ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான அமெரிக்க விமான தாக்குதல் பலன் அளிக்கவில்லை

408

ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் இந்த தாக்குதல் நடக்கிறது.

அமெரிக்கா தனது தரைப்படையை பயன்படுத்தாமல் விமான படை மூலமே ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்து விடலாம் என்று கருதியது. ஆனால் இதற்கு போதிய பலன் இருப்பதாக தெரியவில்லை. பலமுனைகளில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் தொடர்ந்து முன்னேறியபடியே உள்ளனர்.

சிரியாவில் துருக்கி எல்லையில் கோபன் என்ற நகரம் உள்ளது. அந்த நகரை கைப்பற்றுவதற்காக ஐ.எஸ். தீவிவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் மீது அமெரிக்காவும் மற்ற நாட்டு படைகளும் குண்டு வீசின.

ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. தற்போது கோபன் நகரின் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஊரை விட்டு வெளியேறி துருக்கி நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கோபன் நகரில் குர்தீஸ் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நகரம் தீவிரவாதிகளின் பிடியில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் குர்தீஸ் இன மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக குர்தீஸ் இன தலைவர் ஐசா அப்துல்லா கூறும்போது, ‘‘அமெரிக்கா வான்வழி தாக்குதல் மட்டும் நடத்துவதால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் தரை வழி தாக்குதலிலும் ஈடுபட்டால் தான் எங்களை காப்பாற்ற முடியும்’’ என்று கூறினார்.

SHARE