மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் யுத்தத்தினால் மீள் குடியேறியுள்ள நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காட்டுப்பகுதியினுள் வாழ்ந்து வரும் மக்களுக்கு வடமாகாண சபை அவசர தற்காலிக வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் அயராத முயற்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் முள்ளிக்குளம் பகுதியில் வாழ்ந்து வரும் 82 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்றகொள்ளப்பட்ட நிலையில் குறித்த வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முள்ளிக்குளம் கிராமத்தில் இடம் பெற்றது. குறித்த தற்காலிக வீடுகள் 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள நிலையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் ஆசீர் வாதத்துடன் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், முத்தலிப் பாபா பாறுக், வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களும், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா,றிப்கான பதியுதீன்,முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதீயுதீனின் இணைப்புச் செயலாளர் என்.எம்.முனவ்பர் மன்னார் குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். இதனைத்தொடர்ந்து விசேட கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.