ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?

519

 

Mahinda-Rajapaksa-002இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை.

1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972 குடியரசு அரசியலமைப்புக்குத் திருத்தமொன்றைக் கொண்டுவந்து ஜனாதிபதிப் பதவியை நிறைவேற்று அதிகாரம் கொண்டதாக மாற்றியமைத்துவிட்டு 1978 பெப்ரவரி 4 சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அந்தவருடம் செப்டெம்பரில் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. முழுமையாக அடுத்த 6 வருடங்களுக்கு அவர் பதவியில் இருந்திருக்க முடியும். ஆனால், அதற்கு முன்கூட்டியே தனக்கு அரசியல் ரீதியில் வசதியாக அமையக்கூடிய தருணத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவிரும்பிய ஜெயவர்தன, ஜனாதிபதியொருவர் தனது பதவிக்காலத்தில் முதல் நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கு வகைசெய்யக் கூடியதாக அரசியலமைப்புக்குத் திருத்தமொன்றைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றச் செய்தார். அந்தத் திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் 1982 அக்டோபரில் இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது. குடியுரிமை இழந்திருந்த தனது பிரதான அரசியல் எதிரி திருமதி பண்டாரநாயக்க தேர்தல்களில் போட்டியிட முடியாதவராக இருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி வெற்றிபெற்றுவிட வேண்டுமென்ற ஜெயவர்தனவின் முனைப்பே இதற்குக் காரணமாகும்.

பிறகு அவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் 1988 பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். அத்தேர்தலில் திருமதி பண்டாரநாயக்கவை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாச வெற்றிபெற்றார். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) இன் இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சி உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. ஜனாதிபதி பிரேமதாசவும் தனது முதலாவது பதவிக்காலம் முழுமையாக முடிவடைவதற்கு முன்னதாக தேர்தலை நடத்த உத்தேசித்திருக்கக்கூடும். ஆனால், நான்கு வருடங்களுக்கும் கூடுதலான காலம் ஆட்சியதிகாரத்தில் இருந்த நிலையில், 1993 மே தினத்தன்று தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பிரேமதாச கொல்லப்பட்டார். பிரதமராக இருந்த டிங்கிரி பண்டா விஜேதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற போதிலும், அரசியல் ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டிராத அவர் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை 1994 நவம்பரில் நடத்தினார். அதற்கு மூன்று மாதங்கள் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் பதவிக்கு வந்த திருமதி சந்திரிகா குமாரதுங்க அந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரு வெற்றிபெற்றார். அதையடுத்து 17 வருடகால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்தது.

திருமதி குமாரதுங்கவும் தனது முதலாவது பதவிக்காலம் முழுமையாகப் பூர்த்தியடைவதற்கு முன்னதாக 1999 டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டார். அவர் களத்தில் இறங்கிய முதலாவது ஜனாதிபதித் தேர்தல் அதுவாகும். முன்னைய தேர்தலில் பெற்றதைப் போன்று அமோக வெற்றியை திருமதி குமாரதுங்கவினால் இத்தேர்தலில் பெறக்கூடியதாக இருக்கவில்லை. இறுதித்தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கொழும்பு நகரமண்டபம் மைதானத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஜனாதிபதி காயமடையாமல் இருந்திருந்தால் அத்தேர்தலின் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கக்கூடுமென்று அபிப்பிராயப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

இரண்டாவது பதவிக்காலத்துக்கு திருமதி குமாரதுங்க பதவிப்பிரமாணம் செய்த திகதியை அடிப்படையாகக் கொண்டு 2006ஆம் ஆண்டுவரை அதிகாரத்தில் இருந்திருக்க முடியுமென்று அவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை 2005 பிற்பகுதியில் நடத்துவதைத் தவிர அவருக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை. மேலும், ஒருவருட காலத்துக்கு ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியவில்லையே என்ற கவலையுடன்தான் அவர் கதிரையில் இருந்து இறங்கினார். அரைகுறை மனத்துடனேயே திருமதி குமாரதுங்க பெருவாரியான நெருக்குதல்களுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்‌ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தார். அத்தேர்தல் 2005 நவம்பர் 17ஆம் திகதி நடைபெற்றது. இரண்டாவது தடவையாகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து நின்ற ராஜபக்‌ஷ தனக்கேயுரித்தான பாணியில் வியூகங்களை வகுத்து சொற்ப பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதவிக்கு வரக்கூடியதாக இருந்தது.

முன்னைய ஜனாதிபதிகளைப் போன்றே ராஜபக்‌ஷவும் கூட, தனது முதலாவது பதவிக்காலம் முழுமையாகப் பூர்த்தியடைவதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட சூழ்நிலைகளின் கீழ் தனக்கும் தனது அரசுக்கும் தென்னிலங்கையில் அதிகரித்திருந்த செல்வாக்கை உச்சபட்சத்துக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய அவர், 2010 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். போர் வெற்றிக் குதூகலத்தின் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் தூண்டிவிடப்பட்ட உணர்வுகளின் பின்புலத்தில் ராஜபக்‌ஷவை எதிர்த்து நிற்பதற்கு போரில் சம்பந்தப்பட்ட ஒருவரையே களத்தில் இறக்க வேண்டுமென்று நினைத்த எதிரணிக் கட்சிகள் தங்களது பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தின. ஆனால், ராஜபக்‌ஷ பெரிய வெற்றியைப் பெற்று இரண்டாவது பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியானார்.

2010 ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்துக்கு நெருக்கமான வெற்றியைப் பெறக்கூடியதாக இருந்தது. கட்சித் தாவல்களைத் தூண்டியதன் மூலமாக ராஜபக்‌ஷவின் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்தைத் திரட்டிக் கொள்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடத்தப்பட்டிருக்கக்கூடிய பொதுத் தேர்தல்களில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றிய எந்தவொரு கட்சிக்குமோ, எந்தவொரு கூட்டணிக்குமோ கிடைத்திராத வாய்ப்பு, அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ராஜபக்‌ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்தது. இந்தப் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி அவர் முதலில் செய்த காரியம் ஜனாதிபதியின் பதவிக் காலங்களுக்கு இருந்த மட்டுப்பாடுகளை இல்லாமற் செய்வதற்கு அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்ததேயாகும்.

2010 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போதோ அல்லது நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின் போதோ இத்தகைய திருத்தமொன்றைக் கொண்டு வருவதற்கு தனக்கும் தனது கட்சிக்கும் ஆணை தருமாறு அவர் நாட்டு மக்களைக் கேட்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, 2005 ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பியுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் தனது முதலாவது பதவிக் காலத்தின் இறுதியில் ஜனாதிபதி ஆட்சிமுறையை, அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை இல்லாமற் செய்வதாக உறுதியளித்தவர் இந்த மகிந்த ராஜபக்‌ஷ என்பது குறிப்பிடத்தக்கது. முன்னைய ஜனாதிபதிகளின் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்திருந்தால் அவர்களும் பதவிக் காலங்களுக்கு இருக்கின்ற வரையறைகளை மேலும் நீடிப்பதற்கு அல்லது முற்றாகவே இல்லாமற் செய்வதற்கு வகைசெய்யக்கூடியதாக அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்து யோசித்திருக்கமாட்டார்கள் என்று கூறுவதற்கில்லை.

நாடாளுமன்றத்தில் தனது ஐ.தே.கவுக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி ஜெயவர்தன 1982 டிசம்பரில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி அந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடித்திருந்தார். அந்த நாடாளுமன்றத்தின் முதலாவது பதவி காலத்தின் முடிவில் அதைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்தியிருந்தால் அதே பெரும்பான்மைப் பலத்துடன் ஐ.தே.கவினால் அதுவும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் வெற்றிபெறக்கூடியதாக இருக்காது என்பது ஜெயவர்தனவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. தனது தலைமையிலான அரசின் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பை எதிர்காலத்தில் பதவிக்கு வரக்கூடிய எந்தவொரு அரசும் மாற்றிவிடக்கூடிய வாய்ப்பு ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதிலும் கூட ஜெயவர்தன குறியாக இருந்தார். தனது 72 வயதில் தான் அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இதையும் விட குறைவான வயதில் அவர் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருந்தால், சிலவேளை, அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவிக் காலங்களை இரண்டாக மட்டுப்படுத்தும் ஏற்பாட்டை அரசியலமைப்பில் புகுத்தாமல் இருந்திருக்கக்கூடும். குறைந்தது மூன்று பதவிக் காலங்கள் என்று வகுத்திருக்கக்கூடும்.

1988 பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக அன்று பிரதமராக இருந்த பிரேமதாசவை ஐ.தே.க. தெரிவு செய்தபோது அப்போதைய நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரகடனத்தை ஜெயவர்தன செய்தார். பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் ஐ.தே.கவுக்கு ஆறில் ஐந்து பங்கு பெரும்பான்மைப் பலம் இருந்த அந்தப் நாடாளுமன்றத்தை ஒரு குறுகிய காலத்துக்கேனும் பயன்படுத்தி அவர் அரசியலமைப்பில் தனக்கு வசதியான மாற்றமெதையும் செய்வதற்கு வாய்ப்பைக் கொடுத்துவிடக்கூடாது என்பது ஜெயவர்தனவின் உள்நோக்கமாக இருந்திருக்கக்கூடும் என்று அந்த நேரத்தில் அரசியல் அவதானிகள் பலர் அபிப்பிராயம் தெரிவித்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

ராஜபக்‌ஷ அரசு கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதியொருவர் இரு பதவிக் காலங்களுக்கு மாத்திரமே அதிகாரத்தில் இருக்கமுடியும் என்ற மட்டுப்பாடு நீக்கப்பட்டு, ஜனாதிபதியாக வரக்கூடிய ஒருவர் எத்தனை தடவைகளும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற ஏற்பாடு புகுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் விரும்பும் பட்சத்தில் ஒருவர் எத்தனை பதவிக் காலங்களுக்கும் ஆட்சியில் இருப்பதில் என்ன தவறு என்று அந்த நேரத்தில் அரசத் தலைவர்கள் கேள்வியெழுப்பினார்கள். இக்கேள்வியை மேலோட்டமாக நோக்கும்போது ஜனநாயகத் தன்மை கொண்டதாகத் தோன்றும். ஆனால், அதில் பொதிந்திருக்கும் ஜனநாயக விரோத அரசியல் நோக்கங்களை உலக அரசியலில் பெருவாரியான உதாரணங்கள் அம்பலப்படுத்தி நிற்கின்றன. இலங்கையின் ஆட்சிமுறையில் அண்மைய தசாப்தத்தில் அதிகரித்துவரக் காணப்படும் எதேச்சாதிகாரத்தனமும் குடியியல் சுதந்திரங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தும் மட்டுப்பாடற்ற ஜனாதிபதி பதவிக் காலங்களினால் எம்மைச் சூழக்கூடிய இருளுக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் இரண்டாவது பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் இரு வருடங்கள் இருக்கின்றன. அதேபோன்றே தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடையவும் இருவருடங்கள் உண்டு. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமும் இருக்கிறது. எனவே, எதற்காக உரிய காலத்துக்கு முன் கூட்டியே தேர்தல்களை நடத்துவதில் அவசரம் காட்டப்படுகிறது? ஜனாதிபதி ராஜபக்‌ஷவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசும் தொடர்ந்தும் மக்களின் பேராதரவுடன் இருப்பதாகக் கூறிக்கொள்ளவும் அதன் தலைவர்கள் தவறுவதில்லை.

அவ்வாறு அவர்கள் கூறி தங்களுக்குள் திருப்திப்பட்டுக் கொள்கின்ற போதிலும் கூட, அரசின் செல்வாக்கு மக்கள் மத்தியில் படிப்படியாக வீழ்ச்சி கண்டுகொண்டு வருகின்றது என்பதே உண்மை. போர் வெற்றியைக் காட்டி, ஒரு இராணுவ அரசியலை முன்னெடுத்து, சிங்கள மக்களை நாடு எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புகின்ற கைங்கரியத்தை இனிமேலும் நீண்ட நாட்களுக்குத் தொடர்வது சாத்தியமில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள். அண்மைய மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் வெற்றிபெறக் கூடியதாக இருந்த போதிலும், அதன் வாக்கு வீதங்களில் கடுமையான வீழ்ச்சியைக் காணக்கூடியதாக இருந்தது. அந்த வீழ்ச்சி கடந்த மார்ச்சில் நடைபெற்ற மேல் மாகாண சபை, தென் மாகாண சபை தேர்தல்களிலேயே தொடங்கிவிட்டது. கடந்த மாதம் ஊவா மாகாண சபைக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னரைப் போன்றே பெறுவெற்றியொன்றைப் பெற்றுக்காட்டி, எதிரணி அரசியல் சக்திகளைத் தொடர்ந்தும் உற்சாகமிழந்த நிலையில் வைத்திருக்க வேண்டுமென்பதே அரசின் நோக்கமாக இருந்தது. ஆனால், முடிவுகள் மறுதலையாகவே அமைந்தன. எதிரணிக் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்து மக்கள் நம்பிக்கையுணர்வை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறதோ இல்லையோ, அது வேறு விடயம். ஆனால், அரசின் மீதான அவர்களின் அதிருப்தி கணிசமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இது விடயத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார நெருக்கடி பிரதான காரணியாக அமைகிறது என்பது வெளிப்படையானது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷ தனது இரண்டாவது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக மூன்றாவது பதவிக் காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவது குறித்து திட்டத்தை ஏற்கனவே கொண்டிருந்திருக்கக்கூடும். ஆனால், இவ்வளவு விரைவாக அதுவும் மூன்று மாதகால இடைவெளிக்குள் 2015 ஜனவரி முதற்பகுதியில் அத்தேர்தலை நடத்த வேண்டுமென்ற முடிவுக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டதற்கு அரசின் இறங்குமுகமான மக்கள் செல்வாக்கேயாகும் என்பதிற் சந்தேகமில்லை. மேலும், காலந்தாமதித்தால் பெருந்தோல்வியைத் தழுவ வேண்டிவரும் என்று ஆட்சியாளர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள் என்பதன் பிரகாசமான வெளிப்பாடே ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் பற்றிய பேச்சுகளாகும். ஆளும் கட்சி தேர்தல் பிரசார அலுவலகத்தையும் கூட கொழும்பில் அண்மையில் திறந்திருக்கிறது. தேர்தல் பற்றிய அவசரம் ஆட்சியாளர்களுக்கே தவிர, மக்களுக்கு அதுபற்றி எந்த அக்கறையுமில்லை.

தேர்தல்களை நடத்துமாறு இலங்கையில் மக்கள் போராட்டங்களை நடத்துவதில்லை. ஏனென்றால், அவர்களைச் சலிப்படையச் செய்யும் அளவுக்கு அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வசதியான முறையில் நடத்தப்பட்டு வருகின்ற தேர்தல்களின் தொடரில் அடுத்ததாக நாட்டு மக்கள் மீது தேசியத் தேர்தல் ஒன்று மீண்டும் திணிக்கப்படுகிறது. விரும்பியோ, விரும்பாமலோ அதற்கு தயாராக வேண்டிய நிலையில் அரசியல் கட்சிகளும் மக்களும் நிர்ப்பந்திக்கப்படுகின்ற துரதிர்ஷ்டவசமான நிலை.

வீ. தனபாலசிங்கம்

SHARE