தமிழ் மக்கள் தமக்கான மாற்றுத் தலைமையைத் தேடத் தொடங்கிவிட்டார்கள். தற்போது இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள் என்று தமிழ் மக்களின் புத்திஜீவிகள் என கூறிக்கொள்வோர் புதிய விவாதத்தைத் தற்போது தொடங்கியிருக்கின்றார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் கூட்டமைப்பை ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றவகையில் தலைமை தாங்கவில்லை. அவர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே முழு ஈடுபாட்டையும் காட்டுவதாகக் கூறுகின்றார். ஆனால் அந்த விடயத்திலும் சம்மந்தன் நேரடியாக செயற்படாமல் தனக்கு விசுவாசியான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையே முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார் என்றும் சுமந்திரன் கூட்டமைப்பிற்குள் இருக்கும் பங்காளிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத தனிப்போக்கைக் கொண்டவர் என்றும் கூட்டமைப்பில் இருக்கும் பங்காளிக்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைபிற்கு மாற்றாகத் தலைமை ஒன்றைத் தேடுவதற்கான விவாதம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன்தான் அந்த மாற்றுத் தலைமை என்று சிலர் வலியுறுத்துகின்றனர். அந்த விருப்பம் பலருக்கு இருக்கவே செய்கின்றது. ஆனால் வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருவதுடன் அரசியலிலிருந்து விலகிவிடும் விருப்பத்தையே விக்கினேஸ்வரன் பெரும்பாலும் கொண்டிருக்கின்றார்.
இருந்தாலும், மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாலும், மாற்றுத் தலைமை ஒன்றிற்கான அவசியத்தை உணர்ந்திருப்பதாலும் நீங்களே தலைமை ஏற்கவேண்டும் என்ற அழுத்தங்களும் விக்கினேஸ்வரனை நோக்கி செய்யப்படுகின்றன. ஆனாலும் இதுவரை விக்கினேஸ்வரன் சாதகமான சமிக்ஞை எதையும் வெளிப்படுத்தாமலே இருக்கின்றார்.
தமது கோரிக்கையை ஏற்று விக்கினேஸ்வரன் மாற்றுத் தலைமையேற்க முன்வராவிட்டால், மாற்றுத் தலைமைக்கான அடுத்த தெரிவு யார்? என்பதை எவரும் முன்வைப்பதில் இந்த புத்திஜீவிகளுக்கு தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது. மாற்றுத் தலைமை தேவை என்று கூறும் சுரேஸ்பிரேமச்சந்திரனும், கஜேந்திரனும் தம்மை அந்த மாற்றுத் தலைமையாக முன்னிறுத்தவில்லை.
விக்கினேஸ்வரன் தலைமை ஏற்றாலும், அவருக்கு கட்சி வடிவம் இல்லாததும், தனக்காக கட்டமைப்பு ரீதியாக வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாததாலும் விக்கினேஸ்வரன் தலைமை தாங்குவதற்குப் பின்வாங்குகுவதற்குக் காரணமாகும் என்று சிலர் கூறுகின்றனர்.
ஒருவேளை மாற்றுத் தலைமையாக சுரேஸ்பிரேமச்சந்திரன் தன்னை முன்னிறுத்தினால் அவரை மாற்றுத் தலைமையாக ஏற்றுக்கொண்டு புத்திஜீவிச் சமூகம் அவருக்காக செயற்படுமா? என்ற கேள்வி முன்வைக்கப்படும்போது, அதற்கு சார்பான சமிக்ஞை உடனடியாக வெளிப்படவில்லை.
அதேபோல் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மாற்றுத் தலைமையாக ஏற்றுக்கொள்ள தமிழ்ச் சமூகத்தின் புத்திஜீவிகள் தயாராக இல்லை. அதற்குக் காரணங்களும் உண்டு. தற்போதைய நிலையில் நாடாளுமன்றக் கனவுகளுடன் சம்மந்தனை கஜேந்திரன் விமர்சித்துக் கொண்டு, தீவிரமான தமிழ்த் தேசியத்தைக் கையில் எடுத்திருந்தாலும், தமிழர் வரலாற்றில் கஜேந்திரகுமாரின் பாட்டனும், தந்தையாரும் வரவேற்கத்தக்கவிதத்தில் செயற்படவில்லை என்பதே கஜேந்திரன் விடயத்தில் பிரதான விழுக்காடாக இருக்கின்றது.
அடுத்த படியாக தமிழரசுக் கட்சியுடன் கருத்து முரண்பாடு காரணமாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு செல்வம் அடைக்கலநாதன் முன்வந்தால் அவரை மாற்றுத்தலைமையாக முன்னிறுத்த முடியுமா என்றால் அவர் மன்னார் மாவட்டத்தை விடவும் பரந்த அளவில் தன்னை ஒரு தலைமையாக எக்காலத்திலும் முன்னிறுத்தாதவர். அதுபோலவே சித்தார்த்தன் மக்கள் செல்வாக்கை கொண்டிருந்தாலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை வழிநடத்தும் தலைமையாக எக்காலத்திலும் தன்னை வெளிப்படுத்தாதவர் என்ற அபிப்பிராயங்களே இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ் மக்கள் எதிர் பார்க்கும் மாற்றுத் தலைமை எனப்படுவது தனி ஒரு தலைமையாக இருக்க வாய்ப்புகள் இல்லை. மாறாக கூட்டுத்தலைமை ஒன்றே அந்த இடத்தை நோக்கிச் செல்லமுடியும். துரதிஷ்டவசமாக கூட்டுத்தலைமையாக களம் இறங்குவதற்கும் தமிழரசுக் கட்சியை எதிர்கொள்வதற்கும் தற்போது கூட்டமைப்பிற்குள் இருக்கும் ஏனைய கட்சிகளால் முடியாது.
தமிழரசுக் கட்சியும், அதன் தலைமைகளும் தமிழ் மக்களிடையே செல்வாக்கை இழந்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறினாலும், களத்தில் தமிழரசுக் கட்சி அளவுக்கு பலமான கட்டமைப்பை வேறு எவரும் கொண்டிருக்கவில்லை. ஆகவே தமிழரசுக் கட்சியோடு சேர்ந்து ஓடி தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டு விமர்சனங்களை முன்வைப்பதும், மாற்றுத் தலைமை ஒன்றுக்கான விவாதத்தை தொடர்வதுமே சாத்தியமாக இருக்கும் என்பதே ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடாக இருக்கும்.
எனவே மாற்றுத் தலைமை ஒன்றுக்கான தேடலானது தேசியம் எனும் பானைக்குள்ளே தொடருமானால், அதில் யார்? தேசியத்தை கையில் எடுப்பது என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியிருக்கும். அந்தத் தேடல் அதற்கும் வெளியில் அதன் பார்வையை திருப்ப வேண்டும் என்ற கொரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன.
மாற்றுத் தலைமை ஒன்று தேவை என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அத்தகைய தலைமை எவ்வாறான பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கருத்துப் பறிமாற்றங்கள் செய்யப்பட வேண்டும். மாற்றுத் தலைமையானவர், தமிழ் மக்களின் போராட்டத்தையும், தியாகங்களையும், உணர்வுகளையும் துணிச்சலாக பிரதிபலிக்க வேண்டும்.
அரசியல் பங்காளிகளுடனும், சமூக புத்திஜீவிகளுடனும், சமயத் தலைமைகளுடனும் கருத்துப்பறிமாற்றங்களை செய்யக்கூடிய பன்முக ஆளுமையைக் கொண்டிருப்பவராகவும், அதற்கான அவசியத்தை ஏற்றுக்கொள்கின்றவராக இருக்க வேண்டும். அதேவேளை இளைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வதுடன், மக்களுடன் வாழக்கூடியவராகவும் இருக்க வேண்டும். முக்கியமாக மக்கள் வழங்கும் ஆணையை மக்களுக்காகவும், தாயக மண்ணுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பதற்காக அரசின் செல்லப்பிள்ளையாக அதற்கு சோரம் போய்விடக்கூடாது என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்யக் கூடியவராகவும் இருக்கவேண்டும்.
அப்படி ஒரு தலைமையை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வார்களா? என்பது கேள்விக்குரியதுதான். தமிழ் மக்களின் வரலாற்றில் அப்படி ஒரு தலைவருக்கான ஏக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அந்த இடத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் நிரப்பக் கூடியவராக இருந்திருப்பார் என்று சிலர் கூறுகின்றபோதும், இல்லை அவர் ஜனநாயகப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை, மக்களால் தெரிவு செய்யப்படும் நிலைமையை ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையில் இருக்கவில்லை என்ற விமர்சனங்களையும் சிலர் முன்வைக்கின்றனர்.
செல்வநாயகம் தொடக்கம் பிரபாகரன் வரைக்கும் தமிழ் மக்கள் தலைமைத்துவத்தை தேடி களைத்துப்போய்விட்டார்கள். தொடர்கின்ற தேடலில் 100 வீகதிமும் பொறுத்தமாக எவரும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே இன்று இருக்கின்றவர்களிடையே குறைந்தபட்சம் வரவேற்கத்தக்க பண்புகளைக் கொண்டிருக்கக் கூடிய தலைமையை தெரிவு செய்துகொண்டு எதிர்காலத்தை நோக்கி தமிழ் இனம் முன்னேற வேண்டும். மாற்றுத் தலைமை எனப்படும் ஒருவர் வானத்தில் இருந்து குதிக்கப்போவதில்லை. குறைகளையும். விமர்சனங்களையும் முன்னிறுத்திக்கொண்டு இந்த புத்தி ஜீவிகள் சமூகம் மாற்றுத் தலைமைக்கான தேடலைச் செய்யுமாக இருந்தால் அது எல்லோரையும் பொறுத்தமற்றவராக உமிழ்ந்துவிடவே செய்யும்.
thivkam