வவுனியாவில் இன்று (10.10.2014) 10.45 மணியளவில் சட்டவிரோதமாக குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி 211 நாட்கள் தடுத்துவைத்துள்ள விஜயகுமாரி உட்பட ஏனையோர் தொடர்பாக இம்மௌன போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு பதாதைகளை ஏந்தியவாறு வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக தமது மௌன ஆர்ப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தின்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரவணபவான், சிவசக்தி ஆனந்தன், வினோதராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான கலாநிதி.வைத்தியர்.சிவமோகன், ரவிகரன், இந்திரராசா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முற்போக்கு தமிழ்த்தேசியக்கட்சியின் சு.விஜயகாந்த், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா பிரஜைகள் குழு பிரதிநிதிகள், தென்னிலங்கை மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள், அரசியற் கட்சி பிரதிநிதிகள், தியாகராஜா, காணாமற்போனோர் பிரஜைகள் குழுவின் பிராந்திய அமைப்பாளர்களும், பிள்ளைகளை பறிகொடுத்த அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட பாராளுமன்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் இவ்மௌன போராட்டம் தொடர்பாக தங்களது கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை பிரதேசத்தினைச் சூழவும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொலிஸார் செயற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். இதேசமயம் இவ்வார்ப்பாட்டத்தினைக் கன்காணிக்கும் வகையில் இராணுவப் புலனாய்வாளர்களும் அப்பிரதேசத்தினைச் சுற்றிக் காணப்பட்டனர். நன்பகல் 12.00 மணியளவில் இவ்மௌனப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.
படங்களும் தகவலும் : இ.தர்சன்