ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தோற்றமும் அதனது தமிழ்த் தேசிய சார்பு நிலையும்”

455

(அசுரா)

மண்டபத்தில் நுழைந்ததும் நூற்றுக்கும் அதிகமான கொல்லப்பட்ட தோழர்களினது புகைப்படங்கள் மண்டபச் சுவர்களை நிறைத்துக் கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.   நடந்து முடிந்த யுத்தம் பலிகொண்ட உயிர்களின் பெறுமதி இப்படி சுவர்களில் தொங்குவதற்காகவே பயன்பட்டுப்போனது. அந்த யுத்தம் விழுங்கி ஏப்பம் விட்ட உடைமைகளின் இழப்புக்களையும் நாம் யாரிடம் கோருவது? அது மட்டுமா நிகழ்ந்தது!! மனிதத்தை, மக்களை நேசித்த தோழர் நாபாவையும் பலிகொடுத்து… இன்று நாம் சாதித்ததுதான் என்ன? இந்தக் கேள்வியானது எமது மனச்சாட்சியை தொடர்ந்து அச்சுறுத்திய வண்ணம் இருக்கத்தான் போகின்றது. ஆயிதப்போராட்டத்தை ஒரு சிலகாலமாவது ஆதரித்தவன் என்ற வகையில்  இழந்த உயிர்களுக்கும், அழிக்கப்பட்ட உடைமைகளுக்கும் நானும் ஒரு காரணமாய் இருந்துள்ளேன்  எனும் குற்ற உணர்வுடனேயே  மண்டபத்தின் ஓர் மூலையில் கூனிக் குறுகி அமர்ந்து கொண்டேன்.
ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் பிரான்சுக்கிளைப் பொறுப்பாளராக இருந்த மறைந்த தோழர் புஸ்பராஜாவின் மனைவி மீரா அவர்கள் குத்துவிளக்கேற்றி தியாகிகள் நினைவுக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.அதைத்தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் உடனும் தோழர் நாபாவை நன்கு அறிந்தவருமான தோழர் கணேசமூர்த்தி அவர்கள் தோழர் நாபாவின் ஒளிப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பல தோழர்கள் தோழர் நாபாவின் நினைவுகளையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் கடந்த கால செயல்பாடடுகள் குறித்தும் பேசினார்கள். சுவிஸ்,லணடன்,ஜேர்மன் நாடுகளிலுமிருந்தும் பல கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வந்து தியாகிகள் நினைவில் கலந்து கொண்டனர். லண்டனிலுள்ள கட்சியின் மத்திய குழு உறுப்பினரான தோழர் சாந்தன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். இலங்கையிலிருந்து தோழர் வரதராஜப் பொருமாள் அவர்கள் தொலைபேசியில் உரையாற்றினார். தோழர் சுகு அவர்கள் எழுதி அனுப்பிய கட்டுரையும் வாசிக்கப்பட்டது. இறுதியாக கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் எதிர்கால வேலைத்திட்டம் குறித்ததுமான விவரணக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
ரி.பி.சி வானொலியின் பிரதம அரசியல் விமர்சகரான தோழர் சிவலிங்கம் அவர்களும் சிறப்புரையாற்றினார். தோழர் சிவலிங்கம் அவர்கள் உரையாற்றும்பொழுது கோமாநிலையில் இருக்கும் ஒரு நோயாளின் இதயத்துடிப்பு இயங்கும் நிலையில்  நான் இருந்தேன். கோமா நிலையில் இருக்கும் ஒரு நோயாளியின் இதயத்துடிப்பு ஏறியும் இறங்கியும்  செயல்படுவதை நாம் மருத்தவக் கருவியின் திரையில் காண்பதுபோல். அவர் பேச்சு அப்படி ஒரு நிலையை எனக்கு உருவாக்கியது. அவர் பேசிக் கொண்டிருக்கும் சில தருணங்களில்   எனது  இதயத்துடிப்பு நின்றுவிட்டது போலவும் உணர்ந்து கொண்டேன். அத்தருணம் யாதெனில் இன்றைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் அன்றைய வட்டுக்கோட்டைத்தீர்மானத்திற்குமான வேறுபாடுகளை அவர் எமக்கு எடுத்துரைத்தபோது. இன்றைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்துபவர்கள் வந்து ஏகாதிபத்திய அபிலாசைகளை நிறைவேற்றத் துணைபுரிபவர்கள் என்றும், அன்றைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியவர்களின் பின்னணியானது சோசலிசக்கட்டுமானத்தையும் இடதுசாரியக் கருத்தியலில் தோய்ந்து ஊறிய இளைஞர்களின் ‘புரட்சிகர‘ சிந்தனையின் வெளிப்பாடுகள் என்பதாகவும் தோழர் சிவலிங்கம் அவர்கள் எடுத்துரைத்தார். அதற்கு ஆதாரமாக சோசலிசக்கட்டுமானத்தில் வரையப்பட்ட அன்றைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வாசித்தும் காட்டினார்.
நான் பக்கத்திலிருந்த நண்பரிடம் கேட்டேன் ‘சூரியக்கடவுளான பிராபகரனும் சோசலிசக்கட்டுமானங் கொண்ட தமிழீழம் அமைப்பதாகத்தானே வாக்கறுதி அளித்தவர். அதை அவரும் ‘எழுத்தில்‘ எழுதித்தானே எமக்கு வாசித்துக் காட்டுறவர். என நான் சொல்ல நண்பர் கொக்கட்டம் போட்டுச் சிரித்துக்கொண்டார்.
தொடங்கப்பட்ட ஆயுதப்போராட்டத்தின் விளைவுகளுக்கு பிரபாகரனை மட்டுமே குற்றம் சுமத்திவிட்டு நழுவும் போக்கைத்தான் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆயுதப்போராட்டத்தை நடத்தியவர்களும் அதை ஆதரித்தவர்களும் கூட அந்தக் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. தோழர் சிவலிங்கத்தின் சோசலிச கட்டமானத்தின் முன்னோடிகளின் நுண் அரசியலையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தோற்றமும்  அதனது தமிழித் தேசியவாத சார்பு நிலை குறித்தும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
தியாகிகள் தின ஏற்பாட்டாளர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தமிழ்த் தேசிய நிலைப்பாடு எனும் தலைப்பில் பேசுமாறு நண்பர் தேவதாசனைக் கேட்டுக்கொண்டார்கள். அச்சேவையை தேவதாசனிடம் இருந்து கைப்பற்றி  நானே அத்தலைப்பில் பேசுவதாக தீர்மானித்துக் கொண்டேன். இக்கட்டுரையின் பெரும்பகுதி தியாகிகள் தின நிகழ்வில் பேசுவதற்காகவே தயாரிக்கப்பட்டது. கட்சித் தோழர்களும் ஆதரவாளர்களும்  தொடர்ந்து உரையாற்றியதால்  நான் பேசுவதற்கான    அச்சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
முதலில் தோழர் நாப குறித்துப் பேசுவது எமது சமூகத்திற்கு மிக அவசியமானது.
தோழர் நாபாவுடனான அறிமுகமும், அவர்களுடன் நேரில் பழகும்  வாய்ப்புக்களும் கிடைக்காததையிட்டு நான் மிக வருந்தியதுண்டு. தோழர் நாபாவுடன் பழகிய தோழர்கள் அவரின் நடைமுறைகள்  சுபாவங்கள் ,பண்புகள் பற்றிக்கூறியவை ஊடாகவே  தோழர் நாபா மீதான  மதிப்பும்  மரியாதையும் என்னுள் புகுந்து உறைந்து கிடக்கின்றது.
தோழர் நாபா அவர்கள் தலைமைப்பதவிக்கு உகந்த ஒரு மனிதனல்ல!  நடைமுறை அரசியலில் ஒரு தலைவன் என்பவன் எதிரியை எதிர்கொள்ளும் சாணக்கியனாக இருக்கவேண்டியுள்ளது. அரசியல் சாணக்கியம் என்றால் என்ன? சந்தேகம், சூழ்ச்சி, தந்திரம், மொழி விளையாட்டு, (விவாதம்) கபடம், புரட்டு, புலுடா என அனைத்தும் கலந்து குழைச்சு உருட்டப்பட்ட ஒரு உருண்டை தான் அரசியல் சாணக்கியம் என்பது. இதுவே நடைமுறை அரசியல் தலைமைக்கு மிக அவசியமானதும் கூட.  ஒரு அரசன் என்பவன் அயல் நாட்டு அரசனை எதிர்கொள்வதற்கு ‘சாணக்கியம்‘ அவசியம்.  ஒரு ஜனநாயக அரசு என்றாலும் எதிர்க்கட்சியை எதிர்கொள்வதற்கு ‘சாணக்கிம்‘ அவசியம். எனவே ஒரு கட்சியின் தலைமைக்கும் இந்த சாணக்கிம் அவசியமாக இருக்கின்றது.
ஒரு கட்சித் தலைவன் தனக்கென்று நியமிக்கப்பட்ட மெய்ப்பாதுகாப்பாளனை நித்திரை கொள்ள வைத்து அவனுக்கு குளிராமல் இருக்க போர்வையெடுத்துப் போத்துவிட்டு தான் விழித்திருந்து மெய்ப்பாதுகாப்பாளனை பாதுகாத்துக் கொண்டிருந்த சம்பவத்தை வரலாற்றில எங்கேயாவது  நாம் தேடமுடியுமா!! ஆனால்  தோழர் நாபாவின் மனித  நேய உச்சம் இவ்வாறாகவே வெளிப்பட்டது.  தனக்கென பாதுகாப்பிற்காக கொடுக்கப்படும் பிஸ்டலையும் “ இது என்ன சனியனுக்கு எனக்கு வேண்டாம் தோழர் நீங்க வைச்சிருங்கோ” . எனக் கூறிவிட்டு சையிக்கிளில் ஏறிச்செல்லும் ஒருவர் ஒரு ஆயுதப்போராட்ட இயக்கதின் தலைமைப் பதிவிக்கு  உகந்தவராக எப்படி இருக்கமுடியும்?
மேலும் தோழர் நபா வந்து ஒரு வரட்டுச் சிந்தாந்த வாதியும் அல்ல. நாம் பிரான்சில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் இணைந்து வேலை செய்த காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சந்தித்து உரையாடுவதும், கட்சி வேலைகளை மேற்கொள்வதும் வழமையாக இருந்து வந்தது. ஏதாவது ஒரு ஞாயிறு நாம் கூட்டத்திற்கு சமூகமளிக்காது இருந்து அதற்கான எமது சொந்தக்காரணங்களைக் கூறினால். லெனினின் ‘கொட்டேசனை’ எமக்கு முன்னால் வீசுவார்கள். “தோழர் கட்சியின் நலனுக்கு உட்பட்டுத்தான் எங்களது சொந்த நலன்கள் இருக்கவேண்டும் என்னதான் சொந்த வேலைகள் இருந்தாலும் கட்சிப் பணிகளுக்குத்தான் முன்னுருமை கொடுக்கவேண்டும். இதன் மூலமாகவே தோழர் நாம் மக்களை வென்றெடுக்கலாம்”. என்றெல்லாம்   ஓதி சித்தாந்த்தால் எங்களைத் அடிச்சுத் தோச்செடுத்துப்போடுவார்கள்.
மேற்கூறிய கோட்பாடுகள் குறித்து தோழர் நாபாவின் நிலைப்பாடு எப்படி இருந்ததென்பதை மறைந்த தோழர் உமாகாந்தன் அவர்கள் ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகின்றது. இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது சில தோழர்களுடன் உமாகாந்தனும் இலங்கைக்குப் பயணமானார். பிரயாண ஒழுங்குகள் யாவும் கட்சியூடாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கை சென்ற உமாகாந்தன் கட்சிக் காரியாலத்திலேயே தங்கியிருந்தார். தனது வீடு மிக அருகில் இருந்தபோதும் கட்சியின் ஏற்பாட்டில் இலங்கை வந்தபடியால் உமாகாந்தன் தனது வீட்டுக்கு செல்வது முறையல்ல எனக் கருதினார். அதை அறிந்த தோழர் நபா உமாகாந்தனிடம் “தோழர் நீங்கள் மிக நீண்ட நாட்களுப்பிற்பாடு இலங்கை வந்துள்ளீர்கள் கட்டாயம் உங்கள் பெற்றோரையும் சகோதரகள் நண்பர்கள் உறவினர்களை நீங்கள் சந்திக்க வேண்டும் எனவே நீங்கள் வீட்டுக்குச் சென்று உங்கள் உறவினர்கள் நண்பர்களைச் சந்திப்பதோடு உங்கள் சொந்த அலுவல்களையும் நிறைவேற்றிய பிற்பாடு உங்கள் வசதிப்படி நீங்கள் இங்குவந்தால் போதும்“ என நபா கூறியதாக  உமாகாந்தன் எமக்குத் தெரிவித்தார். அது மட்டுமல்லாது கட்சி அங்கத்தவர்களுக்கு தலைமை வழிபாடு, தலைமை விசுவாசம் என்பது ஏற்படாத வகையில் கட்சி செயல்பட வேண்டும் என்பதில் மிகக் கவனமாகச் செயல்பட்டு வந்தவர் தோழர் நாபா அவர்கள்.
எனவே இவ்வாறான பண்பும் மனிதநேயமும் கொண்ட ஒருவர் இன்றைய நடைமுறை அரசியலுக்கு தலைமைதாங்குவது சாத்தியமாகுமா? தோழர் நபா வின் நினைவுகள் மிகப்பரவசமான உணர்வை  ஊட்டவல்லது. அவரைப்பற்றி கேள்விப்படுவதனூடாகவே எனக்கு அப்படிப்பட்ட உணர்வு ஏற்படும்போது. தோழர் நபாவுடன் ஒன்றாகப் பழகி வாழ்ந்த தோழர்களுக்கு நாபாவின் நினைவுகள் எந்தளவிற்கு பரவசத்தை ஊட்டும். அவர்கள் உண்மையிலேயே மிகப் பேறுபெற்றவர்கள் என்றுதான் கூறுவேன்.
“ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தோற்றமும் அதனது தமிழ்த் தேசிய சார்பு நிலையும்”
ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தோற்றம் என்கின்றபோது அது 70ஆம் ஆண்டுகாலப்பகுதி என்று நினைக்கினறேன். அன்றையகாலகட்டத்தில்  ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு சர்வதோசரீதியான ஆதரவுகள் மேலோங்கியிருந்த காலமாகும். அதுவும் குறிப்பாக இடதுசாரிய சிந்தனையுடனான போராட்டங்களுக்கு. மிகப்பெரிய ஆதரவுகளை பல்வேறு நாடுகளும் வழங்கி வந்த காலகட்டம்.
இந்தப் பின்னணியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் தனது அரசியல் வேலைத்திட்டத்தை ஸ்தாபித்தது. ஆரம்பத்தில் இலங்கையில் உள்ள அனைத்து இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டது. சாதியவிடுதலையின் அவசியம், பெண்விடுதலையின் முக்கியத்துவம், மலையக மக்களின் மேம்பாடுகள், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டுவரும் சிங்கள மக்கள் குறித்தெல்லாம் ஈ.பி.ஆர்.எல்.எவ் அக்கறை கொண்டிருந்தது.
அது மட்டுமல்லாது பல்வேறு பிராந்திய மட்டங்களிலும் ஸ்தாபனங்களை உருவாக்கும் திட்டங்ளையும் கொண்டிருந்தது. அந்தவகையில் பெண்கள் முன்னணி, கடற்தொழிலாளர்கள் சங்கம், விவசாயிகளின் அமைப்பு போன்ற பல்வேறு முன்னணி அமைப்புக்களை உருவாக்கி செயல்படவேண்டிய பணிகளின் அவசியத்தையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் உணர்ந்து இருந்தது. இவ்வாறுதான் ஈ.பி.ஆர்.எல்.எவ். எனும் கட்சிக்கான அஸ்திவாரம் இடப்பட்டது.
அதே நேரம் யாழ்ப்பாணிய மிதவாதத் தலைமையின்  வட்டுக்கோட்டை (தமிழ்ஈழம்)தீர்மானத்தையும் சுவீகரித்துக்கொண்டது.  இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்த அரசியல் வாதிகளின் கருத்தியல் பின்னணிகளை எந்தவிதத்திலும் விமர்சனத்திற்கும் உட்படுத்தாது ஈ.பி.ஆர்.எல்.எவ் உட்பட அனைத்து இயக்களும் தமிழ் ஈழம் எனும் தமிழ்த் தேசியக் கருத்தியலை சுவீகரித்துக் கொண்டனர்.
மிதவாதிகளுக்கும் இயக்கங்களுக்கும் இருந்த முரண்பாடென்பது செயல்பாட்டுத் தளத்தில் மட்டுமே வேறுபாடுகள் கொண்டதாக இருந்தது.
அதாவது இலங்கை அரசுக்கு மிதவாதிகள் தீவிரமான அழுத்தங்கள் எதையும் முன்வைக்காது  மிதவாதப் போக்கில் செயல்படுகின்றார்கள் எனும் குற்றச்சாட்டையே அனைத்து இயக்கங்களும் முன்வைத்தனர். எனவே தான் யாழ்ப்பாணிய மிதவாதத் தலைமையிடமிருந்து தமிழ்த் தேசியத்தை இழுத்து உருவியெடுத்து தமது தோள்களில் சுமந்தனர்  அனைத்து இயக்கங்களும். ஈ.பி.ஆர்.எல்.எவ் உட்பட.  அந்தத் தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டு முகமாகவே     ஆயுதப்போராட்ட செயல்பாடுகளும் அமைந்தன.
இவை எல்லாம் அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த விடயம் என்பதையும் நான் அறிவேன். ஆனால் இன்றும் கூட தாம் தோள்களில் சுமந்து திரியும் ‘தமிழ்த் தேசியத்தின்‘ பின்னணி என்ன? அதனது பாரம்பரியம் என்ன, அதனது வரலாறென்ன? என்பதை தெரிந்து கொள்ள முனையாது செயல்பட்டு வரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயல்பாடுகள்தாம் எமக்கு மிகவேதனை அழிப்பதாக உள்ளது.
நாம் கொஞ்சம் வரலாற்றைப் பின்னே தள்ளி இலங்கையின் 19ஆம் நூற்றாண்டுக் காலகட்ட அரசியல் சமூகப் பின்னணிகளை சற்றுப் பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். அன்றைய காலகட்டத்தில் ‘பொது மக்கள்‘ என்ற அடையாளமானது இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய கருத்தியல் அடையாளமாக இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட ‘elite class ‘  எனப்படும் மேட்டுக்குடி பிரிவினரே அன்று பொது மக்கள் எனும் தகுதி படைத்தவர்களாக இருந்து வந்தனர்.
இவர்களே வாக்களிக்கும் தகுதி படைத்தவர்களாகவும்  இருந்தவர்கள். அத்தோடு கல்வி, சமூக, அரசியல் மேலாதிக்கம் கொண்டவர்களாக இருந்ததோடு அரசியல் அதிகாரத்தையும் அரச பதவிகளையும் சுவீகரித்துக் கொண்டவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.  மற்றையோர் கூலிகள், அடிமைகள், இழிசனர், தோட்டக்காட்டான் , சோனி  என அழைக்கப்படும் மக்களாக இருந்துவந்தனர். இவ்வாறான மக்கள் தொகுதியினர் பொதுமக்கள் எனும் கருத்தியலுக்குள் அடங்காதவர்கள்.
பொது மக்கள் எனப்படும் இந்த மேட்டுக்குடிப்பிரிவினர் தமது  நலன்களுக்கு உகந்தவாறே  அரசியல் சட்டங்களை அமுலாக்க முனைந்தார்கள். சிங்கள மக்கள் மத்தியிலும் இதே நிலமை தான் இருந்தது. ஏன் உலகம் பூராகவும் இவ்வாறுதான் நிலமை இருந்து வந்தது. ஆனால் பிறதேசங்கள் இன்று 21ஆம் நூற்றாண்டுக்குள் நுழைந்து விட்டது. ஆனால் நாமோ இன்றும் 19ஆம் நூற்றாண்டு காலத்து அரசியல் சிந்தனைக்கே (மேட்டுக்குடி)ஆதரவளித்து வருகின்றோம்.
இந்த நிலமையை ஆரம்பத்தில் நாம் தமிழ் இலக்கியத்திலும் காணக்கூடியதாக இருந்தது. இலங்கையில் தமிழில் எழுதப்பட்ட முதலாவது நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘ (1876) வேதநாயகம் பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. அந்தப் பொதுமக்கள் குறித்த வரலாறுகளே இலக்கியமாக மதிக்கப்பட்டது.இலக்கியவாதியான  பாவலர் துரைப்பா அவர்கள் குறித்து முற்போக்குவாதி, சமூகநலன் குறித்து அக்கறை கொண்டவர்கள் என்று பேசப்பட்டபோதும் இவரது பெரும் மதிப்பிற்கு உரியவராக இருந்தவர் சேர் பொன்னம்பலம் இராமநாதனாகும். இவர்தானே சர்வஜன வாக்களிப்புக்கு எதிராகக் கொடிபிடித்தவர். அதுமட்டுமா பாவலர் துரையப்பா அவர்களுக்கு ரஷ்சியப்புரட்சி பண்பாட்டுக்குழப்பமாக தோன்றியது.“பாவலரைப்போலவே அக்காலத்து இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்களும் அரசியல் வாதிகளெனும் உயர்ந்தோர் குழாத்தினரும், வளர்ந்து கொண்டிருந்த மக்கள் சக்தியையும் தீவிர ஜனநாயகக் குரல்களையும் கண்டு, கேட்டு அலமந்தனர்“ என அன்றைய மேட்டுக்குடி தமிழ் இலக்கியவாதிகளினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும் மனநிலை குறித்து கலாநிதி கைலாசபதி அவர்கள் கூறினார். (நூல் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் பக் 132) இவ்வாறு தமிழ் இலக்கியம் கூட மேட்டுக்குடி சமூகத்தின் வரலாறுகளைத்தான் எழுதிவந்தது. ஆனாலும் இலக்கியத்தில் இன்று பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. அதில்  தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவந்த  பெருமை தோழர்.கே டானியலையே சாரும்.
ஆனால் தமிழ் அரசியலில் நாம் எந்த மாற்றத்தையும் காணமுடியாதே உள்ளது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்ளின் ஐம்பதுக்கு ஐம்பது எனும் கோரிக்கையை இன்றும் தமிழ் பேசும் அனைத்து மக்கள் பிரிவினரின் நலனுக்கான கோரிக்கையாக சொல்லப்பட்டு வருவது மிக அயோக்கியத்தனமானது.  சிங்கள மேட்டுக்குடியினரும், தமிழ் மேட்டுக்குடியினரும் அரசியல் அதிகாரங்களை சமமாக பங்குட்டுக் கொள்வதற்கான கோரிக்கையே ஜீ.ஜீ. அவர்களின் ஐம்பதுக்கு ஐம்பது எனும் கோரிக்கையாகும்.
காலணித்துவமானது இறுதிக்காலத்தில் நாட்டைவிட்டு தாம் வெளியேறுமுன்பாக இலங்கை மக்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள், சமூகக் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்யமுன்வந்தது. அதற்காக சோல்பெரிக் கெமிசன் உருவாக்கப்பட்டு சமூகக் குறைநிறைகளை ஆய்வு செய்தது. அதன் பிரகாரம் அடித்தள மக்களின் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்தபோது அனைத்துக்கும் எதிராக ‘இந்தப் பொதுமக்கள்’ எனும் மேட்டுக்குடித் தமிழ் அரசியல் வாதிகள் எதிர்த்து வந்தனர். குறிப்பாக இலவசக் கல்விக்கு தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள். அந்த சோல்பெரிக் கெமிசன் முன்பாக  தலித் சமூகத்தின் துயரங்களை பேசுவதற்கும் தடையாக இருந்துவந்தவரல்லாவா ஜீ.ஜீ அவர்கள்.
தமிழ் காங்கிரஸ்-தமிழ்அரசுக்கட்சி-தமிழர் விடுதலைக்கூட்டணி என தொடர்ச்சியான மேட்டுக்குடி நலனைப் பேணிய கட்சிகள் எப்போதுமே அடித்தள மக்களின் அக்கறையில் அரசியல் நடத்தியவர்களல்ல. அந்த அடித்தள மக்களுக்கு எதிரான அரசியலையே எப்போதும் மேற்கொண்டு வந்தவர்கள். இடதுசாரிக் கட்சிகளுக்கும், தலித் அமைப்புகளான சிறுபான்மைத் தமிழர் மகாசபைக்கும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும் எதிராகவே செயல்பட்டுவந்தவர்கள். சர்வதேச அளவில் அடித்தள மக்கள் குறித்த இடது சாரிச் சிந்தனைகள் வலுபெற்றபோது சித்தம் கலங்கி மருண்டுபோனார்கள் ‘பொதுமக்கள்’ (மேட்டுக்குடி) . இளையசந்ததியினரின் (இயக்கங்களை ஸ்தாபித்தவர்கள்) இடது சாரிய சிந்தனைகள் மீதான ஈடுபாடுகள் ‘பொதுமக்களுக்கு’ (மேட்டுக்குடியினருக்கு) மிக அச்சுறுத்தலாக இருந்தது. எனவேதான் அவர்களை தமது நலன்களுக்குள் உள்வாங்கும் அப்புக்காத்து புத்தியை பயன்படுத்தியது. அதன் விளைவுதான் தோழர் சிவலிங்கம் நியாயப்படுத்திய  சோசலிசக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும்.
யாழ்  மேட்டுக்குடிகளின் அரசியல்-சமூக நலனுக்கு இடையூறாக அமைந்ததுதான் கல்விக்கான இடஒதுக்கீட்டு சட்டம்.  கல்வி வாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள்  பயன் அடையும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் சோசலிச வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுத்தவர்கள் அந்த நல்ல காரியத்தைதை  தமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் எதிரான ‘கல்வித் தரப்படுத்தல்‘ என பிரச்சாரம் செய்தனர். அடுத்ததாக சிங்கள மொழிச் சட்டத்துக்கு எதிரான இவர்களது பிரச்சாரமும் சத்தியாக்கிரகங்களும். இதிலுள்ள சரி பிழைகளுக்கு அப்பால் இந்த மேட்டுக் குடியினர் சிங்கள மொழிக்கு நிகரா தமிழும் அரசமொழி ஆக்கப்படவேண்டும் என்று போராடவில்லை. இவர்களது போராட்டத்தின் நோக்கம்  ஆங்கில மொழியை அதிகாரத்தில் தக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.
மேட்டுக்குடி அரசியலின் தொடர்ச்சியான சிங்கள இனவாத கோசங்களின்  விளைவாக கட்டமைக்கப்பட்டதுதான்  வட்டுக்கோட்டைத் தீர்மானமும், அதைத்தாங்கி நின்ற  ‘தமிழ்த் தேசியமும்‘ (தமிழ்ஈழம்). அவ்வாறான அவர்களின்  அரசியல் ‘சாணக்கியத்தை’ நாமும் எந்தவித கேள்விக்குட்படுத்தாது எமது தோள்களில் தாங்கிக் கொண்டோம். ஒன்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நாம் தரப்படுத்தலுக்கெதிராக யாழ் நகரெங்கும்  கண்டன ஊர்வலங்களை மேற்கொண்டிருக்கும்போது தான் கொடிகாமத்தில் தலித் மக்கள் பாடசாலைக்கு செல்லும்போது அவர்களது புத்தகங்களை பறித்து எரியூட்டப்பட்ட சம்பம் நிகழ்ந்தது. யாழ்ப்பாண   நூலகம் சிங்கள் இராணுவத்தால் எரியூட்டப்பட்ட சம்பவம் குறித்து  தோழர் கே.டானில் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது “நாம் பாடசாலைக்கு செல்லும்போது எமது புத்தகங்களை பறித்து எரியூட்டிய சம்பவத்திற்கும். யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதற்கும் என்ன வேறு பாடு இருக்கிறது. எமது புத்தகம் எரியூட்டப்பட்டதற்கு என்ன காரணம் இருந்ததோ அதே காரணம்தான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் காரணமாக இருந்திருக்கும்“ எனத் தெரிவித்தார்.
சோசலிச வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வரைந்த கட்சியின் தானைத் தலைவன், ஈழத்துக் காந்தி தலித்துக்களின் கோவில் நூழைவுப் போராட்டத்திற்கு எதிராக என்ன அநியாயங்களைப் புரிந்தார் என்பதை தோழர் யோகரட்ணம் அவர்கள் பல மேடைகளிலே அக்குவேற ஆணிவேறாக  கழட்டிப் பூட்டியிருக்கின்றார்.
அண்மையில் காலமான சிங்களத் தோழர் உபாலி கூரே அவர்களை நாம் அறிவோம் அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ். உடன் மிக நெருக்கமானவராகவும் தோழர் நாபாவுடன் நெருங்கிப் பழகியவர் என்றும் அறிகிறோம். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது பெறாமகனுடன் உரையாடிய கட்டுரை பலருக்கு ஈமெயிலூடாக பரிமாறப்பட்டிருந்தது. அதை பல இணையங்களும் பிரசுரித்திருந்தது. அதில் சிங்கள மக்கள் எதிர் கொள்ளும் அரசியல், சமூகப் பிரச்சனைகள் பலவற்றை குறிப்பிட்டிருந்தார். சிங்களக் கிராமங்களில் உள்ள கூலித்தொழிலாளர்கள் படும் துயரங்களையும் அவாகள் கல்வி அறிவில்லாது படும் துன்பங்ளையும் பட்டியிலிட்டுள்ளார். ஒரு காலத்தில் இலங்கை அரசானது தமிழ் மக்களை கொலை செய்த எண்ணிக்கையிலும் பார்க்க அதிகமான சிங்கள மக்களைக் கொலை செய்துள்ள வரலாற்றையும்(ஜே.வி.பிக்கு எதிராக) ஆதரபூர்வமாக எழுதியிருந்தார். ஒரு அரசு என்பது தனது இருப்பிற்கு அபத்து வருவதை உணர்ந்து கொண்டால் அதை எதிர்கொள்வதற்கு தனது இனம், பிற இனம்  என்ற பாகுபாடு காட்டாது யாரைவேணும் என்றாலும் கொல்லும்.
நாம் நபாவின் ஈ.பி.ஆர்.எல்.எவ். இடம் விலியுறுத்த விரும்புவது என்ன?
கடந்த கால அரசியல் அவலங்கள்  யாவும் யாழ்மேலாதிக்கம் முன்வைத்த  திமிழ்த் தேசியத்தின் அபிலாசைகளால் நிகழ்ந்தவையே. தமிழ் இனப் பிரச்சனை, சிங்களப் பேரினவாதம், தமிழ் இன அழிப்பு போன்ற கோசங்கள் யாவும் அவர்களது ‘தமிழ்த் தேசியத்தின் நலனுக்காகவே பிரயோகிக்கப்பட்டு வந்த ‘மேட்டுக்குடிப்’ பாசை.
நான் முன்பு குறிப்பிட்டதுபோல 19ஆம் நூற்றாண்டு காலத்தில் பொதுமக்கள் என்ற  கருத்து நிலை எந்த மக்கள் குறித்து நிலவி வந்ததோ அதே நிலைதான் இன்றும் இருந்து வருகின்றது.  அனைத்துத் தமிழ்கட்சிகளும் தமிழ்த் தேசிய நலனைப் பாதுகாப்பதிலே தான் அக்கறைகொண்டவர்களாக உள்ளனர். நாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எவ் உட்பட. நாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்தோடு பதினொன்றாக இருக்க முடியாது.அது தனது தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்தவேண்டும்.. நான் நிச்சயமாக நம்புகின்றேன் நாபா இருந்திருந்தால் இந்த நிலை ஈ.பி.ஆர்.எல்.எவ். இற்கு ஏற்பட்டிருக்காது என்று.
இன்றைய சூழலில் நாம் தொடடர்ந்தும் சிங்களப் பேரினவாதம், தமிழினப் பிரச்சனை எனத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது. இது வந்து அவர்களது மொழி. இதனூடாகவே தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான பகை உணர்வுகளை வளர்த்துப் பாதுகாத்து வருகின்றார்கள். அது மட்டுமல்ல இவ்வாறான சிந்தனையின் வரலாற்றுப் பாரம்பரியமே  பல்வேறு இனங்களுக்கிடையேயான உறவுகளின் நெருக்கமின்மைக்கும் காரணமாக அமைந்தது.  இந்த ‘இன  மொழியாடல்தான்’ தமிழ்த் தேசியத்தின் மிகப்பெரிய பலம். இந்த மொழியை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் ,தோழர்களும் பேசிக்கொண்டிருக்க முடியாது.
இதனால் நீங்கள் கேட்கலாம் சிங்கள இனவாதம் என்பது இல்லையா என்று?
இருக்கிறது அனால் அதை எப்படி அணுகுவது எப்படி இல்லாமல் செய்வது, எமது பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய காரியமாகும்.  இங்கே ஒன்றை நாம் ஆழமாக சிந்திக்க வெண்டும். நாம் சிங்களப் பேரினவாதம், சிங்கள இனவாதம் என்றெல்லாம்  சி.பா.த.மகாசபை உறுப்பினர்களான தோழர் தங்கவடிவேல் அவர்கள் முன்பாகவும், தோழர் தெணியான் முன்பாகவும் பேசுகின்றபொழுது அவர்கள் சொல்கின்றார்கள். “தம்பியவ இந்தக்கதைய எங்களுக்கு சொல்லாதேங்கோ இந்தச் சிங்கள இனவாதம், சிங்களப் பேரினவாதம் என்பவைகளை நாங்கள் காணவும் இல்ல அது எங்கட காதுக்கு கேக்குதும் இல்ல.
எங்களுக்கு முன்னால பல் இழிச்சுக் கொண்டு பயங்காட்டுது தமிழ் பேரினவாதம். இதுக்குள்ள எங்களுக்கு எப்படித் தம்பியவ சிங்களப் பேரினவாதம் தெரியப் போகுது“ என்கின்றார்கள் அவர்கள். முஸ்லிம் இன மக்களோ எங்களைத் தமிழர் என அடையாளப் படுத்த வேண்டாம் நாங்கள் முஸ்லிம் இனத்தவர்கள் என்கின்றார்கள். மலைய மக்களுக்கு நாம் செய்த தூரோகத்திற்கு அளவில்லை. அதைப்பற்றிய குற்ற உணர்வுகளும் எமக்கில்லை.
இப்படியெல்லாம் சிக்கல்கள் இருக்கும் போது மக்கள் ஐக்கியப்பட வேண்டும் என்றும் கேட்கிறோம். சிங்களப் பேரினவாதம், தமிழ் இனப் பிரச்சனை என்றெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டு  பல்வேறு அடையாளங்களுடன் வாழும் இனங்களை ஐக்கிப்படுங்கோ எனக் கேட்பது கேலிக்குரிய விடயமாகவே இருக்கும்.
மற்றது ஒரு சந்தேகம் என்னவென்றால் உண்மையிலேயே தோழர் வரதராஜப் பொருமாளும், தோழர் சுகு வும் இப்பவும் ஈ.பி.ஆர்.எவ்.எவ் தோழர்கள் தானா என்பது. (இச் சந்தேகம் பிரான்சில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்பாக எழுந்தது. இந்த நிகழ்வில் அவர்களது உரையைக் கேட்டதன் மூலம் அவர்கள் இப்போதும் ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் தான் தொடர்ந்து இணைந்திருக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகின்றது.)
தோழர் வரதராஜப் பொருமாள் அவர்கள் 2009 மே 18 க்குப்பிற்பாடு ஒரு விடயத்தை மிகத் தெளிவாக கூறியிருந்தார். அதாவது நாம் தோற்றுவிட்டோம் என்று அவமானப்படுவதும், நாம் ஆண்ட பரம்பரை என்று கருதிக்கொண்டு நெஞ்சை நிமித்திக்கொண்டு பேசுவதிலும் எந்த வித அர்த்தமும் இல்லை. நாம் எதிர்காலத்தில் சிங்கள மக்களுக்கும், சிங்கள அரசிற்கும் நம்பிக்கைக்குரியவர்களா நடந்து காட்டுவதன் ஊடாகவே எமது அரசியல் நலன்களை பூர்த்தி செய்யும் வாய்ப்புகள் ஏற்படும் என்று. சுகுத் தோழரோ இலங்கையில் வாழும் பல்வேறு சமூக முரண்பாடுகளையெல்லாம் எடுத்துக் கூறுகின்றார். அரசியல் வாசிப்புகளுக்கும் அப்பால் தோழர் சுகு பரந்த வாசிப்பு ஞானம் கொண்டவரும் கூட.
அப்படியெலல்லாம் இருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தோழர்களும் கட்சியும் யாழ் மேலாதிக்கத்தின் தமிழ்த் தேசிய நலன்களை பாதுகாக்கும் முனைப்புடனேயே செயல்பட்டு வருகின்றார்கள்.
சிங்களப்பேரினவாதம். தமிழின அழிப்பைச் செய்து கொண்டிருக்கும் அரசு என்றெல்லாம் பேசுவதற்க இங்க நிறையத் தத்துவவாதிகள், பிரபல இலக்கியவாதிகள், தமிழகத்துப் பேராசிரியர்களெல்லாம் இருக்கிறார்கள், ஏன் பல அரச சார்பற்ற நிறுவனங்களெல்லாம் இருக்கின்றது. அது அவர்களுடைய தொழில். எனவே அந்தத்தொழிலை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும், தோழர்களும் செய்யவேண்டிய அவசிம் இல்லை.அவர்கள் மக்களின் அன்றாடப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு செயல் பட வேண்டியவர்கள்.
இப்படியெல்லாம் நாம் பேசுவதன் ஊடாக இலங்கையில் திருப்திகரமான அரசு ஒன்று இருக்கிறதென்றோ அரசுக் கெதிரான போராட்டம் எதுவும் தேவையில்லை என்பதோஅர்த்தம் அல்ல. இந்த தற்போதய அரக்கெதிரான போராட்டங்கள் நிறையவே உள்ளது.
அரசு தொடர்ந்து அதிகாரங்களை மத்தியில் குவித்து வைத்திருக்க முடியாது. இலங்கை ஒரு பெளத்த நாடு என்ற கருத்தியலுக்கு எதிராகவும் போராட வேண்டும். மத நீக்கம் செய்யப்பட்ட அரசை உருவாக்க நிர்ப்பந்திக்கவேண்டும்.
இவ்வாறான போராட்டங்களுக்கு சிங்களப்பேரினவாதம், தமிழினப் பிரச்சனை என்றெல்லாம் ஆலவட்டங்கள் போடத்தேவையில்லை. இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களின் தனித்துவங்களையும் (சிங்கள மக்கள் உட்பட )  அவர்களை ஐக்கியப்படுத்துவதனை நோக்கமோகக் கொண்ட போராட்ட வடிவங்களையே நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக நீங்கள் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றீர்கள்.
இலங்கையிலுள்ள அனைத்து மகாணசபை நிர்வாகங்களுடனும் தொடர்பு கொண்டு வித்தியாசங்களையும் குறைபாடுகளையும் கண்டு கொள்ளவேண்டும். மகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் முறையாகக் கடைப்பிடிக்கப்படுதற்கான முயற்சிகளை அனைத்து மாகாண சபைகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும். (இதை ஈ.பி.ஆர்.எல்.எவ் கொள்கை அடிப்படையில் புரிந்து கொண்டபோதும் மேட்டுக்குடி அரசியலையே கடைப்பிடித்து வருகின்றது)
எனவே ஈ.பி.ஆர்.எல்.எவ் தோன்றியபோது போடப்பட்ட அத்திவாரத்திலிருந்து தன்னை புதிதாக கட்டமைத்துக் கொள்ளவேண்டும். அத்திவாரத்திற்கு மேலாகக் கட்டப்பட்ட தமிழ்த்தேசி சுவர்களையும் முகடுகளையும் உடைத்து தன்னை தனித்துவமான கட்சியாக புனரமைத்துக் கொள்ள வேண்டும்.
நாபா எனும் மனித நேயம் கொண்ட இலட்சியவாதியின் கட்சி யானது தமிழ்த் தேசியத்தை வழிபடுவதும், அதைப் பின்பற்றுவதும்  எந்தவிதத்தில் நியாயம் ?
SHARE