இறந்த ரசிகருக்கு 2 லட்ச ரூபாய் நிதி உதவி செய்த நடிகர்…

395

தலைப்பைப் பார்த்ததும் கேரளாவில் தீபாவளியன்று ‘கத்தி’ திரைப்படக் கொண்டாட்டத்தில் மரணமடைந்த உன்னி கிருஷ்ணன் என்ற விஜய் ரசிகருக்காக அப்படத்தின் நாயகன் விஜய் உதவி செய்தார் என நினைத்து விட வேண்டாம். இது வேறு மாநிலத்தில் நடந்த ஒரு ரசிகரின் மரணம். அதற்காக அந்த ரசிகரின் ஆதர்ச நாயகன் உதவி செய்த செய்திதான் இது. தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடித்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் ‘கோவிந்துடு அந்தாரிவாடிலே’. இந்தப் படம் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள, எம்மிகானூர் என்ற ஊரில் வெளியான போது தியேட்டர் நெரிசலில் சிக்கி அவருடைய ரசிகரான கன்னையா என்பவர் உயிரிழந்தார்.அவரது மரணச் செய்தி கேட்டு அப்போதே ராம் சரண் தேஜா இரங்கல் தெரிவித்திருந்தார். அதோடு அவரது குடும்பத்தாருக்காக 2 லட்ச ரூபாய் நிதி உதவி செய்வதாகவும் அறிவித்திருந்தார். அந்தத் தொகையை தற்போது, கன்னையா குடும்பத்திற்கு வழங்கியிருக்கிறார். சிரஞ்சீவி நற்பணி மன்ற தலைவர் ஒருவர் மூலம் 2 லட்ச ரூபாய்க்கான செக்கை கன்னையா குடும்பத்தினருக்கு சேர்ப்பித்திருக்கிறார். தெலுங்குத் திரையுலகில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதும், அவர்கள் நடத்தும் விழாக்களின் போதும், இது போன்ற உயிரிழப்புகள் சாதாரணமாக நடக்கிறது என தெலுங்கு மீடியாக்கள் சொல்லிக் கொண்டுதானிருக்கின்றன.
அந்தப் பாதிப்பு தற்போது ‘கத்தி’ படத்தின் போதும் தமிழ்நாட்டில் ஒரு உயிரையும், கேரளாவில் ஒரு உயிரையும் பறிகொடுக்க வைத்திருக்கிறது. நடிகர் விஜய்யும் அவருடைய இறந்து போன ரசிகருக்காக விரைவில் நிதி உதவி செய்வாரா எனப் பார்ப்போம்.

 

SHARE