தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கமுடியாது என வடமாகாண முதலமைச்சர் கூறியிருக்கும் கருத்துக்கள், எம்மை வன்முறையாளர்களாக சித்திரிக்கும் முயற்சியா? என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டமைப்பினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பு கடந்த புதன்கிழமை நடைபெற்றிருந்தது. இதன்போது கூட்டமைப்பிலுள்ள முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்தியங்கமுடியாது. என முதலமைச்சர் கூறியிருக்கும் கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவுக்காக தற்போதைய முதலமைச்சரை நாடியபோது, கூட்டமைப்பிலுள்ள ஒரு கட்சியினர் மட்டும் கேட்டால் போதாது. அனைத்துக் கட்சியினரும் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கமைவாக கட்சியின் தலைவர் எம்மோடு பேசி, 4 தினங்களின் பின்னர் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தினதும் சம்மதத்தை வெளியிட்டிருந்தார்.
எனவே இப்போது ஆயுதப்போராட்ட வழியில் வந்தவர்களாக எம்மைப் பார்க்கும் முதலமைச்சர் எதற்காக அப்போது பார்க்கவில்லை? மேலும் 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் நாங்கள் ஆயுதங்களை கைவிட்டு, ஜனநாயக வழியில் இறங்கியிருந்தோம். எங்கள் கட்சிகள் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளாக இருக்கின்றன.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோதும் எங்களையும் இணைத்துக் கொண்டே புலிகள் கூட்டமைப்பை உருவாக்கினார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். நிலைமை இவ்வாறிருக்க 30வருடங்களுக்கு முன்னைய எங்கள் வழியை சுட்டிக்காட்டுவது நடைமுறைக்கும், ஜனநாயக தன்மைக்கும் முரணானதாகவே இருக்கும். மேலும் ஆயுதப் போராட்டம் தீண்டத் தகாததாகவும், அந்த வழியில் இருந்தவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் அடையாளப்படுத்துவதாகவே முதலமைச்சரின் கருத்து எம்மை பாதித்திருக்கின்றது.
ஆனால் யதார்த்தம் என்னவென்றால், தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஜனநாயக வழியில் நடந்தபோது எமக்கு அருகில் உள்ள தமிழ் நாட்டில் கூட இங்கே உண்மையில் என்ன நடக்கின்றது என மக்களுக்கு சரியாக தெரியாமல் இருந்தது.
ஆனால் ஆயுதப் போராட்டப் பாதையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள், பொதுமக்கள் உயிர்தியாகம் செய்ததன் பின்னரே தமிழகத்தில் மட்டுமல்லாமல், சர்வதேசம் முழுவதும் தமிழ் மக்களுடைய பிரச்சினை தெரிந்திருக்கின்றது. உலகம் முழுவதும் மக்கள் எமக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே முதலமைச்சரின் கருத்து, தியாகங்களை கொச்சைப்படுத்தியிருக்கின்றது என்றார்.