தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு நான்கு கட்சிகளும் 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் விஞ்ஞாபனத்தை நான்கு கட்சிகளும் இணைந்தே கொழும்பில் வைத்து தயாரித்து அதனை வெளியிட்டிருந்தன.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி கோரிய போது அதற்கு ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த வசனம் சேர்க்கப்படாமலே 2001ல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதிலும், வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் நான்கு கட்சிகளுமே முடிவுகளை எடுத்தன.
ஆனால் 2004ஆம் ஆண்டு தேர்தலில் இந்த நிலைமை முற்றாக மாற்றப்பட்டிருந்தது. வேட்பாளர் தெரிவில் விடுதலைப்புலிகளே அதிக ஈடுபாடு காட்டியிருந்தனர். தேர்தல் விஞ்ஞானமும் கிளிநொச்சியிலேயே தயாரிக்கப்பட்டது.
தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் 2004 பெப்ரவரி 25ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன், நீதித்துறை பொறுப்பாளர் ஈ.பரராசசிங்கம், திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எஸ்.திலக், யாழ். மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எஸ்.இளம்பரிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராசா ( தமிழரசுக்கட்சி ) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ( அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ) சுரேஷ் பிரேமச்சந்திரன் ( ஈ.பி.ஆர்.எல்.எவ் ) என்.சிறிகாந்தா ( ரெலோ) எஸ்.கஜேந்திரன் ( பொதுப்பட்டியல் ) கலந்து கொண்டனர்.
தேர்தல் விஞ்ஞானபத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் தேர்தல் பிரசாரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைகள் பற்றி அங்கு ஆராயப்பட்டது. இந்த கூட்டம் அடுத்த நாளும் நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்.சம்பந்தன் இந்த தேர்தல் தமிழீழ விடுதலைப்புலிகளின் முழுப்பங்களிப்புடன் நடைபெறும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்;ப்பாணத்தில் 2004 மார்ச் முதலாம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதனை வெளியிட்டு வைத்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
1977ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமாக அது அமைந்திருந்தது. தமிழ் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியனவற்றை வலியுறுத்தும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருந்தது. 10 கோரிக்கைகள் இதில் முக்கியமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.
இதில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்வருமாறு அந்த வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது.
Accepting LTTE’s leadership as the national leadership of the Tamil Eelam Tamils and the Liberation Tigers as the sole and authentic representatives of the Tamil people, let us devote our full cooperation for the ideals of the Liberation Tigers’ struggle with honesty and steadfastness.Let us endeavour determinedly,
வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தான் மட்டக்களப்பில் பேரடியாக அமைந்தது கருணாவின் பிளவு.
கருணாவின் பிளவு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று அஞ்சும் வகையில் இந்த பிளவு அமைந்திருந்தது.
2004 மார்ச் 03ஆம் திகதி புதன்கிழமை. அன்றுதான் அந்த பூகம்பம் வெடித்த நாள்.
மட்டக்களப்பு நகரில் இருந்து வெளிவந்த தினக்கதிர் தினசரி பத்திரிகை நின்று போனபின் கொக்கட்டிச்சோலையில் இருந்து தமிழ்அலை என்ற பத்திரிகை வெளிவந்தது. விடுதலைப்புலிகளே அதனை வெளியிட்டனர். ஊடகவியலாளராக இருந்து பின்னர் விடுதலைப்புலிகள் இயக்க போராளியான நித்தியானந்தனின் பெயரில் நித்தி பதிப்பகம் என்ற பெயரில் கொக்கட்டிச்சோலையில் அமைக்கப்பட்ட அச்சகத்தில் தமிழ்அலை பத்திரிகை தினசரியாக வெளிவந்து கொண்டிருந்தது.
பா.அரியநேத்திரன் தமிழ்அலை பத்திரிகை மற்றும் நித்தி பதிப்பகம் ஆகியவற்றின் பொதுமுகாமையாளராக பணியாற்றினார். தமிழ்அலை பத்திரிகையின் பிரதம ஆசிரியராக வேணுகோபால் பணியாற்றினார். நான் விடிவானம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது அரியநேத்திரனும், வேணுகோபாலும் விடிவானம் பத்திரிகையில் இணைந்து கொண்டனர். அவர்களின் முதலாவது பத்திரிகை பிரவேசம் அதுதான். தினக்கதிரிலும் இருவரும் பணியாற்றினர். பின்னர் விடுதலைப்புலிகள் தமிழ்அலை பத்திரிகையை ஆரம்பித்த போது இருவரும் பொதுமுகாமையாளர் மற்றும் பிரதம ஆசிரியர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.
பிரதம ஆசிரியராக பணியாற்றிய வேணுகோபாலுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என்பதற்காக அந்த நாளில் என்னை பணியாற்றுமாறு அரியநேத்திரனும் வேணுகோபாலும் வேண்டுகோள் விடுத்தனர். மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினசரி பத்திரிகைக்கு எனது பங்களிப்பாக இருக்கட்டுமே என்பதற்காக புதன்கிழமையில் பணியாற்றுவதற்கு சம்மதித்திருந்தேன். ஊதிபம் எதுவும் அற்ற வகையில் ஒரு சேவையாக அதனை செய்ய சம்மதித்திருந்தேன்.
மார்ச் 03ஆம் திகதி புதன்கிழமை வழமைபோல மட்டக்களப்பு நகரிலிருந்து கொக்கட்டிச்சோலைக்கு போனபோது மண்முனைத்துறையடியில் மக்கள் கூடி கூடி கதைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன பிரச்சினை என ஒருவரிடம் கேட்டேன். இயக்கத்திற்குள் ஏதோ பிரச்சினையாம் என ஒருவர் சொன்னார்.
தமிழ்அலை பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்ததும் இன்றைக்கு பேப்பர் அடிக்கலாமோ தெரியாது என கணணி பகுதியில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் வந்து சொன்னார். அதெல்லாம் பிரச்சினையும் இல்லை. நீங்கள் வழமையான வேலைகளை செய்யுங்கள் என சொல்லி விட்டு எனது வேலைகளை ஆரம்பித்தேன்.
சற்றுநேரத்தில் அங்கு வேலை செய்யும் இன்னுமொருவர் வந்து இங்க பெரிய பிரச்சினை போல கேள்ளிப்பட்டனீங்களா என கேட்டார். என்ன பிரச்சினை என கேட்டேன்.
கௌசல்யனின் கல்யாணம் நின்று போச்சு, கல்யாண ஏற்பாடுகள், சமையல்கள் எல்லாம் இடைநடுவில் எல்லாம் குழம்பி போய் கிடக்குது என்றார். முதலில் இயக்கத்திற்குள் பிரச்சினை என்றார்கள், இப்போது கௌசல்யனின் கல்யாணம் நின்று போய்விட்டது என்கிறார்கள் என எனக்கு குழப்பமாக இருந்தது
மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளராக இருந்த கௌசல்யனின் கல்யாணம் மார்ச் 03ஆம் திகதி நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது திருமண சாப்பாட்டிற்காக இறால் வாங்கி வருவதாக வாகரைக்கு சென்ற கௌசல்யனும் மட்டக்களப்பு நகர அரசியல் பொறுப்பாளர் சேனாதிராசாவும் வன்னிக்கு சென்று விட்டார்கள், இதனால் இன்று நடைபெற இருந்த கௌல்யனின் கல்யாணம் நின்று போய்விட்டது அவரின் வீட்டாரும் பெண்வீட்டாரும் பெரும் கவலையில் உள்ளனர். இயக்கத்திற்குள் ஏதோ பிரச்சினையாம், அதனால் தான் கௌசல்யன் திருமணத்தையும் பார்க்காமல் வன்னிக்கு சென்றுவிட்டார் என அவர் சொன்னார்.
இயக்கத்திற்குள் பிரச்சினை என காலையில் அறிந்த போது அது ஏதோ சின்னப்பிரச்சினையாக இருக்கும், அதை தீர்த்துவிடுவார்கள் என நம்பிய எனக்கு கௌசல்யன் தன் திருமணத்தையும் நிறுத்தி விட்டு வன்னிக்கு சென்று விட்டார் என்பதை அறிந்த போது பிரச்சினை பாரதூரமாக இருக்கும் என ஊகித்துக்கொண்டேன்.
வன்னித்தலைமைக்கும் மட்டக்களப்பு தலைமைக்கும் இடையில் பூசல் ஒன்று இருப்பதை ஏற்கனவே எம்மில் பலரும் அறிந்திருந்தோம். ஆனால் அதனை விடுதலைப்புலிகளின் தலைமை தீர்த்து வைத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது
விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து மட்டக்களப்பு அம்பாறை தளபதியாக இருந்த கருணா தலைமையிலான அணி ஒன்று பிரிந்து விட்டது என ஏபி செய்தி சேவை முதலாவதாக செய்தியை வெளியிட்டது நண்பகல் அளவில் அந்த செய்தி வெளியானதும் இந்த பரபரப்பு மேலும் அதிகரித்தது
தமிழ்அலை தொலைபேசிக்கும் எனது தொலைபேசிக்கும் அழைப்புக்கள் வந்தவண்ணம் இருந்தன. மட்டக்களப்பு நகரில் இருந்த நடேசன் தொடர்பு கொண்டு பிரச்சினை என்ன மாதிரி என்று கேட்டான். எப்படியும் சமாளித்து விடுவார்கள் என சொன்னேன். இல்லை பிரச்சினை பெரியளவில் போகுது என்றான்.
கொழும்பில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் தகவல்களை அறிந்து கொள்வதற்காக தமிழ்அலை அலுவலகத்திற்கே தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு பதிலளிப்பதிலேயே எனது நேரம் செலவழிந்தது. கிளிநொச்சியிலிருந்து தயா மாஸ்ரரின் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு நிலமையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களும் பிற்பகல் 2மணியளவில் தொடர்பு கொண்டு முயற்சிகள் நடைபெறுகிறது எப்படியும் சுமூகமாக தீர்ந்து விடும் என நம்பிக்கை தெரிவித்தார். கௌசல்யன் அங்கு வந்து விட்டராமே என கேட்டேன். கௌசல்யன் மட்டுமல்ல இன்னும் பலர் வந்துவிட்டார்கள் என சொல்லி சிரித்தார்.
சிவராம் கொழும்பில் இருந்து தொடர்பு கொண்டான். தொலைபேசியை நான் எடுத்த போது சொல்லிவிடு வெண்ணிலவே என்றான். நான் தமிழ்அலையில் நின்பேன் என அவன் எதிர்பார்க்கவில்லை. யாரடா வெண்ணிலவு என்றேன். சமாளித்து கொண்டு நான் கொழும்பில் நிற்கிறேன். இரவு வெளிக்கிட்டு நாளை காலை அம்மானை சந்திக்க வருகிறேன் என்றான்.
மாலை மற்றுமொரு செய்தி வந்தது. முனைக்காடு பாடசாலையில் மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டு அதில் கலந்து கொள்ளாது தளபதி ரமேஷ் வன்னிக்கு சென்று விட்டார் என்ற தகவலும் வந்தது. மக்கள் சந்திப்பை நடத்தி மக்களுக்கு இதுபற்றி விளக்கமளிக்குமாறு கருணா ரமேஷிற்கு உத்தரவிட்டிருந்தார். கருணாவிற்கு நம்பகமானவர்களையே ரமேஷிற்கு பாதுகாப்பிற்கும் விட்டிருந்தார். பாடசாலைக்கு மக்கள் சந்திப்புக்கு வருகிறேன் அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுங்கள் என கருணா அனுப்பிய மெய்பாதுகாப்பாளர்களை திசை திருப்பி விட்டு ரமேஷ் வன்னி சென்று விட்டதாக தகவல் வந்தது.
தளபதி ரமேஷ் தன்னை விட்டு வன்னிக்கு சென்றுவிட்டார் என்ற செய்தி கருணாவுக்கு பேரிடியாகவே இருந்திருக்கும். தளபதி ரமேஷ் போன்றவர்கள் தன்னுடன் இருப்பார்கள் என கருணா நம்பியிருந்தார்.
மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளராக இருந்த கௌசல்யன் வன்னிக்கு சென்றதை அடுத்து மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளராக கரிகாலன் கருணாவினால் நியமிக்கப்பட்டார்.
இரவு எட்டுமணியளவில் மட்டக்களப்பு அம்பாறை துணை அரசியல் பொறுப்பாளராக இருந்த கிருசன் அறிக்கை ஒன்றை கொண்டு வந்தான்.
அண்ணை இந்த அறிக்கையை தான் தலைப்பு செய்தியாக போடுங்கோ, இனி நாங்கள் தனியாகத்தான் இயங்கபோறம். வன்னியோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என வீராவேசமாக பேசினான். இந்த அறிக்கையை நாளை காலையில தமிழ்அலையிலை வந்த பிறகு மற்ற ஊடகங்களுக்கு அனுப்ப சொல்லி அம்மான் சொல்லியிருக்கிறார் என கிரிசன் சொன்னான். அறிக்கையில் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலன் என ஒப்பமிடப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு அம்பாறையில் உள்ள விடுதலைப்புலிகள் கருணா தலைமையில் பிரிந்து தனியாக செயற்பட போவதாகவும், பிரிந்து செல்வதற்கான காரணங்களும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுமூகமாக பேசித்தீர்த்து விடலாம் என தமிழ்செல்வன் அவர்கள் சொல்கிறார். ஆனால் இந்த அறிக்கையை பார்த்தால் பிளவு நிரந்தரமாகிவிடும் போல தெரிகிறது. சற்று நேரத்தில் கிரிசன் சென்று விட்டான். கிளிநொச்சியிலிருந்து தயா மாஸ்ரர் தொடர்பு கொண்டார். அறிக்கை ஒன்று தந்திருக்கிறார்கள் என சொன்னேன். என்ன செய்யப்போறீங்கள்? அறிக்கையை போடப்போறீங்களா என கேட்டார். எதற்கும் யோசித்து முடிவெடுங்கோ என சொல்லிவிட்டு வைத்து விட்டார்.
அறிக்கையை போடுவதில்லை என்ற முடிவோடு இரவு இரண்டு மணியளவில் இறுதியாக தலைப்பு செய்தியை எழுதிக்கொடுத்தேன். விடுதலைப்புலிகளுக்குள் பிளவு இல்லை, தலைமையுடன் ஒற்றுமையாக செயற்பட மட்டக்களப்பில் உள்ள விடுதலைப்புலிகள் முடிவு என்ற தலைப்புடன் தமிழ்அலை பத்திரிகை வியாழக்கிழமை காலை வெளிவந்தது. அதை மேற்கோள் காட்டி தமிழ்நெற் உட்பட பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
ஆனால் அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை தமிழ்அலை பத்திரிகையின் தலைப்பு முற்றாக மாறியிருந்தது. தமிழ்அலை பத்திரிகை கருணாவிற்கு ஆதரவானவர்களின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு கருணாவை புகழ்ந்தும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் இகழ்ந்தும் செய்திகள் வெளிவந்தன.
( தொடரும் )
-இரா.துரைரத்தினம் .