வல்வெட்டித்துறை கிழக்கில் மீனவச்சங்கம் அடையாள உண்ணாவிரதம் – சட்டத்தைக் கடைபிடிக்குமாறு அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவிப்பு

413

வல்வெட்டித்துறை கிழக்கில் மீனவச் சங்கத்தினரால் அடையாள உண்ணாவிரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர். இவ்வடையாள உண்ணாவிரதத்தில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவ்வடையாள உண்ணாவிரதம் தொடர்பில் அனந்தி சசிதரன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில் பொது மக்கள், அரசு மற்றும் அமைச்சர்கள் மீதும் கடுங்கோபத்துடன் இருக்கின்றார்கள். சட்டம் சட்டம் என்று சட்டத்தினை பின்பற்றுகிறார்களே தவிர, அந்த சட்டத்தினை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்கவில்லை என உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தடைசெய்யப்பட்ட தொழில் தொடர்பாக வடமாகாணசபை தங்களுடைய நிலைப்பாட்டைக் கூறலாம் எனவும் சட்டத்தில் இடம் இருக்கின்றது. ஆகவே தொடர்பில் மீன்பிடி அமைச்சருக்கு உரிய அதிகாரம் இருக்கின்றது. அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் முடிவெடுக்காது மத்திய அரசின் முடிவினை எதிர்பார்த்து செயற்படுவதாகவே மக்கள் கருதுகின்றனர். மற்றுமொரு காரணம் என்னவென்றால் வல்வெட்டித்துறை என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சொந்த இடம் என்பதால், அவ்வூரினை அபிவிருத்திசெய்வதற்கு அரசாங்கம் பின்வாங்கி நிற்கின்றது எனவும் அவ்வூர் மக்கள் தெரிவிப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கருத்துத்தெரிவிக்கையில், இழுவைப்படகு சம்பந்தமாக மாகாணசபையிடம் எத்தனையோ தடவைகள் தெரியப்படுத்தியிருக்கின்றோம். எங்களுடைய பிரதேசத்தில் மாத்திரம் இதனை தடைசெய்துள்ளீர்களா? அல்லது ஒட்டுமொத்தமாக இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் தடைசெய்திருந்தால் எமது பிரதேசத்திலும் தடைசெய்யுமாறு சந்திப்பின் போது தெரிவித்திருந்தோம். இதே இழுவைப் படகுகள் மன்னார், சிலாபம், நீர்கொழும்பு, புத்தளம், முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இன்னமும் பாவனையில் இருக்கின்றது.

சட்டவிரோதமான தொழில்கள் பல இடங்களில் தடைசெய்திருப்பதாக பத்திரிகைகளில் கூட வெளிவருகின்றன. இவ்விடயம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர்களிடம் சென்றிருந்தோம். அவர்கள் போலியான வாக்குறுதிகளை வழங்குகின்றார்களே தவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் எமது பொருளாதாரம் பின்தங்கியுள்ளது. இந்த இழுவைப் படகுகளை தடைசெய்வதாய் இருந்தால் அதற்கான மாற்றுவழிகளை ஏற்படுத்தித்தாருங்கள் எனக்கூறுகின்றோம். இந்த மீன்பிடி சம்பந்தமாக மாகாணசபை தலையீடு செய்யமுடியும் என பாராளுமன்ற சட்டம் நடைமுறையில் இருக்கின்ற நிலையில், இவர்களால் ஏன் இதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற விடயம் கவலையளிக்கின்றது.

1

4

5

6

7

உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போகின்றோம் என இரு நாட்களுக்கு முன் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் கூறியிருந்தோம். வல்வெட்டித்துறையில் இழுவைப் படகின் மூலம் தொழிற்புரிவோர் 23பேர் தான் இருக்கின்றார்கள் என பத்திரிகை ஒன்றுக்கு அமைச்சர் டெனீஸ்வரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். மேலும் அவர்கள் கூறுவதுபோன்று நாம் செயற்படமுடியாது என்ற கருத்துப்பட அந்தச்செய்தி தொடர்கின்றது. இவ்விடயம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியிருக்கின்றார். பத்திரிகையில் இவ்வாறான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவர் பொய் கூறுகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் மீனவச் சங்கத்தின் செயலாளர் சிவசோதி ஆனந்தபோடி அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில், இழுவைப் படகுகள் பயன்படுத்தக்கூடாது என்று கூறினால் இந்தச் சட்டம் இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்படவேண்டும். பாரபட்சம் காட்டும் நடவடிக்கையாக ஒரு பகுதியினர் பயன்படுத்தவேண்டும் மற்றைய பகுதியினர் பயன்படுத்தக்கூடாது என்று கூறுவது பெரும் சிரம நிலையினை உருவாக்கியுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒருபுறம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மறுபக்கம் என வடமராட்சி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இப்பிரச்சினையை நாங்கள் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களுக்கும், உதவிப்பணிப்பாளர் கணேசமூர்த்தி அவர்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம். இருவரும் தங்களுடைய கடமைகளை சரியாகச் செய்யவில்லை. எந்தவிதமானதொரு சட்டவொழுங்குகளை கடைப்பிடிக்கவில்லை.

மற்றுமொரு விடயம் என்னவென்றால், மீனவர்கள் சம்பந்தமான விடயங்களை இவர்களிடம் வினவுகின்றபொழுது, ஆவணங்களைக் காணவில்லை எனவும், எலியினால் சேதமாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றார்கள். ஒழுங்கான முறையில் மானியங்கள் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இப் பிரதேசசபையோ அல்லது அரச அதிபரோ இப்பகுதிகளை அவதானிப்பதாக தெரியவில்லை.

DSC01554 455d

இது தொடர்பில் வடமாகாணசபை மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் வினவியபோது அவர் தெரிவித்த கருத்து என்னவெனில், இவ்விடயம் தொடர்பில் உடனடியாக தீர்வினைப் பெற்றுக்கொள்ளமுடியாது எனவும் பொறுமையாக இருந்தால் தான் மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார். இப்பிரச்சினை தொடர்பாக 03 விடயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். ஓன்று கரையோரங்களில் மீன் பிடிப்பவர்கள் இழுவைப்படகிற்கு எதிரானவர்களாக இருக்கின்றார்கள். அடுத்து அரசின் சட்ட திட்டத்தில் இழுவைப்படகுகள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மூன்றாவது பாராளுமன்ற அமைச்சினால் இதற்கான அனுமதி எமக்கு கிடைக்கப்பெறவில்லை. பொதுவாக இழுவைப்படகுகள் இந்தியாவினால் எமது கடல் எல்லைக்குள் செயற்படுத்தப்படுகின்றது என்று குற்றஞ்சாட்டப்பட்டே மீனவர்கள் கைதுசெய்யப்படுவதுடன், இதன் விளைவாக கடல் வளங்கள் அழிக்கப்படுவதாகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மீனவச் சமுதாயங்களால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இவ்வாறிருக்க இவ் தடைசெய்யப்பட்ட இழுவைப்படகுகளை பயன்படுத்துங்கள் என நாம் எவ்வாறு கூறமுடியும். மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன இழுவைப் படகுகளை எக்காரணத்தைக்கொண்டும் பயன்படுத்த முடியாது எனவும் அவ்வாறு பயன்படுத்தினால் கடற்படையினரின் உதவியுடன் அவர்களைக் கைதுசெய்வோம். இதற்கு மாற்றுவழி இருக்கின்றது. அவற்றினைக் கையாண்டு மீன்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். நாம் இவ்விடயம் தொடர்பாக பலருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். எமது வளங்கள் சூறையாடப்படுவதனை தடுப்பதில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம். இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடம் தொடர்புகொண்டு வினவியபொழுது சட்டம் அவ்வாறிருக்கின்றபொழுது அதற்கு முரணாக நாம் எதனையும் செயற்படுத்த முடியாது. ஒருசிலர் ஏவிவிட்டு கூத்துப்பார்க்கின்றார்கள். இதற்கான மாற்றுத்திட்டத்தினை உடன் நடைமுறைப்படுத்தமுடியாது. இதற்கு குறைந்தது ஓரிரு வாரங்கள் தேவைப்படும். அதன் பின்னர் அதனை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் தெரிவிக்கையில் இழுவைப் படகுகளில் இயந்திரங்களின் மூலம் மீன்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அடுத்து இதனுடைய சங்கம் பதிவு செய்யப்படவில்லை. அதனை சீர்செய்து அதனூடாக திட்ட நகர்வுகளை மேற்கொள்ளமுடியுமாயின் அது சாதகமாக அமையும். அடிமடி மீன்பிடி முறையை மேற்கொள்வதற்கு சட்டரீதியாக அனுமதியினைப் ஒரு வார காலத்தில் செய்துதருகின்றேன் எனக்கூறியிருந்தேன். அதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமல்லாது என்.கே.சிவாஜிலிங்கம், சிறைவா, ரவிகரன் போன்ற பல வடமாகாணசபை உறுப்பினர்களிடம் கடந்த மாதம் 10 திகதி இது தொடர்பில் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் எவருமே இந்சந்திப்பில் பங்குபற்றவில்லை. முடிவுகளை எடுப்பதாயின் வடமாகாணசைப உறுப்பினர்களும் இணைந்து செயற்படவேண்டும். தனி அரசியலை நிலைநாட்டுவதற்காக தத்;தம் வேலைப்பழுக்களுடன் இவர்கள் சென்றதன் விளைவாகவே இன்று இம்மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனை விடுத்து ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டரீதியின் மூலம் இதற்கான தீர்வுகளை மேற்கொள்ளாது அதற்கப்பால் சென்று செயற்படுவதன் ஊடாக எதனையுமே வடமாகாணசபை சாதித்துவிடமுடியாது. எமது குற்றங்கள், குறைகளை நாமே அரசிற்கு தெரியப்படுத்தும் ஒரு செயல் வடிவமாகவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் அமையப்பெறுகிறது. ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுக்குமாறு முதலமைச்சர், மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகின்றபொழுது வடமாகானசபையின் மீன்பிடி அமைச்சராகிய நான் என்னசெய்யமுடியும் என்பதை மக்களாகிய நீங்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் உண்ணாவிரதப்போராட்டம் தொடர்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை என்னவாகும் என்பதனை வடமாகாணசபை முதலமைச்சரும், அமைச்சர்களும் தீர்மானித்து அதற்கான உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வுகிடைக்க முன்னின்று செயற்படுவதே சிறந்தது. இல்லாதுபோனால் சிங்கள அமைச்சர்களைக்கொண்டு அரசு அப்பகுதி மக்களுக்கான மாற்று நடவடிக்கைகளைக் மேற்கொள்ளும். இதன் பின் விளைவுகள் மிக மோசமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

SHARE