கருணாநிதி நள்ளிரவு கைது காட்சி- ஜெயலலிதாவின் அன்றைய திருவிளையாடல்

494

8350977d-3628-4284-8e27-ec753a7c0cc3_S_secvpf

கருணாநிதி நள்ளிரவு கைது காட்சி- ஜெயலலிதாவின் அன்றைய திருவிளையாடல்

சென்னையில் பாலங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்_ அமைச்சர் கருணாநிதி 2001_ம் ஆண்டு ஜுன் 30_ந்தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார்.   சென்னை நகரில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக புகார் கூறிய மாநகராட்சி எதிர்க்கட்சியினர் அது குறித்து விசாரணை நடத்தக்கோரி கவர்னர் பாத்திமா பீவி, முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அரசு பிறப்பித்த உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னாள் முதல்_அமைச்சர் கருணாநிதி, மேயர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கோ.சி.மணி, முன்னாள் தலைமை செயலாளர் நம்பியார் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
29_6_2001_ந்தேதி நள்ளிரவு (அதாவது 30_ந்தேதி அதிகாலை) 12_30 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை மைலாப்பூர் ஆலிவர் ரோட்டில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றனர். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கருணாநிதியை எழுப்பி கைது செய்தனர். அப்போது மத்திய மந்திரிகள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. கருணாநிதியை போலீசார் துன்புறுத்தி அழைத்துச் சென்றதாக புகார் கூறப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு கருணாநிதி முதன்மை செசன்சு நீதிபதி அசோக்குமார் வீட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தப்பட்டார். கருணாநிதியை 10_ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கருணாநிதியின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.   பிறகு காலை 7 மணிக்கு கருணாநிதி சென்னை சென்டிரல் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். “என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று உடல் நிலையை பரிசோதிப்பதாக நீதிபதியிடம் கூறிவிட்டு அதற்கு மாறாக ஜெயிலுக்கு கொண்டு வந்தது ஏன்?” என்று கருணாநிதி கேள்வி கேட்டு ஜெயில் வாசலில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து ஜெயிலுக்குள் அழைத்துச்சென்று அடைத்தனர். அரசு பொது மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் குழுவும், கருணாநிதியின் குடும்ப டாக்டரும் வரவழைக்கப்பட்டு கருணாநிதி உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது. சிறையில் `ஏ’ வகுப்பு ஒதுக்கப்பட்டது. தினமும் டாக்டர் பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வழங்கி வந்தார்கள். மேயர் மு.க.ஸ்டாலினை போலீசார் தேடி வந்தனர்.
அவர் நீதிபதி அசோக்குமார் முன்னிலையில் சரண் அடைந்தார். பின்னர் ஸ்டாலின் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.   கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது போலீசாரின் கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக மத்திய மந்திரி முரசொலிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைதான மத்திய மந்திரி டி.ஆர்.பாலு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடல் நலக்குறைவால் முரசொலி மாறன் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கருணாநிதி மற்றும் 2 மத்திய மந்திரிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை தரும்படி கவர்னர் பாத்திமா பீவிக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி பாத்திமா பீவி, தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
பிறகு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.   இந்த அறிக்கை கிடைத்த பிறகு மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடி விவாதித்தது. மத்திய மந்திரிகள் கைது செய்யப்பட்ட விதமும், அவர்களை போலீசார் நடத்திய விதமும் சரியல்ல என்று மத்திய மந்திரிசபை அதிருப்தி தெரிவித்தது.
கவர்னரை திரும்ப பெற ஜனாதிபதிக்கு பிரதமர் சிபாரிசு செய்யவேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. மத்திய மந்திரிசபையின் முடிவு பற்றி தகவல் அறிந்ததும், கவர்னர் பாத்திமா பீவி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு அனுப்பி வைத்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரிகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், திண்ட்சா, பா.ஜனதா தலைவர் மல்கோத்ரா ஆகியோர் கொண்ட குழு சென்னை வந்து சிறையில் இருந்த கருணாநிதி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்களும் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து விளக்கினார்கள்.
எதிர்க் கட்சித்தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் விளக்கினார்கள். மத்திய அரசும், பிரதமரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று 2 மத்திய மந்திரிகள் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக தற்காலிக கவர்னராக ரங்கராஜன் பதவி ஏற்றார். த.மா.கா. தலைவர் மூப்பனார், கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யா (இ.கம்யூ), நல்லகண்ணு (வ.கம்யூ.) ஆகியோர் கூட்டாக ஒரு கடிதத்தை முதல்_அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பினார்கள்.
அதில், “கருணாநிதியின் உடல் நிலை கருதி அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறி இருந்தனர். இதுபோல் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் கூறியிருந்தார். இதனை ஏற்று கருணாநிதியை விடுதலை செய்ய முதல்_ அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். என்றபோதிலும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜுலை 4_ந்தேதி மாலை 5_20 மணிக்கு கருணாநிதி ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டது பழிக்கு பழி

SHARE