கல்வியில் பண்பு, தரம் இவற்றை வலியுறுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதிபர் ஆசிரியர்கள் இடமாற்ற சுற்றுநிரூபங்கள் நேர்மையுடனும், நீதியுடனும் பின்பற்றப்படுவதாக தெரியவில்லை. அவற்றில் பாரபட்சமும் பழிவாங்கல் குணமும் காணப்படுகின்றன. தேசிய பரீட்சைகள் மட்டுமே ஒரேமாதிரியானவையாக நடைபெறுகின்றன. ஆனால் வளப்பங்கீடுகளில் வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகள் அதிலும் குறிப்பாக தமிழ் மொழி மூலப்பாடசாலைகள் பாரபட்சம் காட்டப்படுகின்றன. இலங்கையில் அனைத்து மாகாணங்களிலுமுள்ள கல் விக்கொள்கையா வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் பின்பற்றப்படுகின்றது? என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08.11.2014) நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் கல்வி-கல்விச்சேவை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் ஆற்றிய உரையின் முழுவிவரம்:
வடக்கு மாகாணத்தின் கல்வி நிலைமைகள் இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் தனித்துவமான, விசேடமான குணங்கள் கொண்டவை. இது வடக்குக்கு மட்டுமன்றி கிழக்கு மாகாணத்துக்கும் பொருந்தும். வடக்கில் பாரிய யுத்தம் நடைபெற்று தமிழ் சமுகம் அழிவுகளை சந்தித்துள்ளது. இந்த யுத்தம் கல்வியில் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 4,386 மாணவர்கள் காயப்பட்டு அங்கவீனர்களாகியுள்ளனர். இந்த மாணவர்கள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசேட திட்டங்கள் எதனையும் இந்த அரசு முன்வைக்கவில்லை. வடபகுதியில் யுத்தத்தின் பெயரால் 78 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த பாடசாலைகள் இன்றுவரை கல்வி கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக திறந்து விடப்படவில்லை. இதைவிட பாடசாலைகளின் ஒருபகுதி யுத்தத்தால் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளன. அவை புனருத்தாரணம் செய்யப்படாமல் அவ்வாறே இயங்குகின்றன.
நீண்ட கால யுத்தத்தை சந்தித்த வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விசேடமான அவசரகால கல்வி செயல் திட்டங்கள் தேவை. அத்தகைய திட்டங்கள் ஊடாகத்தான் எமது பகுதி மாணவர்கள் கல்வியில் அபிவிருத்தியைக்காண முடியும். இன்று மாணவர்களுக்கு கற்றல் இடர்பாடுகள் நிறையவே உள்ளன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான புதிய அணுகுமுறைகளும், நுட்பங்களும் கொண்ட ஆசிரியர் குழாமை உருவாக்க வேண்டியுள்ளது.
இதற்காக ஆசிரியர்களுக்கான கல்வி தனித்துவமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இன்று பல பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்கள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான பாடசாலைகளின் மாணவர்கள் விஞ்ஞான அறிவையும், ஆற்றலையும் பெறுவதற்கான வாய்ப்புகள் அற்றுப்போயுள்ளன. பல பாடசாலைகளிலும் பாடங்களுக்கு பொருத்தமான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. அத்துடன் பல பாடசாலைகள் தகுதியான, பொருத்தமான அதிபர்கள் இல்லாமல் இயங்குகின்றன. இவற்றையும் நிவர்த்தி செய்து கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்.
விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், வரலாறு, புவியியல் முதலான பாடங்களுக்கு பொருத்தமான ஆசிரியர்கள் இல்லை. சில பாடசாலைகளுக்கு போக்குவரத்து வசதிகள் கூட சீராக்கி கொடுக்கப்படவில்லை. பலாலி ஆசிரியர் கலாசாலை மூடப்பட்டுள்ளது. இன்றும் பயிற்றுவிக்கப்படாத ஆசிரியர்கள் பலர் உள்ளனர். இந்த ஆசிரியர்களை பயிற்றுவிக்க வேண்டிய தேவை உண்டு. அதற்காக கூட பலாலி ஆசிரியர் கலாசாலையை மீளவும் ஆரம்பிப்பதற்கு இந்த அரசு முன்வரவேண்டும். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை தான் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதனையும் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. இதற்கு சரியான திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை.
யுத்தத்தால் உயிரிழந்த மாணவர்களின் தொகை பெரியது. யுத்தத்தின் போது அநேகமான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். இப்படி கல்வியின் அடிப்படை கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து மாகாணங்களிலுமுள்ள கல்விக்கொள்கையா வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் பின்பற்றப்படுகின்றது? என்றே கேள்வி எழுப்பத்தோன்றுகின்றது. தேசிய பரீட்சைகள் மட்டுமே ஒரேமாதிரியானவையாக நடைபெறுகின்றன. ஆனால் வளப்பங்கீடுகளில் வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகள் அதிலும் குறிப்பாக தமிழ் மொழி மூலப்பாடசாலைகள் பாரபட்சம் காட்டப்படுகின்றன.
இந்த அரசு தேசிய பாடசாலைகளை உருவாக்குவதில் காட்டும் கவனம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. உருவாக்கப்படும் தேசிய பாடசாலைகள் அனைத்தும் மத்திய அரசின் ஆளுகைக்கு கீழ் கொண்டுசெல்லப்படும். இதனால் மாகாணத்துக்குரிய கல்வி அதிகாரங்கள் பறிக்கப்படுவதை மறைமுகமாக இந்த நடவடிக்கை ஊக்குவிக்கின்றது.
கல்வியில் பண்பு, தரம் இவற்றை வலியுறுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதிபர் ஆசிரியர்கள் இடமாற்ற சுற்றுநிரூபங்கள் நேர்மையுடனும், நீதியுடனும் பின்பற்றப்படுவதாக தெரியவில்லை. அவற்றில் பாரபட்சமும் பழிவாங்கல் குணமும் காணப்படுகின்றன. தேவைகளையும், அவசியங்களையும் முன்னிலைப்படுத்தி சமுக நீதியுடன் இடமாற்றக்கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
பிரதேசங்களுக்கிடையில் காணப்படும் இடைவெளிகள், வளர்ச்சியின்மை, முரண்பாடுகளை தனித்தனியாக கவனத்தில் கொண்டு கல்விக்கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று வேண்டியுள்ள கல்விக்கொள்கை புதியது. யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான ஆசிரியர்கள், மாணவர்கள் இயல்பாக கல்வி நடவடிக்கைகளுடன் பொருந்தி வருவதற்கான விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் விரக்தி நிலைக்குள் தள்ளப்படாமல் சமுகத்திலிருந்து ஒதுங்கி வாழாமல் அவர்களை பாதுகாக்க வேண்டியது மக்கள் நலன் சார்ந்த அரசின் பொறுப்பாகும். ஆனால் இன்றைய அரசு வடக்கு கல்வி நிலைமைகள் தொடர்பில், எமது பகுதி மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் எத்தகைய அக்கறை கொண்டுள்ளது என்பதிலேயே உண்மையான அபிவிருத்தியும், மறுமலர்ச்சியும் தங்கியுள்ளது. இதற்காக கடந்த கால நிலைமைகளை எச்சரிக்கையாக, பாடமாக கொண்டு செயல்பட வேண்டும்.
2008ம் ஆண்டு சம்பள ஆணைக்குழுவின் அறிக்கையின்படியே 2014ம் ஆண்டும் சம்பள கொடுப்பணவு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தற்போதைய சுற்றறிக்கையின் பிரகாரம், அதிபர்களுக்கான சுற்றறிக்கையின் இலக்கம் 1885-31 படி அதிபர்களுக்கு 135 ரூபாவும், ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கையின் இலக்கம் 1885-35 படி ஆசிரியர்களுக்கு 105 ரூபாவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த காலப்பகுதியில் இடைக்கால சம்பளத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின. அக்கோரிக்கை இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை. அது அமுல்படுத்தப்பட வேண்டும்.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் 15,000 ரூபா என எதிர்பார்க்கப்படும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் 13,410 மட்டுமே வழங்கப்படுகின்றது. இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஆசிரிய உதவியாளர்கள் நாட்டின் சகல மாகாணங்களிலும் உள்ளனர். வடமாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு 10,000 ரூபா வேதனம் வழங்கப்படுகின்றது. ஏனைய மாகாணங்களிலுள்ள உதவியாளர்களுக்கு 6,000 ரூபா வேதனம் வழங்கப்படுகின்றது. இவ்வுதவி ஆசிரியர்களை ஆசிரிய சேவை பிரமாணத்தின் படி 3/2 அடிப்படையில் உள்வாங்கப்பட வேண்டும்.
2005ம் ஆண்டுக்கு பின்னர் அதிபர் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2009ம் ஆண்டு நியமனம் வழங்கப்பட்டது. அதற்கு பின்னர் அதிபர் பரீட்சை எவையும் நடத்தப்படவில்லை. எனவே அதிபர் பரீட்சையை நடத்தி உரிய நியமனங்களை வழங்க வேண்டும். மேலும் இன விகிதாசாரம் பேணப்படாததால் தமிழ் பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனவே தமிழ் பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஏற்ப நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தமிழ் அதிகாரிகளின் தேவை அதிகமாகவே காணப்படுகின்றது. இதனால் ஆசிரியர்களையும், அதிபர்களையும் நியமிப்பதனால் கல்வி வினைத்திறன் குறைந்து காணப்படுகின்றது. எனவே தமிழ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சகல பாடசாலைகளுக்குமான மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களை அதிகரித்து வழங்க வேண்டும். கூடவே ஆசிரியர்களுக்கான 10 மாத காலத்தவணை அடிப்படையிலான கடன் திட்டமும் வழங்கப்பட வேண்டும்.
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மானிய அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்கள் ஆசிரிய ஆலோசகர்கள், உதவி கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் தூர இடங்களுக்கு சென்று கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
2013ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் கஸ்ட பிரதேசங்களின் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் (சப்பாத்துகள்) வழங்கப்படுமென ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டிருந்தும் இன்றுவரை அது முழுமைப்படுத்தப்பட்டு வழங்கப்படவில்லை. மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடசாலை சீருடை துணிகள் தரமற்றவையாக உள்ளதால், அவை ஆறு மாத காலப்பாவனைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாதவையாக உள்ளன. இது குறித்தும் கவனம் செலுத்தப்படுதல் வேண்டும்.
அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க அதாவது அடுத்த வகுப்புக்கு கொண்டு செல்ல ஆண்டுதோறும் வெளியிடப்படும் சுற்றுநிரூபங்கள் நீண்ட காலமாக வெளியிடப்படாததால், பதவி உயர்வு பெறுவதற்கான தகுதி இருந்தும் பலர் பதவி உயர்வு பெறாமல் உள்ளனர். இது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அதிபர்கள், ஆசிரியர்கள் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டமும் வழங்கப்பட வேண்டும்.
க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு 4வது துறையான தகவல் தொழில்நுட்ப பாட வசதிகள், சகல பிரதேசங்களின் பாடசாலைகளுக்கும் சமச்சீரான வகையில் சீர்செய்து கொடுக்கப்பட வேண்டும்.
மன்னார் அரிப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் 1000 பாடசாலைகள் முன்மொழிவு திட்டத்துக்குள் தெரிவு பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தும், இன்றுவரை அதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். என்றும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.