ஜப்பான் பார்முலா 1 போட்டியில் ஹாமில்டன் வெற்றி

433
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15-வது சுற்றான ஜப்பானிஸ் கிராண்ட்பிரீ அங்குள்ள சுசூகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 307.573 கிலோ மீட்டர் கொண்ட பந்தய தூரத்தை கடப்பதற்கு ஓடுதளத்தில் மொத்தம் 53 முறை சுற்றி வர வேண்டும் என்பது இலக்காகும்.

வழக்கம் போல் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். ஆனால் பலத்த மழை பெய்ததால், ஈரப்பதத்தில் காரை வேகமாக இயக்குவதில் வீரர்கள் சிரமப்பட்டனர். இதற்கிடையே, பிரான்ஸ் வீரர் ஜீலஸ் பியான்ச்சி விபத்தில் சிக்கியதால், 44-வது சுற்றுடன் போட்டி நிறுத்தப்பட்டது.

அப்போது இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 51 நிமிடம் 43.021 வினாடிகளுடன் ரேசில் முன்னிலையில் இருந்தார். மேற்கொண்டு போட்டியை தொடர வாய்ப்பில்லை என்று கூறிய போட்டி அமைப்பாளர்கள், ஹாமில்டன் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

இந்த சீசனில் அவர் பதிவு செய்த 8-வது வெற்றி இதுவாகும். வெற்றிக்குரிய 25 புள்ளிகளும் அவருக்கு கிடைத்தது. முதல்வரிசையில் இருந்து கிளம்பி வெறும் 9.1 வினாடி பின்தங்கிய ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து அதற்குரிய 18 புள்ளிகளை பெற்றார்.

நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 3-வது இடத்தை (15 புள்ளி) பிடித்தார். இந்திய தொழிலதிபர்களுக்கு சொந்தமான போர்ஸ் இந்தியா அணியை சேர்ந்த வீரர்கள் நிகோ ஹல்கென்பர்க், செர்ஜியோ பெரேஸ் முறையே 8-வது மற்றும் 10-வது இடங்களை பெற்றனர்.

15 சுற்று முடிவடைந்த நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான போட்டியில் ஹாமில்டன் 266 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

நிகோ ராஸ்பர்க் 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிச்சியர்டோ 193 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 139 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். அடுத்து 16-வது சுற்று போட்டி ரஷியாவில் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

SHARE