எங்கேயும் எப்போதும் சரவணன் டில்லியில் முகாமிட்டிருக்கிறார்..

422

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் பாசறையில் இருந்து வந்தவர் டைரக்டர் சரவணன். இவர் இயக்கிய எங்கேயும் எப்போதும் படம் மெகா ஹிட்டானது. படத்தின் ஓப்பனிங்கிலேயே க்ளைமாக்ஸை சொல்லி விட்டு கதையை பின்னோக்கி நகர்த்திய அவரது பாணி வித்தியாசமாக இருந்தது. அதோடு, க்ளைமாக்ஸை முன்பே சொல்லிவிட்டு பின்னர் கதையை நகர்த்துவதற்கெல்லாம் ஒரு தில் வேண்டும். அதை முதல் படத்திலேயே தில்லாக செய்திருக்கிறார் சரவணன் என்று அவரை அப்படம் வந்த நேரத்தில் கோலிவுட் டைரக்டர்கள் பாராட்டினர்.

அதனால் அடுத்தபடியாக மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இவன் வேற மாதிரி படத்தை இயக்கினார் சரவணன். அந்த படத்தில் நடிக்க முதலில் விஷாலைதான் தேர்வு செய்தார். சம்பள விசயத்தில் அவர் மசியாத காரணத்தினால் பின்னர் கும்கி விக்ரம் பிரபு நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதனால் சரவணன் மீதிருந்த எதிர்பார்ப்புகள் குறைந்துபோனது.

இந்நிலையில், தற்போது ஜெய்-ஆண்டரியாவைக் கொண்டு வலியவன் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சரவணன், இந்த படத்துக்காக தற்போது டில்லியில் முகாமிட்டிருக்கிறார். அங்குள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இறுதிகட்ட காட்சிகள் படமாகிறதாம். இதுபற்றி அவர் கூறுகையில், படத்தின் கதைக்கும், காட்சிக்கும் தேவையான லொகேசன்களை தேடிப்பிடித்து படமாக்கி வருகிறேன். அந்தவகையில் டில்லியில் இதுவரை யாரும் படமாக்காத சில அனுமதி கிடைக்காத பகுதிகளிலும் அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்துகிறேன் என்று கூறும் சரவணன், இந்த வலியவன் வலுவான கதையில் உருவாகிறது. முக்கியமாக சமூகத்துக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்ல வருகிறது என்கிறார்.

 

SHARE