தென் கொரிய விபத்து: கப்பலின் உள்ளே சடலங்கள் மீட்பு

788

தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு சென்ற மிகப்பெரிய சொகுசு கப்பல் விபத்துக்குள்ளானது.கப்பலில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர்.

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து பயணிகளை மீட்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 179 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீட்பு பணியில் குறிப்பிடத்தக்க வகையில், கப்பல் உள்ளே ஜன்னலை உடைத்து பயணிகள் கேபினில் இருந்து முதன்முதலாக மூன்று சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.

இதையடுத்து கப்பல் விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பலியான மூவரும் லைப் ஜாக்கெட்டை அணிந்திருந்ததாக கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.

கப்பல் கவிழ்ந்த போது பயணிகளை காப்பாற்றாமல் 68 வயதான கேப்டன் லீ ஜுன் சியோக் மற்றும் சில மாலுமிகள் கடலுக்குள் குதித்து உயிர் தப்பியதால் அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளர்.

மீட்கும் பணியில், 169 படகுகளும், 29 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு வருகின்றன.

கடல் சீற்றம், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும், நீச்சல் வீரர்கள் 500 பேர் காணாமல் போனவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

கடலோர காவல் படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில், மீட்பு பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

SHARE