தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – இந்தியா – சிறிலங்கா என்ற முக்கோண அரசியலுக்குள் மீண்டும் புதைக்க முற்படும் தமிழீழ மக்களின் எதிர்காலம்!  

348

முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்துகொண்டிருந்த போதும், நடந்து முடிந்த பின்னரான முள்வேலி முகாம் அவலங்களின்போதும், அங்கிருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் அழைத்துச் சென்று அழிக்கப்பட்ட வேளைகளிலும் எமது அரசியல் பலத்தின் கணக்கு சரியாகவே இருந்தது.

22 கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இல்லாவிட்டாலும், ஒன்றாகத்தான் இருந்தார்கள். தேர்தல் அறிவிக்கப்படும் தினம் வரை இந்தப் பலம் அப்படியேதான் இருந்தது. யாரும் வெளியேறவோ, யாரும் வெளியேற்றப்படவே இல்லாமல் ஈழத் தமிழர்களது அரசியல் பலத்தின் எண்ணிக்கை 22 என அடித்துக் கூறும் வகையில்தான் இருந்தது.

ஆனாலும், அந்த 22 தமிழீழ மக்களது அரசியல் பலம் அந்த மக்களுக்காக எதனைச் செய்தது? எதனைப் பெற்றுக் கொடுத்தது? முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்ட அந்தப் பாவப்பட்ட வன்னி மக்களைச் சென்று பார்ப்பதற்கே மகிந்தவிடம் விண்ணப்பித்துவிட்டு, கொழும்பில் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய பரிதாபத்தில் இருந்தார்கள்.

அந்த மனிதாபிமான வேண்டுகோளுக்காக ஜனநாயக ரீதியில்க்கூடப் போராட அவர்களால் முடிந்திருக்கவில்லை. தமிழீழ மக்களது இரட்சகர்கள் என இப்போதும் அவர்களால் சுட்டிக் காட்டப்படும் இந்தியா கூட இவர்களது கடைசி வேண்டு கோளுக்கும் கருணை காட்டவில்லை. மகிந்த நினைத்தது போலவே அத்தனையும் நிகழ்ந்தது. மகிந்ந நினைத்ததையே இந்தியாவும் துணை நின்று முடித்தது.

மகிந்த நினைத்ததை நிறைவேற்றி முடிக்கும்வரை தமிழீழ மக்களது அரசியல் பலுமும் காத்துக் கிடந்தது. ஆக மொத்தத்தில், தமிழீழ மக்களது அரசியல் பலம் என்ற 22 தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது அவர்களால், தமிழ் மக்களுக்கு நடந்தது எதையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போ, இனி நடக்கப் போவதை இவர்களால் எப்படித் தடுத்து நிறுத்த முடியும் என்ற கேள்வியுடன் நாங்கள் இந்தக் கட்டுரைக்குள் நுழையலாம்.

முள்ளிவாய்க்கால் வரை ஈழத் தமிழர்களின் இராணுவ, அரசியல் பலமாக இருந்த விடுதலைப் புலிகள் தோற்றகடிக்கப்பட்டபின்னர் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. விடுதலைப் புலிகளின் கருத்துக்களை சிங்கள அரசியல் அரங்கிற்கும், சாவதேச அரங்கிற்கும் கொண்டு செல்லும் பணியை மட்டுமே செய்து கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குழப்பமடைந்து விட்டது.

மிதவாத அரசியலிலிருந்து, தமிழ்த் தேசிய அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட தமிழ்த் தேசியத் தலைமை மீண்டும் இந்தியாவின் ஆசியுடன் மிதவாத அரசியலுக்குத் திரும்பும் முடிவை எடுத்துள்ளது. அதாவது, மீண்டும் எழுபதுகளுக்குத் திரும்பி, அங்கிருந்து பயணிப்பதே அவர்களால் முடிந்த அரசியலாக உள்ளது. அந்த அரசியலை நடாத்துவதற்கு அவர்களுக்குரிய பாதுகாப்பான தளம் இந்தியா என்பதே அவர்களது முடிவு.

அதற்காகவே, இந்தியாவின் ஆலோசனைப்படி இந்திய நலன்களை மீறி மேற்குலகுடன் நெருங்கிவரும் புலம்பெயர் தமிழீழ மக்களது பலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நிராகரிக்கப்பட்டது. இங்கேதான், தமிழீழ மக்களும், தமிழ்த் தேசியவாதிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்படத் தொடங்கினார்கள். தந்தை செல்வா அவர்களால், சுமார் முப்பது ஆண்டு காலமாக முன்நோக்கி நகர்த்தப்பட்ட தமிழ்த் தேசிய சிந்தனை அவருக்குப் பின்னால் வந்த அமிர்தலிங்கம் அவர்களால் இந்தியாவின் கரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அது முள்ளிவாய்க்காலில் சிதைவுற்றுப்போயுள்ளது.

அதே போலவே, முள்ளிவாய்க்காலின் பின்னரான தற்போதைய தமிழ்த் தேசிய சிந்தனையை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவின் கரங்களுக்குள் மீண்டும் கொண்டு செல்ல எத்தனிக்கின்றனர். அது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கே வகை செய்யும் என்பதே தமிழ்த் தேசியவாதிகளின் கருத்தாக உள்ளது. இந்தத் தேர்தலில், எத்தனை பேர் ஒன்றாகப் போனாலும் சிங்கள அரசியல் தளத்தில் எதையுமே செய்ய முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட தமிழீழ மக்களுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளது.

1) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – இந்தியா – சிறிலங்கா என்ற முக்கோண அரசியலுக்குள் மீண்டும் புதைந்து போவது.

2) தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி – புலம்பெயர் தமிழ் சக்தி ஊடான மேற்குலகு என்ற புதிய பலத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறுவது.

இங்கே முதலாவது கூட்டு தமக்கான தெளிவான திட்டத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் ‘நாங்கள் எப்போதுமே தனி நாடு கோரவில்லை’ என்று அறிவித்துவிட்டார். அவர்களது அதியுச்ச விருப்பம் வடக்கு – கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி மட்டுமே. இந்த எல்லையை எட்டுவதற்காக நாம் இத்தனை இழப்புக்களை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

இதற்காக இவர்கள் கரம் பிடித்துள்ள இந்தியா தமிழீழம் என்ற சொல்லே அகராதியில் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. முள்ளிவாய்க்காலின் பின்னர் தளர்ந்துவரும் சிங்களத்தின் மீதான பிடியைத் தக்க வைக்கப் பெரும் பாடுபட்டு வரும் இந்தியா சிங்கள தேசத்துடன் பேரம் பேசும் ஆற்றலை இழந்துவிட்டது. தமிழீழ மக்களுக்காக சிங்கள தேசம் கொடுக்க விரும்புவதில் சமரசம் செய்துகொண்டு, தொடர்ந்தும் தமிழீழ மக்களது அவலங்களைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள முற்படுகின்றது.

இது சிங்கள தேசத்திற்கும் உவப்பானதாகவே உள்ளது. இதில், இந்திய நலன் காக்கப்படுவதை மட்டுமே உறுதிப்படுத்த முடியும். முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது விடுதலைப் புலிகள் தவிர்ந்த மூன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் காப்பாற்ற முன்வராதது மட்டுமல்ல, அவர்கள் அத்தனை பேரும் அழிந்தாலும் பரவாயில்லை, விடுதலைப் புலிகளை அழித்துவிடும்படி சிங்கள தேசத்திற்கு ஆலோசனை வழங்கியதுடன், அதை நிறைவேற்றி முடிப்பதற்காக பொங்கி எழுந்துவந்த அனைத்துலக அழுத்தங்களுக்கும் தடைபோட்ட இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதை எதிர்பார்க்கிறது? என்பது புரிந்து கொள்ள முடியாததாகவே உள்ளது.

இப்போது, புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் பள்ளி கொண்டுள்ள சில ஊடகவியலாளர்களும், புத்தி ஜீவிகளும் ஈழத் தமிழாகளுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே வேலி போட முற்படுவதையும் நீங்கள் அவதானிக்கலாம். ‘புலம்பெயர் நாட்டில் சொகுசாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து கொண்டு, தாயகத்தில் தினம் தினம் சொல்லொணாத் துயரை அனுபவித்துக் கொண்டு அன்றாடச் சீவியத்துக்காக அல்லலுறும் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் எனக் கூறும் தார்மீக உரிமை எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.’ என்று ஒரு ஊடகவியலாளர் தனது கருத்தாக தமிழர் பலத்தைச் சிதைக்கும் நோக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

‘புலம்பெயர் தமிழர்கள்’ ஒரு தனி இனம் என்பது போலவும், அவர்களது தேவைகள் எல்லாம் ஈழத் தமிழர்களின் வாழ்வைச் சிதைப்பது என்பது போலவும் கற்பிதம் செய்யப்படுகின்றது. இதனை எழுதும் ஊடகவியலாளர்களுக்கு அங்கு உறவுகள் எஞ்சி உள்ளதோ தெரியாது. ஆனால், எங்கள் உறவுகளும், வேர்களும், எங்கள் எதிர்காலமும் ஈழத்தில்தான் உள்ளது என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. இங்கே, இந்தத் தேர்தலில் யார் வரவேண்டும், யார் வரக்கூடாது? என்பதல்ல எங்களது அக்கறை.

யார் வந்தாலும் சிங்கள அரசியல் தளத்தில் எதையுமே சாதிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அங்கு கூட்டமாகப் போனாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. தனித்தனியாகப் போனாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் தங்களது விருப்பங்களை சரியாகப் பதிவு செய்யவேண்டிய கட்டாயத்தினுள் உள்ளார்கள். இந்திய நலன்களுக்காக இத்தனை இழந்தோம் என்ற திருப்தியுடன், எஞ்சியவற்றையும் இந்திய நலன்களுக்காக ஒப்படைப்பதா? அல்லது, புலம்பெயர் தமிழர்களின் பலத்துடன் மேற்குலகால் சிங்கள தேசத்தின்மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் மூலமாக நியாயமான தீர்வினைப் பெற முயற்சிப்பதா? என்பதே இன்றுள்ள கேள்வி.

புலம்பெயர் தமிழீழ மக்களது பலம் தற்போது நிரூபிக்கப்பட்ட நிலையில், அதன் காரணமாக மேற்குலகும், சர்வதேச அமைப்புக்களும் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களை அதிகரிக்கும் நிலையில், அதனை முறியடிப்பதற்காக இந்தியா – சிறிலங்கா கூட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அது ஈழத் தமிழ் மக்களுக்காக உருவாகிவரும் ஆதரவுத் தளத்தை சிதைத்துவிடும். மேற்குலகின் தற்போதைய நகர்வைத் தடுத்து நிறுத்திவிட்டால், மீண்டும் அதற்கான காலங்கள் வந்து சேரப் போவதில்லை.

அதனை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்போது ஈழத் தமிழ் மக்களுக்கான தெரிவாக தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி – புலம்பெயர் தமிழ் சக்தி ஊடான மேற்குலகு என்ற புதிய பலம் மட்டுமே உள்ளது. அதற்கும் தடை போட்டு அந்த மக்களை மீண்டும் அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிடாதீர்கள் என்ற வேண்டுகோளை அனைவரிடமும் முன்வைக்கின்றோம்.

SHARE