் பறவைகள் ஆயிரம் ஆயிரம் என்கிறது மெக்சிகோவிலிருந்து வரும் செய்திகள்.

கடற்கரையிலிருந்து ஒரு சில மைல்கள் தூரத்துக்கு எண்ணெய்ப் படலம் கடலில் காணப்படுகிறது. இதை எதிர்கொள்ள அரசு நடத்தும் முயற்சிகள் எதுவும் பலித்ததாகத் தெரியவில்லை. சில நூறு பெலிகன் பறவைகளைக் காப்பாற்றியதுதான் அதிகபட்ச சாதனை என்று சொல்ல வேண்டும். அமெரிக்கா இதுவரை சந்தித்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

எங்கேயோ நடக்கிறது, நமக்கென்ன கவலை என்று நாம் இருந்துவிட முடியாது. அடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து படிப்பவன்தான் அறிவாளி. அதீத விஞ்ஞான வளர்ச்சியும், கட்டமைப்பு வசதிகளும் மேலோட்டமாகப் பார்த்தால் பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் தருமே தவிர, விபத்துகள், சோதனைகள் என்று ஏற்படும்போது அதன் விளைவுகள் விவரிக்க முடியாத வேதனைகளாகவும் இருக்கும் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஒருபுறம், மனித சமுதாயத்தின் வருங்காலத்தையே பூண்டோடு அழிக்கவல்ல அணுசக்தியுடன் விளையாடி, நமது பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள விழைகிறோம். இன்னொருபுறம், நாளும் அதிகரித்துவரும் பெட்ரோலியத் தேவைகளுக்காக ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி விடைகாண முயல்கிறோம்.

முதலில், நமது பேராசைத் தேவைகளுக்காக அளவுக்கு அதிகமான முயற்சிகளை மேற்கொண்டு அலைவதை நிறுத்த வேண்டும். மனித இனம் தனது எரிசக்தித் தேவைகளை எப்படிக் குறைத்துக் கொள்வது என்பதை ஆராய்ந்து செயல்படத் துணியாவிட்டால், நாமும் டால்பின்கள் மற்றும் பெலிகன்கள் படும் அவஸ்தைக்குத் தயாராக வேண்டியிருக்கும். நாமாக இல்லையென்றால், நமது சந்ததியினர் அந்தத் துன்பத்தைச் சந்திக்க நேரிடும்.

விஞ்ஞானம் இதற்கும் ஒரு விடை கண்டுபிடிக்கும் என்று அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டு மேலும் மேலும் ஆபத்தின் தீவிரத்தை அதிகரிப்பதைவிட, விஞ்ஞானத்தை நமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதுடன் நிறுத்திவிட்டு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க முயல்வதுதான் புத்திசாலித்தனம். சுகங்களை நாம் அனுபவித்துவிட்டு நாளைய சந்ததியினரை விபரீதங்களுக்கு உள்படுத்த நமக்கு உரிமையில்லை!

 

SHARE