பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பாரதப் போரின்போது அர்ஜூனனுக்கு, பகவத் கீதையை அருளிச்செய்து உபதேசம் செய்தார். அதர்மத்தை அளிக்கவும் தர்மத்தைக் காக்கவும், நான் யுகம் அவதரிக்கின்றேன் என்பது இதன் பொருளாகும். உலகினைப் பாவம் சூழ்ந்தவேளை, அவை மலிந்து சொல்லொணாத் துயரை அடையும்போது இவ்வுயிர் அனுக்கிரஹம் செய்ய பரம்பொருளாம் அவதாரங்களை எடுக்கின்றான். பூமியின் பாரங்களை அவன் செய்யும் அழித்தல் தொழிலில் உள்ள அர்த்தம் என்னவெனில் இறைவனின் இச்செய்கையால் உயிர்களின் மீதான கருணையின் மீதான அருளல் ஆகும்.
இவர்களிடமிருந்து நல்லோரைக் காக்க பகவான் அவதரித்து சங்காரம் செய்கிறான். காலத்திற்குக் காலம், தோறும் இந்த துஷ்ட சம்ஹாரம் நடைபெறுவதாகவே புராணங்கள் கூறுகின்றன. தீபாவளி பண்டிகை பற்றிய புராண வரலாறுகள் இதனை பகருகின்றன. தேவர்கள், மானுடர் எனச் சகலரையும் வதைத்த நரகாசுரன் என்கின்ற அசுரனை கிருஷ்ணன் தன் சக்தியாகிய துணையுடன் வதம் செய்த வரலாற்றினை நாம் அனைவரும் அறிவோம்.
அனைவரும் இந்தப் பூமியில் பிறந்து, இறந்து போகின்றோம் இந்த நிகழ்வுகள் மனித வாழ்வை தாக்கத்தில் இட்டுசெல்கின்றது. நல்லவர்களோ, வல்லவர்களோ, கெட்டவர்களோ அந்த உயிரின் உடல்போன்ற தேகம் மட்டுமே அழிந்துவிடுகிறது. பகவத் கீதையில் ஸாங்கிய யோகம் என்கின்ற பகுதியில் சுலோகங்களினூடாக பொருள் கூறப்படுகின்றது. நாசமற்றதாய், அளப்பரியதாய் உள்ள ஆத்மா இவ்வுடல்கள் யாவும் அழியும் தன்மையனவாம். இவ் ஆத்மா ஒருபோதும் பிறப்பதில்லை இறப்பதில்லை. இறாவதது, தேயாதது, வளராதது காயம் கொல்லுமிடத்தும் ஆன்மா கொல்லப்படுவதில்லை எனினும், ஆன்மாக்கள் முடிவில் இறைவன் திருப்பாதம் அடைந்தே தீரவேண்டும்.
புண்ணிய வினைகளுக்கேற்ப மனிதன் இன்ப, துன்பங்களை அனுபவிக்கின்றான். இவை பற்றிய அனுபவங்களை உணர்வுகளை வரலாறுகள் எமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இந்து மதம் கூறிய புராண, இதிசாசம் புகழ்கின்றவை, கதைகள் அல்ல. ஆன்ம விமோசனத்திற்கான பாதைகளாகும். நாம் வாழும் காலத்தில் வாழ்வாங்கு வாழ்வது எனச் செப்புவதே எமது புராணங்களின் உண்மை நோக்கங்களாகும். பண்டிகைகள், விழாக்கள் மக்கள் எதற்காகப் பக்திபூர்வமாகக் கொண்டாடுகின்றனர் என்பதை நாம் உணரல் வேண்டும். ஒவ்வொருவரும் தாம் சார்ந்த மதங்களினூடாக, தமது கலாசார விழுமியங்களைப் பாதுகாக்க விழைகின்ற ஒழுக்க நெறி சார்ந்ததாகவே மதங்களின் கொள்கைகள் வகுக்கப்பட்டன. இது இந்து மதத்தின் பாரம்பரியம், தொன்மை சிறப்பு இயம்புதற்கு எளிதன்று. அதன் உள்ளார்ந்த தத்துவம் பலவும்,கதைகளூடாக சொல்லப்படும்போது, அவை மேம்பாடு ஒழுக்கம், நீதி இவைகளுடன் தொடர்பாகவே அமையும்.
தீபாவளிப் பண்டிகை பற்றி மேலெழுந்தவாரியாக துஷ்டன் அழிக்கப்படுகின்றான், அவன் இறந்துவிட மக்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள் என்றே எல்லோரும் சொல்வார். இந்தக் கதையூடாக பரம்பொருளான, வள்ளலின் தெய்வீக குணம் இயம்பப்படுகின்றது. தீயோருக்கு இரங்கி அருளும் சுபாவம் வலியுறுத்தப்படுகின்றது. நல்லவர்களை மட்டும் ஆண்டவன் இரட்சிப்பதில்லை. குணம் நலிந்த துன்மார்க்கர்களையும் நல்வழிப்படுத்த விழைவதை, நரகாசுரன் வதம் எமக்குச் சொல்கின்றது.
அத்துடன் நரகாசுரன் என்கின்ற அசுரன் தனது தவறை உணர்ந்து, இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றான். பொதுவாக, கதைகளில் ஆணவமுனைப்பினால் உந்தப்படுவோர் தனது உயிர் போகும் வரை போராடி மடியும் குணம்சங்களே வலியுறுத்திச் சொல்லப்படுவது வழக்கமாகும். நரகாசுரன் வதம் பற்றி விடயத்தில் முக்கியமான இன்னும் ஒரு உண்மை கூறப்படுகின்றது.
இறைவன் நரகாசுரனுடன் போர்புரியும் போது, தனது மனைவியுடன் கூடச்செல்கின்றான். உலகை இயக்குவது சக்தியாகும். சத்தியைப் பெண் உருவாக வழிபட்டது எமது இந்து சமயமாகும். பெண்மைக்கு உரிய கெளரவம், புனிதமானது சக்தி இன்றி உலகம் என்ன, அண்டசராசரமே இயங்க முடியுமா? பெண்மையைப் போற்றுதலே எமது தொன்மை நாகரிகமும் ஆகும்.
இங்கு பெண்ணின் மாவலிமையை உணர்த்தும் வண்ணம், நரகாசுரனை தேவி வதைப்பதாகச் சொல்லப்படுகின்றது. பெண்மைக்கு இரங்கும் சுபாவம் உண்டு, அதேசமயம், அவள் நீதிக்காகப் போராடுபவள், வீரம் மிகுந்தவள், சாந்த சொரூபி. ஆனால் செந்தணல் போலுமாகின்றாள். மனதில் உறுதிபூண்டள், அத்துடன் நினைத்ததைச் செய்துமுடிப்பவள். சோதனைகளை வெல்பவளுமாகின்றாள். இவைகளை எமக்குச் சொல்லவே, பகவான் கிருஷ்ணன் தன் தேவி சகிதம், போர்புரிந்து வெற்றிகொள்வதாகக் கூறப்படுகின்றது. உலகு எங்ஙனும் உள்ள இந்துக்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். தீபாவளி விஷ்ணுவின் மேன்மையை அடிப்படையாகக் கொண்டதாகவும், அது சைவசமயத்தவர்கள் பண்டிகை அல்ல என்று சொல்பவர்களும் இருகின்றனர். எனினும், இந்த விஷயத்தினை எந்த இந்துக்களும் ஒரு பிரச்சினையாக எடுப்பதில்லை, மும்மூர்த்திகளும் ஒருவீர இறைவன் தன் திவ்ய நற்கருணையை, அடியவர்கள் விரும்பும் வடிவிலே ஈந்து அருளுகின்றான். இன்று உலகில் இந்துக்களில் அனைவராலும் பண்டிகையாகத் தீபாவளி போற்ற மகிழ்ந்து அனுஷ்டிக்கப்படுவதை மறுக்க முடியுமா பக்திபூர்வமாகப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதே சிறப்பானதாகும். கீழ்த்தரமான துஷ்ட எண்ணங்களைக் கொய்யவேண்டும் என்பதே தீபாவளித் திருநாளின் நோக்கமும் ஆகும். இந் நாளில் ஏன் தீபாவளி கொண்டாடுகின்றோம் என்பதை மறந்து போவது மிகவும் வேதனைக்குரிய விடயமல்லவா? பகவானின் விருப்பம் எது என்பதை நாம் முதலில் உணரல் வேண்டும். பகவத்கீதையின் பக்தி யோகத்தில் பின்வருமாறு உபதேசிக்கின்றனர். உயிர்கள் அனைத்திடத்தும் வெறுப்பின்றி நட்பும் கருணையும் உடையவனாய்,மமகாரம், அகங்காரம் அற்று, இன்ப துன்பங்களைச் சமமாய்க் கருதி, பொறுமை படைத்து, எப்பொழும் சந்தோஷமாய் இருப்பவன். யோகியாய் தன்னடக்கமுடையவனாய் திடசிந்தனையுள்ளவனாய் என்னிடத்தில் புத்தியை சமர்ப்பித்தவனாய், யார் ஒருவன் பக்தன் ஆகின்றானோ அவன் எனக்குப் பிரியமானவன் எனவே,
உயிர்களிடத்து அன்பும், கருணையையும் எம்மிடத்தே எதிர்பார்க்கும் ஆண்டவன் புகழ்பாடி மகிழ்ற தீபாவளி நன்நாளில் நாம் அவருக்குப் பிடித்தமற்ற கீழ்தரமான நினைவுகள், செயல்கள், உயிர்களை வதைசெய்தல், புலால் உண்ணல் போன்ற செயல்களில் ஈடுபடலாமா?
களிப்பாக இருப்பது என்பது நாம் எம்மைச் சார்ந்த சகல உயிர்களையும் சந்தோஷமாக வைத்திருத்தல் என்பதேயாகும். விழாக்களும் வைபவங்களும் எதற்காக ஏற்பட்டது என்பது புரியாமல் நடப்பது இறைவள் விருப்பிற்கு எதிராக நடக்கும் செயலேயாகும். வளர்ந்துவரும் புதிய யுகத்தில் மாற்றங்கள் போவது இயற்கையே. எனினும் பண்பாடு ஒழுக்கங்கள் மாறுதலாகாது.
விழாக்களும் வைபவங்களும் எதற்காக ஏற்பட்டது என்பது புரியாமல் நடப்பது இறைவன் விருப்பிற்கு எதிராக நடக்கும் செயலேயாகும். வளர்ந்து வரும் புதிய யுகத்தில் மாற்றங்கள் வருவதும் போவதும் இயற்கையே, எனினும் பண்பாடு ஒழுக்கங்கள் மாறுதலாகாது.
எமது இந்து சமயப் புனிதமான பண்பாட்டினை மையமாகக் கொண்டே சமைக்கப்பட்டதாகும். ஏழை எளியவர்கள், செல்வந்தர்கள், ஜாதியில் உயர்ந்தவர்கள், குறைந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்கின்ற பாகுபாடற்ற நில ஒரே மனோ நிலையில் இறைபுகழ்பாடி, நினைந்து களிப்படையவே திருநாட்கள் உருவாகின.
இருப்பவன் இல்லாதவர்க்கு அளித்து குறுகிய வாத பேதம் அகற்றி, எல்லோரும் நம்மவரே, இறைவன் என்கிற குளிர் தரு நிழலில் ஒதுங்கிய இன்பம் இருக்கும் ஜீவன்கள் என எண்ணி மகிழவே தீபாவளிப் பண்டிகை உருவானதாகக் கொள்ளப்படும்.
ஒருநாளில் மட்டும் திருநாளைக் கொண்டாடி பின்னர் அந்நிலை மறந்து வாழ்வது அழகா எந்நோக்கத்திற்காக நாம் பிறந்தோம், வாழ்கின்றோம் என்பதை உணரல் வேண்டும். எங்கும் வியாபகமாக இருக்கும் தூய அன்பினை உயிர்களிடத்தே செலுத்த ஆரம்பித்ததுமே நாம் புனிதராக மாற இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக மாறுகின்றோம்.
இந்நிலைக்கு மனிதா நீ, வந்தேயாக வேண்டு என்பதற்காகத் திருநாட்களைக் களிப்பூட்டும் நாள் ஆக்கி எமக்கு இந்நாளில் மனமாற்றத்திற்கு தாக்க இறைவன் விழைகின்றான். தொழுதேற்றி சித்தப்படி, வாழ முனைதல் எம்முதலான பணியாகும். முனைந்தால் முடியாதது எதுவுமில்லை. தெளிந்த மனமுடையவன் துயருறுவதில் அவாவுறுவதில்லை அவன் எல்லா உயிர்களிடத்திலும் சமனாயிருப்பவன் என்கின்ற நிலையை உருவாக்குகின்ற என் மீதும் மேலாம் பக்தியை உடையவனாகின்றான்.
இது பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் வாக்கு, சந்தோஷமுடன் தீபாவளி நன்நாளின் இறை உணர்வினால் தெளிந்த மனதை உடையோர்களாவோம். இறைவன் விரும்ப வாழ்வதன் மூலமே. அவன் நாமத்தின் உச்சரிக்க பயன்பெற்றவர்களுமாவோம்.
தீபாவளி பண்டிகை கொண்டாடி மகிழும் இந்நன்நாளில் தூய அன்பின் வயப்பட்டு உலகம் முழுமையையும் அடைய வழிநடந்த எங்களை ஆயத்தப்படுத்துவோமாக. துன்பம் மறந்து அதைக் களைந்து இனி வரும் எல்லாம் நல்லன என மன உறுதி பூண்டு எல்லாம் ஸ்ரீ கிருஷ்ண திவ்ய நாமம் ஓதி இன்புற்று இருப்போமாக…
இல்லந்தோறும் தீபாவளி இனிமை வாழட்டும்
தீபாவளி என்றாலே இனிமைதான். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், குமரிகள், பெரியோர் எல்லோரும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் உன்னத நாளை தீபாவளிப் பண்டிகை தருகிறது.
சிறுவர்களுக்கு இணையாக யாராலும் அந்நாளை அவ்வளவு இனிமையுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட முடியாது. தீபாவளி வருகிறது என்றாலே அவர்களுக்கு உற்சாகம்தான்.
அந்த ஒரு மாதம் முழுவதும் புத்தாடை எடுப்பதிலும், புதிய உணவு வகைகளை நினைவாலே சுவைப்பதிலும், தீபாவளி அதிகாலை வருவதற்கு முன்னரே பட்டாசு சத்தத்தை கற்பனையால் எண்ணி மகிழ்வதும், அதிகாலை புலரும் அந்நன்னாளில் யாரும் எழுப்பாமலேயே எழுந்து, குளித்து, புத்தாடையுடுத்தி, பட்டாசு கொளுத்தி அன்று முழுவதும் குதூகலத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
தீபாவளிப் பண்டிகை எல்லோருக்கும் இனிமையான பல நினைவுகளை எப்போதும் சுமந்து வருகிறது. சிறு வயதில் பட்டாசு வாங்கி வரும் தந்தைக்காக காத்திருப்பது.
இளைஞராய் இருந்தபோது புத்தாடை உடுத்தி சக்தி வாய்ந்த பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தது என்று எண்ணற்ற வண்ண நினைவுகளை தீபாவளிப் பண்டிகை ஒவ்வொருவர் மனதிலும் நிழலாட தீபாவளி அன்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் அனைவரும் ஒன்றுகூட மகிழும் இன்பத்தையும் அளிக்கும் பண்டிகையாக, சமூக விழாவாக திகழ்கிறது.
நமது பண்பாட்டின் ஒரு அடையாளமாகவே ஆகிவிட்ட அந்த பண்டிகை, அதற்கு ஊற்றுக் கண்ணாய் இருந்த சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரான மகாவீரரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் அன்பையும், சத்தியத்தையும் அகிம்சையையும் நமது அகத்திலும் புறத்திலும் நிலைநிறுத்துகிறது.
அதனால்தான் தீபாவளி மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் ஒற்றுமை உணர்வையும் ஒன்றிக் கொண்டாடுவதில் ஈடற்ற திருப்தியையும் அளிக்கின்றது.
வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் கொள்கை பேசிக் கொண்டு, எல்லாவித வேறுபாடுகளையும் சிந்தனையில் போட்டுக்கொண்டு, அன்றாட வாழ்க்கையில் பிளவுண்டு, மோதிக் கொண்டு துயரத்தில் மூழ்குவதை தவிர்த்துவிட்டு, அமைதியான உண்மையான இன்பமான வாழ்க்கைக்கு வித்திட்ட ஆன்மீக வழிகாட்டிகளின் வார்த்தைகளைப் புரிந்து கொண்டு வாழ்வதே அமைதியான வாழ்விற்கு நம்மை நிரந்தரமாக அழைத்துச் செல்லும். அதற்கு வித்தாக தீபா வளியை நினைப் போம்! கொண்டாடு வோம்!
தீபாவளி என்றால் என்ன?
தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்களை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன்மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் அகமும் புறமும் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறர்.
நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும்.
புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்கு பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை சக்கரவு இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு பரிமாறுவதன் மூலம் சமரசம் ஏற்பட வாய்ப்புண்டு.
தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி. அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.
அசுரனுக்கு அறிவு புகட்டி அருள் பாலித்த தீபத் திருநாள்
இந்து மக்களுக்கு பல பண்டிகைகள் வருகின்றன. காரணம் மனித வாழ்வு எப்போதும் மலர்ச்சியுடனும் செழிப்புடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே! அத்துடன் ஒவ்வொரு பெருநாளும் ஆழ்ந்த சமய தத்துவங்களை உள்ளடக்கியதாகவும் இருப்பது ஒரு தனிச்சிறப்பு, தைப்பொங்கலிலே சூரியனுக்குப் பொங்கலிட்டு எமது நன்றியறிதலைச் செலுத்துகின்றோம்! வருடத்தைத் தொடக்கி வைக்கின்றோம்! ‘மாசி மகத்திலே’ அம்மனுக்குப் பெரு விழா! சிவ ராத்திரியிலே நம்மையும் மற்றைய தெய்வங்களையும் உருவாக்கிய முழு முதல் பரம்பொருளாம் பரமசிவனைத் துதித்து ஆணவத்தினால் விளைந்த அனர்த்தத்தை எண்ணிப் பார்க்கின்றோம்.
பங்குனி மாதத்தில் பங்குனி உத்தரம். அப்போதும் அம்மனுக்குப் பெரு விழா! சித்திரையிலே வருடப் பிறப்பு ஆடியிலே ‘ஆடிப் பிறப்பு’ முருகனுக்கு வேல் விழா! புரட்டாதியிலே சனீஸ்வரனையும் தொழுகின்றோம். மாதா பராசக்திக்காக நவராத்தி விழாவும் எடுக்கின்றோம். “ஐப்பாசியிலே” பண்டிகைகளுக்கே அரசனான தீபாவளித்திருநாள்” கார்த்திகையிலே முருகனுக்காக தீபம் ஏற்றி மகிழ்கின்றோம். “மார்கழியிலோ” திருவெம்பாவை பஜனை!” இடையிலே எத்தனையோமுக்கியமான திருநாட்கள். வருடம் முழுவதுமே நமக்குப் பெருநாட்கள். அவ்வளவுமே ஆழ்ந்த சமயகருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. இப்பண்டிகைகளிலே தீபாவளியின் சிறப்பே தனி. இன்று நாம் கொண்டாடும் தீபாவளித் திருநாள் பண்டிகைகளின் அரசன்” என்றும் கூறப்படுகின்றது. காரணம்?
இந்துக்கள் வாழ்கின்ற நகரப் புறங்களில் மட்டுமல்ல பட்டிதொட்டிகளிலும் பின் தங்கிய கிராமப் புறங்களிலும் கூட தீபாவளி மகிழ்ச்சியுடன் கொண்டாடப் படுகின்றது. ஆகவே தீபாவளி மட்டும் பணக்காரர்களின் பெருநாள் அல்ல. பாமர மக்களையும் மகிழ்ச்சியுடன் அரவணைத்துக்கொள்கின்றது. தீபாவளியை பண்டிகைகளின் அரசன் என்பது பொருந்தும் அல்லவா?
தீபாவளிக்கென்ற சில சிறப்புக்கள் உள்ளன. தீபம்+ஆவளி= தீபாவளி. இது “விளக்குகளை வரிசையாக வைத்தல்” என்பது பொருள்படும். புற இருளைத் துரத்த விளக்குகள் எப்படியோ அப்படியே ஆன் மீக விளக்கினால் ஞான விளக்கினால் அக இருளை அகற்ற முடியும். அப்போது அகம் தூய்மையடைகின்றது. மூலமலமான ஆணவம் அழிந்தொழிக்கின்றது. இதனால் ஆன்ம ஈடேற்றம் நடைபெறுகின்றது. ஆணவத்துக்கும் தேவர், மானிடர் என்போருக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தமே நரககாசுரர் யுத்தம்! கிருஷ்ண பரமாத்மா அவதாரத்திலே முக்கியமானது நரகாசுரவதம். இதுவே இன்று நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தீபத் திருநாளம் தீபாவளி. எந்த ஒரு காரியத்தையும் இடரின்றி முடிக்க சூழ்ச்சிதேவை. இங்கே நாம் சூழ்ச்சி எனக் குறிப்பிட்டது அறிவையே! இதை எமது புராண இலக்கியங்கள் நன்கு எடுத்தியம்புகின்றன.
கந்த புராணத்திலே சூரனை அழிக்க எந்த ஆயுதமும் பயன்படாமல் போக சக்தி வேலாகிய அறிவாயுதம் சூரனை இரு கூறாக்கி அவனுடைய ஆணவத்தை வலிமை குன்றச் செய்கின்றது.
கும்பகர்ணன் நித்தியவரம் கேட்டு தவம் செய்த போது தேவர்கள் அஞ்சி சரஸ்வதிதேவியை இறைஞ்சி வேண்ட அவளும் வரம் கேட்கும்போது அவனுடைய நாவையே விட்டு நீங்கி நித்திய வரத்தை நித்திரைவரமாக மாற்றி யாவரையும் காப்பாற்றியருளினாள். “எந்த ஒரு ஆயுத்தாலும் அழிவே இல்லை” என வரம் பெற்ற கயமுகனைத் தம் தந்தம் ஒன்றை ஒடித்து குத்தி அவனை வீழ்த்தினார். விக்கினேஸ்வரர்.
(தந்தம் ஒரு ஆயுதம் அல்ல)
தேவர்களாலோ மானிடராலோ அழிக்கவே முடியாத வரத்தைப் பெற்ற இராவணனை மானிடராகப் பிறந்த மகாவிஷ்ணு மாய்ந்தார். (மானிடரை ஒரு பொருட்டாக அரக்கர் மதிப்பதில்லை) அதுபோலவே எந்த ஒரு வீரனாலும் அழிக்க முடியாது என வரம்பெற்ற ஆணவம் கொண்ட நரகாசுரனை ஒரு பெண்ணைக் கொண்டே அழித்து கிருஷ்ணபகவான் (பெண்ணை ஒரு பொருட்டாக மதிக்காததால் வரம் கேட்க மறந்து விட்டான், நரகாசுரன், ஆகவே – அன்பர்களே! சுயநலம் இல்லாத சூழ்ச்சியால் (தூய அறிவு மூலம்) ஆணவத்தை அழித்தார் பகவான். இதன் மூலம் அறிவு ஞானத்துக்குள்ள முக்கியத்துவம் இங்கே வெளிப்படுகின்றதல்லவா?
பொதுவாகவே தீயவர்களுக்கு எல்லாவற்றையும் இழந்த பின்புதான் புத்தியே பிறக்கும். இது உலக வழக்கு, இறக்கும்போது புத்தி தெளிந்த நரகாசுரனுடைய வேண்டுதலே இந்த தீபாவளி, ஆகவே அன்புடன் அர்த்தத்துடன் இறைவனை வணங்கி இனிய தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அடுத்தவரின் இடர்களையும் களைவோம்.