“சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்”
வடக்கில் புதிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்து காணப்படுகிறதென்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் களமிறங்குவதற்காக இக்கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.
இதை உருவாக்குவதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நேரொத்த கூட்டணியாக இது இருக்கப்போவது மாத்திரமல்ல சவாலாகவும் மாறப்போகிறது என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், சுரேஷ் பிரேமச்சந்திரனை தலைமையாகக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.ஆகிய கட்சிகள் இணைந்து இப்புதிய கூட்டணியினூடாக புதியதொரு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கூட்டணிக்கு அனுசரணை வழங்க தமிழ் மக்கள் பேரவையும் சில அமைப்புகளும் தயாராகவுள்ளன என்ற தகவல்களும் கசிந்து கொண்டிருக்கின்றன.
ஏலவே 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுடன் ஏற்பட்ட விரிசல்கள், இடைக்கால அறிக்கை சார்பான கருத்துக்களுடன் உரம்பெற்று தற்பொழுது உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் கூட்டமைப்பென்ற குடையின் கீழ் ஒன்றுபட்டு நின்ற கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகளும் நேர் எதிர்வாதங்களும் காய்தல், உவத்தல்களும் வலுத்துப்போவதை கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது.
இன்னும் தெளிவாக சொல்வதானால் தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சி மீதும், தம்பியால் உண்டாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் கண்பட்டுவிட்டதோ அல்லது யாராவது சூன்யம் செய்துவிட்டார்களோ என்று கவலைகொள்ளும் அளவுக்கு நிலைமைகள் தமிழ் மக்களை கவலைகொள்ள வைக்கின்றது.
குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கூட்டமைப்புக்குள் தெளிவான ஒருமித்த போக்கு குறைந்தளவே காணப்பட்டு வந்தன என்ற கருத்தில் உண்மையுள்ளதோ இல்லையோ, சில சந்தர்ப்பங்களில் அவை வெளிப்படையாக உணரப்பட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்தது.
அதிலும் 2010 ஆம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான நேர்நிலைத்தன்மைகள் பெரியளவில் காணப்படவில்லையென்பதும் சுட்டிக்காட்டப்பட்ட விடயமாகும்.
கடந்தவாரம் தமிழ் மக்கள் பேரவையானது நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலொன்றை நடத்தியது.
இதனையடுத்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கி வடகிழக்கில் போட்டியிடப் போவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். அணித்தலைவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
புதிய கூட்டணியின் தேவை அவசியம் பற்றி கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையானது தமிழ்த்தேசிய நலன்களை உதாசீனம் செய்கிறது.
தமிழ்த்தேசிய அபிலாஷைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இவ் இடைக்கால அறிக்கையின் பின்னணியிலேயே இதனை முழுமையாக ஆதரித்து கூட்டமைப்பானது மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்போகிறது.
எனவேதான் இவ்வரசியல் அமைப்பை ஏன் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டுமென்ற காரணங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டுமாயின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலை ஒரு கருத்துக்கணிப்பாக மாற்ற முயற்சி செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தார்.
பொன்னம்பலத்தின் கருத்துக்கள் தர்க்க ரீதியாக உடன்பாடு காணக்கூடியதாகவிருந்தாலும் ஒரு அக்கினிப் பரீட்சையை நடாத்தக்கூடிய களமாகவோ நேரமாகவோ இதைப் பார்க்கக்கூடாது என்பதே மக்களின் கருத்தாகும்.
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தீர்வையும் நான் கைநீட்டி வரவேற்கப்போவதில்லை. தமிழ் மக்களின் நீண்டகால அறவழி ஆயுத மற்றும் ராஜதந்திரப் போராட்டங்களுக்குரிய பெறுமதிமிக்க ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் வரை யான் ஓயப்போவதில்லையென்ற தனது அழுத்தமான கருத்துக்களை த.தே.கூ. அமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பல தடவைகள் கூறிவருவதுடன் அதற்காகவே பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு போராடி வருகிறாரென்பது உலகமறிந்த விடயமாகும்.
அதுமட்டுமன்றி ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டது போல், இரா.சம்பந்தன் எமக்கு கிடைத்த கடைசி ஆயுதம் என்பது போல் தமிழ் மக்களின் இறுதிப் போராளியாக இருக்கப்போவதும் அவரே என்பதை தமிழ் மக்கள் மாத்திரமல்ல கூட்டமைப்புக்குள் உள்ள சகல பங்காளிக் கட்சிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் போராட்டத்தை தந்தை செல்வா அவர்கள் ஒரு காலகட்டத்துக்குள் இருந்து இன்னொரு கால களத்துக்குள் கொண்டுவந்து விட்டார்.
தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் உரிமைப்போரை ஆயுதப்போர் என்ற வடிவத்தில் மூன்று தசாப்த கால வல்லமைப் போராக மாற்றிய பெருமை அவரையே சாரும். தற்பொழுது ராஜதந்திர ரீதியான நகர்வுகள் மூலம் உலகத்தரப்பின் ஒத்தாசையுடன் தமிழ் மக்களுக்கான உரிமையை வென்றெடுக்கும் சாணக்கியப் போரை நடாத்திக் கொண்டிருக்கும் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்தாசை வழங்கி பலம் சேர்க்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோமென்ற நிலையே யதார்த்தமானது.
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ மற்றும் மஹிந்த அணியினர் அரசியலமைப்பு சபையின் உருவாக்கமானது செல்லுபடியற்றதாகும். இவை அரசியல் அமைப்புக்கு முரணானவையாகும்.
ஆகவே அரசியல் அமைப்பு நிர்ணய சபையை உடனடியாக கலைத்து விடுங்கள் என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வகையான கடும்போக்கு கோஷத்தை பௌத்த பீடங்களையும், விஹாராதிபதிகளையும் எழுப்புவதற்கு தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வகை இனவாத கோஷங்கள் தென்னிலங்கை மக்களுக்கு கேட்கிறதோ என்னவோ, அடிக்கு மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் நிலைமைகளை மாற்றுவதற்கு வெகுநேரம் பிடிக்காது என்பதை தமிழ்த் தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தலைவர் சம்பந்தனைப் பொறுத்தவரை இருபக்க நிலைமைகளை சமாளிக்கவும் வென்றெடுக்கவேண்டிய நிலையில் உள்ளார் என்பது சாதாரண மனிதன் ஒருவனும் விளங்கிக்கொள்ளும் விவகாரமாகும்.
புதிய அரசியல் அமைப்புக்கு இன்னொரு வகையில் கூறுவதானால், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வுக்கு இனவாதிகள், அடிப்படைவாதிகள், பெளத்தபீடங்கள், தென்னிலங்கை கடுமைசார் புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் என்ற பரந்தளவிலான குழுவினர் எதிர்ப்பு காட்டி வருகிறார்கள்.
அரசியலமைப்பு வரைவதற்கு முன்னமே பூசை ஆவதற்கு முன் சன்னதம் கொள்ளுவதுபோல் எதிர்ப்புக் காட்டுகிறார்கள். அதுவும் இடைக்கால அறிக்கையையே எதிர்க்கும் அவர்கள் அரசியல் வரைபை எவ்வாறு எதிர்ப்பார்கள் என்று கற்பனை கூட, செய்து பார்க்க முடியாத நிலை. இவ்வகை எதிர்ப்புக்களை சமாளிக்க வேண்டிய நிலை இரா.சம்பந்தன் ஐயாவின் நிலை.
மறுபுறம் இடைக்கால அறிக்கையில் ஒன்றுமில்லை, இது ஒரு ஏமாற்றுப்பத்திரம், இதை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
புதிய தலைமைத்துவத்தின் தேவை தற்பொழுது உணரப்பட்டிருக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆணையை உதாசீனம் செய்து செயற்படுகிறது.
தமிழரசுக்கட்சி கூட்டமைப்புக்குள் தன்னிச்சையாக செயற்படுகிறது. வடகிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் சீறிக் கொண்டிருக்கும் தரப்பினரை சமாளிக்க வேண்டிய தேவையென ஏகப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் சமநிலையை உண்டாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பின் தலைவரைச் சார்ந்தது என்ற தார்மீக பொறுப்பை உணர்ந்து எதிர்வாதம் புரிபவர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் காணப்படுகிறது.
அரசியல் தீர்வென்ற முறையொன்றின் கீழ் அதிகாரப் பகிர்வை பெறக்கூடிய அளவு பெறும் வாய்ப்பு உருவாகிவரும் சூழ்நிலையில் அச்சந்தர்ப்பத்தை இல்லாது ஒழிக்கும் நிலையொன்று உருவாகுமானால் மீண்டும் தமிழ் மக்கள் வெறுங்கையோடு நின்று யாசிக்கவேண்டிய நிலையொன்று உருவாக முடியும்.
தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் பல்வேறு வாய்ப்புக்களை நாம் தவறவிட்டிருக்கிறோம். அவை தட்டிப்பறிக்கப்பட்டது என்பது வெகுதொலைவில் மறைந்துபோன சம்பவங்களுமல்ல, வரலாறுகளுமல்ல.
பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் தட்டிப்பறிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டின் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட மாகாண சபை நகர்வுகளை கைவிட்டோம்.
1994 ஆம் ஆண்டின் பின் அம்மையார் சந்திரிகாவின் கால அரசியல் பொதியில் திருப்திப்படாத நிலை ஒரு புறம் இருக்க, அது பாராளுமன்றத்தில் கிழித்தெறியப்பட்ட அசாத்திய நிலை என எத்தனையோ சந்தர்ப்பங்களை நாமாக இழந்தவையும் தட்டிப்பறிக்கப்பட்டவையுமான அனுபவங்களை மீள்பார்வை செய்ய வேண்டியதேவை உண்டாகியுள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இக்கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு மாற்று தலைமையொன்று தேவையான காலகட்டத்துக்கு வந்திருக்கிறோம்.
தமிழரசுக் கட்சியானது தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை முழுமையாக கைவிட்டுவிட்டது. இக்கட்சி ஒரு சிலரின் கைப்பொம்மையாக செயற்படுகிறது.
சமஷ்டி என்ற சொல் இல்லாவிட்டாலும் அதிகாரம் கிடைக்குமென கூறுவது ஏமாற்றுவித்தை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதுடன் கூட்டமைப்பிலிருந்து விலகுவது தவிர மாற்றுவழியில்லையென கடும் நிலையில் கருத்துக்களை பொழிந்துள்ளார்.
சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஏனைய கருத்துக்களை நாம் அலட்சியமாக கவனத்தில் கொள்ளாது விட்டாலும் கூட்டமைப்பிலிருந்து விலகுவதைத் தவிர ஈ.பி.ஆர்.எல்.எப். க்கு மாற்றுவழியில்லையென்று கூறியிருப்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயமே.
சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கின்றபோதும் உத்தியோகபூர்வமான அறிவிப்பைச் செய்வாராக இருந்தால் அதற்கு தக்க பதிலை அளிக்க காத்திருக்கிறேன் என தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
இதேவேளை வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணமென்னவென்பதை விளக்கியுள்ளார். அவரின் கண்டுபிடிப்பின்படி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தையே தான்தோன்றித்தனமாக எமது தலைமைகள் முன் வைத்தமையே பிளவுக்குக் காரணம் எனக் கூறியதுடன் சில விடயங்களை அட்டவணைப்படுத்தியும் காட்டியுள்ளார்.
இன்றைய தமிழ்த் தலைமைத்துவம் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கவும், சிங்கள பேரினவாதத்துக்கு இடம் கொடுக்கவும் வடக்கு, கிழக்கை இணைக்காது விடுவதற்கு தயார் என்றும், தன்னாட்சி தாயகம் போன்ற கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி சாத்தியமில்லையென்று கூறி ஒரு சில சலுகைகளை மட்டும் பெறும் வகையில் செயற்படுவதனால்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படப்பார்க்கிறது என்றும் விவரணமொன்றை செய்துள்ளார்.
விக்னேஸ்வரனின் இந்த விவரணமானது நேரடியாகவே தமிழ் தலைமைகளை குற்றம் சாட்டுவதாக அமைந்துள்ளது. அவரின் இக்குற்றச்சாட்டுக்கள் எவ்வாறு இருக்கின்றதென்றால் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் வீசுவது போன்ற காட்சியையே ஞாபகப்படுத்துகிறது.
இனி விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டுகளுக்கே வருவோம். 2015 ஆம் ஆண்டு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்ட வேளை, வடமாகாண முதலமைச்சர் எந்தவிதமான பங்கெடுப்பையும் செய்துகொள்ள முயலவில்லை என்பதுடன் மேற்படி விஞ்ஞாபனத்தை தயாரித்த தலைமைகள் தமது 60 வருட அபிலாஷைகளின் வெளிப்பாடாகவே அந்தப் பட்டயத்தைத் தீட்டி மக்கள் ஆணையைப் பெற்றிருந்தார்கள். இந்த ஆணை செல்லும் தண்டவாளத்திலிருந்து அவர்கள் எப்பொழுதும் விலத்திக் கொள்ள தயாராகவிருக்கவில்லை என்பதை சம்பந்தன் ஐயா அடிக்கடி உறுதிபடக் கூறிவந்துள்ளார்.
சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
1972 ஆம் ஆண்டு யாப்பில் பௌத்தத்துக்கு முதல் நிலைமை வழங்கும் முன்னுரிமை எழுதப்பட்டது. இது 1978 ஆம் ஆண்டு சோஷலிச யாப்பிலும் இன்னும் பலப்படுத்தப்பட்டது. அந்த யாப்பு வியாக்கியானங்கள், விளக்கங்களுக்கு அமையத்தான் நீதிமன்றங்கள் செயற்பட்டன.
இவையெல்லாவற்றையும் வாதப்பிரதிவாதம் செய்வதில் இப்பொழுது எவ்வித பயனையும் தமிழ் மக்கள் அடையப்போவதில்லை. வெண்ணெய் திரண்டுவருகின்ற வேளையில் தாழியை உடைத்த கதைபோல் இல்லாமல் ஒற்றுமையை வலுப்படுத்தவேண்டிய இறுதிச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களும் அவர்கள் தம் தலைமைகளும் உள்ளனவென்ற உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
காலாகாலமாக நாம் காட்டிவரும் குரோதங்கள், முரண்பாடுகள், விரிசல்கள், விருப்புவெறுப்புக்கள் எல்லாவற்றையும் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்ட பேரணியில் கைகோர்த்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய இறுதி எல்லையில் நின்றுகொண்டிருக்கிறோமென்பதை ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
திருமலை நவம்