சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் – சரத் பொன்சேகா

685

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிடகோட்டே பிரதேசத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து பாதுகாப்புப் படையினரையும் பாதுகாக்கத் தயார் எனவும்இ ஜனாதிபதியின் குடும்பத்தை பாதுகாக்கத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்தளை விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய ஹம்பாந்தோட்டை மேயர் உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளைப் பயன்படுத்தி அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் வெற்றியீட்டியதாகத் தெரிவித்துள்ளார். எனினும் அடுத்து வரும் அமர்வுகளில் மேலும் நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE