சிறிசபாரத்தினத்தை புலிகளின் யாழ் கட்டளைத்தளபதி சமரசம் பேச அழைத்து சுட்டது ஏன்?அவரது நினைவு தினத்தில் ஒரு வரலற்றுபப்பதிவு

1032

 

பசீர் – முரளி புலி உறுப்பினர்கள் கைது
புலிகள் – டெலோ மோதலுக்கு வித்திட்டது.

தப்புச் செய்தது சிறியண்ணா ! ராசிப்பழி எனது மனைவி மீதா. விசனமடைந்த புலி உறுப்பினர்.


யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் – டெலோவினரிடையே நிகழ்ந்தன. ஆயினும் பாரியளவு பாதிப்பை ஏற்படாத வகையில் இரு தலைமைகளும் தங்கள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1986 ஏப்ரல் 29 அரியாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவ்விரு இயக்க உறுப்பினர்களிடமும் முரண்பாடு ஏற்பட்டது.

புலிகள் இயக்க உறுப்பினர்களை டெலோ உறுப்பினர்கள் தாக்கினர். எனவே தாக்கப்பட்ட உறுப்பினர்கள் அரியாலையில் இருந்த நடா முகாமுக்கு தொலைத் தொடர்பு மூலம் விடயத்தைத் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்தார் பொறுப்பாளர் நடா. புலிகளைத் தாக்கிய டெலோ உறுப்பினர்கள் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும் அவர்களைப் பிடித்தார். அடிக்கவும் செய்தார்.இதனால் புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென டெலோவினர் முடிவெடுத்தனர்.

அப்போது தமது கோட்டையாக அவர்கள் கருதிக்கொண்ட கல்வியங்காட்டில் புலிகள் யாராவது அகப்பட்டாலும் பிடிப்பதெனத் திரிந்தனர். சரா என்ற புலி உறுப்பினரைக் கண்டதும் அவரைப் பிடிக்கலாமென நோட்டமிட்டனர். ஆனால் கிட்டே வந்து பார்க்க முடியவில்லை.

ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சரா கூட்டமாக வந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களைத் தனது துணிச்சல் மூலம் மிரட்டியனுப்பிய சம்பவம் இவர்களுக்குத் தெரியும். சராவும் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்தான்.

ஜெர்மனியிலிருந்து இயக்கத்தில் இணைவதற்காக இந்தியாவுக்கு வந்தவர். மூன்றாவது முகாமில் பயிற்சி பெற்றவர். சராவை நெருங்க முடியாததற்கு இன்னொரு காரணம் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அவரது உறவினர்கள் என்பது. அங்கு ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பது பலருக்கும் புரிந்து விட்டது. சராவை பத்திரமாக ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

பேச்சுக்கு அழைப்பு
கல்வியங்காடு பழம் வீதியில் இருபாலைக்கு அண்மித்ததாக புலிகளின் புகைப்படப்பிரிவின் வேலைகள் நடைபெறும் இடம் இருந்தது. அங்கு சந்துரு என்றொரு உறுப்பினர் செல்லவேண்டியிருந்தது.

இந்தியாவிலிருந்து படகில் திரும்பிக்கொண்டிருந்த புலிகளின் படகு மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.அப்படகில் அப்போதைய மட்டக்களப்பு பொறுப்பாளராக விளங்கியவரும் இருந்தார். இத் தாக்குதலில் அனைவரும் வீரச்சாவடைந்து விட்டதாகக் கருதப்பட்டது. இவர்கள் அனைவரது புகைப்படங்களையும் வீரவணக்கத்துக்காக வைக்க வேண்டியிருந்தது .

தட்டா தெருச் சந்திக்கு அண்மையிலிருந்த புலிகளின் தலைமைப் பணிமனையிலிருந்து புகைப்படப்பிரிவின் இடத்துக்கு சந்துருவைக் கூட்டிக்கொண்டு செல்லுமாறு அப்போது அங்கே வந்த பசீர் என்னும் உறுப்பினர் கோரப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற பசீரையும், சந்துருவையும் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா சனசமூக நிலையத்துக்கு அப்பால் நித்தி என்ற டெலோ உறுப்பினரும் இன்னுமொருவரும் வழிமறித்தனர். அவர்களுக்குப் பசீரைத் தெரியாது . சந்துரு புலிகள் இயக்க உறுப்பினர் எனத் தெரியும். ” நீங்கள் டைகேர்ஸ் தானே? ” என்று கேட்டார் நித்தி ” ஓம் ” எனப் பதிலளித்தார் பசீர்.

” உங்கட ஆக்கள் எங்கட ஆக்களுக்கு அடிச்சிப்போட்டினம். அதைப்பற்றிக் கொஞ்சம் கதைக்க வேணும் . உள்ளுக்குள்ள வாங்கோ ” என்று தமது முகாமொன்றைக் காட்டினார். அதற்கு ” பிரச்சினைகள் பற்றிக் கதைக்க வேணுமெண்டா அதுக்குத் திலீபன் தான் வரவேணும். நான் போய்த் திலீபனுக்குச் சொல்லுறன். நீங்கள் அவரோட கதைச்சு முடிவு காணுங்கோ ” எனத் தெரிவித்தார் பசீர். ” நாங்கள் திலீபனுக்குச் சொல்லுறம். அவரும் வரட்டும். முதல்ல நீங்கள் உள்ளுக்கு வாங்கோ ” என்ற நித்தியின் குரலில் ஒரு கண்டிப்புத் தெரிந்தது.

அங்கிருந்து தப்ப வழி இல்லை. இருவரும் உள்ளே போனால் கிட்டுவுக்குத் தகவல் தெரிவிக்க முடியாது. சந்துரு இளைய உறுப்பினர். அவரை இங்கே விட்டு தானும் போக முடியாது. எதாவது விபரீதம் நிகழ்ந்தால் அந்தப் பழி தன்னில் வந்துவிடும்.எனவே தான் அங்கே நின்று கொண்டு சந்துருவை விடுவிக்கவும் கிட்டுக்குத் தகவல் அனுப்பவும் உள்ள வழி பற்றி உடனடியாக முடிவெடுத்தார் பசீர். ” சரி பிரச்சினை இல்லை ; நான் உள்ளுக்க வாறன்; ஆனா என்னோட வந்தவருக்கு முக்கியமான வேலை இருக்கு அவர் போகட்டும் என்ன ” என்று சொல்லிவிட்டு அவர்கள் அவர்களின் பதிலை எதிர்பாராமலே சந்துருவிடம் மோட்டார் சைக்கிளைக் கையளித்தார் பசீர்.

சந்துருவின் சாமர்த்தியம் !
அவர் குறிப்பால் தனக்கு உணர்த்தியதைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டார் சந்துரு. புகைப்படப் பிரிவுக்குப் போவது போல போன வழியில் அப்படியே போய் இராசபாதை வழியாக கிட்டுவின் முகாமுக்கு விரைந்தார். அவர் வந்த வழியில் திரும்பிச் செல்ல முனைந்திருந்தால் நிலைமை பாதகமாக முடிந்திருக்கும். அவரையும் தடுத்திருப்பார்கள்.

சந்துரு வேகமாகச் சென்றதும் தான் நித்திக்கு நிலைமை புரிந்தது. தான் அவரைப் போக விட்டிருக்க கூடாது என உணர்ந்தார்.இதே வேளை பசீர் “சிறியண்ணையிட்டச் சொல்லுங்கோ பசீர் வந்திருக்கிறனெண்டு. அவருக்கு என்னைத் தெரியும்” என்றார். உடனே இருவரை சிறி சபாரத்தினத்திடம் அனுப்பிய நித்தி ” நாங்கள் வேற ஒரு இடத்தில இருந்து கதைப்பம் வாங்கோ ” எனக் கூறி ஞானபாஸ்கரோதயா நிலையத்துக்கு முன்னால் பருத்தித்துறை வீதியில் போய் முடியும் இடத்திலுள்ள மற்றொரு டெலோ முகாமுக்கு பசீரை அழைத்து சென்றார்.பசீர் நம்பிக்கையோடு அங்கு சென்றார்.

புதிய உறுப்பினர்களிடையே புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஒன்றாக ஒரே இடத்தில் தங்கியிருந்து சாப்பிட்டு, படுத்துறங்கி நட்பாகப் பழகிய சிறி பழைய நட்புக்கு மதிப்புக் கொடுப்பார் என பசீர் நினைத்தார்.

ஏனெனில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்னதாகத்தான் அவரது திருமண வைபவம் நிகழ்ந்தது.புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு நடைபெறும் இரண்டாவது திருமணம் இது. ஏற்கெனவே பிரபாகரனின் திருமணம் தமிழகத்தில் நிகழ்ந்தது.

நாட்டில் நடைபெறும் திருமண என்ற வகையில் முக்கியமான இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் பசீர் . தன்னுடன் நன்றாக பழகியவர் என்ற வகையில் சிறியரை நேரடியாக அழைக்கக் கட்டைப் பிராயிலுள்ள முகாமொன்றுக்குச் சென்றிருந்தார். அவருடன் கூடவே சிறியரின் ஒன்றுவிட்ட சகோதரனும் போயிருந்தார். அப்போது சிறியர் அங்கு இருக்க வில்லை.

முகாமில் இருந்தவர்களிடம் விபரத்தைச் சொல்லிவிட்டு வந்தனர் இருவரும். அன்று பிற்பகல் தனது ஒன்றுவிட்ட சகோதரனைச் சந்தித்த சிறியர் திருமண அழைப்பு தனக்குக் கிடைத்ததாகவும் தான் கட்டாயம் அதில் கலந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் என்ன முக்கிய வேலையோ அவரால் கலந்து கொள்ள முடியாமற் போயிருந்தது. எனவே இப்படியான சந்தர்ப்பத்தில் அவர் தன்னை அழைத்து உரையாடுவார் அல்லது தானிருக்கும் இடத்துக்கு வந்து சந்திப்பார் எனக் காத்திருந்தார் பசீர் .

இதேவேளை சந்துரு கிட்டுவின் முகாமுக்குச் சென்ற போது அங்கே ஒரே அமளி – கல்வியங்காடு பிரதேசப் பொறுப்பாளர் முரளியை டெலோவினர் கடத்தி விட்டதாகப் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். எந்த நிலைக்கும் ஆயத்தமாகப் புறப்படும் நிலையில் அவர்கள் இருந்தனர்.

சீற்றமுற்ற கிட்டு கிட்டுவிடம் போன சந்துரு ” காக்காண்ணையை டெலோ புடிச்சிட்டாங்கள்” என்று சொன்னதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார் அவர். ஏனெனில் பசீரின் திருமண ஏற்பாடு குறித்து பிரபாகரனிடம் பேசி அனுமதி வாங்கியவர் அவர். சகல விடயங்களையும் (புகைப்படம் முதலானவை ) அவரே ஒழுங்கு படுத்தியவர் இந்தத் திருமணத்தில் ஒரு சாட்சியாகவும் .கையொப்பமிட்டவர்.

எனவே இனித் தாமதிக்க நேரமில்லை என முடிவெடுத்தார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் டெலோவினருடன் தொடர்பு கொள்ள முடிவெடுத்தார். அந்தப் பதட்டமான சூழலிலும் தொடர்பு கொள்பவர் பொருத்தமான ஆளாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.
கட்டைப் பிராய்க்கு அனுப்பிய அணியினரிடம் அரை மணி நேரத்துக்குள் பசீர், முரளி இருவரையும் விடுதலை செய்யாவிட்டால் நேரடியாக மோதுவோம் என எச்சரிக்கை விடுக்குமாறு உத்தரவிடப் பட்டிருந்தது.

இதே வேளை யாராவது ஆயுதங்களுடன் வந்தால் சுடுமாறு அங்குள்ள ஒரு மாடி வீட்டில் நின்ற தமது உறுப்பினர்களுக்கு டெலோவினர் உத்தரவிட்டிருந்தனர்.
இதெல்லாம் தெரியாமல் சிறி சபாரத்தினத்திடம் சென்றவர்கள் வரும் வரை காத்துக்கொண்டிருந்தார் பசீர். அவர்கள் இருவரும் வந்ததும் அந்த முகாமுக்குப் பொறுப்பானவரைக் கூப்பிட்டு எதோ சொன்னார்கள்.

இதனைத் தொடர்ந்து டெலோ உறுப்பினர் கமல் என்பவர் பிரசுரிக்க முடியாத `செந்தமிழில்` தனது அதிகாரத்தைக் காட்ட முனைந்தார். அதுவரை “எனக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த விடயங்கள் தெரியாது. திருமணம் முடிப்பதற்காக இங்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது ” என்று பசீர் சொல்லிக்கொண்டிருந்தார். கமலின் விசாரணைத் தொனி மாற்றமடைந்தது. அடிகளும் விழத்தொடங்கின.

அதுவரை சிறி சபாரத்தினம் மீது பசீர் கொண்டிருந்த நம்பிக்கை ஒரேயடியாகச் சரிந்து விழுந்தது . ஒன்றாகச் சாப்பிட்டு உரையாடிய அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அந்த நேரத்தில் ” வந்திட்டாங்கள் ” என்று கூறியபடி ஒருவர் . ஓடி வந்தார் .தொடர்ந்து உத்தரவுகள் தூள் பறந்தன “நான் சொல்லும் வரை ஒருவரும் சுடக் கூடாது ” என பொறுப்பாளர் கட்டளை இட்டார் .

எங்கெங்கே நிலையெடுக்க வேண்டுமென அவரது வாய் உத்தரவு விட்டுக்கொண்டிருந்தது. அவ்வேளையில் ஒரு அறையிலிருந்து முரளி இழுத்து வரப்பட்டார் . முரளி – பசீர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்ததில் அதிர்ச்சி.

இருவருக்கும் மற்றவர் பிடிபட்டது அதுவரை தெரியவில்லை. திடீரெனக் கொஞ்சத் தூரத்தில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டன. அவ்வளவுதான் நிலையெடுத்திருந்தவர்களைக் காணவில்லை. ” இவங்கள் ரெண்டு பேரையும் போட்டால் சரிவரும் ” என்று சொல்லிவிட்டு முரளியை பசீர் நிற்கும் பக்கம் இழுத்துக்கொண்டு வந்தார் ஒருவர்- அப்போது வேறொருவர் ” வேண்டாம் ! இவங்களை வச்சுத் தப்புவோம்” என்றார். அதை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டது போல் தெரிந்தது .

பிழையான நேரத்தில் பிழையான முடிவை எடுத்து விட்டது டெலோ . ஓரிரு நாட்களில் பருத்தித்துறை இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் புலிகள். மன்னார் – வன்னியிலிருந்து ஏறத்தாழ எல்லாப் புலிகளும் இத் தாக்குதலுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த வேளையில் தான் புலிகளுக்கு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டனர் டெலோவினர்.

இந்நிலையில் புலிகளின் சகல அணிகளும் கல்வியங்காட்டை முற்றுகையிட்டன அப்போதுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது டெலோவினருக்கு. பசீரையும் , முரளியையும் இழுத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக த்திரிந்தனர். இடைஇடையே அடியும் விழுந்தது அவர்களுக்கு. ” அவங்களை விடுங்கோடா ” என்று சத்தமிட்டபடி சராவின் சகோதரிகள் பின்னால் ஓடி வந்தனர்.அவர்களை நோக்கியும் `செந்தமிழால்` வீரம் காட்டினர் சிலர். முற்றுகை மெல்ல மெல்ல இறுகியது. இனி தப்புவது கடினம் என்ற நிலைமை அவர்களுக்கு

“தமிழீழம் எண்டது சாத்தியமில்லை – ஏலுமானவரைக்கும் இவங்களோட அடிபடுவம் ” என்று அச்சமயத்தில் சிறி சபாரத்தினம் கூறியதாக பின்னர் ஒரு சமயம் டெலோ உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். எந்த இயக்கமாக இருந்தாலும் தமிழீழம் என்ற கனவுடனேயே தொடர்பு கிடைத்த இயக்கங்களில் இணைந்து கொண்டனர் அப்போதைய இளைஞர்கள்.

” தமிழீழம் சாத்தியமில்லை ” என்று சொன்னதும் இயல்பாகவே எதிர்த்துப் போராடும் குணம் அவர்களை விட்டுப் போய்விடும் என்று கணிக்கத் தவறிவிட்டார் சிறி சபாரத்தினம்.

தம்மைத் தடுத்து வைத்திருந்த டெலோ உறுப்பினர்களிடம் ” இந்தச் சண்டையை நிறுத்த எங்களால முடியும். எங்கள் இரண்டுபேரையும் பொதுமக்களோடு விடுங்கோ. நாங்கள் போய் சொன்னால் கிட்டு சண்டை நிற்பாட்டுவார்.நேரம்போனால் பாரிய உயிரிழப்பு ஏற்படும் எனக் கூறினார் பசீர்.
மட்டக்களப்பில் புளொட் – ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் -புளொட் இயக்கங்களிடையே நிகழ்ந்த பிரச்சினைகளின் போது சமரசத்தில் ஈடுபட்ட அனுபவம் அவருக்கிருக்கிறது. அதே போன்று தமிழீழ பாதுகாப்புப் பேரவை உறுப்பினர்களிடையே நிகழ்ந்த சிறு பிரச்சினையை எவருக்கும் பாதகமில்லாமல் முடித்ததும் குறிப்பிடத்தக்கது.

பழுகாமத்தில் புளொட் இயக்கத்தவர்களிடையே பிரச்சினை ஏற்பட்ட போது ஏற்கெனவே தன்னிடமிருந்து பெற்ற சைனைட்டை நவரத்தினம் என்ற புளொட் உறுப்பினர் ஒருவர் அருந்தி உயிரிழந்த சம்பவம் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

உளவு பார்த்த சிறுவன்
இந்நிலையில் தன் பொருட்டு இயக்க மோதல் ஒன்று பெரிதாக வெடித்தால் எத்தனை உயிர்கள் பலியாகுமோ எனப் பயந்தார். கல்முனையில் விற்பனை அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவரது வீட்டில் அவரையும், முரளியையும் வைத்திருந்த போது சிறியரிடம் தனது கருத்தை வலியுறுத்துமாறு அந்த வீட்டுக்காரரிடம் சொன்னார். ” இயக்க மோதல் எண்டதை விட இன்னொரு விசயமும் இருக்கு.

இண்டைக்கு நான் கல்யாணம் முடிச்சு ஆறாவது நாள். இண்டைக்கு நான் செத்தா என்ரை மனிசியின்ரை ராசியாலதான் நான் செத்துப்போனான் எண்டு தான் சனம் சொல்லும். தப்புச் செய்தது சிறியண்ணா. பழி சுமக்கிறது என்ர மனிசியோ ? உங்கட சகோதரி ஒருத்திக்கு இப்படி ஒரு பழி வந்தா எப்படி இருக்கும் எண்டு புரிஞ்சு கொள்ளுங்கோ “. என்று அவரிடம் சொன்னதும் அவர் ஒரு கணம் ஆடிப் போய் விட்டார் . அவர் டெலோவின் ஆதரவாளர் . அவரது 13 வயது மகன் தான் எந்த வழியால் புலிகள் வருகின்றார்கள் என்று உளவு பார்த்து டெலோவினருக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.

அதற்கேற்ற வகையில் பசீரையும்,முரளியையும் மாற்றிக்கொண்டிருந்தனர் முற்றுகை இறுகி இறுகி இந்த வீட்டை நெருங்கும் சமயமாகிவிட்டது. வெளியில் டெலோவினரின் வாகனங்கள் தகர்க்கப்படும் சத்தங்கள் அங்கிருந்த டெலோ உறுப்பினர்களுக்குப் பீதியைக் கொடுத்ததை அவர்களின் விழிகளில் இருந்து புரிய முடிந்தது.

அப்போது அங்கிருந்த டெலோவினருக்கு ஒரு வகையில் தாங்கள் கவசமாக இருப்பதைப் புரிந்து கொண்டனர் பசீரும்,முரளியும்.
இதேவேளை சண்டை கட்டைப்பிராயில் தொடங்கியவுடனே கிட்டுவும் , பிரபாகரனும் உரையாடினார். இருவரையும் விடுதலை செய்யாததால் சண்டையைத் தொடர்வதென முடிவெடுத்தனர்.

கட்டைப்பிராய் மாடிவீட்டில் சண்டை தொடங்கிய வீதம் குறித்தும் தெரிவிக்க வேண்டியுள்ளது அங்கு நின்ற திருமலையை சேர்ந்த டெலோ உறுப்பினர் ஒருவர் வாகனத்தில் ஆயுதங்களுடன் புலிகள் வந்து இறங்கியதைக் கண்டதும் கைநடுங்கி வானத்தை நோக்கிச் சுட்டார்.

ஆயுதங்களோடு யார் வந்தாலும் சுடு என்று தான் அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டிருந்தது.ஒரு வேட்டு போதுமே சமறைத் தொடங்க – பேச்சுவார்த்தைக்கோ எச்சரிக்கை.விடவோ தேவையில்லாமல் போயிற்று. லிங்கம்
தலைமையிலான குழுவினருக்கும் இப்படித்தான் எதாவது நடந்திருக்க வேண்டும். அவரது தலையில் சுட்டுக் காயம் காணப்பட்டது.

இதே வேளை கல்வியங்காட்டுக்குள் சிக்கிய சராவின் நிலைமை சங்கடமாகியது. இவரை ஒரு கட்டிலின் கீழ் விட்டனர் இவரது உறவினர். அந்தக் கட்டிலுக்கு மேல் இரு டெலோவினர் ஆயுதங்களுடன் வந்தமர்ந்தனர். அதிலிருந்து சாப்பிடவும் செய்தனர்.”தேவையில்லாம சண்டையைத் துடங்கிப்போட்டாங்கள்.இதுக்குள்ளால என்னெண்டு வெளியால போறது? மூண்டு ரவுன்ஸ்தான் என்னட்ட இருக்கு. உன்னிட்ட எத்தனை இருக்கு?“ என ஒருவர் மற்றவரிடம் விசாரித்தார். எல்லாவற்றையும் கட்டிலுக்கு கீழ் படுத்திருந்து கேட்டுக்கொண்டிருந்தார் சரா.

அவரது அப்போதைய பிரச்ச்சினை தும்மலோ , இருமலோ வந்துவிடக்கூடாது என்பது.முற்றுகையில் ஈடுபட்டவர்கள் முரளி , பசீருடன் சராவையும் தேடினர். டெலோ உறுப்பினர்கள் அங்கிருந்து போகும் வரை அந்த வீட்டுக்காரர்கள் வேண்டாத தெய்வம் இல்லை. அன்றைய காலகட்டத்தில் புலிகள். ஏனைய இயக்கங்களை விட தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் சிறந்து விளங்கினர்.

கிட்டு பெல் என்றழைக்கும் சிறுவன் குரங்கு வளர்த்தால் டக்ளஸ் தான் மேலான ஆள் என்று காட்ட தா ட்டான் குரங்கு வளர்ப்பார். புலிகள் கொக்கோ கோலா குடிப்பது தெரிந்தால் தாங்களும் கேஸ் கணக்கில் வாங்கிச் செல்வர் ஏனைய இயக்கத்தவர். புலிகள் போடும் உடுப்புப் பாணியிலேயே தங்களையும் அடையாளம் காட்டுவர். ஆனால் தொலைத்தொடர்பு போன்ற போராட்டத்துக்கு அவசியமான விடயங்களில் அக்கறை செலுத்தவில்லை.

யாழ்ப்பாணத்தில் சண்டை தொடங்கியதும் ,மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களிலும் டெலோ முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த டெலோ உறுப்பினர்களுக்கு ஏன் சண்டை நடக்கின்றதென்றே தெரியவில்லை.தொடர்ந்து நடந்த நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சி யானைவையாக இருந்தன
மட்டு – பாடுவாங்கரையில் நடந்த தாக்குதலில் பின்னர் உயிரிழந்த ஒருவரது சடலத்தைப் புரட்டியபோது அவர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது.

புத்தகத்தின் நடுவே அவரது பெருவிரல் காணப்பட்டது. அதில் அவரது இரத்தத் துளி பட்டிருந்தது .அது கொக்குளாய் முகாம் மீதான தாக்குதல் குறித்து புங்குடுதீவைச் சேர்ந்த போராளி சுபாஷ் எழுதிய விபரணம். (இவர் இப்போது தாமோதரம்பிள்ளை.பாலகணேசன் என்ற தனது சொந்தப்பெயரில் எழுதி வருகிறார்) அந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றார். அத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய பொட்டம்மான்.அந்தப் புத்தகம் “விடியலுக்கு முந்திய மரணங்கள்”

பசீரும் – முரளியும் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்தில் பொறுப்பாக இருந்தவர் கொஞ்சம் தள்ளியிருந்த நேரத்தில் பசீருக்குக் கிட்ட வந்த ஒரு டெலோ உறுப்பினர் ரகசியமாக “நீங்கள் காக்கா தானே ” என்று கேட்டார். “ஓம் ” என்றார் பசீர் . என்னைத் தெரியுமா ? என்று மறு கேள்வி கேட்டார். யார் இவர் என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் தன்னைப் பற்றிய சம்பவங்களை அவர் நினைவூட்டினார்.

குருக்கள்மடம் பகுதியிலிருந்து புலிகள் இயக்கத்தில் சேருவதற்காக பிரதேசப் பொறுப்பாளர் மூலம் வந்தவர் இவர்.பயிற்சிக் காலத்துக்காகக் காத்திருக்கையில் ஒரு நாள் முகாமுக்குப் பொறுப்பானவர் இவரை அழைத்து வந்தார். இவருக்கு அடிக்கடி கலைவருவதாகவும் இவர் முகாமில் இருப்பது பிரச்சினையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

வீட்டுக்குச் செல்வதற்கு சம்மதமாயின் போகலாம் எனக் கூறி பயணத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்திருந்தார் பசீர் . பின்னர் மூதூருக்குப் போன இடத்தில் தான் டெலோவினருடன் இணைந்து கொண்டதாகக் குறிப்பிட்ட அவர் சண்டை தொடங்கிய பதட்டமான சூழலில் வேறொங்கோ இருந்து கல்வியங்காட்டு முகாமுக்கு வந்திருந்தார். பசீரை இழுத்துக்கொண்டு போகையில் அவர் இடறி வீழ்ந்தபோது இரு டெலோ உறுப்பினரக்ள் அவருக்கு அடித்தனர் .

இவரும் சேர்ந்து உதைத்திருக்கிறார் . பின்னர் தான் நிலைமை அவருக்கு விளங்கியது. ” சீ இவங்களோட போய்ச் சேர்ந்தேனே – உங்களுக்கு.அடிச்செனே.. உதைச்சென என்று சொல்லி தலையைக் குனிந்து கொண்டு விம்மி அழுதார். பசிருக்கு சங்கடமாகிவிட்டது. அழாமல் இருங்கோ உங்களுக்குப் பிரச்சினையாகிவிடும்” என்று நிலைமையின் ஆபத்தைச் சுருக்கமாக விளக்கினார் பசீர். அதேவேளை அதிரடியாக எதாவது செய்ய முடியுமாயின் நிச்சயம் ஒருவரின் துணை கிடைக்குமென்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது.

கண்ணைக் கையைக் கட்டிய டெலோவினர் .

பிற்பகல் முடியும் நேரம் ” இனிச் சண்டையை நிப்பாட்டுறது கஷ்டம் தம்பிமாரே. நீங்கள் ஈரோசோட தொடர்பு கொண்டு எங்களை ஒப்படைங்கோ. எங்களைத் தடுத்து வைத்திருக்கிற உங்களுக்கு மட்டும் எந்தப் பிரச்சினையும் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்ளுவம் என்றார் பசீர். ஆனால் அவர்களின் விழியில் இருந்த பீதி போகவில்லை.

வெளியே எங்கேயும் போய் எவரோடும் தொடர்பு கொள்ள முடியாத நிலை அவர்களுக்கு. முற்றுகை இன்னும் இறுகி தேடுதலில் ஈடுபடுவோரின் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அந்த வீட்டின் ஒரு அறைக்குள் போய்க் குசுகுசுத்த இருவர் மாலையானதும் வெளியில்வந்து
குதிரையின் வேகம் யானையின் பலம்

“இன்னும் அரை மணிநேரத்தில் உங்களை ஈரோசிட்ட ஒப்படைப்பம்“ என்று சொல்லி முதலில் கண்ணைக் கட்டினர் – அடுத்து பின்புறமாகக் கைகளைக் கட்டினர். அடுத்து தமது கையை விட்டு வாயைத் திறந்து துணியை அடைத்தனர். அவர்கள் எடுத்து விட்ட முடிவு விளங்கிவிட்டது. இதுதான் தமது வாழ்வின் இறுதி நாள் என்பது இருவருக்கும் சந்தேகளில்லாமல் புரிந்து விட்டது. இருவரையும் பிடித்து நடத்திக்கொண்டு கொஞ்சத்தூரம் போய்த் தள்ளிவிட்டனர்.

விழுந்த இடம் ஒரு மண் தரை என்பது புரிந்தது . சுடுவதென்று முடிவெடுத்தாகிவிட்டது.சுட்ட பின் எந்த வழியாகத் தப்பியோடுவதென்பதே அவர்களது பிரச்சினை. மிகக்கிட்டிய தூரத்தில் புலிகள் நிற்பதால் சூட்டுச் சத்தம் கேட்டதும் மூன்றோ , நாலோ செக்கனுக்குள் அங்கு வந்து விடுவார் .என்பதே நிலைமை.

கீழே தள்ளிய போது முரளியின் கண்கட்டு தளர்ந்து விட்டது . வாயில் அடைத்திருந்த துணியும் வீழ்ந்து விட்டது . தாங்கள் ஒரு மண் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர் தனது வாயால் பசிரின் கட்டுக்களை அவிழ்த்து விட்டார். உடனே தனது கண்கட்டை அவிழ்த்து வாயிலிருந்த துணியையும் எடுத்து விட்டு முரளியின் கட்டுக்களை அகற்றினார் பசீர். அவரது காதின் அருகே வந்த முரளி இரவைக்குப் 12 மணிக்குத் தப்பிவமோ என குசுகுசுத்தார்.

“அரை மணித்தியாலம் சொல்லியிருக்கிறாங்கள் அதுக்குள்ளால எதாவது செய்யவேணும். கதவை உடைச்சுத் தப்புவம். ரெண்டு பேரும் ஒரே நேரத்தில உதைக்க வேணும் வண்.ரூ .திறி எண்டு சொல்லு நீ உதைக்க நானும் சேர்ந்து உதைப்பன்” என்றார் பசீர்.

அப்படியே செய்தார் முரளி, ஏக காலத்தில் ஒரே உதை. ஒரு மனிதன் தான் உயிர் தப்புவதற்காக உதைக்கும் உதையில் குதிரையின் வேகமும் , யானையின் பலமும் இருக்கும். இப்போ ஒரே கணத்தில் உதைத்தனர் இருவரும். கதவைத் தாண்டிக் கொஞ்சத் தூரத்துக்கு அப்பால் போய் இருவரும் விழுந்தனர். உதையின் வேகம் மட்டும் காரணம் அல்ல. கதவு சப்புப்பலகையால் செய்திருந்ததை இவர்கள் கவனிக்க வில்லை.

விழுந்த வேகத்தில் எழும்பி ஒடத் தொடங்கினர். எங்கே போவதென்ற விடயத்தில் ஏற்கெனவே முடிவு கண்டிருந்தனர் பிரபாகரனின் மைத்துனரும் போராளியுமான குப்புவின் வீட்டுக்கே போவதென குசுகுசுப்புக்களில் தீர்மானமாகியிருந்தது.இருட்டுக்குள் ஓடிய பசீர் ஒரு வேலிக்கருகில் தடக்கி வீழ்ந்தார். அவரை இரு கரங்கள் தூக்கின.

இவ்வளவு கஷ்டப்பட்டு தப்பி வந்து திரும்பியும் டெலோக்காரரிடம் பிடிபடுவதா என்ற ஆத்திரத்தில் தன்னைத் தூக்கியவரை தாக்கு தாக்கென்று தாக்கியடித்து வீழ்த்தினார் .

தொடர்ந்து அவர் ஓடிய வேகத்தை நேரக் கணிப்புக் கருவியில் கணக்கிட்டிருந்தால் சில வேளை அது உலக சாதனையை மிஞ்சியிருந்தாலும் அதிசயப்படுவதற்கில்லை.ஆனாலும் பின்னால் துரத்திவரும் காலடிச் சத்தம் கேட்டது. பழம் வீதியில் ஏறும் நேரம் திரும்பிப் பார்த்த போது பின்னால் வருவது முரளிதான் எனத் தெரிந்தது.

“அட நீயே ! உன்னையா நான் அடிச்சு விழுத்தினனான். நீ சொல்லியிருக்கலாமே. இருட்டுக்கை எனக்குத் தெரியாமல் போச்சு. மன்னிச்சுக்கொள்!” என்றார் பசீர். ” இப்ப அதுவே பிரச்சினை? முதல்ல தப்புற வழியப் பார்ப்போம் ” என்றபடி அவரைக் கூட்டிக்கொண்டு போனார் முரளி .

லண்டனில் இருந்து தேசத்தின் குரல் பாலா அண்ணரின் தொடர்பு மூலம் புலிகளின் இந்திய முதலாவது பயிற்சி முகாமில் புடம்போடப்பட்டவர். இவர் . கல்வியங்காடு தமது கோட்டை என்று கருதிய டெலோவினர் அந்தப் பகுதி பிரதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த இவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர். அதனால் தான் முதலில் இவரைக் கைது செய்திருந்தனர். அடுத்து பசிரைப் பிடித்திருந்தாலும் ஒப்பீட்டளவில் அன்று கூடுதலான அடி உதைகள் வாங்கியவர் இவர்.இது போதாதென்று தானும் இவரைத் தாக்கிவிட்டோம். என்ற மன உளைச்சல் பசிருக்கு. முரளிக்கு கூடுதல் அடிவிழுந்ததில் இன்னொரு விடயமும் இருந்தது .

கடற்படையினரால் தாக்கப்பட்ட படகில் இருந்த புலிகளின் அப்போதைய மட்டக்களப்பு பொறுப்பாளர் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர். இந்தச் சம்பவத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் டெலோவினரின் படகொன்று மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்த அனைவரையும் இழந்திருந்தது டெலோ. அவர்களுக்கான அஞ்சலி – வீரவணக்கங்களில் பெருமளவு ஆர்வம் காட்டாத மக்கள் புலிகளின் படகிலிருந்தோர் விடயத்தில் மிக ஈடுபாட்டுடன் நடந்து கொண்டனர். இது சம்பந்தமாக மக்களுடன் டெலோவினர் முரண்பட்டுக்கொண்டனர். மக்களின் புலிகளின் மீதான பற்றுக்கு பிரதேசப் பொறுப்பாளரான முரளியே காரணம் என்ற கடுப்பில் இருந்தனர். அரியாலைச் சம்பவம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது.

பதுங்கிப் பதுங்கி ஒரு வீட்டுக்குள் சென்றனர் இருவரும். முற்றத்தில் மின் வெளிச்சத்தில் ஒரு அண்ணனும் தங்கையும் நின்றனர். அவர்களை நோக்கிச் சென்ற இவர்கள் ” வெளியில ஆர் நிக்கிறது ?” என்று கேட்டார்.” நீங்கள் ஆர்?“ எனக் கேட்டார் அந்தத் தங்கை. `ரைகேர்ஸ் ` எனப் பதிலளித்தார் முரளி. ” ரைகேர்ஸ் எண்டால் ஏன் பயப்பிடுறீங்கள்?“ என்று கேட்டனர் அவர்கள். தொடர்ந்து “ரைகேர்ஸ் தான் வெளியில நிக்கினம்“ என்றனர். ” வெளியில நிக்கிறது அவைதனென்டா அவையிட்ட இண்டைக்குப் பிடிபட்டவை தப்பி வந்திட்டினம் எண்டு சொல்லி ஒரு இயக்க ஐ சி (அடையாள அட்டை) வாங்கிக்கொண்டு வாங்கோ ” என்று இருவரும் சொல்லி அனுப்பினர்.

அனுப்பிய பின்னர்தான் இத்தகவலை சில வேளை டெலோவினரிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வதென்று எண்ணினர். அந்த வீட்டின் பிளாற்றின் மீது ஏறிப்படுத்து அவதானித்துக்கொண்டிருந்தனர்.வெளியே சென்ற இருவரும் முற்றுகையில் ஈடுபட்டோரிடம் விடயத்தைச் சொன்னார்கள்.அடையாள அட்டை ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அவர்களின் கையில் மஞ்சள் நிற அடையாள அட்டையைக் கண்டதும் வெளியே நிற்பது புலிகள் தான் என உறுதியாயிற்று. கிளிநொச்சியைச் சேர்ந்த கமல் என்ற போராளி உறுப்பினரின் அடையாள அட்டை அது.

மேலே இருந்து கீழே குதித்து அதனைப் பெற்றுக்கொண்டனர் இருவரும். சற்றுத் தள்ளி போராளிகள் நிற்பதைக் கண்டதும் அவர்களுடன் இணைந்துகொண்டனர். அப்போதுதான் சரா மாட்டியதும் பின்னர் தப்பிய விடயமும் தெரிய வந்தது. எல்லாம் முடிந்த பின்னர்தான் உடல் வலி தெரிந்தது. உடனடியாக அச்செழுவிலுள்ள முகாமுக்கு பசீர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஒரு அறையில் சரணடைந்த டெலோ உறுப்பினர்கள்.தங்க வைக்கப்பட்டிருந்தனர்.வலியால்முணுகிய பசிருக்கு சுடுநீர் ஒத்தனம் கொடுத்தனர் அவர்கள். பரிவோடு கவனித்தனர். அடுத்த நாள் காலை அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டார் பசீர் .

முற்றுகை தொடர்ந்து கொண்டிருந்தது. சிறி சபாரத்தினம் எங்கே எனத் தெரியவில்லை. ஏப்ரல் முதலாம் திகதி இருபாலை மற்றும் இராச வீதிகள் சந்திக்கும் இடத்தில் நின்ற போராளிகளோடு பசீர் உரையாடிக்கொண்டிருந்தார்.

அவ்வேளை ஒரு அரைச் சைக்கிளில் டெலோவினருக்கு உளவு பார்த்துச் சொன்ன பையன் வந்துகொண்டிருந்தார். சைக்கிளை மறித்த பசீர் “என்ன தம்பி ரைகேர்ஸ் எங்க இருக்கின எண்டு பார்த்துச் சொல்லவா வந்தனீர்” என்று கேட்டார். .அவ்வளவுதான் “சிர்க்” என்று ஒரு சத்தம் கேட்டது. காற் சட்டையுடன் வெளியேற வேண்டியது வெளியேறிவிட்டது . முழி பிதுங்கி நின்ற பையனை அழைத்துக்கொண்டு போய் சந்தியின் மூலையில் இருந்த வீட்டுக்கு வெளியே வைத்து தண்ணீர் ஊற்றிச் சுத்தப்படுத்திக்கொண்டு வந்தார் ஒருவர் .

அவர் பசிருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அவரிடம் பையனின் வீ ட்டுக்குறிப்பைச் சொல்லிச் சம்பவத்தினத்தன்று என்ன நடந்தது என்பதையும்விளக்கி தகப்பனிடம் இனி இந்த வேலைகளைச் செய்ய சிறுவனை அனுமதிக்க வேண்டாமெனத்தான் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்குமாறு கூறினார்.

மேலும் தனக்கும் முரளிக்கும் கண்ணையும் கைகளையும் கட்டி வாயில் துணியை அடைக்கும் வரை பார்த்துக்கொண்டு நின்றவர் இவரது தந்தை என்றும் இப்படிச் செய்யவேண்டாம் என டெலோவினரை அவர் கேட்க வில்லை எனவும் சொன்னார்.

06 /05 /1986 அன்று காலை ஜமுனா வீதிப்பக்கமாக சிறி சபாரத்தினம் மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது . இதனை உறுதிப்படுத்த முத்திரைச் சந்தைக்குப்பகுதிக்குப் புலிகளின் அப்போதைய புலனாய்வு – விசாரணை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஐடியா வாசு போனார். அங்கேமேலும் இரு தகவல்கள் கிடைத்தன. ஒன்று காரைநகர் பகுதி – மற்றது கோண்டாவிலில் உள்ள புகையிலைத் தோட்டம்.

கோண்டாவில் பற்றிய தகவல்களை வழங்கியவர். ஏற்கெனவே பல நம்பகரமான விடயங்களைத் தெரியப்படுத்தியவர். எனவே இடத்தைச் சரியாக உறுதிப்படுத்திய பின் கோண்டாவிலை நோக்கி நகருமாறு வாசு கூறினார். சரியான இடத்தை முற்றுகையிட்டனர் புலிகள் .

சிறியை விட்டு தப்பிய பொபி

வாகனச்சத்தத்தையும் , ஆட்கள் இறங்குவதையும் அவதானித்த டெலோவினர் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர். சண்டை தொடங்கும் போது சிறி சபாரத்தினத்தின் வசமிருந்த பிஸ்டலைப் பறித்துக்கொண்டு பொபி எப்படியோ தப்பி ஓடிவிட்டார். நித்தி , சின்ன வறுவா, திருமலையைச் சேர்ந்த இன்னொருவர் என மூவர் கைதாகினர்.

புகையிலைக் கன்றுகளுக்குகிடையே சிறி சபாரத்தினம் இருந்தார் அப்போது அவர் பலியாக நேர்ந்தது. சம்பவ இடத்துக்கு கிட்டுவும் வந்திருந்தார் .

உரும்பிராய் கோவிலடிக்கு சிறி சபாரத்தினத்தின் சடலம் கொண்டுவரப்பட்டது. காயமடைந்த சின்னவறுவா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நித்தியும் , திருமலையைச் சேர்ந்தவரும் தொடர்ந்து அங்கே தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.திருமலை உறுப்பினர் தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். பிரேதப் பெட்டி எடுக்க வாகனம் சென்றிருந்தது. அப்போது சாப்பாட்டுப் பார்சல்கள் வந்தன. எவ்வளவோ வலியுறுத்தியும் திருமலை உறுப்பினர் சாப்பிட மறுத்து விட்டார் .

ஆனால் நித்தி எவ்வித பாதிப்புமில்லாமல் சாப்பிட்டார். கடைசியாக பார்சல் பேப்பரை எறிந்து விட்டு கைகழுவும் போது பசீரைப் பார்த்து நித்தி கேட்டார். “நான் உங்கட இயக்கத்தில சேரட்டோ?“ பதில் கிடைத்தது பசீரிடமிருந்து.

“உங்களைக் கடைசிவரை எங்கட இயக்கத்தில சேர்க்க மாட்டம். எத்தனை ஆயிரம் பேர் கொண்ட இயக்கத்தில தனக்கு நம்பிக்கையான ஆள் எண்டு நினைச்சுத்தானே சிறீயண்ணை கடைசி வரை தன்னோட வைச்சிருந்தவர். அவற்ற பொடி ( body.) கிடக்கேக்கை பார்சலை விரிச்சுச் சாப்பிட்டியே? நீயெல்லாம் என்ன மனுஷன்? என்னுடைய விஷயத்தில அவர் பிழை விட்டிருக்கலாம். ஆனா நாங்கள் ஒண்டா இருந்து சாப்பிட்டு பழகின நாட்களை நான் மறப்பதற்கு இல்ல. இண்டைக்கு முழுக்க என்னால சாப்பிட ஏயலாது. என்னைப் பிடிக்கேக்கை உன்னை எனக்குத் தெரியாது. பிறகுதான் மற்றவை சொன்னவை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்குப் பேசுறத்துக்காக கூப்பிட்டு தாசைச் சுட்ட ஆக்களில நீ தான் முக்கியமானவன் எண்டு. இண்டைக்குத் தாஸ் இருந்திருந்தால் அவருடைய உயிர் போன பிறகுதான் சிறீயண்ணாவின் உயிர் போயிருக்கும். ஆருக்காக சிறீயண்ணை தாசைக் கொல்ல முடிவெடுத்தாரோ அந்தப் பொபி கடைசியில சிறீயண்ணையை விட்டு ஓடிட்டான். அவனும், நீயும் ஒண்டுதான் “. என்று கூறிவிட்டு நகர்ந்தார். முழித்து நின்றார் நித்தி.எது எப்படி இருந்தாலும் அந்தத் திருமலைப் பையன் பசீரின் மனதில் உயர்ந்து நின்றார்.

விடுதலைக்கு வேண்டுகோள்

சில நாட்களின் பின் இந்த நித்தியின் தாயாரை மட்டக்களப்பு தபால் நிலையத்தில் பணியாற்றுபவர் என்று சொல்லி ஒருவர் பசீருக்கு அறிமுகப்படுத்தினார். தனது மகனின் விடுதலைக்காக அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரைப் பார்த்து நம்பிக்கைத் துரோகமான முறையில் தாசை ஆஸ்பத்திரிக்குள் சுட்டவர் உங்களது மகன் என்று சொல்ல பசீருக்கு மனம் வரவில்லை. தனது மனதில் மகனைப்பற்றிய என்ன பிம்பம் உள்ளதோ அப்படியே அந்தத் தாயிடம் இருந்துவிட்டுப் போகட்டும் என முடிவெடுத்தார். தனக்கு உணவளித்த , பாதுகாத்த மட்டக்களப்பு மக்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். நித்தியைச் சாத்தியமான விரைவில் விடுவிக்குமாறு ஐடியா வாசுவை கேட்டுக்கொண்டார்.

***
கடவுளின் விலகல்

வேறொரு இயக்கம் மீதான தாக்குதலில் தனக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்து இந்தக் காரணம் ஒன்றுக்காகவே தான் இயக்கத்தை விட்டு விலகுவதாக வெளிப்படையாக தெரிவித்தார் ஒரு போராளி. அவரது பெயர் கடவுள் (அமிர்தராஜ் , கல்லாறு ) கிழக்குப் பல்கலைக்கழக மாணவனாக இருந்த இவர் இந்தியாவில் முதலாவது பயிற்சி முகாமுக்கு அனுப்பப்பட்டவர் விடுதலைப் புலிகள் பத்திரிகையின் உருவாக்கத்தில் நித்தியானந்தனுக்கு உதவியாக இருந்தவர். சண்டைக் களங்களில் தனது துணிச்சலை நிரூபித்தவர்.அரசியல் பணிகளில் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர்.மக்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்தவர்.நேர்மையாகத் தனது கருத்தைப் பதிவு செய்தமைக்காக அவரது விலகலுக்கு மதிப்பளிக்கப்பட்டது.

மண்முனைத் துறையில் வைத்து ஒரு நாள் இவர் விசேட அதிரடிப் படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். சரத்துடன் பெரிய குடையும் கொண்டுபோன இவர் பதப்பப்படாமல் சைனைட்டை மறைத்து விட்டார் .தான் ஒரு முஸ்லீம் என நம்பவைத்து மாடு வாங்கவே இவ்விடத்துக்கு வந்ததாகப் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்து விடுதலையாகி வந்தார். இவர் கைதானதும் ஆரையம்பதி ஆலையடி வைரவர் முன்னிலையில் நீதான் அந்தப் புள்ளையை கொண்டுவரவேண்டும் என உரிமையுடன் சில தாய்மார் வைரவரிடம் உரத்துச் சத்தமிட்டனர்.

கடவுளுக்குத் தெரியாத இடமே இல்லை. அவர் கைதாகி விட்டதால் யாருக்கு என்னென்ன பிரச்சினை வரப்போகிறதோ என சிலர் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கையில் சைக்கிளில் அவர் வந்து கொண்டிருந்தார். ஒடோடென்று ஓடிப்போய் அவரது சைக்கிளை வாங்கிக்கொண்டு அவரைத் தரதரவென இழுக்காதே குறையாக அந்தக் கோயிலுக்கு கொண்டு வந்தனர் மக்கள். அவல் குழைத்து மணியடித்து பூசை செய்தனர்.நெற்றி நிறைய விபூதி பூசினர். பிறப்பால் கிறிஸ்தவரான அவர் ஆரையம்பதி மக்களின் அன்பில் நெகிழ்ந்து நின்றர்.

அம்பாளாந்துறைப் பகுதியில் ஒரு நாள் பசீரை சைக்கிளில் வைத்து மிதித்துச் சென்றார் இவர் . கடவுளை மிதிக்க வைத்து ஒருவர் சுகமாக இருந்து போவதாக ஒருவருக்குப் பட்டது. சைக்கிளை மறித்த அவர் பசீரைப் பார்த்து ” இறங்கு! எங்கட ஐயாவை உழக்க வைத்து நீ சொகுசாப் போகிறியோ? உன்னால அவரை வைச்சி உழக்க முடியாதா ” எனத் திட்டினார்.பசிருக்கு சந்தோசமாக இருந்தது. கடவுள் அந்த மக்கள் மனதில் எப்படியான இடத்தைப் பிடித்துள்ளார் என்பதைப் பின்னர் கடவுளுக்கு அவர் சுட்டிக் காட்டினார்.

நகைச்சுவைகையாகப் பேசுவதில் வல்லவர் அவர்.கிரானில் வைத்து இவரிடம் புலிகளுக்குச் செல்வாக்கு இல்லை என்றும் சில கிராமங்களைச் சுட்டிக்காட்டி இவையெல்லாம் தமது கோட்டையெனவும் இறுமாப்புடன் கூறினர் ஈ.பி.ஆர்.எல்.எப் வினர். அவர்கள் சொல்லி முடித்ததும் ” தோழர் ஒண்டை மறந்திட்டீங்கள். பூசாவும் உங்கட கோட்டைதானே” என்று கேட்டார் கடவுள் சைனட்டை நிராகரித்து ஒருவர் பிடிபட சங்கிலித் தொடராக மற்றவர்களையும் கைதாக வைக்கும் அவர்களின் போக்கை கடவுள் இவ்வாறு கிண்டலடித்தார்.

திரு .அன்ரன் பாலசிங்கத்தின் அன்பைப்பெற்ற போராளிகளில் இவரும் ஒருவர். மட்டக்களப்பில் முதன்முதலாக குண்டுவீச்ச்சு விமானங்களின் துணையுடன் வெல்லாவெளி இருந்து மணல்பிட்டி சந்தியைநோக்கி ஒரு நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர் விசேட அதிரடிப் படையினர். இந் நடவடிக்கையை தமது உக்கிர எதிர்த்த தாக்குதல் மூலம் முறியடித்தனர் புலிகள்.இந்தச் சமரில் கடவுள் தீரமுடன் செயல்பட்ட விதம் குறித்து நினைவு கூர்ந்தார் அத் தாக்குதலுக்குத் தலைமைதாங்கிய பொட்டம்மான். அத்துடன் கடவுளின் விலகல் துரதிஷ்ட வசமானது எனவும் குறிப்பிட்டார்.

தலைமைக்கு தனது விசுவாசத்தை நிரூபிக்க சகபோராளிகளைக் கொலைசெய்தவர் அதே தலைமையால் காணாமல் போக செய்யப்பட்டார்!! .
கொலை செய்தவர்களே அஞ்சலி நிகழ்வையும் செய்கிறார்கள் என்று கிண்டலடித்த தமிழ்த்தலைவர்!!!

கடந்த வருடம் சிறி சபாரத்தினத்தின் நினைவு நாளை யொட்டி யாழ் சட்டநாதர் கோயிலடியில் கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வேளை அருணன் என்பவர் இணையத்தளத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதன்தலைப்பு ” அப்பாத்தோழரை ஏன் மறந்தனர் ? ”

06.05.1986 இருபாலையில் உள்ள ஒரு மயானத்தில் ஸ்ரீ சபாரத்தினத்தின் சடலம் கட்டைகள் மீது அடுக்கப் பட்டிருந்தது. அங்கே வந்த ஒருவர் ” இதே இடத்திலதான் தாசின்ர சடலமும் கட்டை அடுக்கப்பட்டுக் கொளுத்தப்பட்டது.” என்று கூறினார் .

குறுகிய காலத்திற்கு முன்னால்தான் தாஸும் அவரது நண்பர்களும் யாழ் போதனா வைத்திய சாலை வளாகத்திற்குள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். வடமராட்சியைச் சேர்ந்த தாஸின் உறவினர்களும் நண்பர்களும் இறந்தவர்களின் சடலங்களைத் தம்மிடம் கையளிக்க வேண்டுமெனத் தீவிரமான போராட்டங்களை நடத்தினர் . யாழ் பல்கலைக்கழகமே இப் போராட்டங்களின் மையமாக விளங்கியது . அங்கு கலந்து கொண்ட பலரும் சடலங்களைப் கோர ஒரு குழுவை உருவாக்கினர். இவ்விடயங்கள் அனைவருக்கும் தெரிந்தவைதான்.

” இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கின டக்ளஸ் சிறியரிட்ட மக்களின்ர போராட்டங்களுக்கு மதிப்பளிச்சு அந்த சடலங்களைத் தாங்கோ எனக் கேட்டார். கையத் திருப்பி மணிக்கூட்டப் பார்த்த சிறியர் இந்த நேரம் எல்லாம் சாம்பலாப் போயிருக்கும் எண்டார். இன்னும் கொஞ்ச நாளில தானும் இதே இடத்தில எரிவனெண்டு கொஞ்சமும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார்.” என அவர் மேலும் சொன்னார். கொள்ளி வைக்க போனவரோ தமிழகத்தில் நிகழ்ந்த முன்னாள் டெலோ உறுப்பினர் ரமேசின் (சாரதி) மரணத்தையும் நினைவு கூர்ந்தார். ஒன்று மட்டும் உண்மை தாஸ் சிறியரோடு இருந்திருந்தால் அவரின் உயிர் போன பின்பே சிறியரின் உயிர் போயிருக்கும்.

மாவை, கஜேந்திரகுமார் என தமிழ் அரசியலில் எதிரும் புதிருமாக இருப்போரை அழைத்தவர்கள் டக்ளஸை அழைத்தால் ஒரு வேளை அவர் இச் சம்பவங்களை நினைவு கூரக் கூடும் என நினைத்துத் தான் அதைத் தவிர்த்திருக்கிறார்கள் போல இருக்கிறது.இதுதான் காரணம் என்றால் மிகப் பெரும் தவறு. ஏனெனில் தாஸுக்கு டெலோ இயக்கம் பத்திரிகைகளில் அஞ்சலி செலுத்துகிறது .

அது மனப் பூர்வமாகச் செய்யப் படுகிறதென்றால் நினைவு கூரும் போது ஸ்ரீ சபாரத்தினத்தின் படத்துடன் தாஸின் படத்தையும் வைக்க வேண்டும். அது போல் டக்ளஸ்சையும் உரையாற்ற அழைக்க வேண்டும். ஏனெனில் அக் காலகட்டத்தில் ஈ . பி .ஆர். எல் . எவ் யின் இயக்கத்தின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் ( P.L.A.) தளபதி அவர் . ஈ . பி .ஆர். எல் . எவ் வின் வழி முறைகளுக்கும் , ஸ்ரீ சபாரத்தினத்தின் நிலைப்பாட்டுக்கும் பாரிய ஒற்றுமை இருந்தது.

ஒத்த கருத்துக்கள சிறி – நாபா.
பாரிசிக்கு விஜயம் செய்த போது டெலோ வின் சார்பான சஞ்சிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீ சபாரத்தினம் ” தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே இந்தியா எடுக்கும் முடிவைப் பொறுத்தே எமது போராட்டம் அமையும். நாம் சிறந்த போர் வீரர்களாக இருப்போம்“ என்றார்.சாவகச்சேரி போலீஸ் நிலைய தகர்ப்பு பற்றிய டெலோவின் காணொளி க்காட்சிகளின் போது இக் கூற்றை ஒரு பெண் குரல் நினைவு படுத்தியது.

இந்தியாவின் முயற்சியினால்.ஸ்ரீ லங்காப் படைகளுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக `பேச்சுவார்த்தையும், போர் நிறுத்தமும்`என்ற தலைப்பில் பத்மநாபா ஒரு சிறு வெளியீட்டை வெளியிட்டிருந்தார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் , அதன் செயலாளர் நாயகமும் ,புரட்சிகர இராணுவக் கமிசன் தலைவருமான தோழர் . க . பத்மநாபா எனக் குறிப்பிட்டு இராணுவச் சீருடையுடன் முதன் முதலாகக் அவர் காட்சி அளித்தார். அந்நூலின் 18ம் பக்கத்தில் ” இந்தியா தமது நலனிலிருந்தே எமது போராட்டத்தைப் பார்ப்பதாக சிலர் எல்லாம் தெரிந்தது மாதிரி குறிப்பிடுகின்றனர். அப்படித்தான் இந்தியா தனது நலனிலிருந்து எமது போராட்டத்தைப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோமே. அதில் என்ன தவறு?“எனக் கேட்டிருந்தார். அப்போது ஒத்த கருத்துடையவர்கள் என்ற வகையில் டக்ளசைக் கூப்பிட்டிருக்கலாம்.

அரசியல் தீர்வு பற்றி சிங்கள மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை உண்டாக்க இரு சிங்களத் தலைவர்களினதும் வருகை பயன்படுமானால் அதுவே இந் நிகழ்வின் பயன் .

அருணனது கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு நம்பிக்கைத் துரோகமான வகையில் சுட்டுக்கொல்லப்பட்ட தாசுக்கு அஞ்சலி செலுத்தியது முக்கியமானது. தாசுக்கு முன்னரும் பின்னரும் தமிழர் அரசியலில் இவ்வாறான விடயங்கள் தொடர்ந்து நடந்தேயுள்ளன.
சுட்டவர்களே அஞ்சலி செலுத்தினர்!

அளவெட்டியில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த சந்ததியார் தலைமையிலான குழு இறைகுமாரன், உமைகுமாரன் என்ற இரு இளைஞர்களைச் சுட்டுக்கொன்றது. இந்த இருவரும் தமிழ் இளைஞர் பேரவையில் முக்கியமானவர்களாக இருந்தவர்கள்.புலிகளை ஆதரித்தவர்கள் இப்படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. ” அசோக் ” என புளொட்டில் பிரபலமாக அறியப்பட்டவரும்.

இப்போது இணையத் தளங்களில் தத்துவங்களை வெளியிடுபவருமான யோகன் கண்ணமுத்து இந் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். இரா.வாசுதேவா பிரதம பேச்சாளர்.அவரது உரையின் சாராம்சம் இப்படுகொலைகளுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியே காரணம் என்றமைந்தது. பத்திரிகைகளில் இச் செய்தியைப் பார்த்த எதிர்க்கட்சி தலைவர் அ. அமிர்தலிங்கம் சொன்னார் “சுட்டவர்களே அஞ்சலி செலுத்துகிறார்கள்”

வரலாற்றுச் சோகம் என்னவென்றால் எந்த உமாமகேஸ்வரனுக்காக இறைகுமாரன் உமைகுமாரனை சுட்டுக் கொண்டாரோ அவராலேயே பின்னர் சந்ததியாரும் காணாமல் போனார்.இறுதியில் தான் ஆரம்பித்த இயக்கத்தவராலே கொல்லப்பட்டார் உமா மகேஸ்வரன்.

ஈபி.டி.பி யும் இவ்வாறான வரலாற்றைக் கொண்டதுதான். அதன் வரலாற்றில் இறுதியாக நடைபெற்ற சம்பவம் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரெக்சனின் படுகொலை. அஞ்சலி ஸ்ரீதர் தியேட்டரில் நடைபெற்றது. சுட்டது ஈ.பி. டி. பி சொந்தமான ஆயுதமே .

கருணாவும் இந்தப் பட்டியலில் வருகிறார். அவரது கோளாறுகளைத் தெரிந்த ஒரு போராளி கொக்கோ கோலாவுக்குள் சயனைட் கலக்கப்பட்டுக் கொடுத்துக் கொல்லப்பட்டார். அவருக்கு மேஜர் நிலையும் வழங்கினார் கருணா. அந்தப் போராளியின் பெயர் பவளரசன் / ரஞ்சன் (கந்தவனம் சிவநேசன் – கடுக்கா முனை அம்பிளாந்துறை).

டெலோ சம்பந்தமான நடவடிக்கை தொடர்பான விடயங்கள் புலிகளின் கருத்தரங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகின. ஒவ்வொரு நாளும் எங்கெங்கே கருத்தரங்குகள் நடைபெறுகின்றன என்றறிந்து உதிரிகள் போல் வெவ்வேறாக நின்று கேள்விகள் கேட்டனர் டெலோ ஆதரவாளர்கள். இவர்கள் பெரும்பாலும் ஒரே கேள்வியையே கேட்டார்கள். கேள்வி கேட்பவர்களும் பதில் சொல்பவர்களும் பெரும் பாலும் ஒருவருக்குகொருவர் பழக்கப்பட்ட முகங்களாகவே இருந்தார்கள்.

பதில் சொல்பவர்கள் நீங்கள் இந்த இந்த இடங்களில் இதே கேள்வியைத்தான் கேட்டீர்கள். பரவாயில்லை இந்தக்கருத்தரங்கு மட்டும் வந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகப் பதில் சொல்கிறோம் எனக் கூறினார்கள் இந்தச் சமர் தம் மீது திணிக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர்கள் சில இடங்களில் கடுமையாக நடந்து கொண்டது உண்மைதான் என்றும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினர்.

கிட்டு கூட வேறொரு சம்பவத்துக்காக நல்லூரில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான கூட்டத்தில் தவறை ஒப்புக்கொண்டார். தமிழகத்தில் பிரபாகரன் உண்ணாவிரதமிருந்த போது அதற்கு ஆதரவாக நடைபெற்ற ஊர் வலத்தில் இறுதியில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவ்வாறு கூறினார். தவறை ஒப்புக்கொள்ள தைரியம் வேண்டும். அதனை நியாயப்படுத்தும் போதே முரண்பாடுகள் தோன்றுகின்றன .

பொபியின் பிரகடனம்.
சிறி சபாரத்தினத்தின் பிஸ்டலுடன் தப்பி ஓடிய பொபி இன்னொரு இயக்கத்தின் துணையுடன் இந்தியாவுக்குச் சென்றார். மீண்டும் இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய படையினரால் களமிறக்கப்பட்டார்.அது சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் எனக் குறிப்பிட்டாலும் புலிகளை அழிப்பதே தமது இலக்கு எனப் பொபி பிரகடனப்படுத்தினார்.

கொழும்புப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த இச் செய்தியைப் புலிகளின் ஈழமுரசு பத்திரிகையும் வெளியிட்டது. ( மூத்த பத்திரிகையாளர் கோபு ஐயா இதன் ஆசிரியர் ) இந்தியப் படையினருடனான மோதல் ஆரம்பித்த காலத்தில் அவர்களுடன் இணைந்து. டெலோ செயற் பட்டது . புலிகளின் ஆதரவாளர்களாக இனங்காணப்பட்ட சிலரைக் கைது செய்ய உதவியது. ராணி வீதியைச் சேர்ந்த அருந்தா என்ற யுவதி இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

எனினும் சிறி சபாரத்தினம் இருந்த காலத்தில் டெலோவுக்கு இருந்த இடத்தை யாழ்ப்பாணத்தில் இந்தியா வழங்க வில்லை. அந்த இடத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் எடுத்துக்கொண்டது. கிளிநொச்சியை பொறுத்தவரை தாங்களே ஒட்டுமொத்தக் குத்தகைக்கு காரர் போல ஈ.என்.டி.எல்.எப் நடந்து கொண்டது.சில டெலோ உறுப்பினர்கள் இந்திய இராணுவத்தின் காங்கேசன் துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். உண்மையில் என்ன காரணத்துக்காக தாங்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்பதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

SHARE