மந்திரித்துவிடப்பட்ட அரசியல்வாதிகள்

498

 

அரசியல்வாதிகள் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று பறையடிப்பதோ, முஸ்லீம் மக்களுக்காக எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று பிரஸ்தாபிப்பதோ அன்றேல் ஆவர்களை வெறுமனே குற்றஞ்சாட்டுவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் நடப்பு நிலவரங்கள் குறித்த அரசியல் செயற்பாட்டுத் தளங்கள் வலுவிழந்து போயுள்ளதையும், தமது கையாலாகாத்தனம் தீவிரமடைந்து செல்வதையும், சில அரசியல்வாதிகளே தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி கவலை கொள்கின்ற ஒரு சூழலில், சிறுபான்மை முஸ்லீம்களின் அரசியல் மீண்டும் பூச்சியத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றதா என்பதை மீள்வாசிப்புச் செய்யவேண்டிய தேவைப்பாட்டை ஜனாதிபதியுடனான கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் சந்திப்பு தவிர்க்கமுடியாததாக ஆக்கிவிட்டிருக்கின்றது.

இனவாதிகளின் மேலாதிக்கம், 13வது திருத்தம், வடமாகாணசபை தேர்தல் என இலங்கையின் அரசியல் களநிலை திக்குமுக்காடிப்போயிருக்கின்ற ஒரு காலப்பகுதியில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தமை மிகவும் முக்கியமானது.

கடந்த சில மாதங்களாக கிழக்கு மாகாண ஆளுநர் மீதும், முதலமைச்சர் மீதும் பெருவாரியாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. முதலமைச்சர் செயற்றிறன் அற்றவராகவும், தூங்குமூஞ்சியாகவும் இருக்கின்றார் என்று ஒரு தரப்பினர் அபிப்பிராயப்பட்டனர். கிழக்கில் ஆளுநரின் அதிகாரம் மேவி நிற்கின்றது. அவரது ஒப்புதலின்றி அணுவைக்கூட அசைக்க முடியாதுள்ளது என்று இன்னுமொரு தரப்பினர் அறிக்கை விட்டனர். வாய்ப்புக் கிடைத்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம் என்பது போலத்தான் அவர்களது பேச்சுக்கள் இருந்தன.

அந்த வாய்ப்பினை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே ஏற்படுத்திக் கொடுத்தார். மிகச் சரியாக ஒரு கிழமைக்கு முன்னர் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களும் மத்திய அமைச்சர்கள் ஓரிருவரும் பங்கேற்றிருந்தனர். இச்சந்திப்பில் மிகவும் முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. அங்கு இடம்பெற்ற சில உரையாடல்கள் பற்றிய விபரங்கள் மெல்லக் கசிந்துள்ளன.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே மனம் திறந்து உங்கள் பிரச்சினைகளைப் பேசுங்கள் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநரைப் பற்றி விமர்சிக்கப்படுகின்றது. அவர் எனது பிரதிநிதி. எனவே அவரை மாற்றுவது பற்றி யோசிக்காமல் உங்களுக்குள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறுங்கள். தீர்வு காண்போம் என்ற தொணியில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அப்போது கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியை விழித்துப்பேச ஆரம்பித்தார். மாகாண அமைச்சர் என்ற வகையில் தன்னால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாமல் உள்ளது. எல்லாவற்றிலும் ஆளுநர் தலையீடு செய்கின்றார் என்று தனது குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். அதனைச் செவியுற்ற ஜனாதிபதி, ஓ அப்படியா. அப்படி என்றால் ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுங்கள் என்று கூறியுள்ளார். ஒருவழியாக அமைச்சர் உதாரணத்தைக் கண்டுபிடித்து முன்வைத்தார். குறிப்பாக ஒரு அதிபரைக் கூட இடமாற்ற முடியாதுள்ளது என்றார் மனவருத்தத்துடன். இதுதான் உங்கள் பிரச்சினையா? அமைச்சரான உங்களால் இசை செய்துகொள்ள முடியாவிட்டால் அதற்கு தீர்வுகான (இக் கூட்டத்திற்கு நான் வராமல்) எனது செயலாளரை அனுப்பி இருப்பேன் என்றார் ஜனாதிபதி.
அதற்குப் பிறகு இன்னுமொரு அமைச்சர் தம்பக்க பிரச்சினைகளை எடுத்துரைத்தார். தனது அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு செயற்றிட்டத்திற்கு அங்கீகாரம் வழங்காமல் ஆளுநர் இழுத்தடிக்கின்றார் என்று முறையிட்டார். இக்கேள்வியை ஜனாதிபதி ஆளுநருக்கே திருப்பிவிட்டார். ஆளுநர் பதிலளிக்கையில் இது தொடர்பாக சுமார் 01 மாதத்திற்கு முன்னர் நான் உங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இன்னும் பதில் வரவில்லையே என்றார். அமைச்சர் வாயடைத்துப் போனர்.

இதன்பிறகு அங்கொன்றும், இங்கொன்றுமாய் மாகாண அமைச்சர்களும், உறுப்பினர்களும் தமது குறைநிறைகளை எடுத்தியம்பினர். பயணக் கொடுப்பனவுகள் கிடைக்காமை, தீர்வையற்ற வாகனத்திற்கான அனுமதிப் பத்திரம் (பேர்மிற்) கிடைக்கப் பெறாமை, தாம் மேற்கொண்ட செலவுகளுக்கான கோரல்கள் (கிளைம்) வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை, வாகன வசதியில் பற்றாக்குறை என இன்னபிற சலுகைகள் பற்றியே அவர்கள் ஜனாதிபதியிடம் பெரும்பாலும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது மிகவும் ஆழமாக அலசப்பட வேண்டியதாகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்கு ஆட்சித் தலைமையை அழைத்திருக்கின்றது. மனம் திறந்து பேசும்படி கேட்டும் இருக்கின்றார். ஆனால் மக்களின் வாக்குகளால் சபைக்கு தெரிவாகி, அதிலுள்ள வரப்பிரசாதங்களை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற உறுப்பினர்கள் மனம்திறந்து பேசியது அதிகமாக தமது சொந்த சலுகைகள் பற்றித்தான்.
இக்கூட்டத்திற்கு வரும் முன்னரே சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி நன்று ஆராய்ந்து கொண்டே வந்திருப்பார். ஆனால் இவர்கள் வெறும் கையும் வீசிய கையுமாக கூட்டத்திற்கு சென்றிருக்கின்றார்கள் என்பது போலத்தான் தெரிகின்றது. கிழக்கு மாகாணத்தில் காத்திரமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு முடியாமல் இருக்கின்றது. எந்தவொரு சின்னகாரியத்தை மேற்கொள்வதாயினும் ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியிருக்கின்றது. சில வேலைத்திட்டங்களுக்கு இவர் தடையாக இருக்கின்றார் என்று பத்திரிகைகளில் அறிக்கைவிட்டு தம்மை மக்களின் நண்பனாக காட்டிக் கொண்டவர்கள் மற்றும் முதலமைச்சரில் குறை கண்டவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்? தமது பிரச்சினைகளுக்கான ஆதாரங்களை திரட்டி ஒரு ஆவணமாக வைத்திருந்திருக்கவேண்டும். ஜனாதிபதி கேட்டவுடன் முன்னே வைத்திருக்கவேண்டும். ஆனால் அதனைச் செய்ய இம்முறையும் தவறிவிட்டனர்.

13வது திருத்தத்தினால் மாகாண சபைகளின் அதிகாரங்கள் தவணை முறையில் காவு கொள்ளப்படும் அபாயமுள்ளது. இறைச்சிக் கடைகள் மீது இனவாதக் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கின்றது. ஹபாயாவை கழற்றி எறிய துச்சாதனன்கள் மனக் கணக்கு போடுகின்றார்கள். இப்படிபேசுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தன. ஆனால் அவர்களது பேச்சுக்கள் வரையறுக்கப்பட்டவையாக இருந்தன. அக்கறையின்மையும் பயத்துடன் பெரிதும் தொடர்புற்ற இன்னபிற காரணங்களும் அவர்களது வீராப்பு பேச்சுக்களுக்கு தற்காலிக தடையிட்டிருந்தன.

கிழக்கு மாகாணத்தில் இருந்து போனவர்கள் அநேகர் மஹியங்கனையை தாண்டியே சென்றிருப்பார்கள். அப்போதாவது பள்ளிகள் மீதான தாக்குதல்கள் ஞாபகத்திற்கு வராமல் போனது வெறும் ஞாபகமறதியல்ல. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியுடன் இது விடயமாக பேசியிருந்தும் முஸ்லீம்கள் கணிசமாக வாழும் ஒரு மாகாண சபையின் அநேக உறுப்பினர்கள் தம்பங்கிற்கு எதுவும் பேசமுடியாது மந்திரித்து விடப்பட்டவர்கள் போல் இருந்தார்கள். இவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் நோன்பு திறப்பதற்காகத் தான் வாயையே திறந்தார்களாம். அதுவரை மூச்சுக்காட்ட முடியாதளவுக்கு கண்டி குளிரில் உறைந்து போயிருந்தார்களாம் என்கிறார் நண்பர் ஒருத்தர்.

இந்தக் கூட்டத்திலும் இதுபோன்ற வேறு சந்திப்புக்களிலும் மக்களுக்காக பேசியவர்கள் நன்றிக்குரியவர்கள். ஆனால் கூட்டம் முடிந்து தமது கோட்டைகளுக்கு திரும்பிய பின்னர் சில மக்கள் பிரதிநிதிகள் வழக்கம் போல தாம் அனைத்து விடயங்களையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துவிட்டதாக கூறி பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இன்னும் பலர் எதுவும் பேசமுடியாத கையறு நிலையை எண்ணி நெருக்கமானவர்களிடம் குமுறிக்கொண்டிருப்பதாக கேள்வி.
கண்டியில் நடைபெற்ற ஒரேயொரு நிகழ்வு தானே என்று சொல்வீர்கள். உண்மை தான். ஆனால் இவ்வாறு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பயன்படுத்தப்படாது விட்டதும், வீட்டுவேலையை செய்யாமல் பாடசாலைக்கு வரும் சிறுவனைப்போல் ஆதாரங்களின்றி பேச்சுக்காக மேசைகளில் அமர்வதும் இதுவே முதலாவது சந்தர்ப்பமல்ல என்பதுதான் இப்படி ஒரு கட்டுரையையும் அவசியமாக்கியிருக்கின்றது. பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் கிட்டத்தட்ட இதுதான் நாள்தோறும் நடந்துகொண்டிருக்கின்றது. மர்ஹூம் அஷ்ரப்பிற்கு பிறகு வந்த முஸ்லீம் தலைமைகளில் அநேகர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் சிறப்புரிமையை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். அல்லது இன்னும் பயன்படுத்த இடமிருந்தது. முஸ்லீம்களால் அவைக்கு அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் சும்மா வந்து இருந்துவிட்டு செல்கிறார்கள் என்று பாராளுமன்ற செய்தி சேகரிப்பில் ஈடுபடும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

அமைச்சரவைக் கூட்டத்திலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பங்களில்தான் சமூகத்திற்காக இவர்கள் வாயைத் திறந்திருக்கின்றார்கள். அதுவும் இனவாத பிக்குகளின் செயற்பாடுகள் கட்டுக்கடங்காமல் போனபிறகே அமைச்சரவையில் அவர்களது குரல்கள் ஜனாதிபதி முன்னே சற்று சத்தமாக ஒலித்தன. ஆனால் இதுபோன்ற ஒருசில முக்கிய சந்திப்புக்களில் உள்ளே நடைபெறும் விடயம் வெளியில் தெரிவதில்லை என்பதால் சிலருக்கு வசதியாகிப் போய்விட்டது. அங்கு பார்வையாளராக இருந்துவிட்டு வெளியே வந்தபின் கூட்டம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், தானே பிரதம கருத்து வெளிப்படுத்துனராக இருந்தது போன்றும் சொல்லிக்கொள்வார்கள்.

தேர்தல் வந்துவிட்டால் அப்பாவி மக்கள் முன்னே தாம் தூம் எனக் குதிப்பவர்கள். காரியம் ஆகவேண்டிய இடத்தில் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவதால் ஒரு பிரச்சினைக்கேனும் உரிய காலத்தில் தீர்வு காணப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிராக ஏதாவது அநியாயம் இழைக்கப்பட்டால் அதனை அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் பண்டாரவோ, ராலஹாமியோ தெரியப்படுத்த மாட்டார்கள். நம்முள்ளே இருந்து தெரிவு செய்யப்பட்ட அப்துல்லாவோ, அய்யாத்துரையோதான் எத்திவைக்க வேண்டும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற இழுபறியில் காலம் கடந்து போகின்றது.

அண்மைக்காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட பிரச்சினைகளை ஆரம்பத்தில் பூசி மொழுகிய முஸ்லீம் அரசியல்வாதிகள் அப்பிரச்சினைகள் முற்றிய பின்னரே ஜனாதிபதியிடம் ஓடினர். அவ்வாறான அநேக சந்தர்ப்பங்களில் ஓ அப்படி நடந்ததா? எனக்கு தெரியவில்லை. நீங்கள் தெரியப்படுத்தவில்லையே என்று ஜனாதிபதி பதிலளித்ததும் முஸ்லீம் தலைமைகள் அசடு வழிந்ததும் நமக்கு மறந்து போகவில்லை.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற வாதத்திலும் சொன்னால் மட்டும் என்ன நடந்துவிடப்போகின்றது? என்ற விதண்டாவாதத்திலும் மக்களின் பிரச்சினைகளை மேல்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் தலையாய பொறுப்பை தட்டிக் கழித்துவிடுவது மகா பாவமாகும். முஸ்லீம்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சி என்றும் அவர்களது விடயத்தில் பக்குவமாக நடந்துகொள்ளும் தலைமைகள் என்றும் தம்மைத்தாமே அறிமுகப்படுத்திக் கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள், தாம் சார்ந்த மக்கள் தொடர்பில் அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயங்கள் குறித்து ஆதாரங்களையோ, அத்தாட்சிகளையோ அவ்வாறில்லாத பட்சத்தில் ஆவண ரீதியான கோப்புக்களை தேவை ஏற்படும் நேரத்தில் பயன்படுத்தக்கூடியதாக வைத்திருப்பதில்லை என்பதற்கு இன்னுமொரு நல்ல உதாரணம் நினைவுக்கு வருகின்றது.
அதாகப்பட்டது புலிகளுடனான அரசின் சமாதானப் பேச்சுவார்த்தையாகும். மிகுந்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் இப்பேச்சுவார்த்தையில் முஸ்லீம்கள் சார்பில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது இனமோதல் காலத்தில் அரச படைகளாலும், புலிகளாலும் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட அழிவுகள், அநீதியிழைப்புக்கள் பற்றிய முழுமையான விபரங்கள் பேச்சுவார்த்தையில் பங்குபற்றியவர்கள் கையில் வைத்திருக்கவில்லை. அவ்வாறு குறிப்பிடத்தக்க கோப்புக்களை வைத்திருந்த உள்ளுர் அமைப்புக்களுக்கு அந்த மேசையில் அமரும் அதிகாரம் கிடைக்கவில்லை. இது ஜனநாயக நாடு. ஆனாலும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையுடன் சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்டது. இந்த ஒரு காரணத்திற்காகவே சிறுபான்மையினரின் பேச்சு எடுபடாமல் போவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்கின்றன. எனவே சிங்கள ஆட்சியாளர்களுடன், பெரும்பான்மை மக்களுடனும் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டுமென்பதை நான் சொல்லத்தேவையில்லை.

மக்கள் நலன் கருதி எனக்கூறிக்கொண்டு எல்லா சந்தர்ப்பங்களிலும் அறிக்கை விட்டுக்கொண்டும், அரச தலைமையை பகைத்துக்கொண்டும் சிலர் சொல்வதுபோல் அரசிலிருந்து வெளியேறிக் கொண்டும் இருக்கவேண்டும் என்ற அர்த்தமில்லை. ஆனால் பேச வேண்டிய இடத்தில் பேசியே ஆகவேண்டும். பாடவேண்டிய இடத்தில் பாடியே தீரவேண்டும். பாத்ரூமில் பாடுபவர்கள் எவ்வளவு நன்றாக பாடினாலும் அவர்களை பாடகர்கள் என்று யாரும் அழைப்பதில்லை மேடையில் பாடாத வரைக்கும்.

 

TPN NEWS

 

SHARE