நேற்றையதினம் (14.05.2017) வவுனியாவில் அமைந்துள்ள ரெலோவின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட அதன் செயலாளர் சிறிகாந்தா, புதியதொரு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான மசோதாவை அரசு கொண்டுவரவிருக்கின்றது. அதனை ரெலா இயக்கம் முற்றாக எதிர்க்கின்றது. அதற்கானதொரு பொறிமுறையினையும் நாம் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
நீங்கள் யாரைப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகின்றீர்கள் என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்றபோது பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என அரசு அறிவித்தது. (இதில் நாசுக்காக விடுதலைப்புலிகள் தான் பயங்கரவாதிகள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இது ஒரு தவறான பதிலாகவிருந்தாலும் கூட ஏனைய ஆயுதக்கட்சிகள் அனைத்தும் இறுதிவரை போர்க்களத்தில் தமிழினத்திற்காகப் போராடவில்லை. குறிப்பிட்ட காலகட்டங்களில் அரசுடன் இணைந்து விடுதலைப்புலிகளது போராட்டங்களைக் காட்டிக்கொடுத்தார்கள் என்பதுதான் உண்மை. இதில் கொலை, கொள்ளை, கப்பம் போன்ற விடயங்களிலும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் ஈடுபட்டுவந்தமை வரலாறு. விடுதலைப்புலிகளை இவர்கள் பயங்கரவாதிகள் எனச் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.)
ஆயுதம் தாங்கியக் குழுக்கள் மீதும் பயங்கரவாதம் திணிக்கப்படுகின்றது எனக்குறிப்பிட்ட அவர் தற்போது அவர்களுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், பாராளுமன்றத்தில் ஆசனத்தைக் கைப்பற்றுவதற்காகவும், அரசியலில் திருப்புமுனைகளை ஏற்படுத்துவதற்காகவும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் தற்போது ஜனநாயக வழியில் இல்லை என்பதை தற்போது பல மேடைகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா சுட்டிக்காட்டத் தவறவில்லை.
விடுதலைப்புலிகளின் போராட்டம் சர்வதேச மட்டத்தில் இன்று பரிணமித்துக்கொண்டிருக்கின்றது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை ஆரம்பித்து அவர்களை ஜனநாயக வழிக்குக்கொண்டுவந்தவர்கள் விடுதலைப்புலிகளே. அதில் மாற்றுக்கருத்தில்லை. அடுத்த தலைமுறைக்கு இவர்கள் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் எமது சக உறுப்பினர்களை தடைசெய்து கொலைசெய்தார்கள் எனக்கூறுவது தவிர்க்கப்படவேண்டும். காரணம் இனிவரும் தலைமுறை விடுதலைப்புலிகளின் போராட்டம் ஒரு பயங்கரவாதப்போராட்டம் என்றே சித்தரிக்க இவர்களால் வழிவகைகள் ஏற்படுத்தப்படப் போகின்றது. ஒரு காலகட்டத்தில் அரச ஏஜென்ட்களாக இந்த ஆயுதக்கட்சிகளே செயற்பட்டன.
தமிழரசுக்கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது என்பது வெளிச்சம்போட்டுக் காட்டவேண்டிய உண்மை. அந்த வகையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப் பதிவுசெய்வதற்கு இந்த மூன்று ஆயுதக்கட்சிகளும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும்போது ரெலோவும், புளொட்டும் சம்பந்தனின் இடது மற்றும் வலது கையாக செயற்பட்டு,
கூட்டமைப்பு பதிவு செய்யும் விடயத்தைத் தடுக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தெரிவுசெய்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்த ஒற்றுமையினை சீர்குலைக்க பலர் முயற்சிக்கின்றனர். சுரேஸ் அவர்கள் எப்போது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனியாக தேர்தலில் போட்டியிடுவார் எனப் பலர் எதிர்பார்க்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. இதனை நீங்கள் நம்பலாம். அவ்வாறு பிரிந்துசென்று செயற்பட்டால் அதனை மக்கள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
கடந்த கால தேர்தலின் போது நாம் மக்களுக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளோம். பிரிந்துசென்று மீண்டும் எந்த முகத்துடன் வாக்குச்சேகரிப்பது. எமது கட்சிக்குள் பிரச்சினைகள் இருப்பது உ;ணமை. அதனை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக பிரிந்து செல்லும் அளவிற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. கட்சிக்குள் பிரச்சினைகளைச் சீர்செய்துகொண்டு எமது அரசியல் பயணத்தை முன்தொடர்வோம்.
இவர் இவ்வாறு கருத்துத்தெரிவிக்க, பகிரங்கமாகவே ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சுரேஸ் அவர்கள் கூட்டமைப்பைப் பதிவுசெய்யும் விடயத்தில் இவ்விரு கட்சிகளும் துரோகம் விளைவிக்கின்றன என்ற விடயத்தைக் குறிப்பிட்டார். இதில் தற்போது அரச ஏஜென்டாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியே செயற்படுகின்றது என்பது சிறிகாந்தாவின் மற்றொரு நாசுக்கான பேச்சு. எது எவ்வாறிருப்பினும் ரெலோ கட்சியானது ஒரு முடிவுடன்தான் இருக்கின்றது. எந்த காலகட்டத்திலும் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அரவணைப்பில் இருந்து விலகப்போவதில்லை என்றும் அதற்கு பங்கம் விளைவிக்கின்ற வகையில் எந்தக் கட்சி செயற்பட்டாலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்றும் மக்களின் நலன் கருதி நாம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்தே செயற்படுவோம் என ரெலோவின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா அவர்கள் உறுதியாகத் தெரிவித்தார்.
‘ஆடுற மாட்டை ஆடியும், பாடுற மாட்டை பாடியும் தான் பால் கறக்கவேண்டும்’ என்பதற்கேற்பவே தற்போது பலரும் செயற்படுகின்றார்கள். நாமும் செயற்படுகின்றோம். என்பதற்கமையவே இவர்களின் செயற்பாடுகளும் அமையப்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
– சுழியோடி