நட்பு ஓர் இளவண்ண ரோஜாவாக இயல்பாக மலர்ந்து வாழ்க்கை முழுவதும் வாசனை பரப்புகிறது

470

இரண்டு மனங்களுக்கு இடையில் காதல் பற்றிக் கொள்ள உயிரில் ஓர் எரிகல் விழ வேண்டியிருக்கிறது. அதே மனதில் நட்பு ஓர் இளவண்ண ரோஜாவாக இயல்பாக மலர்ந்து வாழ்க்கை முழுவதும் வாசனை பரப்புகிறது!

காதல் உள்ளிட்ட அனைத்து உறவுகளும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, வளர்சிதை மாற்றங்களை அடைந்து ஒரு கட்டத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விடுகின்றன. கால மாற்றத்தை கண்களை சிமிட்டி வம்புக்கு இழுப்பது டன், வாழ்வின் கடைசி மூச்சு வரை எந்தவித மாற்றத்துக்கும் ஆளாகாமல் கூடவே வருகிறது நட்பு. மகிழ்ச்சி, துக்கம், குழப்பம், தெளிவு… அனைத்து நிலைகளிலும் மனம் தேடுவது நண்பனின் தோள்களையே! வாழ்வில் மிகப்பெரிய மாயங்களை செய்து காட்டும் நட்பு இன்றைய குழந்தைகள் மத்தியில் எப்படியிருக்கிறது? மனம் திறக்கிறார் கல்வியாளர் முத்துக்குமார்…

‘‘ஒரு குழந்தையின் முதல் தோழி ‘அம்மா’. கதகதப்பான அணைப்பில், ஈரம் பொதிந்த முத்தத்தில் அந்த நட்பு துளிர்விடுகிறது. குழந்தையின் உணர்வுக்கும் தேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் அதுவே ஆழமான நட்பாக மாறி விடுகிறது. குழந்தையின் வளர்ச்சியைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு வயதிலும் குழந்தையின் முதிர்ச்சிக்கு ஏற்ப அம்மாவின் நட்புச் செடியும் வளர்கிறது… வானம் தொடும் ஆவலில் தலையசைக்கிறது. எந்த விஷயத்திலும் அம்மாவின் வெளிப்பாடு மிகப்பெரிய தாக்கத்தை குழந்தையின் மனதில் ஏற்படுத்துகிறது.

அம்மாவுக்கும் குழந்தைக்குமான நட்பு தெளிந்த நீரோட்டமாக அமைந்து விட்டால் போதும். அடுத்தடுத்து அமையவிருக்கும் நட்பு வட்டத்துக்கும் அதுவே மையப்புள்ளியாக இருக்கும். பெரும்பாலான வீடுகளில் ஒற்றைக் குழந்தைகளே இருப்பதால் நல்ல நட்புக்கான வாய்ப்புகளை குறித்த காலத்தில் ஏற்படுத்தித் தருவது அவசியம். மற்ற குழந்தைகளோடு பழகினால் நம் குழந்தை தவறான விஷயங்களையே கற்றுக் கொள்ளும் என்ற பயத்தை பல பெற்றோரிடம் பார்க்கலாம். ஆரம்ப காலத்தில் இவர்கள் குழந்தைகளை தொட்டிச் செடி போல வளர்க்கிறார்கள்.

இப்படி வளர்க்கப்படும் குழந்தைக்கு வெளியுலகத் தொடர்பு கேள்விக்குறியாகி விடுகிறது. பின்னாளில் சமூகத்தைப் புரிந்து கொள்ளவோ, தனக்கான வெற்றிப் படிகளைத் தீர்மானிக்க முடியாமலோ திணறும் நிலைக்கு தள்ளப்படுகிறது குழந்தை. விளையாடத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகளின் பாதுகாப்பையும் பழக்கங்களையும் நெறிப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள் அம்மாக்கள். தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, பிடித்தமான சூழலை உருவாக்க குழந்தை தந்தையின் விரல்களை பற்றிக் கொள்கிறது. அம்மா அனுமதிக்காத சுதந்திரம் அப்பாவிடம் கிடைக்கிறது. இருவருக்குமிடையே நட்புப் பாலம் பலப்படுகிறது. குடும்பத்தின் அனைத்து உறவுகளிடம் இருந்தும் குழந்தை நட்பை எதிர்பார்க்கிறது. இந்த நட்புச் சூழல் வெளியிடங்களில் எளிதில் பழகும் இயல்பை உருவாக்கும்.

இறுக்கமான முகத்துடன் பயம் காட்டும் அப்பா… மிலிட்டரி மாதிரி விதிகளை செயல்படுத்தும் கண்டிப்பான அம்மா… திட்டித் தீர்க்கும் பாட்டி… அதட்டும் அத்தை… உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பேசும் மாமா… உறவுகள் இப்படி அமைந்துவிட்டால் வீட்டை நினைக்கும் போதே மனதில் பயம் கவ்வும். இந்தச் சூழலில் நண்பர்களிடம் கிடைக்கும் கனிவு மனவலிக்கு மருந்தாகிறது. இது போன்ற குழந்தைகள் நட்புக்கு முக்கியத்துவம் தருவதுடன் பெற்றோரை எதிரிகளாக மனதில் பதியவைத்துக் கொள்ளும் அபாய மும் இருக்கிறது. கூடா நட்பு அமைந்து கேடில் முடியவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் குழந்தைகளின் மனநிலையை மாற்ற முடியாது. நட்பு உணர்வும் பேலன்ஸிங் டயட் மாதிரிதான். வீட்டுச் சூழலே இதற்கு ரோல்மாடல்!

பள்ளியில் அடுத்த கட்ட நட்புச் சூழல் உருவாகிறது. வீடு திரும்பும் செல்லத்திடம் மதிப்பெண், ஹோம் ஒர்க்கில் மட்டும் கவனம் செலுத்தாமல் மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புத் தர வேண்டும். பள்ளியில் நடந்ததை குழந்தை சொல்லும் போது காது கொடுத்துக் கேட்க வேண்டும். அப்போது நண்பர்கள் யார், என்ன பேசினார்கள் என அத்தனை விஷயங்களும் கொட்டப்படும். இந்தப் பகிர்வின் மூலமாக குழந்தைகளின் நண்பர்கள், அந்த நட்பு எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் பெற்றோருக்கு தெளிவாகி விடும். நட்பில் தேவையற்ற விஷயங்கள் நுழைந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.

நண்பனோ, தோழியோ பிடிக்காத விஷயத்தைச் செய்யும்போது, அது பற்றி குழந்தை பகிர்ந்து கொள்ளும். இது போன்ற சூழலில் வெவ்வேறு குணங்களுள்ள மனிதர்களை எப்படி எதிர்கொள்வது என்பதை விளையாட்டாகக் கற்றுக் கொடுக்கலாம். வழக்கத்துக்கு மாறான மாற்றங்கள் தென்பட்டால் மெல்ல விசாரித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். நட்பில் தவறுகள் தெரிந்தால் அதனைக் குழந்தைகள் உணர சந்தர்ப்பம் தரலாம். இந்தப் பழக்கம் அவர்களை மிகச் சரியாக வழிநடத்தும்.

அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் பெற்றோரால் ஏற்படுத்த முடியாத மாற்றங்களைக் கூட நட்பு சாத்தியமாக்கிவிடும். நல்ல உணவுப் பழக்கம், நேர்த்தியாக உடுத்திக் கொள்வது, தன் சிறப்புகளை புரிந்து கொண்டு தனித் தன்மையை வெளிப்படுத்துதல், பகிர்தல், புதிய விளையாட்டுகளை கண்டறிதல், இக்கட்டான சூழலில் உதவுதல் என பல செயல்களுக்கு வழிவகுக்கும். கருத்துகளைப் பெற்று குழந்தை தனது ஆளுமையை மேம்படுத்திக் கொள்ளவும் நட்பு வட்டம் ரத்தின கம்பளம் விரிக்கிறது.

முன்பின் அறியாத மனிதரின் வலியை உணரவும் நட்பு கற்றுத் தருகிறது. நண்பர்களுடன் இருக்கும் போது குழந்தையின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்… ஆளுமை மேம்படும். கோபம் புயலாகித் தாக்கினாலும் ஆழமான நட்பு அசையாமல் நிற்கும். சிறு வயது முதலே ஆண், பெண் நட்பு அவசியம். அவரவர் எல்லை எது, எப்படிப் பழக வேண்டும், எது பாதுகாப்பு என குழந்தைகளுக்கு புரிய வைத்து வழிநடத்தலாம்.

சின்னச் சின்ன வழிகாட்டுதல்கள் நட்பை சமன்படுத்திச் செல்ல செல்லங்களுக்கு உதவும். புன்னகையில் இசை கேட்க, காபி கோப்பைகளில் வானம் ஊற்றி அருந்த, அர்த்தமற்ற கோபங்களுக்குள் முத்தங்கள் தேடிக் கண்டறிய என வாழ்வின் ரசனையான தருணங்களைத் தரும் நட்பு அவ்வளவு அவசியம்’’.

அப்பாவுக்கும் தோழி ஆவாள்!

கல்வியாளர் என்பதையும் தாண்டி முத்துக்குமார் அவருடைய மகளின் முதல் நண்பன்… ‘‘மகள் வைஷ்ணவ் பிரியாவுக்கு பத்து வயது. பல புத்தகங்களை தனக்குள் அடக்கியி ருக்கும் பேச்சுக்காரி. பள்ளிவிட்டு திரும்பியதும் அவளிடம் அத்தனை கதைகள் கேட்கலாம். காலையில் வைத்த குட்மார்னிங்கில் தொடங்கி வீடு வந்து சேர்ந்தது வரை அனைத்தையும் கொட்டுவாள். நட்பு வட்டத்தில் நடந்த கலாட்டாக்களைச் சொல்லும் போது வார்த்தைகளில் மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொள்ளும். கொடுத்த வாக்கை காப்பாற்றியாக வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவுதான்.

சில நேரங்களில் நிறைவேற்றப்படாத விருப்பங்கள் அம்புகளாக மாறி ஊடல் தொடுக்கும். எவ்வளவு கோபமாக இருந்தாலும் சில நிமிடங்களுக்குள் தவறு செய்தவர் முன்வந்து வெள்ளைக் கொடி காட்டி விடுவோம். பல ஆண்டுகளாக முயற்சித்தும் என்னால் மாற்றிக் கொள்ள முடியாத விஷயங்கள் கூட அவளது அதட்டலில் காணாமல் போயிருக்கிறது. அப்பாக்களின் அத்தனை தோழிகளையும் மகள்கள் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். நட்பின் இன்றைய பரிமாணங்களை இவர்களின் வழியாகத்தான் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது…’’

SHARE