சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெறாத எவரும் தலைவராக முடியாது!

290
Mahinda-Rani-Maithripala

தென் இலங்கையில் எழுச்சிபெற்றுவரும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள், நல்லாட்சி அரசாங்கத்தை தேர்தல் ஒன்று குறித்துச் சிந்திக்கவிடாமல் வைத்துள்ளது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை தவிர்க்கமுடியாமல் ஜனவரி மாதம் இறுதிப் பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது.

கலைக்கப்பட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்தாமல், தற்போது ஆளுனருக்குக் கீழ் வைத்துக்கொண்டு,மாகாணசபை தேர்தல் முறைமையை திருத்தம் செய்து கொண்டு நடத்தலாம் என்று அரசாங்கம் கூறுகின்றது. இப்போதைக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் கூறியுள்ளபோதும், முடியுமானவரையில் மேலும் சில மாதங்களுக்கு மாகாணசபைகளின் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம்.

உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அதுவே நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதிக் காலமாக அமையும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. அதற்குக் காரணம்,உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்திகள் வெளிப்படும் என்றும், அது அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகள் அளிக்கப்படும்போது அது மஹிந்தவின் ஆதரவு அணியான பொது எதிரணியினருக்கு வெற்றியாக அமைந்துவிடும் என்றும் நம்பப்படுகின்றது.

மறுபுறும் மத்தியில் பங்காளிகளாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக்கட்சியும் ஏனைய கட்சிகளும் வாக்குகளை சேகரிக்கும் தேர்தல் களத்தில் பங்காளிகளைப்போல் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக நின்று சேறுவாரிப்பூசி தாக்கிக்கொள்வார்கள். அவ்வாறான ஒரு நிலையானது மத்தியில் எதிரொலிக்கும். அந்த எதிரொலிப்பு நல்லாட்சி அரசை தொடர்வதற்கு சாதகமாக இருக்காது.

இவ்வாறான நிலையில் மஹிந்த ஆதரவு அணியினரான பொது எதிரணியினருக்கு சாதகமாக தெரிந்தாலும், மஹிந்த பொது எதிரணியை ஜீ.எல் பீரிஸ் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சிக்குள் உள்வாங்கி அதற்கு தலைமை கொடுத்து களத்தில் இறக்குவாரா என்பது சந்தேகம்தான்.

அவ்வாறு மஹிந்த செய்வாராயின் அவர் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழக்க வேண்டியிருக்கும். மஹிந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தனது அங்கத்துவத்தை இழக்கத் துணியமாட்டார்.

சுதந்திரக் கட்சியை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக்காலத் தேவைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் காலடியில் போட்டு அதன் மீது ஏறிநின்று தன்னை காப்பாற்றிக்கொள்ளவே செய்வார் என்றும்,ஐக்கிய தேசியக் கட்சியிடம் சரணாகதியடைந்த சுதந்திரக் கட்சியின் ஒரு வேட்பாளராக சென்று சுதந்திரக் கட்சியின் விசுவாசிகளிடம் வாக்குகளை கேட்க முடியாது.

ஆகவே சுதந்திரக் கட்சியில் தற்போது பதவியிலிருக்கும் காலத்துடன் தமது அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நிலையே ஏற்படும் என்ற அச்சம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.அதற்கு ஒரு உதாரணமாக அன்மையில் காலம் நிறைவடைந்த கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணசபைகளில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள், பதவிக்காலம் நிறைவடைந்த அடுத்த மணி நேரத்திற்குள்,சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி,சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டனர்.

இதுவே ஏனைய மாகாணசபைகளிலும் நடக்கும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் இதுவே நடக்கும், மைத்திரியோடு சேர்ந்து இருப்பதைவிடவும் மகிந்தவுடன் சேர்ந்து இருந்தாலே அரசியல் எதிர்காலம் தொடரும் என்ற நிலையில் பலருக்கும் இருப்பதால் அவர்கள் சதுரங்கம் ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறான சதுரங்க ஆட்டங்கள் தமக்கு வாய்ப்பாக இருப்பதாக மகிந்த ஆதரவு அணியினர் நம்பினாலும்,அது இந்த நாட்டின் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மதிப்பை பெறாமல் இருக்குமானால், தேசிய தலைமைக்கான மதிப்பை பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு கொடுக்காது என்ற சிந்தனைகளும் மகிந்த அணியினருக்கு இருக்கவே செய்கின்றது.

அந்த வகையில் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் கவர்ந்து கொள்வதற்கான திரைமறைவுத் திட்டங்களை மஹிந்தவின் ஆசிர்வாதம் பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் வகுக்கத் தொடங்கியுள்ளனர்.முஸ்லிம் கட்சிகளைப் பொருத்தவரை அவர்கள் ஆட்சி யார் பக்கமோ அந்தப் பக்கம் இலகுவாகத் தாவிக்கொள்வார்கள். அவர்கள் அடைந்து கொள்ள தீர்மானித்த அரசியல் இலக்குகள் என்று எதுவும் இல்லை.

பௌத்த நாடான இலங்கையில் பொருளாதார பலத்தோடு முஸ்லிம்கள் இருப்பதும், முஸ்லிம்களுக்கு மத்தியில் பொருளாதார வலிமை மிக்கவர்களாக தாம் பணமும், பதவியும் மிகுந்தவர்களாக இருப்பதும் அவசியம் என்ற கொள்கையின் பிரகாரம் அரசியல் செய்பவர்கள் என்பதால் முஸ்லிம் தலைமைகளை வளைத்துப் பிடிப்பது சிரமமான காரியமல்ல என்பதை மஹிந்தவும், மகிந்தவின் சகோதரர்களான பசிலும், கோட்டாவும் தெரிந்து வைத்திருப்பதாகக் கருதுகின்றார்கள்.

தமிழ்த் தரப்புகளைப் பொறுத்தவரை மஹிந்தவுடன் முன்னர் ஆட்சிப் பங்காளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவும் மஹிந்தவுடன் தனது உறவுகளை நீடிக்காமல் விலகி இருந்துகொண்டார். அவர் நல்லாட்சியின் பங்காளியாக இல்லாதபோதும், பொது எதிரணியுடனும் தன்னை அடையாளம் காட்டாமல் தனியாக இருந்து வருகின்றார்.

மஹிந்த அரசாங்கத்துடன் இருந்து அபிவிருத்தி உட்பட்ட சில காரியங்களை செய்து முடித்திருந்தாலும், மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அந்த அரசாங்கம் செய்த எல்லாமும் தனக்கு ஏற்புடையதல்ல என்றும், மஹிந்தவின் ஆட்சியில் சக்தி மிக்கவர்களாக இருந்த அவரது சகோதரர்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மக்கள் நலத் திட்டங்களை வகுக்காமல்,படையினரிடமும்,சுயநலம் நிறைந்த வியாபாரிகளிடமும் ஆலோசனை நடத்தியே திட்டங்களை வகுத்துச் செயற்பட்டதை விமர்சித்தும் வந்துள்ளதையும் தற்போது வெளிப்படையாக முன்வைத்து வருகின்றார்.

மறுபக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மகிந்த ஆதரவு அணியினருடன் இணக்க உறவுகளை கொண்டிருக்கப்போவதில்லை. இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரை கருணா ஒரு தனிக்கட்சி தொடங்கியதும் மஹிந்தவின் திட்டத்திற்கு அமையவே என்ற விமர்சனங்கள் ஏற்கனவே இருக்கின்றது. ஆகவே கருணா மஹிந்தவின் ஆதரவு கட்சியான பெரமுனவின் ஒரு அங்கமாகவே செயற்படுவார் என்பது உறுதியாகின்றது.

பிள்ளையான் சில கோரிக்கைகளை முன்வைத்தாலும், மஹிந்தவுக்கு எதிராண அணியில் இருக்கப்பொவதில்லை. எனவே கிழக்கில் ஸ்ரீ லங்கா பொது பெரமுன கட்சியின் முகவர்களாக புதியவர்கள் எவரையும் நியமிக்கத் தேவையில்லை. ஆனால் வடக்கைப்பொறுத்தவரை,அவ்வாறான அரசியல் தரப்புகள் தமக்கு முகவராகச் செயற்படமாட்டார்கள் என்பதால் புதிய முகவர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக பெரமுனவின் ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்ச சிந்திக்கின்றார்.

இதன் ஒரு முயற்சியாகவே கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பசில் ராஜபக்ச மூன்று நாட்கள் தங்கியிருந்து நடத்திய சந்திப்புக்களும், கலந்துரையாடல்களும் அமைந்திருந்தன. பசிலின் யாழ்ப்பாண வருகையை ஏற்பாடு செய்தவர்கள் பெரும்பாலும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியிலிருந்து பல்வேறு குற்றங்களைச் செய்து அந்தக் கட்சியினால் விலக்கப்பட்டவர்கள் என்று அந்தக் கட்சி கூறுகின்றவர்களாகவே இருந்தார்கள்.

அவர்களை தமது கட்சியின் யாழ்ப்பாணத்திற்கான முகவர்கள் என்று பசில் ராஜபக்ச அறிமுகப்படுத்தியிருந்தார்;. அவ்வாறு அறிமுகப்படுத்தியவர்கள் எவரும் முதிர்ச்சியான அரசியல் செயற்பாட்டைக் கொண்டவர்களோ,மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களோ இல்லை என்பதைத் தெரிந்து கொண்டும் அவர்களை நியமிப்பதன் நோக்கமானது, அவர்களால் தமது கட்சிக்கு வாக்குகளைத் திரட்டித்தர முடியும் என்பதற்காக அல்ல. ஆனால் யாழ்ப்பாணத்திலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதை தென் இலங்கைக்கு காட்டுவதற்கே என்று பசில் ராஜபக்சவுடன் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல்களிலும், மாகாணசபைத் தேர்தல்களிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வடக்கு, கிழக்கில் போட்டியிடுவதற்கு கூட்டு முயற்சிகளை எடுக்கலாம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டு வெற்றியை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது போகலாம்.

அவ்வாறான நிலையில் அங்கு வெற்றிபெறுகின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேரம் பேசலாம். அதற்காக எந்த விட்டுக்கொடுப்புக்கும் செல்லலாம். அவ்வாறான சூழலில் இன்றைய முகவர்களின் அழுத்தங்களை நிராகரித்துவிட்டு ஆட்சி அமைப்பதற்கான தந்திரோபாயத்திற்கே பசில் ராஜபக்ச முன்னுரிமை கொடுத்துச் செயற்படக்கூடும்.

அதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாத அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக முன்னைய ஆட்சியில் தாம் இருந்தபோது, அதில் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட பசில் ராஜபக்ச செய்த செயற்பாடுகளும், ஏனையவர்களை பொருட்படுத்தா போக்குகளும் பல மூத்த அரசியல் தலைமைகளை பசிலை கடுமையாக விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

பசிலின் தனிப்பட்ட ஒற்றைப்போக்கும், அதனால் மூத்த அமைச்சர்களுக்கு ஏற்பட்டிருந்த அதிருப்திகளும் மகிந்தவின் தோல்விக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. தற்போதும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பீரிஸ் தலைவராக இருந்தாலும்,பிரதான ஒருங்கிணைப்பாளராக பசில் செயற்பட்டுவருவதும்,கடந்த காலத்தைப்போலவே தற்போதும் பசில் செயற்படுவதும்பொது எதிரணியிலுள்ள மூத்த அமைச்சர்களை முகம் சுழிக்கச் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

-ஈழத்துக் கதிரவன்-

SHARE