வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ.து.ரவிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில், இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.
பாடசாலையின் அதிபர் செல்வி.இ.பேரின்பராணி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ.து.ரவிகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முல்லை கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.ஞா.ஆதவன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.சி.சிவாகரன் அவர்களும் மற்றும் அயற்பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பமாக, தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விருந்தினர்களும் பாடசாலைக்கு அருகில் உள்ள முருகன் ஆலயத்தில் இருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன்பின்னர் மங்கல விளக்கேற்றல், வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.
வடமாகாணசபை உறுப்பினர், முல்லைகல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் நிகழ்வில் உரையாற்றியதோடு அதனை தொடர்ந்து பரீட்சையில் எழுபது புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் தொடர்ந்த பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வோடு நிகழ்வும் நிறைவு பெற்றது.