இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்: இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம்

453
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வீரர்களுக்கு முன்பை விட குறைவான ஊதியமே கிடைக்கும். புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியினர், தங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன், வீரர்கள் சங்கம் ஏற்படுத்தி இருக்கும் ஒப்பந்தத்துக்கு எதிராக திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்து வரும் போட்டி தொடர் பாதிக்கப்படலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும். இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலருடன் பேசினேன். இந்த போட்டி தொடருக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்று அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து பிரச்சினையை சமாளித்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய சேர்மன் டேவ் கேமரூன் ‘இ-மெயில்’ அனுப்பி இருக்கிறார். போட்டி தொடர் முடிந்ததும் மத்தியஸ்தராக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு உதவி செய்ய தயார். இந்த போட்டி தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதே எங்களது பணியாகும்.

வருங்கால போட்டி அட்டவணை புனிதத்தன்மை கொண்டதாகும். அதனை எல்லா உறுப்பு நாடுகளும் அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டியது கட்டாயமாகும். திட்டமிடப்பட்ட வருங்கால போட்டி அட்டவணையை அவமரியாதை செய்யக்கூடாது. சம்பள விவகாரம் ஒரு பெரிய பிரச்சினை அல்ல. இதனை இரு தரப்பினரும் சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளலாம். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் நல்லவர்கள். அவர்கள் தங்கள் பணியை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.

கொச்சி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கோ, அல்லது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கோ நாங்கள் பணம் எதுவும் கொடுக்கவில்லை. அப்படி சொல்லப்படுவதில் உண்மை எதுவும் கிடையாது. அது ஒரு வதந்தியாகும். இது அவர்களது உள்விவகாரம். இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்பட எது சரியான வழி என்பது குறித்து மட்டுமே நாங்கள் ஆலோசனை வழங்கினோம்.

இவ்வாறு சஞ்சய் பட்டேல் கூறினார்.

இதற்கிடையில் நாளை டெல்லியில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் டெல்லி வருகிறார்கள். அவர்கள் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

SHARE