நான்கு ஆண்டுகளில் தலை குனிந்து நிற்கின்றது வடக்கு மாகாண சபை

274

நான்கு ஆண்டுகளில் தலை குனிந்து நிற்கின்றது வடக்கு மாகாண சபை

வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் அதிகாரத் துஷ்பிரயோகத்திலும், மோசடியிலும் ஈடுபடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விசாரணைக் குழு ஒன்றை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமித்திருந்தார்.

அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ். தியாகேந்திரன்,எஸ்.பரமராஜா, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் செ.பத்மநாதன் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இந்தக் குழுவினர் மாகாணசபையின் ஐந்து அமைச்சுக்களில் இடம்பெற்ற அதிகாரத் துஷ்பிரயோகம், மோசடிகள், ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றங்களை விசாரணை செய்து 82 பக்க அறிக்கையை கடந்த மே மாதம் 19ஆம் திகதி கையளித்திருந்தனர்.

மாகாணசபையில் அமைச்சர்கள் மோசடி செய்துள்ளனர் என்பதை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு விசாரணைக்குகுழு அமைத்தபோது, முதலமைச்சரின் இந்த நடவடிக்கை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படடன. அதாவது மாகாணசபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை முதலமைச்சர் விசாரித்தால், உண்மைகள் வெளிவராது என்றும், தவறுகளை மூடி மறைத்துவிடுவதற்கே விசாரணை நடத்துவதுபோல் முதலமைச்சர் நாடகம் ஆடுகின்றார் என்றும் கூறப்பட்டது.

தவிரவும், மாகாணசபையில் ஐந்து அமைச்சர்களில் ஒரு அமைச்சரின் பணி முதலமைச்சரின் கீழ் இருக்கின்ற நிலையில் அந்த அமைச்சின் செயற்பாடுகள், அதன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் முதலமைச்சரின் விசாரணைக்குழு தடையற்றதும், தலையீடு அற்றதுமான விசாரணைகளை முன்னெடுக்குமா? என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

மாகாணசபையில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளதை முதலமைச்சர் ஏற்றக்கொண்டுள்ள நிலையில் அதுதொடர்பாக மத்திய அரசின் விசாரணைகளுக்கு இடமளிக்காமல், தானே ஒரு விசாரணைக் குழுவை அமைத்து தனது ஆட்சியையும், சகாக்களையும் பாதுகாக்கவும் முதலமைச்சர் முற்படுகின்றார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இவை எல்லாவற்றையும் தாண்டி விசாரணைக் குழுவின் அறிக்கை தற்போது முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கல்வி, பன்பாட்டு அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, விவசாயமும், கமநல சேவைகளும் கால் நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகிய இருவர் மீதே கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும், போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டன என்றும், சாட்சியமளிக்க எவரும் முன்னிலையாகவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்களை அந்த அறிக்கை இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது. இவர் பொறுப்பேற்ற பின்புலத்தில் வடக்கின் கல்வி வளர்ச்சி எவ்விதமான முன்னேற்றத்தையும் காணவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார். இவரது அமைச்சின் செயலாளரின் அதிகாரத்தை இவரே கையில் எடுத்துக்கொண்டு முறைகேடு செய்திருக்கின்றார்.

செயலாளரின் கையொப்பத்தை அமைச்சர் இடுகின்ற வகையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் இவருக்கு உடந்தையாக செயலாளரும் கையொப்பம் இட்டுள்ளார். ஆகவே இவ்விடயத்தில் அமைச்சரும், செயலாளரும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இடமாற்றங்கள் தொடர்பான விடயங்களில் அரசியல் தலையீடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் பாடசாலை சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு எதிராக குரல் கொடுத்த ஆசிரியரை அங்கிருந்து இடமாற்றம் செய்து அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான குற்றங்களையும், அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் செய்தது நிரூபிக்கக்கூடியதாக இருப்பதால் அமைச்சர் குருகுலராஜாவை அமைச்சுப் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும். அவரது செயலாளரையும் பதவி விலக்க வேண்டும்.

அதேபோல் பொ. ஐங்கரநேசன் தனது அமைச்சின் செயலாளராக பற்றிக் ரஞ்சன் என்பவரை நியமித்தது, அரச நிர்வாக சேவை மூப்பு நியமங்களுக்கு உட்பட்டு நியமிக்கவில்லை. தனது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்துடன் அந்த நியமனம் செய்யப்பட்டமை உட்பட பல்வேறு அதிகாரி துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, அதன் அடிப்படையில் அமைச்சுப் பொறுப்பிலிருந்து ஐங்கரநேசன் விலக்கப்பட வேண்டும் என்றும், அவரால் அவரது செயலாளராக நியமிக்கப்பட்ட பற்றிக் ரஞ்சன் என்பவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு கூறியுள்ளதுடன், தமது இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், வடக்கு மாகாணசபையானது எதிர்காலத்தில் சிறப்பாக செயற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைக் குழுவின் அறிக்கை முதலமைச்சரால் அமைச்சர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிக்கை பத்திரிகைகளில் வெளியாகியதால் வடக்கு மாகணசபையின் ஆளுந்தரப்புக்குள் முரண்பாடுகள் உச்சமடைந்துள்ளது.

முதலமைச்சர் கூட்டுப்பொறுப்பை மதித்து அந்த அறிக்கையை பொருத்தமான நேரத்தில் வெளியிடுவதற்கு எண்ணியிருந்தபோதும், அமைச்சர்களில் ஒருவர் தனது கூட்டுப்பொறுப்பை உதாசீனம் செய்துள்ளார் என்று தெரிகின்றது.

இந்த நிலையில் இம்மாதம் 6ஆம் திகதி(இன்று) இவ்விடயம் குறித்து வடக்கு மாகாணசபையில் விவாதிக்கப்படும் என்று அறிவித்திருந்தபோதும், முதலமைச்சர் தனிப்பட்ட காரணம் கூறி சபைக்கு வருகைதராததால் அமைச்சர்கள் மீதான குற்ற அறிக்கை 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களும், தார்மீகப் பொறுப்பையும். நாகரீகத்தையும் கருத்தில் கொண்டு தமது அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து விலக வேண்டும் என்ற குரல் எழுப்பப்படுகின்றது. அவ்வாறு அமைச்சர்கள் தாமாக பதவி விலகாவிட்டால், அவர்களை முதலமைச்சரே பதவி விலக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் மாகாணசபையின் ஏனைய உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் தாமாக பதவி விலகாவிட்டலோ, முதலமைச்சர் அவர்களை பதவி விலக்காவிட்டாலோ, தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தமது பதவியை விட்டுவிலக வேண்டும் என்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இவ்வாறான சர்ச்சைகளுக்கு முகம்கொடுப்பதைத் தவிர்க்கவே முதலமைச்சர் 6ஆம் திகதி சபைக்கு சமூகமளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

ஆனால் முதலமைச்சர் தனது சகாக்கள் மீது பாரபட்சமற்ற விசாரணையை நடத்தியதைப்போல், குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கையை எடுப்பார் என்று முதலமைச்சரை மேற்கோள் காட்டி கூறப்படுகின்றது.

மாகாணசபைக்கு அமைச்சர்களை நியமிக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சித் தலைவர்களின் பரிந்துரைகளுக்கு இணங்காமல் சம்மந்தப்பட்ட துறைகளில் நிபுணத்துவம் உள்ளவர்களையே அமைச்சர்களாக நியமிப்பேன் என்று கூறியே இந்த நான்கு பேரையும் அமைச்சர்களாக முதலமைச்சர் நியமித்தார்.

இவ்விடயத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் தம்பியான மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சுரேஸ்பிரேமச்சந்திரன் முன்வைத்தபோது அதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் முரண்பாடும் ஏற்பட்டிருந்தது.

அவ்வாறு முதலமைச்சர் பெரிதும் நம்பி அமைச்சர்களாக நியமித்தவர்கள் இவ்வாறு நான்கே ஆண்டுகளில் மோசடி, ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட குற்றவாளிகளாக நிற்பதானது, முதலமைச்சருக்கும் அவமானம்தான். ஆகவே ஒரு நீதியரசர் என்றவகையில் விருப்பு வெறுப்புக்கு இடமளிக்காமல் வடக்கு மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கி வாக்களித்த மக்களின் எதிர்பாப்புக்கு பொருத்தமான நீதியை வழங்குவார்!

அதேவேளை, கூட்டமைப்பின் தலைமையும் இவ்விடயத்திற்கும் தமக்கும் சம்மந்தம் இல்லாதது போன்றும் இது வெறும் வடக்கு மாகாண சபையின் சமாச்சாரம் போன்றும் நடந்த கொள்ளாமல் தமக்கான பொறுப்பை உணர்ந்து தீர்மானங்களை உறுதியாக அமுல்பத்துவார்கள்! – என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த மக்கள் காத்திருக்கின்றார்கள்.

SHARE