சிங்களதேசம் மீண்டும் எம்மை ஆயுதம் ஏந்திப்போராடும் நிலைக்கு நிலமைகளை உருவாக்கிறது இதனை அனைத்து தமிழ் மக்களும் புரிந்துகொள்ளவேண்டும்

362

 

தேசியம் என்பது புவியியல் பரப்புச் சார்ந்ததாக அல்லாமல், அத்தேசிய இனமக்களின் வாழ்வைத்தாமே தீர்மானிக்கும் உரிமையைக்கொண்டு, அம்மக்களுக்கென சொந்த அரசியல் அதிகாரத்தைக் கொண்ட தனித்தன்மையான மக்கள் சமூகம் என்ற விரிவான அர்த்தத்தைக் கொண்டது. இதன் அடிப்படையில் தமிழீழத் தமிழ்த்தேசிய இனம் அதற்கென்று நீண்ட தனித்தன்மை வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. சொந்த பண்பாட்டு மரபுகளைக் கொண்ட தமிழ்மக்களின் வாழ்கைமுறை தனித்துவம் வாய்ந்தவை. அதன் அடிப்படையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிறிலங்கா அரசின் அதிக்கத்தையும், ஆக்கிரமிப்பையும் எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் புலிகளின் தலைமையில் வெளிப்படுத்தியிருக்கிற துணிவு, வலிமை, அர்ப்பணிப்பு, தியாகம் என்பவற்றின் மூலமாக தமிழ்தேசிய இனமாக உலகம் முழுவதும் அடையாளப்படுத்திக்கொண்டு தனித்தன்மை வாயிந்த அரசியல் வாழ்வின் அவசியத்தை உலகின் முன் தெளிவாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்தியிருக்கின்றது.

eelam_tamils_380தமிழீழத் தேசியம் என்ற வகையில், ஏனைய தேசங்களுக்கு இருப்பது போன்ற அனைத்து உரிமைகள் இத்தேசத்திற்கும் இருக்கும். அதன்மூலம் நிலத்தின் மீது, அதன் கடல் பகுதியின் மீது, வான்பரப்பின் மீது முழு ஆதிக்கம் கிடைக்கப்பெறும். அத்தகைய ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சொந்த பொருளாதார உற்பத்தி முயற்சிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் முழு உரிமைத் தமிழ்த்தேசத்தின் மக்களைச் சார்ந்ததாக இருக்கும். தமிழர் பண்பாடு மரபுகளை பேணி வளர்ப்பதற்கும், மக்கள் விரும்பும் விதத்தில் புதிய முற்போக்கான கூறுகளை அவற்றுடன் இணைத்து வளர்ப்பதற்குமான உரிமையையும் இவை இணைத்திற்கும், மேலாக சுதந்திரமான, இறையாண்மைமிக்க அரசைக் கொண்டிருப்பதற்கும் இவ்வரசின் மூலமாக சர்வதேச சமூகங்களுடன் சமத்துவ அடிப்படையில் நல்லுரவைப் பேணவதற்கும் உரிமையுண்டு என்ற அளவில் தமிழீழத் தேசியம் முக்கியத்துவம் பெரும்.

இத்தகைய தேசியத்தின் பிரிக்க முடியாத உரிமைகளை சிறிலங்கா அரசு முற்றாக மறுப்பதோடு, தமிழ்த்தேசியத்தின் இருப்பை அழிப்பதற்கான திட்டத்தில் மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலமும், இராணுவ ஆக்கிரமிப்பின் மீலமாகவும் தமிழர் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா அரசு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியத்தில் உறவாடிக் கொண்டிருக்கிற வரலாற்றுத் தடயங்களை அழித்து வருகிறது. தமிழ்த்தேசியத்தின் பொருளாதாரத்தையும் அதன் இயல்பான வளர்ச்சியையும் திட்டமிட்டு சீர்குலைத்து வருகிறது. தமிழீழத் தாயகத்தில் பல்துறை சார்ந்த அபிவிருத்திகளும், உள்கட்டமைப்பு வளர்ச்சிகளும் ஏற்படுத்துவதையும் தடுத்து வருகிறது. அத்தாயகத்தின் இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக சிதைத்தழிப்பதோடு செயற்கை பஞ்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்த்தேச மக்களை ஆற்றலற்றவர்களாக, வலிமையற்றவர்களாக உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதோடு கொடூரமான யுத்த சூழலுக்குள் தொடர்ச்சியாக அழுத்தி வைக்கப்பட்டு ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கிறது. இதன் மூலம் வலுவற்ற, ஆரோக்கியம் குன்றிய உடல், மனரீதியில் ஊனமுற்ற சமூகமாக தமிழர்களை மாற்றியமைக்க முயற்சிக்கின்றது. இவை அனைத்தின் மூலமாக, தமிழர்தேச இருப்பை அழித்து, தமிழரை நிரந்தரமாக தனது ஆதிக்கத்தின் கீழ் வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

சிறிலங்கா அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தற்செயலானவை அல்ல, யாரோ சில சிங்கள அரசியல்வாதிகளால் அல்லது இராணுவ அதிகாரிகளால் திட்டமிட்டு செயற்படுத்தப்படுபவையுமல்ல மாறாக இவை சிறிலங்கா அரசின் அடித்தளமாகவுள்ள சிங்கள பௌத்த பேரினவாத பண்புகளின், ஆக்கிரமிப்புப் பண்புகளின் தெளிவான வெளிப்பாடுகள், ஒரு தேசம் பிறதேசங்களை ஒடுக்குகிறபோது அங்கு செயற்படுகின்ற அரசியலால் தீர்மானிக்கப்படுகின்ற விளைவுகள்தாம் இவை.

சிறிலங்கா அரசுக்குரிய பேரினவாத ஆக்கிரமிப்பு அடித்தளமானது ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக் காலத்திலேயே விதைக்கப்பட்டு விட்டது எனலாம். அக்காலகட்டத்தில் உருவான சிங்கள தொழிலதிபர்களும், ஏற்கனவே சிங்கள மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த பண்ணையார்களும் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கு உறுதியுடன் போராடக்கூடிய பண்பை வெளிப்படுத்தவில்லை. மாறாக இவர்கள் தமது அரசியல், பொருளாதார நலன்களை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் போன்றோருடன் முரண்படுபவர்களாகவே இருந்தனர். சிங்கள மக்களின் அரசியல் தலைமையாக தம்மை நிறுவிக் கொள்ளவும், அவர்களை எப்போதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவும் ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் போன்றேரை வந்தேறிகளாகவும், சிங்கள மக்களின் எதிரிகளாகவும், சிங்கள மக்களை சுரண்டுபவர்களாகவும், சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமானவர்களாகவும் அடையாளம் காட்டினர்.

ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக் காலத்திலேயே, சிங்கள அரசியல் தலைமை மற்றும் ஆளும்பிரிவினர் மத்தியில் தோன்றிவிட்ட இத்தகைய பேரினவாத போக்கு, இன்றுவரை தணியவில்லை. மாறாக இப்போக்கு மேலும்மேலும் தீவிரம் அடைந்தே வந்தது. ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் அல்லது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் இப்போக்கு தீவிரப்படுத்தப்பட்டது. சிறிலங்கா ஆளும்கட்சியினர்க்கு எதிராக, நெருக்கடி ஏற்படுத்தவும் சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாத உணர்வலைகள் தோற்றுவிக்கப்படுகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆதிக்க போக்கு கூர்மை அடைந்தது. ஏனைய சமூகங்கள் அடக்கிவைப்பதையும், ஆக்கிரமிப்பதையும் இலக்காகக்கொண்டு சிங்கள அரசியல் தலைமையினாலும், ஆளும் பிரிவினராலும் முன்னெடுக்கப்பட்ட இப்பேரினவாதப் போக்கு கால ஓட்டத்தில் சிங்கள தேசத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரையும் தன்னுள் இனைத்துக்கொண்டது.

தரகு முதலாளிகள், நிலவுடமைப் பிரிவினர், பௌத்தமத நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், சிங்கள அரசியல்வாதிகள், அரச படையினர், நிர்வாக மற்றும் பண்பாட்டுத் துறை சார்ந்தோர் என சிங்கள தேசத்தின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் பேரினவாதப் போக்குகள் ஆழ வேரூன்றி விட்டன. இவர்கள் அனைவரும் தமது பொருளாதார மற்றும் ஆன்மீக ரீதியான நலன்களை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு, ஏனைய தேசிய இனங்களின் உரிமைகளையும், நலன்களையும் பறிப்பது ஒரு முக்கிய வழிமுறையாக மாறிவிட்டது. இப்பிரிவினர்களின் எண்ணிக்கையும், அவர்களின் நலன்களும், தேவைகளும், அதிகரிப்பதற்கேற்ப, ஏனைய சமூகங்கள் மீதான அடக்குமுறைகளும், ஆக்கிரமிப்புகளும் மேலும்மேலும் அதிகரிக்கின்றன, தீவிரமடைகின்றன.

சிங்கள தேசத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவினர்கள் மத்தியிலும் ஆழவேரூன்றி விட்ட பேரினவாத, ஆக்கிரமிப்பு போக்குகள் இனியும் மறைந்து விடப்போவதில்லை. இந்த உண்மையைத்தான், மீண்டும் மீண்டும் வெளிப்படுகின்ற நிகழ்வுகள் உலகிற்கு உணர்த்துகின்றன. சிங்கள ஆளும்வர்க்கங்கள் இப்பேரினவாத மற்றும் ஆக்கிரமிப்புப் போக்குகளை கைவிடுவார்களேயானால் அதன் காரணமாக அவர்களின் நலன்களுக்குரிய முக்கிய ஊற்று மூலத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும், அதன்மூலமாக அவர்கள் தமது அதிகாரங்களையும், செல்வாக்கையும் கணிசமாக இழக்க வேண்டி இருக்கும். அதிகாரத்தையும், செல்வாக்கையும் கொண்டிருப்பவர்கள், தொடர்ச்சியாக நலன்களை அனுபவித்து வருபவர்கள் ஆதிக்கப்போக்கை தாமாகவே கைவிட்டதாக வரலாறு இல்லை.

சிங்கள அரசியல் தளத்தில் செயற்படுகின்ற ஒவ்வொருவரும், பேராதிக்க விதிகளுக்குக் கட்டுப்பட்டு அதற்கேற்ப செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். ஒருவர் இந்த விதிகளை எந்த அளவுக்கு அனுசரித்து செயற்படுகின்றாரோ, அந்த அளவிற்கு அவர் அரசியலில் “உயர்நிலையை’ அடைய முடிகின்றது. இவ்விதிகளுக்கு முரணாக செயற்படுகின்ற ஒருவர், அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படுகின்றார். இப்படி இறுகிப்போயுள்ள சிறிலங்காவின் அரசியல் பின்புலத்தில் சிங்கள, பௌத்த பேரினவாத சித்தாந்தத்தாலும், தனது சொந்த மக்களையே பலி கொடுக்கும் கழிசடைப் பண்புகளினாலும், உலகை விழுங்கிக் கொண்டிருக்கிற வல்லரசின் நலன்களினாலும் தீர்மானிக்கப்படுகின்றது என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சிறிலங்கா அரசும் அதன் கூட்டாளிகளும் சிறிலங்காவின் அரசியல் செயல்படுகின்ற விதிகளுக்கு முற்றிலும் இசைவாகவே செயற்படுகின்றனர். இதன் காரனமாகத்தான் ஒவ்வொரு தேர்தல் களமும் பேரினவாத முழக்கங்களினால் சூடேற்றப்படுகிறது. ஒவ்வொரு தேர்தல் பின்புலத்திலும் ஈழத்தமிழர்களும், முஸ்லிம்களும், மலையகத்தமிழர்களும் முன்னைவிட கொடூரமாக ஒடுக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகளும், நலன்களும் வன்மையாக நசுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஒப்பந்தமும் கிழித்தெறியப்படுகின்றன, பெரும் ஆரவாரத்துடன் முன்வைக்கப்படுகின்ற ஒவ்வொரு தீர்வுத்திட்டமும் குப்பைக்கூடைக்குள் வீசப்படுகிறது. மாபெரும் “சமாதானப் புறாக்களாக” உயர்ந்தெழுகின்ற ஒவ்வொரு சிங்களத் தலைவரும், மிக விரைவிலேயே அப்பட்டமான பேரினவாதிகளாக தம்மை உரித்துக் காட்டிவிடுகிறார்கள். இவர்கள் அவ்வப்போது தம்மை மூடிப் போர்த்திக்கொள்கிற முற்போக்கான ஜனநாயக மனிதாபிமான திரைகளெல்லாம் கிழித்தெறியப்பட்டு, அவர்களின் கோரத்தனமான பேரினவாத நிஜமுகங்களை வெளிக்காட்டுகின்றனர். தமிழீழத்தில் உருவாக்கப்படுகின்ற ஒவ்வொரு சிங்களக் குடியேற்றமும், இராணுவ முகாமும், தமிழ்தேசியத்தின் மீது சுமத்தப்படுகின்ற பொருளாதாரத் தடைகளும், வீசப்படுகின்ற ஒவ்வொரு குண்டும், கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்புகளும், நடந்தேறிய 4வது போரும் சிறிலங்காவின் பேரினவாத ஆக்கிரமிப்பு அரசியலில் செயற்படுகின்ற விதிகளின் கொடிய விளைவுகளே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தனித்தமிழீழதேசியம் தவிர்க்க முடியாதது

எந்தவொரு அரசியல் போராட்டமும் மக்களால் முன்னெடுக்கப்படுகிறது. அத்தைகைய போராட்டங்கள் மக்களால் ஆதரிக்கப்படுகின்றன. அவர்கள் அர்ப்பணிப்புக்குள்ளாகிறார்கள், வெற்றியை படைக்கிறார்கள். அந்த வகையில், தமிழ் ஈழமக்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு தேசியஇன அரசியல் கட்சிகளுக்கும், ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கங்களுக்கும் அவர்களின் முழு ஆதரவையும் அர்ப்பணிப்பையும் வழங்கி வந்திருக்கிறார்கள். அவர்கள் தன் பிள்ளைகளை, சகோதர சகோதரிகளை தனது உயிர்களையும் சிங்களப் பேரினவாத அரசுகளின் கோரத் தாக்குதல்களில் பறிகொடுத்திருக்கிறார்கள். தனது இருப்பிடங்களை இழந்து, ஏதிலிகளாக முகாம்களிலும், புலம் பெயர்ந்து வாழும் மற்ற வாழ்விடங்களிலும், அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கிடையிலும், அவமானங்களுக்கிடையிலும் தமிழீழ போராட்டத்தை தாங்கிப் பிடிப்பவர்களாகவும், அதன் உயிர்த்துடிப்பை அணையாது பாதுகாப்பவர்களாகவும் விளங்குகின்றனர்.

அவர்களின் தேசிய எழுச்சியும், மகத்தான தியாகங்களும் இல்லையெனில் தமிழ்த்தேசிய போராட்டங்கள் வலுப்பெற்றிறுக்க முடியாது என்கிற யதார்த்தத்தைக் கொண்டு பார்த்தோமேயானால் காலனிய ஆக்கரமிப்பின் விளைவாக ஒற்றையாட்சி முறையால் சிங்கள தேசத்துடன் இணைந்து செயற்படும் நிலை ஈழத்தமிழர்களுக்கு உருவானதிலிருந்தே சிங்கள அரசியல் தலைமையானது தமிழ் அரசியல் தலைமை தம்முடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதை திட்டவட்டமாக நிராகரிக்கத் தொடங்கியது. அதன்விளைவு தமிழர்கள் பிரிந்துசென்று தமக்கான தமிழர் மகாஜன சபையை உருவாக்க காரணமாயிற்று.

அரசியல் தளத்தில் சிங்கள தலைமை எவ்வாறு தமிழர்களது உரிமைகளை புறக்கணித்து அரசதிகாரத்தை தானே முழுமையாக அபகரித்துக் கொள்ள முயற்சித்து வந்ததோ அதற்கு வலுசேர்க்கும் வகையில் சிங்கள தேசத்தில் உருப்பெற்று வந்த வர்க்க பிரிவுகளும், அறிவுத்துறைச் சார்ந்த சமூக ஜனநாயக சக்திகளும் சக தேசிய இனங்களை வன்மத்துடன் அணுகும் போக்கை வெளிப்படுத்தி வந்தது. முதன்முதலில் 1915 இல் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறையுடன் இப்போக்கு பகிரங்கமான வெளிப்படத் தொடங்கியது. அடுத்ததாக 20களின் ஆரம்பத்தில் ஈழத்தமிழர்மீதுதான ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தத் தொடங்கின. தமிழர்கள் தமது உரிமைக்காக அமைதியான போராட்டங்களை மேற்கொண்டு வந்ததுடன், தொடர்ந்து இலங்கையர் எனும் பொது அடையாளத்துடன் அவர்களுடன் இணைந்து வாழவே விரும்பினர்.

ஆனால் சிங்கள தேசத்தில் புதிதாக உருவாகி வந்த சமூக சக்திகளும், காலனிய காலத்தில் பாதிப்புக்குள்ளான பிரிவினர்களும், சிங்கள இனத்தின் சமூகத் துயரங்களுக்கு சிங்களரல்லாதவர்களே காரணமென்றும், பிறதேசிய இனங்களுக்கு இலங்கைத் தீவில் உரிமைகள் இல்லை என்பதாக அவர்களது வெளிப்பாடுகள் அமைந்தன. சிங்கள தேசத்தின் இவ்வுணர்வலைகளை சாதகமாக்கிக்கொண்டு தங்களை பலப்படுத்திக் கொண்ட சிங்கள அரசியல் தலைமைகளும், சித்தாந்தவாதிகளும் சிங்கள இனவெறிப் போக்குக்கு தலைமை தாங்கியதுடன் சிங்கள தேசத்தையும் அந்த இருட்பாதையில் தீவிரமாக வழிநடத்தத் தொடங்கினர்.

சிங்கள இனவெறி உணர்வு சிறிலங்கா அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வலுப்பட பிறதேசிய இனங்களின் அரசியல் வாழ்வு மாத்திரமல்ல, அவர்களின் இருத்தலுக்கான அடிப்படை உத்திரவாதமே கேள்விக்குள்ளானது. 1956 இல் பண்டாரநாயக்கவினால் அமுலாக்கப்பட்ட தனிச்சிங்கள சட்டம் சிங்கள தேசத்தின் இனவெறி உச்சத்தின் விளைவேயாகும். தனிச் சிங்கள சட்டத்தின் மூலம் தமிழர்கள் இலங்கையின் தேசிய நீரோட்டத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதை எதிர்த்து நமது அரசியல் தலைவர்கள் அமைதி வழியில் சத்தியாக்கிரகம் செய்தனர். ஆனால் சிங்கள அரசு அயிரக்கணக்கில் குண்டர்களை ஏவி சத்தியாக்கிரகிகளை படுகாயப்படுத்தியதுடன் கைதுசெய்து சிறையிலுமடைத்தது. கொழும்பு நகரிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அத்துடன் நில்லாது அம்பாறையிலும் தீவின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் மீது இன வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அடக்குமுறைகளையும், வன்முறைத் தாக்குதல்களையும் தாங்கிக்கொண்டு தமிழ்மக்கள் உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஈழத்தமிழரின் போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட பண்டாரநாயக்க, போராட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக தமிழர்களின் உரிமைகள் சார்ந்து தந்தை செல்வநாயகம் அவர்களுடன் ஒப்பந்தத்திற்கு வந்தார். பண்டாரநாயக்க – செல்வா ஒப்பந்தமானதை எதிர்த்து ஜே.ஆர். தலைமையிலான இனவெறியர்கள் கண்டிக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். தமிழர்களுக்கு வடக்கு கிழக்கை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாக பரப்புரைகள் மேற் கொள்ளப்பட்டு தமிழருக்கெதிராக சிங்களமக்களிடம் வெறியூட்டினர். இனவெறி சக்திகளின் கொந்தளிப்புக்கு பயந்துபோன பண்டாரநாயக்க தானே ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார்.

இப்படியாகத்தான் சிங்கள தேசமும், சிங்கள தலைவர்களும் தமிழர்களின் அமைதியான உரிமைக் கோரிக்கைகளுக்கு பிரதிபலிப்பு செய்தனர். தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனத்தால் முன்னேடுக்கப்பட்ட அகிம்சைவழிப் போராட்டங்கள் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு உள்ளாயின. தமிழ் தலைவர்களை கைதுசெய்தல், தடுப்புக்காவலில் வைத்தல், தொண்டர்களை படுகொலை செய்தல் போன்றவை தொடர்ச்சியாக நடைபெற்றன. 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பொதுமக்கள் சிங்கள போலிசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதுடன் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் தமிழர் மீது தொடர்ச்சியாக வன்முறைகள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டன. தமிழரின் அரசியல் குரல் மிகவும் வன்மையாக நசுக்கப்பட்டது. காலத்திற்குக் காலம் தமிழர்மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு வன்முறைகளை சிங்கள தேசம் விரும்பி வரவேற்றதுடன் சிங்கள பொதுமக்கள் பலரும் தமிழரை ஆழித்தொழிப்பதில் முன்னின்று செயற்பட்டனர். இப்படியாக சிங்கள அரசும், இனவெறி ஊட்டப்பட்ட சிங்கள தேசமும் தமிழர்மீதான அழித்தொழிப்பில், ஆக்கிரமிப்பில் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

83 க்கு பின்னர், தமிழீழ தனியரசே தமிழருக்கான ஒரே தீர்வு என்ற முழக்கம் தமிழர்களை அரசியல்படுத்தி தமிழரின் தேசம் முழுமைக்கும் உணர்த்தப்பட்டது. அதன் தேவையையொட்டி ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி சிங்கள அரசை அச்சுறுத்தத் தொடங்கியது. இந்திய அரசின் துணையுடன் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். 1985 இல் தமிழீழ விடுதலைப் போராட்ட தரப்பிற்கும் சிங்கள அரசிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் (திம்பு பேச்சுவார்த்தை) சிங்கள அரசு தமிழர்களின் கோரிக்கைகளை அடிப்படையிலேயே நிராகரித்து விட்டது.

87 இல் மீன்டும் ஜே.ஆர் – ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தின் மூலம் போர்நிறுத்தம் உருவானது. இந்தஒப்பந்தத்தை எதிர்த்து சிங்கள தேசத்தின் இனவெறி சக்திகள் கொந்தளிக்கத் தொடங்கினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வானூர்திகொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்குமளவு இனவெறியர்களின் எதிர்ப்பு பரவியிருந்தது. இந்த சமாதான முயற்சிக்கு தமிழ்த்தேச போராட்ட தரப்பினரும், தமிழ்த்தேசமும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வந்தாலும், போர் நிறுத்தத்தை மீறி இந்திய – சிறிலங்கா அரசுகளின் வஞ்சக செயற்பாட்டினால் சமாதான முயற்சி தமிழ்த்தேசத்தின் கழுத்துக்கு கத்தியாக வந்திருப்பதை போராளிகளும், மக்களும் கண்டுகொண்டனர்.

1989 காலப்பகுதியில் பிரேமதாச அரசுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றுக்கு விடுதலைப் புலிகள் வந்தனர். தன்னை பெரிதும் நேர்மையானவராக அடையாளப்படுத்திக் கொண்ட பிரேமதாச, புலிகளின் தலைமையுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார். தந்திரயுத்திகளுடன் செயல்பட்டு போராட்டத்தை அழித்தொழிக்க முயலும் சிங்கள தலைமையின் துரோக நோக்கத்தை புலிகள் புரிந்து கொண்டிடு பிரேமதாசாவுடனான உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

சிங்கள அரசியல் தலைமைகளுடன் தமிழ்த்தேசம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வுக்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பேச்சுவார்த்தையை பயன்படுத்தி தமது இராணுவ பலத்தை பெருக்கிக் கொண்டு போராட்டத்தை நசுக்குவதில்தான் சிங்கள அரசு குறியாக இருந்திருக்கிறதேயன்றி நீதியான அரசியல் தீர்வுடன் கூடிய சமாதானம் எனும் எண்ணமே இலங்கை அரசுக்கில்லை என்பதை இந்த 33 ஆண்டுகால நிகழ்வுகள் உலகிற்கு துல்லியமாக நிருபித்துக் கொண்டிருக்கிறது.

1994 இல் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ்மக்கள் சந்திரிகா அரசின் சமாதான முன்மொழிவை வரவேற்றனர். ஆனால் சந்திரிகாவின் சமாதானம் வித்தியாசமானது எப்படியென்றால் சமாதானத்திற்காக போர். சமாதானத்திற்காக போர் எனும் பதாகையில் சிங்கள தேசத்தை ஓரணி திரட்டினார். சிங்கள தேசத்தின் அமோக ஆதரவுடன் பெரும் ஆக்கிரமிப்பு படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்படையெடுப்பால் போராட்ட வரலாற்றில் தமிழ்தேசம் எப்போதும் கண்டிராத அழிவுகளையும், இழப்புகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

மொத்தத்தில் சிங்களப் பேரினவாத சக்திகளின் செயற்பாடுகள் பேராதிக்கம் செலுத்துவதும், மக்கள்திரள் தளங்களில் இவர்களது கருத்தியல்களுக்கு செல்வாக்கைப் பெருக்கிக்கொள்வதுமாக இருந்தபடியால் சிங்கள தேசத்துடன் தமிழ்தேசியப் பிரச்சனைக்கான தீர்வை சமாதான வழியில் அடைவதை சாத்தியமற்றதாக்கிவிட்டது. சிங்களவர்கள் ஆயிரக்கணக்கில் தமது புதல்வர்களை யுத்தத்தில் இழந்திருந்தும், பலர் அங்கவீனமுற்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கானோர் போர்முனையில் தம்முயிருக்கு உத்தரவாதமற்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கூட சிங்களதேசம், தமிழர்களின் போராட்டத்தை முற்றிலும் அழித்தொழித்து சிங்களதேசிய பெருமிதத்தை நிலைநாட்டிட வேண்டுமென்பதிலேயே கவனம் கொண்டிருந்தனர்.

கருத்துக்கள் மக்களை பற்றிக்கொண்டால் அதுவே மாபெரும் சக்தியாக உருப்பெறும் என்கிறார் மார்க்ஸ். இது பாசிசத்திற்கும் பொருந்துவதுபோல் இருக்கிறது. சிங்களதேசத்தை இயக்கும் மாபெரும் சக்தியாக பேரினவாதம் உள்ளது. பேராதிக்கப் போக்குகள் அத்தனை எளிதில் மாற்றமடையக் கூடியதல்ல. தமிழீழ தனியரசு அமைவது, மலையக முஸ்ஸிம் தேசங்கள் தமது தேசிய உரிமைகளை வென்றுகொள்வது யாவும் சிங்கள இனவெறியை தோல்வியுறச் செய்யும், இவையே அதன் இறுமாப்பைத் தகர்க்கும் வலிமைமிக்க ஆயுதங்களாகும். அவ்வகையில் விடுதலைப் புலிகளின் போராட்டங்களும் வெற்றிகளும் தான் சிங்கள தேசத்தை, அதை உள்ளூர அழித்துவரும் பிற்போக்கு சித்தாந்த பிடியிலிருந்து மீட்டெடுக்கப்போகும் வரலாற்று சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமை ஏற்றனர்.

தமிழ்த்தேசியத்திற்கான போர்

அமெரிக்க வல்லாதிக்கமும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து தேசிய விடுதலைப் போராட்டங்களை ஒடுக்குவதைப் போலவே தமிழீழ விடுதலைப் புலிகளையும் பயங்கரவாத இயக்கம் என்று தடைசெய்தது. பிரட்டன், சீனா, ரஷ்யா போன்ற வல்லரசுகளும் சிங்கள தேசியத்தின் அரணாக நின்றதும், இவையனைத்தும் இந்திய கூட்டணி மூலமே நடைபெற்றது என்பதையும் நாம் அறிவோம். ஈழப்போர் மூலமாக வல்லாதிக்கவாதிகள் போர் முறைகளை மேலும்மேலும் கொடூரம் மிக்கதாக மாற்றியமைத்துக் கொண்டிருந்தாலும் அவைகளை தகர்த்து தொடந்ந்து முன்னேறிக் கொண்டிருந்தவர்கள் விடுதலைப்புலிகள். இவையனைத்தும் ஆயுதப் போராட்டக் களத்தில் தலைசிறந்த போர்க்கலையான கெரில்லா போர் முறையைக் நடத்தப்பெற்றவைகள் என்பது அதன் சிறப்பு.

ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை விடுதலைப்பெற்ற பின்னர் 30 ஆண்டுகாலம் தமிழர் உரிமைக்கான போராட்டங்கள் எழத்தொடங்கின. அத்தகைய போராட்டங்களை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் ஒடுக்கத் தொடங்கினர். அத்தகைய அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் தமிழீழ மக்கள் ஆரம்பத்தில் அமைதிவழிப் போராட்டங்களை நடத்தினர். இத்தகைய அமைதிவழி மென்முறைப் போராட்டங்களை நசுக்க சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் ஆயுதவன்முறையை அதிதீவிரப்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக தமிழ்த்தேசிய போராட்டங்களில் சட்டரீதியான, சமாதான சனநாயகப் போராட்ட முறைகளில் தமிழீழ மக்கள் நம்பிக்கை இழந்து அதிஉச்சகட்டமாக அப்போராட்டத்தின் வளர்ச்சியும், முதிர்ச்சியும் அடைந்த நிலையிலிருந்து ஆயுதப் போராட்டமாக தேற்றம் பெறத்தொடங்கிய போதே கெரில்லா போர்முறையை தமிழீழ அரசியல் போர் அரங்கில் அறிமுகம்செய்து அதனை முன்எடுத்துச்சென்று பலம் வாய்ந்த அடக்குமுறை அமைப்பிற்கு எதிராக, பலம் குன்றிய மக்களைக்கொண்டு எத்தனையோ பிரம்மாண்டமான இராணுவ இயந்திரங்களை நிலைகுலையச் செய்தனர்.

தமிழீழத்தின் சிறப்பு என்னவென்றால் மக்களின் போராட்ட முன்னணிப் படையின் ஆயுத மைய்யக்கருவாக இந்த கெரில்லா அணி தனது பெரும்பலத்தை மக்களிடமிருந்தே பெற்றது என்பதுதான். ஆள்பலத்திலும், ஆயுதபலத்திலும் பின்தங்கிய படையணியாக இருந்தாலும் இராணுவத்தைவிட பலம் குன்றியதாக இருந்ததில்லை. காரணம் கெரில்லாப்போரில் ஈடுபட்டிருப்போருக்கு பக்கபலமாக பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருந்ததுதான்.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரை அழிவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்ற கெரில்லா வீரர்களின் முக்கிய கடமையை கொண்டிருந்தனர். எதிரியை தாக்குவதும் தப்பித்துக் கொள்வதும் நாள்தோரும் நடைபெறும் நிகழ்வுகளாக கெரில்லா அணி அங்கத்தவர்களின் போராட்ட வாழ்க்கை முறையாக கொண்டிருந்தனர். எதிரிகளால் கண்காணிக்கப்படும் அபாயத்தைத் தவிர்த்து எதிரியின் தளங்களை முன்சென்று தாக்குவதற்கும், புதிய பகுதியில் நிலைகொள்வதற்கும் இரவுநேர சூழ்நிலையை பயன்படுத்துவதில் அபாரத்திறமை பெற்றிருந்தனர். புலிகளின் தொடக்ககால தாக்குதல்கள் வளர்ச்சியடைந்த போர்முறையாகவே இருந்தன என்பது உலகறிந்த விசயம்.

சிங்கள இராணுவம் புலிகளை அணுகமுடியாத நிலையில் நடுங்கவைக்கும் போர்த்தந்திர உத்திகளை கொண்டவர்களாக இருந்தனர். சிங்கள இராணுவம் புலிகளை எதிர்கொண்டு தாக்கத் தயங்கும் அளவிற்கு புலிப்படை வீரர்கள் எதிரியை படிப்படியாக பலவீனப்படுத்தும் போர்முறையைக் கையாண்டிருந்தனர். போராட்டப் பகுதிகளில் சிங்கள இராணுவத்தினருடன் ஓய்வற்ற தொடர்தாக்குதல்கள் மூலம் ஓய்வு, உறக்கமற்ற நிலையை ஏற்படுத்தி திணறடித்தனர். இத்தகைய தாக்குதல்கள் தோடர்ச்சியாக நடத்தப்பட்டன.

புலிகளின் போராட்டமுறைகள் எதிரியை வட்டவடிவில் சூழப்பட்ட மரண வலையங்களைப் போன்ற ஒருதோற்றத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன. இத்தகைய முறையிலேயே எதிரிகளின் தளங்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்தன. நிகழ்கால, எதிர்கால போர் நடவடிக்கைகளைத் திட்டமிடும் அதேவேளையில் மக்கள்திரள் பரப்புரை வேலைமுறையையும் தீவிரப்படுத்தினர். போராட்டத்தின் நோக்கம், இறுதி இலக்குகள் என்ன என்பதை விளக்கும் முகமாக, தமிழரை சிங்களப்படைகள் வெற்றிகொள்வது முடியாத காரியம் என்ற மறுக்க முடியாத உண்மைகளை மக்களுக்குப் புகட்டிவந்தனர். இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் மக்களின் முழுமையான ஒத்துழைப்பு ஒருசேரப்பெற்று புலிப்படை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.

ஆயுதத்தில் குறிப்பிடத்தக்க அளவு பலம்பெற்று, போராளிகளை பெருக்கிக்கொண்டு பாதுகாப்பான புதிய போர்படையை உருவாக்கினர். தாய்ப்படையின் முக்கிய தளபதியை ஆபத்துக் குறைந்த பாதுகாப்பான சூழலில் வைத்துக்கொண்டு, புதிய கெரில்லா அணியை மற்ற தமிழர் பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து, எதிரிப்படைமீது தாக்குதல் தொடுத்தது அல்லது நிலைநிறுத்தி அனுபவம் வாய்ந்த இன்னொருபடையாக உருவெடுக்கச் செய்தனர். அக்கெரில்லா குழுக்களை அசையும் ஆற்றல்கொண்ட படையணியாக பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அதாவது குறுகிய காலத்தில் அல்லது நேரத்தில் இடம்விட்டு இடம்பெயரும் ஆற்றல் கொண்டதாக இருந்ததினால் போர்க்களத்தை தினந்தோறும் மாற்றிக்கொள்ளவும், சிங்கள இராணுவத்தால் சுற்றி வளைத்துக் கொல்லப்படுவதை தவிர்த்துக் கொள்ளவும் உதவுவதோடு, புலிப்படைகள் ஒருமுனையில் சண்டை ஆரம்பித்துவிட்டு சிங்கள இராணுவம் புலிப்படையை நோக்கி நகரத்தொடங்கியதும் புலிப்படைவீரர்கள் அந்த இடத்திலிருந்து பின்வாங்கி மற்றொரு முனையிலிருந்து தாக்குதலை ஆரம்பித்து சிங்கள இராணுவம் அந்த இடத்தை நோக்கிச்சென்றதும் மீண்டும் பின்வாங்கி மற்றொரு முனையில் தாக்குதல் தொடுப்பதுமாக சிங்கள இராணுவப் படைகளை அலைக்கழிக்கச் செய்வதோடு படைகள் குண்டு மற்றும் தோட்டாக்களை பெருமளவு விரயமாக்கி, இராணுவத்தின் மனஉறுதியையும் தளர்த்தி இத்தகைய போர்த்தந்திரங்களை இரவு முழுவதும் தொடர்ந்து இராணுவத்தின் நிலைக்கு அருகாமையில் சென்று ஆவேசத் தாக்குதல்கள் நடத்தி தோற்கடிக்கும் படையணியாக வளர்த்தெடுத்தனர். அதேபோல் சிங்கள இராணுவம் எத்தனையோமுறை கெரில்லா அணியை வளைத்து பிடித்து வலுக்கட்டாயமாக சண்டைக்கு வரிந்து கட்டி நின்றபோது சிங்களப்படைகள் அமைத்த வியூகங்களை புரிந்துகொண்டு, சாதகமற்ற ஆபத்தான அத்தகைய பொறியில் சிக்காமல் ஓடித்தப்பித்தும் இருக்கிறார்கள். மொத்தத்தில் எதிர்பாராத நிகழ்வுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய திறனாற்றலுடன், பழமைச்சார்ந்த இராணுவப் போர்முறைக்கு மாறாக புலிப்படை வீரர்கள் போரின் ஒவ்வொரு நிமிடத்திலும், புதிய யுத்திகளை, ஆலோசனைகளை கண்டுபிடித்து எதிரிப்படையை எப்போதும் வியப்படையச்செய்து கொண்டேயிருந்தனர்.

இதன் காரணமாக 80களில் வெறும் 30 பெருடன் கெரில்லாப்படையாக தொடங்கப்பட்டு ஏறத்தாழ 20,000 வீரர்களைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட கிராமப்படையாக வளர்ச்சியடைந்தது. கெரில்லாபோரில் தொடங்கி புலம்பெயர்ந்து தாக்கும் போர்முறையை வளர்த்து பெரும்பாலான ஈழப்பகுதிகளை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இவையெல்லாம் இந்த கணிணியகத்தில் நவீனத் தொலைதொடர்புகளும், அதிநவீன ஆயுதங்களும் பெருநகரமயமாதல் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் கெரில்லாபோர் – தளைப்பிரதேசங்கள் சாத்தியமில்லை என்ற உலகலாவிய பரப்புரைகளுக்கிடையே விடுதலைப் புலிகளால் நடத்தப்பெற்றவைகள் என்பதும் இதன் சிறப்பு.

அமெரிக்கா பலமுறை சிறப்பு ஆயுத பயிற்சிகள், உளவுத்தகவல்கள், நிதி, ஆயுதத்தளவாடங்கள் என ஏராளமான உதவிகளை சிறிலங்கா அரசுக்கு வழங்கிவந்தது. அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக போர்முனைக்கு சென்று வழிகாட்டல்களை செய்தனர். இதன் பின்னரும் புலிகள் அடைந்த வெற்றிகள் வல்லரசுகளை அச்சுறுத்துவதாக அமைந்து. எனவே இன்னும் அதிகளவில் நவீன பலம்வாய்ந்த படைக்கலங்களை வழங்குவதன் மூலம் சிறிலங்கா அரசின் இராணுவத்தை பலப்படுத்த நேரடியாகவே ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வல்லாதிக்க நாடுகளும் தமிழ்த்தேச போராட்டத்தை தோற்கடிக்க படாதபாடுபட்டுக் கொண்டிருந்தன.

இரண்டே நாளில் யாழ்ப்பாணத்தைப் பிடித்துவிடமுடியும் – என்று இந்திய ரகசியப் புலனாய்வுத்துறை அறிக்கையை நம்பி ஆசியாவிலேயே வலிமைமிக்க ராணுவமான இந்திய ராணுவம் இரண்டு ஆண்டுகளாகியும் விடுதலைப்புலிகளை ஒடுக்க மடியாமல் பல இடங்களில் மண்ணைக்கவ்விய பற்பலகதைகள் ஏராளம். முடிவில் இந்திய ராணுவத்தை ஈழத்திலிருந்து விரட்டியடித்த புலிகள் வெற்றி, வியட்நாம் போருக்குப்பின் உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் செய்துகாட்டிய பாலஸ்தீன விடுதலைப்போர், லெபனானில் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்தது போன்ற மாபெரும் சாதனைகளில் ஒன்றாகவே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அத்தகைய போர் முறையை கையாண்டு உலகநாடுகள் முழுவதையும் தமிழ்தேசியத்தின்பால் கவனத்தை ஈர்த்தனர் விடுதலைப் புலிகள் .

வியட்நாம் விடுதலைப் போருக்கு பிறகு பெண்கள் பெருமளவில் ஆயுதமேந்தி களமாடிய விடுதலைபோர் ஈழத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்றால் மிகையல்ல. அதோடு இப்பெண் போராளிகள் களச்சாகசங்கள் வீரம், தியாகம் போன்றவை உலகளவில் தேசிய விடுதலைப்போர்களில் பெண்கள் பங்கேற்க உற்சாகமளிக்கக் கூடியவையாகவும் இருந்திருக்கின்றன. சமவெளி போரிலும், கடற்போரிலும், வான்வழிப்போரிலும் புலிகள் பெற்ற வெற்றிகளும், பயன்படுத்திய யுத்திகளும் புரட்சிகர – தேசிய விடுதலை சக்திகளின் போருக்கு உதவக்கூடியவையாக இருந்து வருகின்றன.

அனால் புலிகளின் பெரும்தோல்வி மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள தற்காலிக பின்னடைவு யதார்த்தமானவை. இவைகள் எல்லா விடுதலைப்பெற்ற தேசங்களிலும் நிகழ்ந்தவையே. எத்தகைய விடுதலைப் போராட்டங்களாக இருந்தாலும் அதன் அரசியல் – இராணுவ வழிகள் சரியாக இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்பது விதி. இதில் அரசியல் கண்ணோட்டமே அடிப்படையானதாகும். அதுவே இராணுவ வழியையும் தீர்மானிக்கிறது என்பது அறிவியல் சார்ந்த விஷயம். ஆக தமிழீழ தமிழ்தேசிய விடுதலைப்போரின் சமீபத்திய பெரும்பின்னடைவிற்கான காரணங்கள் வெறும் இராணுவ அம்சங்களாக மட்டுமே இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இராணுவத்தைப் பொறுத்தவரை புலிகளுக்கு நிகர் புலிகளே.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் சிங்களப் போரினவாத ஆட்சியாளர்கள் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேரை சிங்கள இராணுவப்படைக்கு திரட்டி, இந்தியா,சீனா, பாகிஸ்தானிடமிருந்து நவீன ஆயுதங்களை வாங்கி, வல்லரசிய – இந்திய விரிவாதிக்க அரசுகளின் உதவியால் செயற்கைக்கோள், உலவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இந்திய இராணுவம் போர்திட்டங்களை இடுவதிலும், களத்திலும் உதவி செய்ததும் சிங்கள பேரினவாத இராணுவத்தின் இந்த வெற்றிக்கு உதவியது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதேயளவு சர்வதேச நாடுகள் புலிகளுக்கு எவ்விதத்திலும் உதவவில்லை என்பதும் உண்மையே.

இந்திய துணைக்கண்டத்தை புதிய காலனிநாடாக மாற்றிவரும் வல்லாதிக்க நாடுகளின் உலகமயம் – தாராளமயம் – தனியார்மயம் போன்ற கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, தேசிய இனங்களின் சிறைக்கூடமாக விளங்கிவரும் இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்லாது உலக புரட்சிகர – தேசிய இன உரிமைக்காக போராடுபவர்களுக்கு பற்பல யதார்த்தங்களை, பாடங்களை கற்றுக் கொடுக்கிறது தமிழீழம்.

வல்லாதிக்கம்

தமிழ்த்தேசம் தன் விடுதலையை பெறவேண்டுமானால் சிங்கள அரசிற்கெதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலமே சாத்தியம் என்ற வரலாற்று அவசியத்தை, அரசியல் விதியை விடுதலைப்புலிகள் மட்டுமே எவ்வித சமரசமின்றி உறுதியாக பின்பற்றி வருகின்றனர். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மாபெரும் தேசியஇன விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக விளங்குகின்றனர். இவ்வாறு தமிழ்த்தேசிய அரசியலில் விடுதலைப்புலிகள் நிலைநிறுத்தியதுதான் தம் மக்களால் தாங்கப்படுவதற்கும், பலம் பெறுவதற்கும், தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் மதிப்புமிக்க வார்த்தைகளால் குறிப்பிடுவதற்கும் காரணமாக அமைந்தது. இதன்காரணமாகவும், 90களில் உலக அரங்கில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் தமிழ் ஈழமக்களிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவை பொஸ்னிய விடுதலை, அயர்லாந்து ஒப்பந்தம், செச்னிய மக்களின் போராட்டம், பாலஸ்தீன ஒப்பந்தம், ஸ்காட்லாந்துக்கு வழங்கப்பட்ட தனி பாராளுமன்ற முறைமை, கிழக்கு தீமோரா மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரம் கிடைத்தது மற்றும் தீவிரமடைந்த கொசோவா போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் போன்றவை தமிழ்ஈழ போராட்டம் குறித்த நம்பிக்கையுணர்வு ஊட்டின. ஒரு போராட்டம் வெற்றிபெற வேண்டுமாயின் அப்போராட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கை பெறுவது முக்கியமானது என்ற அடிப்படையில் இது ஒரு நல்ல அறிகுறி.

ஆனால் அதன்விளைவாக தமிழ்த்தேசிய உலக அரங்கில் குறிப்பாக தமிழ்தேச அறிவுத்துறையினர் மற்றும் ஜனநாயக சக்திகள் அந்நியத் தலையீட்டின் மூலம் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளும் முனைப்பு அதிகரித்தது. தமிழீழ போராட்டத்தில் அந்நிய தலையீடு அவசியம் என்ற கோஷம் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டாலும் கொசோவா விவகாரத்தின் தாக்கத்தினால் சர்வதேச தலையீடு அவசியம் என்ற கோஷம் மேலும் வலுப்பெற்றது. இதன்மூலம் தமிழீழத் தேசிய வரலாற்றில் முதன் முதலில் அன்னிய தலையீடாக இந்திய அரசின் தலையீடு ஏற்பட்டன. பின்னர் குறுகிய காலத்தில் (இரண்டு ஆண்டுகள்) கசப்பான அனுபவங்கள் பெற்றனர். அந்த வடுக்களும், தடையங்களும் இன்றளவும் மக்களிடத்தில் அழியாது நிற்பதையும் காணமுடிகிறது.

உலகெங்கும் நூற்றுக்கணக்கான தேசங்கள் அந்நியப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கொசோவா தேசிய இனத்தின் மீது சேர்பிய படைகள் ஆவேசத் தாக்குதல்கள் நடத்தப்பெற்ற போது உலகநாடுகள் அமைதி காத்ததோடு அத்தகைய தாக்குதல்களை முன்நின்று நடத்திய நோட்டோ படைகளின் செயல்பாடுகளை உலக நாடுகள் அங்கீகரிக்கின்ற நிலையில் இருந்தன. அப்படி கொசோவா மக்கள் அடக்கப்படுவதற்கும், உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் நியாயம் கற்பித்த சர்வதேச நாடுகள் சில தேசிய இனங்கள் மீது மட்டும் ஏன் அக்கறை காட்டுகின்றன. அத்தகைய தேசங்களுக்கு மட்டும் ஏன் சர்வதேச தலையீடுகள் நிகழ்கின்றன. என்ற உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

சர்வதேச தலையீடு என்ற பெயரில் வல்லரசு நாடுகளுக்கு சாதகமாக செயல்படும் அரசுகளுக்கு மட்டும் எல்லாவித உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன. அதாவது உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஏற்றுக்கொள்கிற, நடைமுறைப்படுத்துகிற அரசுகளுக்கு பாதுகாப்பளித்து வருவதோடு, வல்லரசுகளுக்கு பணியாத, அதன் கொள்கைகளை ஏற்காத நாடுகளுக்கு எதிராகவும் தன்னுடைய அச்சுறுத்தும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன என்பதுதான் சர்வதேச தலையீட்டின் வரலாறு.

அதாவது இன்றைய உலக ஒழுங்கமைப்பில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் சாராம்சத்தில் வல்லாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களாக பரிணாமம் பெறவேண்டி இருக்கிறது. வல்லாதிக்க அரசுகள் ஏனைய தேசங்களின் மீதும், தேசங்களை அமைக்கப் போராடிக் கொண்டிருக்கும் தேசங்களின் மீதும் தன் அரசியல் பொருளாதார ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டுதான் வல்லாதிக்க இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது. வல்லாதிக்க வரிசையில் இந்தியா போன்ற விரிவாதிக்க அரசுகளும் இப்போது அணி சேர்ந்துள்ளன.

ஏனைய தேசங்களின் கனிம வளங்களை கையகப்படுத்தவும், அத்தேசங்களில் அவர்களின் உற்பத்தியை பெருக்கவும், சந்தையை ஏற்படுத்திக் கொள்ளவும் ஏற்புடையதாக கொள்கைத் திட்டங்களை முன்கூட்டியே வகுத்துக் கொள்கின்றன. இத்தகைய ஆதிக்க போக்குகளுக்கு பணியாத தேசங்களையும் அவற்றின் அரசுகளையும் அடிபணியச் செய்வதற்காக அந்தந்த தேசத்து ஆளும் பெருமுதலாளிகளை தம் வசப்படுத்திக் கொள்கின்றன, அல்லது தமக்கேற்றாற்ப்போல் ஆட்சி மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. முற்றிலும் பணியாத தேசங்களின்மீது சர்வதேச தலையீட்டின் மூலம் கூட்டுத் தண்டனைகளை விதிக்கின்றன. அதுவும் முடியாதபோது நேரடி ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றன. இவ்வாறாக, வல்லரசு பயங்கரவாதமானது உலக மக்களை தன்பிடிக்குள் தொடர்ந்து அடக்கி வைத்திருக்க முனைகின்றது.

ஏனைய தேசங்களையும் நாடுகளையும் தனது பொருளாதார நலன்களுக்குக் அடிபணிய வைக்கும் ஒரு வழிமுறையாக வல்லரசுகள் திறந்த பொருளாதாரக் கொள்கையை உலகெங்கும் திறந்து விட்டுள்ளன. இதன்மூலம் இதர தேசங்களை சட்டபூர்வ ஒப்பந்தங்கள் மூலமாக கொள்ளையிடுவதற்கான ஒரு வழிமுறையாக இது பயன்படுத்தப்படுகின்றது. இத்திறந்த பொருளாதாரக் கட்டமைப்பானது அனேகமான நாடுகளில் மக்களிடையே உட்பூசல்கள் மிகக்கொடூரப் பண்புகளில் வெடித்தெழக் காரணமாக அமைகின்றது. இவ்வாரான சமூக, அரசியல் கொந்தளிப்புகளுக்கு மூலகாரணமாக திகழும் இந்த வல்லரசுகள், மறுபுறம் அநீதிகளை எதிர்க்கும், புதிய புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும் சக்திகளையும் அதன் போராட்டங்களையும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, தடைகளை பிறப்பித்து அழித்தொழிப்புகளை மேற்கொள்கிறது.

திறந்த பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத விளைவாக மோசமான சமூகக் கொந்தளிப்புகள் வெடிக்கும் என்பதை ஏற்கனவே இந்த வல்லாதிக்கவாதிகள் அறிந்து வைத்திருக்கின்றனர். இதனால் இவ்வரசுகள் தம்கட்டுப்பாட்டிற்குள் உள்ள நாடுகளில் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகம் செய்வதற்கு முன்பே அத்தேசத்தில் அடக்குமுறைப் பண்புகள் கொண்ட அரசியல் அமைப்பு முறைகள் மற்றும் சட்டஉருவாக்கங்களை உருவாக்கிக் கொள்ளச் செய்கிறது. சனநாயக முறைமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் நாசுக்காக செய்துவிடுகிறது. தமக்கு ஏற்புடைய விசுவாசிகளை ஆட்சிக்கட்டில் அமர்த்தி ஏற்கனவே தமக்குள் வகுக்கப்பட்ட கொள்கைகளின்படி அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்து கொள்கின்றது.

அதனடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுத பரிணாமத்துடன் எழுச்சி பெற்ற 80 களின் காலகட்டத்தில் இந்திய அரசு தமிழீழத் தேசியத்துடனும், சிறிலங்கா அரசுடனும் மேற்கொண்டு வரும் உறவைப் பார்தோமானால் 1982 – 1987 இல் இந்திய அரசு சோவியத் ரஷ்யா வல்லாதிக்கத்திற்குட்பட்டதாகவும், சிறிலங்கா அரசு அமெரிக்க வல்லாதிக்கத்திற்க்குட்பட்டதாகவும் இருந்த காலகட்டம். இந்நிலையில் உலக வல்லரசுகளுக்கிடையிலான முரண்பாடுகளை இவ்விரு நாடுகளும் பிரதிபலித்தன.

எப்படியெனில் இந்தியாவின் பகுதி விரிவாக்கத்திற்கு எதிராக அமெரிக்க வழிகாட்டலில் சிறிலங்கா அரசை செயற்பட விடாமல் தடுக்கும் நோக்கத்தில் இந்தியா செயல்பட்டது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான முரண் வெளிப்படையாக வெளிப்பட்டது. சிங்கள அரசின் மீது தனது ஆதிக்கத்தை நிறுவுவதற்கான ஒரு ராஜதந்திரமாக ஈழத்தமிழர் தேசிய பிரச்சனையை பயன்படுத்துவதில் இந்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. ஈழத்தமிழர்களின் மீது தமிழகத்தில் உருவான அதரவு அலையை உதவிக்கரங்களை தனது நீண்டகால பகுதிவிரிவாக்க அரசியல் நலன்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் போராட்ட இயக்கங்களுக்கு பல உதவிகள் செய்ததைப் போன்று தமிழீழ அகதிகளையும் இந்தியாவிற்குள் அனுமதிப்பதை இந்திய அரசு தமிழக அரசை ஊக்குவித்தது. பின்னர் தமிழகத்தில் தஞ்சமடைந்த தமிழீழ அகதிகளின் எண்ணிக்கையை காரணம் காட்டியும் தனது பிராந்திய அதிகாரத்தைப் பிரயோகித்து இந்திய நலன்களுக்குட்பட்ட அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசையும் போராளிகள் தரப்பினரையும் நிர்ப்பந்தப்படுத்தியதின் விளைவாக இந்தியா – இலங்கை ஒப்பந்தம் அமைந்தது.

1987 – 1991 இல் உள்நாட்டு குழப்பங்களும், நம்பிக்கையின்மையும் மேலோங்கியபோது சிங்கள அரசு இந்தியாவிடம் பணிந்தது. பல போராளி குழுக்களும் அடிப்பணிந்தன. ஆனால் சில போராளிக் குழுக்கள் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடியது. புலிகள் தனித்தமிழ் தேசம் வேண்டி இருதிவரை எவ்விதமான சமரசமற்ற போராளிக் குழுக்களாக ஈழத்தமிழ் மக்களிடம் நம்பிக்கை பெற்று புகழ்பெறலாயினர். இதன் விளைவாக ஈழத்தமிழர் – இந்திய உறவு வெளிப்படையாக பகைமை உறவானது. ஈழத்தமிழரிடம் நேரடியாக மோதும் சக்தியாக இந்தியா மாறியது.

1991 ற்கு பின்னர்: 80 களின் இறுதியில் சோவியத் ஒன்றியம் தகர்தது. அமெரிக்கா தலைமையிலான வல்லரசு உலகின் ஒரே ஆதிக்க சக்தியாக மாறியது. உலகமயம், தாராளமயம், தனியார்மயம் எனும் வல்லாதிக்க பொருளாதார கொள்கை உலகநாடுகள் அங்கீகரித்து மூலைமுடுக்குகள் எங்கும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இதன் பாதிப்புக்கு இந்தியத் துணைக்கண்டமும் உள்ளாகியிருக்கிறது. தென்னாசிய கண்டத்தில் இந்திய ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதில் தனக்கான தனித்துவமான நலன்களை இந்தியா கொண்டிருந்தாலும் வல்லாதிக்க பொருளாதார நலன் சார்ந்து இந்திய – சிறிலங்கா அரசுகளுக்கிடையிலான உறவுகள் ஒத்த தன்மையிலானதாக இருக்கிறது.

மறுபுறம், விடுதலை புலிகள் சிங்கள அரசுடன் மூன்றாம் கட்ட ஈழப்போராக பிரகடனப்படுத்திவிட்டு மண்மீட்புப் போராட்டத்தில் முன்னேறியது. தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றிலும் தன்நிலைச் சார்பு போராட்டமாக பரிணமிக்கத் தொடங்கியது. அன்று முதல் அச்சமடைந்த வல்லாதிக்க சக்திகள் தமிழீழத் தேசியத்தை அச்சுறுத்தத் தொடங்கின. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதில் தமக்கிடையிலான தனித்துவமானதும் பொதுவானதுமான நலன்களின் அடிப்படையில் இந்தியா – சிறிலங்கா அரசுகள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படத் தொடங்கின. 1991 இல் சார்க் மாநாட்டின் பின்னர் இந்தியா – சிறிலங்கா அரசுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. இதன் பிரதிபலிப்பாக 1992 இல் தமிழீழ அகதிகள் இந்திய, தமிழக அரசுகளால் கட்டாயப்படுத்தி சிறிலங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

1995 இற்கு பின்னர்: சிறிலங்காவில் சந்திரிகா தலைமையிலான பொதுசன முன்னணி சிங்கள தேசத்தை மேலும் சிறப்பாக ஒருங்கிணைத்து ஆட்சி அமைக்கிறது. ஏகாதிபத்திய முகாமுடன் சந்திரிகா அரசாங்கம் நெருக்கமான உறவுகளை புதிய தளங்களில் ஏற்படுத்திக் கொண்டது. இந்திய பொருளாதார முறைமை மேலும் உலகமயமாதல் நோக்கி நகர்கிறது. இதன் கீழ் இந்திய மூலதனம் சிறிலங்காவில் குறிப்பாக மலையக பெருந்தோட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு இரு அரசுகளுக்குமிடையிலான பொருளாதார உறவுகள் பலம் பெறுகின்றன. இரு நாடுகளின் தனியார் குழுமங்களின் நலன்கள் மேலும் ஒன்றையொன்று பிராந்திய வகைப்பட்டு பலப்படுத்தும் தேவை அதிகரிக்கிறது. முரண்பாடுகள் இருப்பினும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க தனித்துவத்தை அங்கீகரித்து கொண்டு செல்லும் இணக்கப்போக்கை சிறிலங்கா மேற்கொள்கிறது. (வல்லரசிய பொருளாதாரப் பரப்பளவை இந்தியா தன்னளவில் நடைமுறைப்படுத்தி வருவதால் இந்தியாவின் ஆதிக்கத்தை இன்றும் வல்லாதிக்க முகாம்களும் அங்கீகரித்து அதற்கேற்ப செயற்படுவது கவனிக்கத்தக்கது) இத்தகைய காலகட்டத்தில்தான் சிறிலங்கா அரசிற்கு இராணுவ, பொருளாதார, அரசியல் உதவிகளை வழங்கும் உடனடி காப்பாளராக இந்தியாவும் தீவிரமாக செயற்படத் தொடங்கியது.

2001 இல் சிறிலங்காவை தனது நேசநாடாக இந்தியா பகிரங்கமாக பிரகடனப்படுத்தி தமிழீழத்தின் மீதான தேசிய அடக்குமுறைக்கு துணை நிற்கத்தொடங்கியது. அதை பாதுகாக்கும் காரியத்தை இந்தியாவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் திறம்பட மேற்கொண்டு வந்தது. அமெரிக்காவும் அதன் நோட்டோ கூட்டமைப்புகளும் தமக்கு முற்றிலும் சாதகமாக அமையக்கூடிய விதத்தில் பிற நாட்டு சமூகங்களின் விவகாரங்களில் தலையிடுகின்றன. அடக்குமுறைக்கெதிராகவும் மறுக்கப்படும் உரிமைகளுக்கெதிராகவும் தேசிய இனங்கள் எழுச்சி பெறும்போதெல்லாம் “தேசிய இனங்களின் உரிமையை நிலைநிறுத்தவும், அத்தகைய கொடுமைகளை தடுக்கவும் முயற்சிக்கிறோம்” என்று உலகை நம்பச் செய்து தலையிட்டு அவற்றைவிட மோசமான கொடுமைகளை நேராகவோ, மறைமுகமாகவோ நடத்தி அந்த தேசிய இனங்களின் உரிமையை, இறையாண்மையை தன் காலடியில் பனியச் செய்வதோடு அந்நாட்டு மக்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து அடிப்பனிய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கியதை சென்ற நூற்றாண்டு முழுவதும் பார்க்கமுடிந்தது.

விடுதலைப்புலிகளின் அன்னியத்தலையீட்டுக் கொள்கையின் விளைவாக ஐரோப்பிய வல்லரசுகளின் நடுநிலை பேச்சுவார்த்தையை ஏற்று நார்வே தலைமையிலான “போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவை” விடுதலைப் புலிகள் அங்கிகரித்ததனர். அதன்விளைவாக தன்னார்வத் தொண்டு நிறுவன குழுக்களை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தடையின்றி செயல்பட அனுமதிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானதும் நாம் அறிந்ததே. 2001 இல், அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகள் உலகமயத் திட்டங்களை (சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பெருநகரமயமாதல்) செயல்படுத்தப்படும்போது எழும் எதிர்ப்பின் காரணமாக “பயங்கரவாதத்திற்கெதிரான போர்” என்று அறிவித்து விட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தடைசெய்தனர். புலிகளின் ஆயுத, நிதித் திரட்டல்களை தடுத்துநிறுத்தத் தொடங்கினர். 4வது ஈழப்போரில் அமெரிக்கா – இந்தியா போர்நிறுத்தத்திற்கு உதவுவார்கள் என்ற அரசியல் மாயையை தோற்றுவித்துவிட்டு, புலிகள் பெரும் இழப்பையும், புலித்தலைவர்களின் படுகொலையையும் நிகழ்த்திவிட்டு அமெரிக்க வல்லரசின் புதிய அதிபர் ஒபாமாவும், அமெரிக்க உலக மேலாதிக்க திட்டங்களை வகுக்கும் ஹிலாரி கிளிண்டனும் சிங்கள இராணுவத்தின் இனஅழிப்பு போரை தடுத்து நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கைகள் ஈழ மக்களிடம் தோன்றியது தற்செயலானதன்று தன்னார்வ குழுக்கள் பல காலம் இத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளே உறுதியாக நின்றனர். இந்திய விரிவாக்க மனோபாவம் கொண்ட அரசும், வல்லரசுகளும் பல முறை நிர்ப்பந்தித்தபோது பல போராளி குழுக்கள் (ப்ளாட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்) பணிந்தது. விடுதலைப்புலிகள் பணிய மறுத்ததோடு அடுத்தக்கட்டத்திற்கு போராட்டத்தை நகர்த்தினர். இது ஈழத்தமிழர்களிடத்திலும் உலகத்தமிழரிடத்திலும் புலிகள் மீதான நம்பிக்கையை, மதிப்பையும் ஈட்டிக்கொடுத்தது. விடுதலைப்புலிகளின் இந்த அடிப்படைக் கொள்ளை உறுதியும் சமரசமற்ற யுத்தமும் அவர்களை மாபெரும் சக்தியாக மாற்றியது. ஏறத்தாழ 25 ஆண்டுகளாக ஏராளமான சொத்துகளும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன. எண்னற்ற மாவீரர்களும், மக்களும் கொல்லப்பட்டனர். இருப்பினும் உறுதியான மனதிடத்துடன் பாதைமாறாமல் போரை நடத்திச் சென்றனர். 20 ஆண்டுகளில் இந்திய விரிவாதிக்க ஆட்சியாளர்கள் தலைமையில் நடைப்பெற்ற “திம்பு பேச்சுவார்த்தை” நார்வேயின் “அமைதிப் பேச்சுவார்த்தை” என ஈழவிடுதலைப் போரை திசைத்திருப்ப செய்யப்பட்ட பல முயற்சிகளையும் தாண்டி விடுதலைப்புலிகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தனர். இந்தியா, அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வல்லரசுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்தபோதும், புலிகள் இவர்களிடம் சரணடைய மறுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேரை தமது படைக்கு திரட்டியதும், இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்ததும், வல்லரசிய – இந்திய அரசுகளின் உதவியால் செயற்கைக்கோள் உளவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும், இந்திய இராணுவம் போர்த்திட்டங்களை தீட்டியும், களத்தில் நின்று பணியாற்றியும் தன்உதவிகளை செய்து சிங்கள பேரினவாத இராணுவத்தின் இந்த வெற்றிக்கு உதவியது. மறுபுறம் விடுதலைப் புலிகள் சர்வதேச சந்தையிலிருந்து நவீன ஆயுதங்களையும், தளவாடங்களையும், உலகத்தமிழ் சமூகங்களின் நிதி உதவிகளையும் பெறுவதை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் மற்றும் வல்லாதிக்க நாடுகளும் அதைச்சார்ந்த நாடுகளும் பெருமளவு முடக்கிவிட்டதின் வாயிலாக 4வது ஈழப்போரில் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளை ஒழிக்க ஓரணியில் திரண்டு இலங்கை பேரினவாத அரசுக்கு துணை நின்றனர் என்பது சர்வதேச தலையீட்டால் பெற்ற இன்னொரு கசப்பான அனுபவங்கள்.

SHARE