முதலமைச்சரின் தீர்ப்பு சரியானது, இதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஆயுதக்கட்சிகள் ஆபத்தானவர்கள்

288

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து பாரிய சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோருக்கு முதல்வரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பிரகாரம் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்கிற அடிப்படையில் அவர்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் முதல்வருக்கு அப்பால் ஒரு நீதியரசர் என்ற வகையில் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இரண்டு நீதிபதிகளும், ஒரு அரச உயரதிகாரியும் கொடுத்த விசாரணை அறிக்கையின் பிரகாரம் இனங்காணப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளும் நீக்கப்பட்டிருக்கின்றன.

சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்கள் இருவர் மீதும் குற்றங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாதவிடத்து அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இங்கு குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தீர்ப்பு வழங்கியதில் சர்ச்சைகள் உருவாகவில்லை. ஆனால் குற்றஞ்சுமத்தப்பட்டு ஆதாரங்கள் இல்லை என்று முதல்வரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவால் பரிந்துரைசெய்யப்பட்டபோதும் அவர்கள் இருவரையும் ஒருமாத கால விடுப்பில் செல்லுமாறும் இவர்களுடைய அமைச்சுக்களை அதுவரை தாம் பொறுப்பேற்றுக்கொள்வதாக முதலமைச்சர் கூறியிருந்தமையாலும் ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் கூக்குரலிட்டு சபையிலிருந்து எழுந்து சென்றார்கள். இவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது தவறு என்பதே தமிழரசுக்கட்சியினது நிலைப்பாடு ஆகும்.

இவ்விடயங்கள் அனைத்தும் வடமாகாணசபைக்குள் தீர்த்து வைக்ப்படவேண்டிய நிலையில் இன்று வடமாகாண சபை ஒரு ஊழல் நிறைந்த சபையாக காட்டப்பட்டு அரசியல் இலாபம் தேடி ஆயுதக்கட்சிகள் மற்றும் ஒருசில கட்சிகள் செயற்படுகின்றமையானது தமிழ் மக்களது விடுதலைக்கானப் பாதையில் ஒரு தடைக்கல்லாகவே அமைகிறது.

இதனது பின்னணியைப் பார்க்கின்றபோது அவரது தீர்ப்பில் தவறு என்று கூற முடியாது. இரண்டு நீதிபதிகளும், ஒரு அரச உயரதிகாரியும் விசாரணைக்குழுவிலிருந்து குற்றச்சாட்டுக்களை விசாரித்ததன் பிரகாரம் அவர்களினால் கொடுக்கப்பட்ட இறுதி அறிக்கையின் விடயத்தையே முதல்வர் தனது அறிக்கையாக சபையில் சமர்ப்பித்தார். இதற்காக முதல்வர் மீது தமிழரசுக்கட்சியும், வட மாகாண சபையில் உள்ளவர்கள் அதனோடு இணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொணர்ந்தது தவறான விடயம்.

இறுதித் தீர்ப்பு வழங்குவதற்கு 03 நாட்களுக்கு முன்பாகவே அவைத்தலைவர் சிவஞானம் அவர்கள் ஒரு விடயத்தை சபையில் தெரிவித்திருந்தார். அதாவது, அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பாக அமைச்சரவையை மாற்றவோ அல்லது அதற்கான தீர்ப்பினை வழங்கவோ முழு அதிகாரம் முதல்வரின் கையில் இருக்கிறது என்பதாகும். அதன் அடிப்படையில் முதல்வர் அவர்கள் இறுதித் தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

ஒருமாத காலத்திற்கு முன்பு தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய நேர்காணலில் வடமாகாணசபையின் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பாக அவரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது அவர் அதற்கு மிகத் தெளிவாக பதிலளித்திருந்தார்.

கேள்வி :- வட மாகாணசபையில் ஊழல் மோசடிகள் என குற்றஞ்சாட்டப்பட்டபோதும் ஏன் இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இயலாமல் போனது.

பதில் :- குற்றவியல் சம்பந்தமாக ஒருவர் மீது குற்றம் சுமத்தும்போது நேரடியாக அழைத்து விசாரித்தால் அவர்கள் எதையாவது சொல்லலாம். இது விசாரிக்கப்படவேண்டும். விசாரிப்பது என்பது என்னால் இயலாது. நான் ஒரு விசாரணைக் கமிசன் வைத்திருக்கவேண்டும். அதன் காரணத்தால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரையும் ஓய்வுபெற்ற சிவில் சமூக அதிகாரியையும் உள்ளடக்கி நாங்கள் ஒரு குழு அமைத்து அவர்களிடம் விசாரணையை ஒப்படைத்தோம். குறித்த விசாரணை தற்போது முடிவடைந்துவிட்டது. ஆணையாளர்களின் தீர்மானம் தரப்படவிருக்கிறது. ஒரு ஆணையாளர் வெளிநாடு சென்றிருப்பால் அறிக்கை தாமதமாகியிருக்கிறது.

கேள்வி :- அப்படியாயின் வடமாகாண சபை என்பது ஊழல்கள் நிறைந்த சபை என வெளிச்சம் போட்டுக்காட்ட முற்படுகிறீர்களா?

பதில் :- இல்லை. ஊழல் விசாரணை சம்பந்தமாக விசாரணை நடக்க இருக்கிறது என்பதற்காக நீங்களும் அவர்களை ஊழல் வாதிகள் என்று சொல்கிறீர்கள். யாரோ எல்லாம் ஊழல் செய்கின்றார்கள் எனக்கூறுகின்றபோதும் அவர்கள் விடுவிக்கப்படுகின்றார்களே. உரிய தீர்மானம் வரும்வரை காத்திருங்கள். வேண்டுமென்று அமைச்சர்கள் ஊழல் மோசடிகள் நிறைந்தவர்கள் என குற்றம் சொல்லமுடியாது. அதற்கு முன்னர் ஊழல் என்று சொன்னால் எப்படி. விசாரணையை நான் செய்யக்கூடாது. ஒரு பக்கசார்பற்ற குழுதான் அதனை செய்யமுடியும். அதனால் தான் அவர்களை வைத்துச்செய்கிறேன்.

கேள்வி :- அப்படியாயின் மோசடிகள் நடந்தது எனக்கூறுகின்றீர்களா?

பதில் :- இல்லையே, முதலில் அவர்கள் சொல்லட்டும். பின்னர் நான் சொல்கிறேன்.

இவ்வாறுதான் முதல்வர் அவர்கள் அமைச்சர்களைக் காப்பாற்ற முயற்சித்தாரே தவிர இதனை விசாரித்த குழுதான் அமைச்சர்களை குற்றவாளிகள் எனத் தீர்த்தது. விசாரித்த குழுக்களின் பின்னணியை ஆராயவேண்டிய தேவைக்குள் தற்போது தமிழரசுக்கட்சி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, வடமாகாணசபை என்பன தள்ளப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த விசாரணைக்குழுவானது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பிளவுபடுத்தவும், ஊழல்கள் நிறைந்தது தான் வடமாகாணசபை என நிரூபித்துக் காட்டவும் அரசின் ஏஜென்ட்களாக இவர்கள் செயற்பட்டார்களா? எனச் சந்தேகமும் தோன்றுகிறது.

 

வடமாகாண சபையின் கௌரவத்தையும், வடக்கின் அமைச்சர்களையும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்க தன்னாலான முயற்சிகளையே முதல்வர் அவர்கள் மேற்கொண்டார் என்பது இந்த நேர்காணலின் ஊடாக புலப்படுகிறது.

இதனது பின்னணிக் காரணங்களை தொடர்ந்தும் பார்க்கின்றபோது, வடமாகாணசபையில் முதல்வரைக் கொண்டுவருவதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இணைந்து இயங்கும் நான்கு கட்சிகளும் முடிவுகளை மேற்கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக சிங்கள பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்தவர் முதல்வர் என்ற சர்ச்சை இக்கட்சிகளுக்கிடையில் பூதாகரமாக வெடித்தது. இக்காலத்தில் சம்பந்தன், சுமந்திரனைத் தவிர ஏனைய ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழரசுக்கட்சியில் உள்ளவர்களுக்கு மாவை சேனாதிராஜாவை முதல்வராகக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்களே தவிர, நீதியரசர் விக்னேஸ்வரனை முதல்வராக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் எதிர்ப்பை வெளியிட்டவர்.

அரசின் நிகழ்ச்சி நிரலில் தான் முதல்வர் வேட்பாளர் கொண்டுவரப்படுகிறது என்றும் குறிப்பிட்டனர். ஆயுதக்கட்சிகளும் மிகவும் மோசமான பாணியில் முதல்வரை இழிவுபடுத்தினர். இன்று இழிவுபடுத்திய அதே ஆயுதக்கட்சிகளும், கட்சியின் உறுப்பினர்களும் முதல்வரை ஒரு தெய்வமாகப் பார்க்கின்றனர். அரசியலில் நிரந்த எதிரியுமில்லை நிரந்தமான நண்பனுமில்லை எனக்கூறுவதற்கு இது சாலப் பொருத்தமானது. ஆனால் முதல்வர் ஆக்கப்பட்டதன் பின்னர் பல மேடைகளில் தான் ஒரு ஜனநாயக வழியில் வந்தவர் என்றும் ஆயுதக்கட்சிகளோடு இணைந்து பணியாற்ற தான் தயாராகவில்லை எனக்கூறியபோது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இதனை கடுமையாக எதிர்த்தார். அதுபோன்றே ஏனைய ஆயுதக்கட்சிகளும் எதிர்த்தன.

இந்த ஆயுதக்கட்சிகள் மீது முதல்வருக்கு ஒரு வெறுப்புணர்வே ஏற்பட்டிருந்தது. அதற்கிடையில் எவ்வாறு முதல்வர் அவர்கள் ஒரு மாற்றத்தினைப் பெற்றார். வடபகுதியினது யுத்த அழிவுகள் பற்றி அறியாது கொழும்பில் செய்திகளை மாத்திரம் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு நடைமுறையில் அனுபவிக்காத அவர் தொடர்ந்தும் வடக்கில் மக்களோடு மக்களாக பணியாற்றுகின்றபோது நாம் ஏதோவொரு வகையில் மக்களை ஏமாற்றுகின்றோம் என உணர்ந்துகொண்டார்.

சம்பந்தன், சுமந்திரன் இருவரால் முதல்வர் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் உயர்நீதிமன்றின் நீதியரசர். யுத்தம் முடிந்த பின்னர் ஒரு நீதியரசர் வடக்கில் முதல்வராக இருந்தால் சர்வதேசத்தில் அங்கீகாரம் கிடைக்கும். ஆயுதக்கட்சி அல்லது போராட்டம் சார்ந்தவர்களை நிறுத்தினால் சர்வதேசம் எதிர்க்கும் என்ற ரீதியில் முதலமைச்சர் ஆகவிருந்த ஏகமனதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சி அங்கத்தவர்களால் முன்மொழியப்பட்ட மாவை அவர்கள் விலக்கப்பட்டு விக்னேஸ்வரன் அவர்கள் சம்பந்தன், சுமந்திரன் அவர்களின வற்புறுத்தலின் பேரில் கொண்டுவரப்பட்டார். இது அக்கால அரசின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று.

அக்காலத்தில் கட்சியின் தலைவர் சம்பந்தன் கூறிய விடயம் நாம் 30 வருட காலமாக ஒரு போராட்ட வடிவத்தினை சந்தித்துள்ளோம். தற்போது ஜனநாயகம் சார்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். ஆகவே நாம் இவரை முதல்வர் ஆக்குவது எமக்கு நன்மை பயக்கும். இதனோடு ஏனைய கட்சியின் தலைவர்களும், தமிழரசுக்கட்சியின உறுப்பினர்களும் அக்காலத்தில் சலாம் அடித்து முதல்வர் ஆக்கினார்கள்.

வடக்கில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சியையும் கடுமையாக எதிர்த்தவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள். இன்று அவர் முதல்வருடன் இணைந்துள்ளார். அவரோடு சுரேஸ் பிரேமச்சந்தின் அவர்களும் கைகோர்த்துள்ளார்.

கூட்டமைப்புக்குள் குழப்பம், வடக்கில் குழப்பம் என்பதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ள சுரேஸ் மற்றும் கஜன் அவர்களும் வடமாகாணசபையில் குழப்பத்தை ஏற்படுத்தி த.தே.கூட்டமைப்பை உடைத்து புதிய தலைமையை உருவாக்கி அதற்குத் தலைவராக முதல்ரை நியமித்து சிறிது காலம் அவரை பகடைக்காயாகப் பயன்படுத்திவிட்டு தாம் கூட்டமைப்பின் தலைமையை ஏற்று நடத்தும் நோக்கிலேயே கஜேந்திரகுமார் அவர்களின் தற்போதைய அரசியல் நகர்த்தப்படுகிறது.

அதுபோன்றே ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச்சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரனின் நகர்வும் அமைந்துள்ளது. இவ்விரு கட்சிகளும் ஒன்றிணையப்போவதில்லை. கடந்த காலங்களில் சுரேஸ் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றினார். அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டபோது அவருக்கு தேசியப்பட்டியல் வழங்கவில்லை என்பதனால் கூட்டமைப்பை எப்படியோ கலைத்து தமிழரசுக்கட்சியை பலவீனப்படுத்தி கூட்டமைப்பாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளைப் பதிவுசெய்யவேண்டும் என்று செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் தான், வடக்கின் ஊழல் மோசடி விவகாரம் இவர்களுக்கு ஒரு துரும்பாகக் கிடைத்தது. ஏற்கனவே தமிழரசுக்கட்சியைப் பிளவுபடுத்த எண்ணிய திட்டம் தவிடுபொடியாகிய நிலையில், ஊழல் மோசடி சம்பந்தமாக குழப்பத்தை உருவாக்கி, இதனூடாக மக்களையும் குழப்பி தமிழரசுக்கட்சி குற்றவாளிகள், ஊழல்வாதிகளைக் காப்பாற்றுகிறார்கள் எனக்கூறுவது பொருத்தமற்றது. கஜேந்திரகுமார் அவர்களை விட்டாலும், சுரேஸ் அவர்கள் செய்த படுகொலைகள் ஏராளம். இவ்விடயம் முதல்வருக்கும் நன்கு தெரியும்.

தொடரும்…

– நெற்றிப்பொறியன் –

SHARE