அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் உறுதிமொழிகளினையடுத்து கைவிடப்பட்டது.

726
images(13)

கிளிநொச்சி விவசாயிகளினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை தொடக்கம் கரைச்சி பிரதேச சபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் உறுதிமொழிகளினையடுத்து கைவிடப்பட்டது.

இந்நிலையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் தமிழ்த் தேசிய மக்கன் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.

இதன்போது, உங்களின் கோரிக்கைகள் பெற்றுத் தர நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தனர். இதனையடுத்து விவசாயிகளின் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் 11.30 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தில் தமது கோரிக்கைகளினைப் புறந்தள்ளி கிளிநொச்சி மக்களையும் யாழ்ப்பாண மக்களையும் முரண்படவைக்கும் செயற்பாடுகளில் நீர்வழங்கல் அதிகார சபை ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவித்தே இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்தப் போராட்டத்தில் இரணைமடுக் குளத்தினைச் சார்ந்த 22 உப-பிரிவு விவசாய அமைப்புக்கள் ஈடுபட்டன.

இதன்போது, கருத்துத் தெரிவித்த விவசாயிகள்

‘இரணைமடு நீர் வரி இடாப்பு 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் தயாரித்ததே தற்போது பாவனையில் உள்ளது. இதில் பரந்தன் குமரபுரம், கண்டாவளைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் 15000 ஏக்கர் நெற்செய்கை உள்ளடக்கப்படவில்லை. இருந்தும் இவை இரணைமடுக் குளத்திற்கு கீழேயே விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு சென்றால் மட்டுமே இரணைமடுக்குளம் புனரமைக்கப்படும் இல்லாதுவிடின் அந்தத் திட்டம் முன்னெடுக்கப்படாதென நீர் வழங்கல் அதிகார சபை தெரிவிக்கின்றது.

அத்துடன், கிளிநொச்சி விவசாயிகளின் கோரிக்கை மறுக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு வருகின்றது. இரணைமடுக் குளம், அதனுடன் தொடர்புபட்ட வாய்க்கால்கள், வடிகால்கள் புனரமைக்கப்படவேண்டும் என்ற பல கோரிக்கைகளினை நாங்கள் முன்வைத்தோம்.
இருந்தும் அதற்குப் பதில் எதுவும் தராமல் கிளிநொச்சி விவசாயிகள் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லவதற்குத் தடைசெய்கின்றனர் என்ற பொய்யான பிரச்சாரம் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. இது எம்மீது பழிசுமத்தும் வேலையாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 20000 விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றனர். இவர்களில் 10000 குடும்பங்கள் 2013 வறட்சி மற்றும் 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவற்றினால் வங்கிக் கடனாளிகளாகவிருக்கின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்யும் அளவிற்குக் கூடச் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

எமது கோரிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் இரணைமடுத்திட்டத்தினைச் செயற்படுத்த வேண்டும். எமது கோரிக்கைகள் மறுக்கப்படவோ மறைக்கப்படவோ முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.ErnimaduErnimadu01Ernimadu02Ernimadu03Ernimadu04Ernimadu06Ernimadu07Ernimadu08Ernimadu09Ernimadu10

 

 

SHARE