வடக்கு கிழக்கில் அன்பே சிவம் சுவிஸ் சூரிச்சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தினாரால் வரப்புயர மரநடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர் நிலத்தை வளம் நிறைந்த பொருளாதாரம் நிறைந்த பூமியாக மீண்டும் மாற்றும் நல்லெண்ணத்தில் சுவிஸ் அன்பே சிவம் சுவிஸ் சூரிச் சிவன் கோவில் சைவத்தமிழ் சங்கம் என்பன வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்துள்ளது.
இந்த அந்தந்த மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பா.உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் நலன் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
“வரப்புயர மரநடுகைத் திட்டம்” எனும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் மாவட்ட வாகரை பிரதேசத்திற்குற்பட்ட புச்சாக்கேணி-213C, கதிரவெளி ஆகிய இரு கிராமங்களிலுள்ள சுமார் 100 குடும்பங்களுக்கான தென்னங்கன்றுகள் வழங்கும் வைபவம் நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் சமூக சேவையாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி. யோகேஸ்வரன் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள், பயனாளிகள், மட்டக்களப்பு மாவட்ட அன்பேசிவம் அமைப்பாளர் தனுராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் சின்னசாளம்பன் கிராமத்தில் நடந்த நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், மகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
கிளிநொச்சி குமாரசாமிபுரம் கிராமத்தில் யாழ் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வழிகாட்டலில் அன்பேசிவம் இலங்கை இணைப்பாளர் குமரேசன் குமணன், பிரதேசசபை உறுப்பினர்கள் தவபாலன், புஸ்பராசா, பா.உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலை கிளிவெட்டி, மேன்கமம் கிராமத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன், திருமலை மாவட்ட அன்பே சிவம் இணைப்பாளர் தியாராஜா ஆகியாரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா கனகராயன் குளம், வடக்கு கிராமத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான தவபாலன், ரஜீவன், மணிவண்ணன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வைத்திய கலாநிதி கதிர்காமநாதன், ஐங்கரசர்மா வர்த்தகச் சந்திரகுமார் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வரப்புயர மரம் நடுகைத் திட்டம் போரினாலும் கடந்த கொடும் வரட்சியின்போது அழிந்த மரங்களின் வெற்றிடங்களை மீள நிரப்பி மீண்டும் பசுமையுடனும் பொருளாதாரத்துடன் வாழ்வை அமைக்க உதவும் என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.